52. நித்தப் பொருள்கள்ஆறு
ஏகன் அனேகன் இருள் கருமம் மாயை இரண்டு
ஆக இவை ஆறு ஆதி இல்.
பொருள் : ஒருவனாகிய இறைவனும், பலவாகிய உயிரும், ஆணவமும், கன்மமும், சுத்த மாயை, அசுத்த மாயை என்னும் இரு மாயையும் ஆகிய இந்த ஆறு பொருள்கள் தோற்றம் இல்லாதவையாகும்.
சொற்பொருள் :
ஏகன் - ஒருவனாகிய இறைவனும்
அனேகன் - பலவாகிய உயிரும்
இருள் - ஆணவமும்
கருமம் - கன்மமும்
மாயை இரண்டு - சுத்த மாயை, அசுத்த மாயை என்னும் இரு மாயையும்
ஆக இவை ஆறு - ஆகிய இந்த ஆறு பொருள்கள்
ஆதி இல் - தோற்றம் இல்லாதன.
விளக்கம் :
இந்த ஆறு பொருள்கள் தோன்றியன அல்ல என்று கூறவே, அவை அழிவன அல்ல என்பதும் பெறப்படும். தோற்றமும் அழிவும் இல்லாதவை யாதலின் அவை என்றும் உள்ள பொருள்கள் என்று கொள்ளப்படும். தோற்றம் இல்லாதவற்றை அநாதி என்ற சொல்லால் குறிப்பர். எனவே இந்த ஆறும் அநாதி நித்தப் பொருள்கள் எனப்படும். சைவ சித்தாந்தம் பதி, பசு, பாசம் என்னும் முப்பொருள் உண்மையைக் கொள்ளும். அம்மூன்றன் இயல்புகளை முதல் மூன்று அதிகாரங்களில் விளக்கிச் சென்றார் ஆசிரியர். அம் மூன்றினையே இங்கு ஆறாக விரித்துக் கூறியுள்ளார். பதியை ஏகன் எனவும், பசுவை அனேகன் எனவும் குறிப்பிட்டவர் பாசத்தை இருள் கருமம் மாயை இரண்டு என அமைத்துக் கொண்டுள்ளார். பாசத்தை ஆணவம் கன்மம் மாயை என மூன்றாகக் கூறுவதே வழக்கு. ஆயின் நம் ஆசிரியர் இங்கு மாயையை இரண்டாக வைத்து, பாசத்தை நான்காகக் கூறியுள்ளதைக் காணலாம்.
மாயை இரண்டு :
மாயை இரண்டு என இவ்வாசிரியர் கூறியதே பற்றி, சுத்த மாயையும் அசுத்த மாயையும் வேறு வேறான இரு தனிப்பொருள்கள் என்று கொள்வாரும் உளர். அவ்வாறு கொள்வது பொருந்தாது. ஏனெனில், சடமாயும் பலவாயும் இருப்பன எல்லாம் தோன்றி அழிவெய்தும். ஆடை சடமாய் இருப்பது. அது பருத்தியாடை, பட்டாடை, தோலாடை எனப் பல வகையாய் உள்ளது. குடம் சடமாய் இருப்பதோடு மண்குடம், பொன்குடம், செப்புக்குடம் எனப் பலவகைப் படுவதாயும் உள்ளது. இவ்வாறு சடமாயும் பலவாயும் இருப்பதனாலே ஆடை, குடம் முதலியவை தோன்றி அழியக் கூடிய காரியப் பொருள்கள் என்பது விளங்கும். இவை போலச் சுத்தமாயையும், அசுத்த மாயையும் ஆகிய இரண்டும் சடமாய் இருப்பவை. அவை தனித்தனிப் பொருள்கள் எனக் கொண்டால் பல எனப்பட்டு, பலவாயும் சடமாயும் இருப்பதனால் அவை தோன்றி அழிவெய்தும் என்று கூறும்படி ஆகும். இது, மாயை இரண்டு உள்ளிட்ட ஆறும் நிலையான பொருள்கள் என்று ஆசிரியர் கூறியதற்கு மாறாகும். நம் ஆசிரியர் மாயை இரண்டு என்று கூறினாரேனும், அது பொருளால் இரண்டு என்பது அவர்க்குக் கருத்தன்று. இரண்டு என்று கருதியிருப்பாரானால், தமது மற்றொரு நூலான சிவப்பிரகாசத்திலும் அவ்வாறே கூறியிருப்பார். அங்ஙனம் கூறாமல்,
பகர் மாயை ஒன்று; படர் கன்மம் ஒன்று (சிவப்பிரகாசம், 32)
என்றே தெளிவாகக் கூறியுள்ளார். இதனால் மாயை ஒன்று என்பதே அவர்தம் கருத்தாதல் விளங்கும். அவ்வாறாயின், திருவருட்பயனில் மாயை இரண்டு எனக் கூறியது எக் காரணம் பற்றி என வினவலாம். இதற்கு விடை காண்போம். மாயை ஒன்றே தன்னில் சுத்தப்பகுதியும், அசுத்தப் பகுதியும் என இரு பகுதியாய் நிற்கும். ஆணவ மலத்தோடு கலவாதது சுத்தப்பகுதி. ஆணவ மலத்தோடு கலந்தது அசுத்தப்பகுதி. குன்றிமணி ஒன்றே ஒரு பகுதி செம்மையாகவும், மற்றொரு பகுதி கரியதாயும் காணப்படுவது போல மாயை ஒன்றே இவ்வாறு இரு பகுதியாய் நின்று செயற்படும். மாயை உயிர்களுக்குத் தனு கரண புவன போகங்களைத் தோற்றுவித்து உதவும் என்பது நாமறிந்தது. சுத்த மாயையும் அசுத்த மாயையும் ஆகிய இவ்விரு பகுதியும் வெவ்வேறு முறையில் இக்காரியங்களைத் தோற்றுவிக்கும். சுத்த மாயை விருத்தியடைந்து காரியங்களைத் தோற்றுவிக்கும், அசுத்தமாயை பரிணாமம் அடைந்து காரியங்களை உண்டாக்கும். சிறியதாய் நின்றது பெரியதாய் விரிவதே விருத்தியாகும். மடக்கி வைக்கப்பட்டிருந்த துணியை விரித்துக் கூடாரமாக அமைப்பர். இவ்வாறு விரிவடைவது விருத்தி எனப்படும். இங்ஙனம் விருத்திப்படுவது சுத்தமாயை. இனி, ஒரு பொருள் மற்றொரு பொருளாய்த் திரிந்து வேறுபடுவது பரிணாமமாகும். பால் தயிராதல் இதற்கு எடுத்துக்காட்டு. இவ்வாறு பரிணாமம் அடைவது அசுத்தமாயை. இங்ஙனம் மாயை சுத்தப் பகுதியும் அசுத்தப் பகுதியம் என இரு பகுதியாய் நின்று, முன்னது விருத்தியாயும், பின்னது பரிணாமமாயும் இரு தன்மைப்பட்ட காரியங்களைத் தோற்றுவித்து உதவுகிறது. இவ்வேறுபாடு கருதியே ஆசிரியர் உமாபதி சிவம் இங்கு மாயையை இரண்டாக வைத்து ஓதினார் என்பது அறியத்தகும்.
கருமம் :
மனம் மொழி மெய்களினால் விருப்பு வெறுப்போடு செய்யும் முயற்சிகளே வினை அல்லது கன்மம் ஆகின்றன. இவ்வினைகள் நல்வினை, தீவினை என இரு வகையாய் அமைந்து, யாவருக்கும் புலப்படுவனவாய் உள்ளன. இவ்விரு வகை வினைகளும் ஆகாமியம் என்ற பெயரைப் பெறும். புலப்படுவனவாய் இருத்தலால் தூல கன்மம் எனப்படும். இவ்வாறு நல்லதும் தீயதுமாய்ச் செய்யப்படும் வினைகள் அச்செயல் முடிந்தபின் புலப்படும் நிலையின் நீங்கிப் புலப்படாத நிலையை அடைந்து நிற்கும். அந்நிலையில் அவை புண்ணியம், பாவம் எனப்படும். இவ்விரண்டும் சஞ்சிதம் என்ற பெயரைப் பெறும். புலப்படாமல் சஞ்சிதமாய் நிற்கும் வினைகள் தம் பயனைக் கொடுத்தற்குரிய காலம் வந்தபோது இன்பமும் துன்பமும் ஆகிய பயன்களைத் தம்மைச் செய்த ஆன்மாக்களுக்குக் கொடுக்கும். இவ்வாறு காலத்தில் வந்து பயனைக் கொடுத்து நீங்கும் வினைகள் பிராரத்தம் என்ற பெயரைப் பெறும். இதனால், வினைக்கு மூன்று நிலைகள் உண்டு என்பது விளங்கும். தோற்றநிலையில் அது ஆகாமியமாய் நிகழும். நிலை பேற்று நிலையில் அது சஞ்சிதமாய் நிற்கும். பின் அழிவு நிலையில் பிராரத்தமாய்க் கழியும் என அறியலாம். இங்கு மாணவர்க்கு ஓர் ஐயம் எழலாம். வினைதோன்றி நின்று அழியும் என்று கூறுவது, இச்செய்யுளில் கன்மம் பற்றிக் கூறிய கருத்திற்கு மாறாக அல்லவா உள்ளது. தோற்றம் என்பது இல்லாத, என்றும் உள்ள பொருள்களில் ஒன்றாக கன்மத்தை ஆசிரியர் கூறியிருக்கும்போது அதற்குத் தோற்றமும் அழிவும் உண்டு என்று கூறுவது எப்படிப் பொருந்தும் எனக் கேட்கலாம். இதற்கு விடை கூறுவோம்.
கன்மத்திற்கு இரு நிலைகள் உண்டு. ஒன்று காரண நிலை; பிறிதொன்று காரியநிலை. கன்மம் தனித்து நில்லாது. அது மாயையாகிய பொருளைப் பற்றியே நிற்கும். எனவே கன்மத்திற்குப் பற்றுக்கோடு மாயை என அறியலாம். மாயையிடத்தில் கன்மம், நிகழ்ச்சியின்றி இருந்தபடி இருக்கும் நிலையே அதன் காரண நிலையாகும். இந்நிலையில் அது மூல கன்மம் எனப்படும். இனி உயிர்கள் மாயையின் காரியங்களாகிய தனு, கரண, புவன, போகங்களைப் பெற்ற காலத்தில் அம்மாயா காரியங்களின் வழியே மூலகன்மம் ஆகாமிய, சஞ்சித, பிராரத்தங்களாய்க் காரியப்படும். மனம், மொழி, மெய் முதலியனவெல்லாம் மாயையின் காரியங்களே. அவற்றின் வழியாக வினைகள் தோன்றி நிலை பெறுவதையும் பின் அழிவதையும் மேலே பார்த்தோம். இதுவே கன்மத்தின் காரிய நிலையாகும். இதனால் காரண நிலையில் செயலின்றி உள்ளது மூல கன்மம் என்பதும். செயல் நிலையில் உள்ளது காரிய கன்மம் என்பதும் விளங்கும். இவற்றுள், காரிய கன்மமே உயிர்களைப் பிணித்து நின்று மயக்குவது எனவும், மூலகன்மம் அவ்வாறு ஆகாது எனவும் அறிதல் வேண்டும். மேலும், காரிய கன்மத்திற்கே தோற்ற அழிவுகள் உண்டு என்பதும் மூலகன்மம் அவ்வாறின்றி அநாதியாய் நிற்பது என்பதும் அறியத்தகும். மூலகன்மம், காரிய கன்மங்களைப் பின்வருமாறு வேறுபடுத்தி அமைத்துக் காணலாம்.
மூலகன்மம் - காரியகன்மம்
1. தோற்றம் இல்லது - தோன்றி அழிவது.
2. நன்மை தீமை என்ற பாகுபாடு இல்லாதது - நல்வினை, தீவினை என்னும் பாகுபாடு உடையது.
3. உயிர்கட்கு நேரே பந்தம் ஆகாது - உயிர்கட்குநேரே பந்தம் ஆவது.
இதுகாறும் கூறியவற்றால் இச்செய்யுளில் ஆசிரியர் கருமம் என்று குறிப்பிட்டது காரண கன்மமாகிய மூலகன் மத்தையே என்பது இனிது விளங்கும். காரிய கன்மத்தை அடுத்த செய்யுளில் செய்வினையும் என்பதனால் குறிப்பிடுவார். சித்தாந்த ஞான நெறியைத் தலைப்படுவோர் நித்தப் பொருள்கள் ஆறு உள்ளன என உணர்தல் வேண்டும் என்பது கூறப்பட்டது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக