51. அறியும் நெறிக்கு உரியவர்
நீடும் இருவினைகள் நேராக நேராதல்
கூடும் இறைசத்தி கொளல்.
பொருள் : முன்னே செய்து கொண்ட இருவினைகளின் பயன்களாய் வருகின்ற இன்பத் துன்பங்கள் ஆன்ம அறிவில் சமமாய் உணரப்படும் நிலை வருங்காலத்தில் அந்த ஆன்மா இறைவனது திருவருளைப் பெறுதல் கூடும்.
சொற்பொருள் :
நீடும் இரு வினைகள் - மேன்மேல் தோன்றி முடிவின்றிப் பெருகி வருகின்ற இருவினைகளது பயன்களாகிய இன்பத் துன்பங்களை
நேராக - (அவற்றை நுகர்வோன்) சமமாக உணர்ந்து
நேராதல் - விருப்பு வெறுப்பின்றி நடுவு நிலையாய் நிற்பானாயின்
இறைசத்தி - இறைவனது திருவருளை
கொளல் கூடும் - அவன் பெறுதல் கூடும்.
விளக்கம் :
நீடும் இரு வினைகள் :
வினைகள் மேன் மேல் தோன்றி முடிவின்றிப் பெருகி வரும். அவை தோன்றிப் பெருகும் முறையைச் சிறிது விளக்குவோம். பழ வினையின் பயனாக ஒருவருக்கு ஒரு நன்மை வரவுள்ளது என வைத்துக் கொள்வோம். அஃதாவது அவருக்கு எதிர்பாராத வகையில் ஒரு பதவி உயர்வு கிடைக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதை அறிந்த அவர் வாளா இருப்பாரா? அதுவரும் வரையில் பொறுமை காத்து இருக்க முடியுமா? அப்படியிருந்தால், தனக்கு வேண்டாதவர் யாரேனும் இடையில் புகுந்து தனக்குக் கிடைக்காதபடி செய்து விட்டால் என்ன செய்வது? ஆதலால் விரைவுபடுத்தி அதனைப் பெறுவதற்கு ஆவன செய்ய வேண்டும் என்று எண்ணுகிறார். அதன் பொருட்டு இரவு பகலாக அலைகிறார். மேலிடத்தில் உள்ளவர்களை அணுக வேண்டிய முறையில் அணுகுகிறார். ஆகாத வழிகளைக் கையாளவும் அவர் அஞ்சவில்லை. இவ்வாறு ஒரு நன்மையை விரைவில் பெறுவதற்கு அவர் தமது மனம் மொழி மெய்களால் செய்யும் முயற்சிகள்தாம் எத்தனை! இதுபோலப் பழவினைப் பயனால் ஒரு பெரிய துன்பம் தனக்கு வரப்போகிறது என்பதைச் சில அறிகுறிகளால் உணர்கிறார். அவர் ஒரு பெரிய அதிகாரி. கோடிக் கணக்கில் பணம் புரளும் துறையில் பணி புரிகின்றவர். அவர் மேலிடத்தில் உள்ளவர்களின் சொல்லைக் கேட்டுச் சில முறைகேடுகளைச் செய்ய நேர்கிறது. அத்தவறுகள் இப்பொழுது வெளியாகி விடுமோ என்ற நிலை ஏற்பட்டுள்ளது. ஏதாவது செய்தே ஆக வேண்டும். இல்லையென்றால் சிறைக்குச் செல்ல வேண்டிய அவமானம் தனக்கு ஏற்படும் என்று அறிகிறார். வருவதை எப்படித் தடுத்து நிறுத்துவது? பணத்தினால் மூடி மறைக்க முடியுமா? என்று பார்க்கிறார். குற்றத்தை வேறு யார் மீதாவது திருப்ப முடியுமா என்று முயற்சி பண்ணுகிறார். செல்வாக்கு உள்ளவர்களின் தயவை நாடிப் பின் செல்கிறார். இப்படித் தனக்கு வரவிருக்கும் துன்பத்தை விரையப் போக்குவதற்கு அவர் தமது மனம் மொழி மெய்களால் செய்யும் முயற்சிகள் தாம் எத்தனை?
இந்நிகழ்ச்சிகள் போல நம் ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் பல நிகழ்கின்றன. நல்வினைப் பயனாகிய இன்பம் வரும்போது அதை அடையத் தக்கதாக உணர்ந்து விரும்புகிறோம்; தீவினைப் பயனாகிய துன்பம் வரும்போது அதை விலக்கத் தக்கதாக உணர்ந்து அதன்மேல் வெறுப்புக் கொள்கிறோம். நல்வினையும் தீவினையும் ஆகிய இருவினைகளையும் செய்து கொண்டவர்கள் நாம் தானே. அங்ஙனமாக, அவற்றுள் ஒன்றன் பயனை மட்டும் விரும்புதலும், மற்றொன்றின் பயனை வேண்டாது வெறுத்தலும் எப்படி முறையாகும்?
நல்வினையானது இன்பம் தருங் காலை மேற்கூறியவாறு விருப்பத்தால் அவ்வின்பத்தை விரையப் பெற முயல்கிறோம்; பெற்ற பின்னரும் அவ்வின்பத்தை நீங்காமற் காக்க முயல்கிறோம். தீவினையானது துன்பந்தருங்காலை, வெறுப்பினால் அத்துன்பத்தை வரவொட்டாமல் தடுக்க முயல்கிறோம். வந்துவிட்டால் அத்துன்பத்தை விரையப் போக்க முயல்கிறோம். இவ்வகையில் நாம் மனம், வாக்கு, காயம் ஆகிய மூன்றாலும் செய்யும் முயற்சிகளே புதுவினைகளாய்த் தோன்றி நிலை பெறுகின்றன. அவை அடுத்த பிறவிக்கு வித்தாய் அமைகின்றன. இவ்வாறு வினைகள் முடிவின்றிப் பெருகி வருதல் பற்றியே நீடும் இருவினைகள் என்றார் ஆசிரியர்.
மலபரிபாகம் :
ஞானவேட்கை உடையோர் ஒரு சிலராகவும், உலக நாட்டம் உடையோரே மிகப் பலராகவும் உள்ளனர். பல லட்சம் பேர் வாழும் பெருநகரில் மாலை நேரத்தில் திரையரங்குகளில் கூட்டம் நிரம்பி வழிதலையும், சாத்திரச் சொற்பொழிவு நடைபெறும் இடங்களில் விரல் விட்டு எண்ணக்கூடிய சிலரே விரும்பி அமர்ந்து கேட்டலையும் காணும் போது இவ்வுண்மை தெற்றெனப் புலனாகும். ஞானத்தில் வேட்கை செல்லாதபடி தடுப்பது ஆணவ மலமேயாகும். அது யான்செய்தேன் பிறர் செய்தார் என்னும் தற்போத உணர்வை உண்டாக்கி விருப்பு வெறுப்புகளைத் தோற்றுவிக்கிறது. அவ்விருப்பு வெறுப்புக்களோடு செய்யும் முயற்சிகளே வினை அல்லது கன்மம் எனப்படுகின்றன. இதனால், ஆணவ மலத்தின் வழியாக வருவது கன்மம் என்பது புலனாகும். ஆணவ மலம் விருப்பு வெறுப்புகளைத் தோற்றுவித்து உயிருக்கு நுகர்வோனாம் தன்மையைக் கொடுக்க, கன்ம மலம் உயிருக்கு இன்ப துன்பமாகிய போகத்தைக் கொடுத்து நுகர்விக்க, உயிர் இன்ப துன்ப <உணர்வுகளில் அழுந்தி நிற்கிறது. இவ்வாறு உயிர் இன்ப துன்பமாகிய உலக போகத்தில் மயங்கி நிற்கையில் அது ஞானத்தை விழைவது எங்கே! திருவருளை நோக்குவது எங்கே? இதனால் ஆணவமும் கன்மமும் உயிரறிவை வன்மையாகப் பிணித்திருக்கின்ற வரையில் உயிருக்கு ஞான நாட்டம் வராது என்பது தெளிவாகும். உயிர் பலப் பல பிறவிகளில் சென்று சென்று உலக வாழ்வில் ஈடுபட ஈடுபட, அத்தனை பிறவிகளிலும் அதனறிவை மறைத்து வந்த ஆணவ மலம் தனது செயற்பாட்டினால் சிறிது சிறிதாகத் தன் சத்தி மெலிந்து வரும். அதனால் நாளடைவில் உயிரை மறைக்க மாட்டாமல் அதன் பிணிப்பு நெகிழ்ந்து வரும். இவ்வாறு ஆணவ மலத்தின் ஆற்றல் தேய்ந்து நீங்கும் நிலையை அடைவதையே மலபரிபாகம் என நூல்கள் குறிப்பிடும்.
இருவினையொப்பு :
ஆணவ மலம் தேய்ந்து போகுமானால், உயிருக்கு உலக நாட்டம் குறையும் என்பது சொல்லாமலே விளங்கும். உலக நாட்டம் குறையுமானால், இன்ப நுகர்ச்சியில் முன்பு போல விரைவு இருக்காது. துன்பம் வருமானால் அவ்வளவாகக் கவலை ஏற்படாது. இன்ப துன்பங்களில் விருப்பு வெறுப்பின்றி இரண்டையும் சமமாகக் கருதும் பக்குவ நிலை உயிருக்கு வரும். இன்பத்தை அடையத் தக்கதாகவும், துன்பத்தை விலக்கத் தக்கதாகவும் வேறுபட உணர்ந்த பழைய மனநிலை போய் இரண்டையும் ஒன்றாக நோக்கும் மனநிலை உண்டாகும். இவ்வாறு இன்ப துன்பங்களில் விருப்பு வெறுப்பின்றி நடுவு நிலையாய் நிற்கும் தன்மையே இருவினை யொப்பு என்று சொல்லப்படும். எழுவகைப் பிறவிகளில் எப்பிறவி எய்துகினும் எய்துக; இன்பம் எய்தினும் எய்துக; வழுவகைத் துன்பம் வந்திடினும் வருக; வறுமை வருகினும் வருக; மதி வரினும் வருக; அவமதி வருகினும் வருக; உலகில் மற்று எதுவரினும் வருக; எது போகினும் போக; இறைவா! உன் இணையடிகள் மறவாத மனம் ஒன்று மாத்திரம் எனக்கு அடைதல் வேண்டும் என்று ஒருவர் வேண்டுவாரானால் அவர் இருவினையொப்பு வாய்த்தவர் என்று சொல்லிவிடலாம். முன் சொன்ன மலபரிபாகத்தின் அறிகுறியே இந்த இருவினை யொப்பாகும். அகத்தில் உள்ள ஆணவ மலம் தேய்ந்த நிலையைப் புறத்தில் காணமுடியாது. ஆனால், தன்னைப் பாராட்டும்போது அதற்காக மகிழாமல், பழிக்கும்போது அதற்காக வருந்தாமல் ஒருவர் இருப்பதை யாவரும் காண முடியும். மலபரிபாகத்தின் வெளிப்பாடுதான் இந்த இருவினையொப்பு. எனவே, இருவினையொப்பு ஒருவருக்கு வாய்த்துள்ள அளவை வைத்து அவரது மலபரிபாக நிலையைத் தெரிந்து கொள்ளலாம்.
சத்தி நிபாதம் :
மலபரிபாகத்தோடு உடன் நிகழ்கின்ற மற்றொரு நிகழ்வும் உள்ளது. அதுவே சத்தி நிபாதம் என்பது. ஆணவ மல சத்தி தேய்ந்து நீங்கும் நிலையை அடைந்தால் அதற்கேற்ப, உயிரோடு உடனாக இருந்து அம் மலத்தைச் செயற்படுத்தி வந்த இறைவனது திரோதான சத்தியும் தன் தன்மை மாறும். முன்பு மறைத்தலைச் செய்து வந்த அதே சத்தி இப்பொழுது அருளலைச் செய்ய முற்படும். அதற்கேற்பத் திரோதான சத்தி என்ற பெயர் நீங்கி, அருட்சத்தி என்ற பெயர் பெறும். உயிரில் மறைந்து நின்ற முன்னைய நிலை மாறி உயிரில் விளங்கித் தோன்றும். இந்நிகழ்ச்சியே சத்தி நிபாதம் எனப்படுகிறது. நிபாதம் என்பதில் உள்ள பாதம் என்னும் சொல்லுக்கு வீழ்ச்சி என்பது பொருள். நி என்பது மிகுதியை உணர்த்துகிற ஒரு சொல். எனவே சத்தி நிபாதம் என்றால் இறைவனது சத்தி மிகுதியாக அல்லது விரைவாக வீழ்தல் என்பது பொருளாகும். அருட்சத்தி ஆன்மாவின் அறிவில் பதிதலையே சத்தி வீழ்தல் என்று குறிப்பிட்டார்கள். இறைவனது சத்தி வேறிடத்திலிருந்து வீழ்தல் இல்லை. அஃது எக்காலத்திலும் ஆன்மாவோடு உடனாகியே உள்ளது. அவ்வாறிருக்க, சத்தி வீழ்தல் என்று பெயர் வைத்தது ஏன் என்று கேட்கலாம். மக்கள் பலர் கூடியுள்ள இடத்தில் எதிர்பாராமல் துடுமென ஒரு கல் வந்து விழுந்தால், அவ்வீழ்ச்சி அம் மக்களிடத்திலே ஓர் அதிர்ச்சியை உண்டாக்கும். அவர்கள் அக்கணமே அவ்விடத்தை விட்டு அஞ்சி அகன்று விடுவர். அதுபோல இறைவனது சத்தி ஆன்மாவில் பதிந்தால் உலகியலில் நின்ற அவ் ஆன்மாவிடத்தில் ஓர் அதிர்ச்சி உண்டாகும். எதிர் பாரா நிலையில் ஒரு மாற்றம் உண்டாகும். அவ்வான்மா அக்கணமே உலகியலினின்றும் நீங்கும். இக்கருத்து பெயரிலேயே புலப்படும் வகையில் வீழ்ச்சி எனப் பெயரிட்டனர் முன்னோர். சத்தியினது தோற்றம், சத்தி புலப்பாடு என்றாற் போல வேறு வகையில் பெயரிட்டிருந்தால் அப்பெயர்கள் மேற்கூறிய கருத்தைப் புலப்படுத்த மாட்டா என்பது தெளிவு.
மலபரிபாகமும், சத்தி நிபாதமும் ஒரு காலத்தில் ஒருங்கே உடன் நிகழ்வனவாகும். மலபரிபாகம் ஏற்பட ஏற்பட, அதனோடு சத்தி பதிதலும் உடன் நிகழ்ந்து வரும். விடியலில் ஞாயிற்றின் ஒளி வரவர இருளும் விலகி விலகிச் செல்கிறது. ஒளிவரவு, இருள் விலகல் என்ற இரண்டில் எது முன்னே, எது பின்னே என்று சொல்ல முடியாது. முன்பின் என்பதின்றி அவை இரண்டும் ஒரே காலத்தில் ஒருங்கே நிகழ்கின்றன. அதுபோல ஆன்ம அறிவில் அகவிருளாகிய ஆணவ மலம் தேயத் தேய, உள்ளொளியாகிய திருவருள் ஒளி உடன் ஓங்கி வரும். இவற்றின் அறிகுறியே இருவினையொப்பு என்பதை அறிதல் வேண்டும். சத்தி நிபாதம் தொடக்கத்தில் அதிகமந்தமாய் நிகழும். பின்பு ஓரளவு மந்தமாய் நிகழ்ந்து அதன் பின்பு தீவிரமாய் கடைசியில் அதி தீவிரமாய் முடியும். இந்நால்வகைச் சத்தி நிபாத நிலைகளும் முறையே மந்ததரம், மந்தம், தீவிரம், தீவிரதரம் என்று சொல்லப்பெறும். கடைசி நிலையாகிய தீவிர தரத்தை அதிதீவிரம் என்றும் குறிப்பிடுவர். நாலாம் சத்தி நிபாதமாகிய அதிதீவிர நிலையிலேயே ஆன்மாவுக்கு மெய்ஞ்ஞான நாட்டம் வரும். ஞானாசிரியர் உபதேசித்த பொருள் உள்ளவாறு விளங்கித் தோன்றும். நமது ஆசிரியராகிய உமாபதி சிவனார் வாழ்வில் நடைபெற்ற நிகழ்ச்சியையே இதற்குச் சான்றாகக் காட்டலாம்.
உமாபதி சிவனார் வாழ்வில் :
தில்லை நடராசப் பெருமானுக்கு வழிபாடு செய்துவிட்டு சிவிகையில் வந்து கொண்டிருந்தார் உமாபதியார். பகல்வேளை அது. அவர் அமர்ந்திருந்த சிவிகைக்கு முன்னே கை விளக்கை ஏந்தியவாறு ஏவலர் சென்றனர். இக்காட்சியைக் கண்டார் மறைஞான சம்பந்தர் என்ற நல்லாசிரியர். அவர் உமாபதியாரின் பக்குவ நிலையைப் பார்த்தருளினார். அவருக்கு உபதேசம் செய்தற்குக் காலம் வந்துற்றது என்பதையும் உணர்ந்தார். அவர் கேட்குமாறு பட்ட கட்டையில் பகற் குருடு போகிறது என்று கூறியருளினார். பட்டகட்டை என்பது உமாபதியார் ஊர்ந்து வந்த பல்லக்கு. பகலிலேயே விளக்கு முதலிய பரிவாரங்களுடன் வந்தமையால் அவர் பகற்குருடு எனப்பட்டார். இது வெளிப்படையான பொருள். இதன் பின்னே மற்றொரு உட்பொருளும் மறைந்திருந்தது. இந்த உலகம் நிலையற்ற தன்மையுடையது; அறிவற்றது; பட்டகட்டை போன்றது. இப்படிப்பட்ட உலக நிலையில் இவருக்கு உவர்ப்புத் தோன்றவில்லையே. வெற்று ஆடம்பரத்தில் இவருக்கு விருப்பம் போகவில்லையே. வேதம் ஆகமம் முதலிய கலை நூல்களை யெல்லாம் படித்திருந்தும் உண்மை ஞானம் பெறாமையினால் இவர் பகற்குருடு போன்றவரே. இந்த உட்பொருளும் மறைஞான சம்பந்தர் சொற்களில் அமைந்திருந்தது. அதி தீவிரம் என்னும் பரிபக்குவ நிலையில் இருந்தமையால், உமாபதி சிவம் இந்தச் சொற்களின் பொருளை உணர்ந்து கொண்டார். அவருக்கு உலகியலில் இருந்த பற்று ஒழிந்தது. ஞானம் பெற வேண்டும் என்ற வேட்கை பிறந்தது. அவருக்கு உண்மையை உணர்த்த வந்த ஞானாசிரியர் இவரே என்ற தெளிவு பெற்றார். மறைஞான சம்பந்தரின் மலரடிகளில் வீழ்ந்து அவருக்கு ஆட்பட்டார். அதி தீவிர சத்தி நிபாதமே ஞானம் பெறுதற்கு ஏற்ற பக்குவ நிலை என்பதை இந்நிகழ்ச்சி வாயிலாக நாம் அறியலாம்.
இனி, இச் செய்யுளின் பொருளுக்கேற்ப, நீடும் இரு வினைகள் நேராக நேராதற்கண் இறை சத்தி கொளல் கூடும் எனச் சொற்களை அமைத்துக் கொள்ள வேண்டும். நேராக - சமமாக; நேராதற்கண் - நிகழ்தற்கண், நிகழுங் காலத்தில். இரு வினைகள் நேராக நேராதல் என்றதனால் இரு வினையொப்பினையும், இறைசத்தி கொளல் என்றதனால் சத்தி நிபாதத்தையும் குறித்துள்ளார் ஆசிரியர். இரு வினையொப்பினால் அறியப்படுகின்ற மலபரிபாகம் வந்த பொழுதே உயிர் <உலகியலை விடுத்து இறைவனது திருவருளை நோக்கத் தலைப்படும். அந்நிலையே சத்தி நிபாதம் எனப்படும் என்பது கருத்தாயிற்று. குருநாதர் உபதேசித்த உண்மைகளைச் சிந்தித்து உணரும் முறையே அறியும் நெறியாகும். அவரது உபதேசத்தைக் கேட்டதற்கும் சிந்தித்தற்கும் உரியவர் யார் என்பதை இம் முதற் செய்யுளில் உணர்த்தியுள்ளார் ஆசிரியர். இருவினையொப்பும் மலபரிபாகமும் வரப் பெற்ற, சத்தி நிபாதத்து உத்தமராகிய மாணாக்கரே குரு மொழியைக் கேட்டுச் சிந்தித்துப் பயன் பெறுதற்குரியர். ஏனையோர்க்குக் குருமொழி பயன் தருதல் இல்லை என்பது குறிப்பாய் உணர்த்தப்பட்டது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக