49. ஞான நெறியை யார் அறிவார்?
ஆரறிவார் எல்லாம் அகன்ற நெறி அருளும்
பேரறிவான் வாராத பின்.
பொருள் : ஆசை முதலிய குற்றங்களை யெல்லாம் அகன்றொழியச் செய்வது ஞானம். அப்படிப்பட்ட ஞானத்தைத் தர வல்லவன் முற்றறிவினை உடைய இறைவன் ஒருவனே. அவன் குருவாய் வந்து உணர்த்தாவிடின் மெய்யுணர்வாகிய ஞானத்தை யார்தாம் உணரமுடியும்?
சொற்பொருள் :
அருளும் - ஞானத்தை அருளவல்ல
பேரறிவான் - அறிவே வடிவான இறைவனே
வாராதபின் - குருவாக வாராவிடில்
எல்லாம் அகன்ற நெறி - ஆசை முதலிய குற்றமெல்லாம் அகலும்படியாகச் செய்வதாகிய ஞானத்தை
ஆர் அறிவார் - யார் தாம் உணர இயலும்? (ஒருவரும் உணர மாட்டார்)
விளக்கம் :
நெறி :
நெறி என்பதற்கு வழி என்பது பொருள். வீடு அடைவதற்கு நேர் வழியாய் இருப்பது ஞானமே. அதுபற்றியே ஞானத்தை நெறி என்று குறிப்பிட்டார் ஆசிரியர். சிலர் வேள்வியே வீட்டிற்கு வழி என்பர். சிலர் தானம், தவம், விரதம் முதலியன வீட்டைப் பயக்கும் என்பர். தீக்கை பெற்றாலே போதும், அதுவே வீடெய்துவிக்கும் என்பார் உளர். திருத்தலப் பயணம் செய்தல், புண்ணிய நதிகளில் நீராடுதல் முதலியவை முத்தியைப் பயக்கும் என்று கூறுவோர் உண்டு. இப்படிப் பல வழிகள் இருக்க, ஞானமே வீட்டிற்கு வழி என்று கூறுவது ஏன்? என்று கேட்கலாம். இதற்கு விடை கூறுவோம். மேற் கூறின வெல்லாம் நல்ல கதிக்கு வழிகளே என்பதில் ஐயமில்லை. ஆனால், அவை முத்திக்கு நேர்வழிகள் அல்ல என்பதை உணர்தல் வேண்டும். அவற்றை மேற்கொண்டால், இப் பிறப்பிலோ, வேறொரு பிறப்பிலோ ஞானத்தைப் பெறுதற்குரிய பக்குவம் வாய்க்கும். பின் நல்லாசிரியரை அடைந்து ஞானத்தைப் பெற்று வீடு எய்துதல் கூடும். எனவே ஞானத்திற்குரிய பக்குவத்தைப் பெறுதற்குத் துணை செய்வன என்ற வகையில் அவையெல்லாம் ஞானத்தை அடைதற்கு வழிகளே யன்றி, முத்திக்கு நேரே வழியாவன அல்ல. வேள்வி, தானம், தீக்கை முதலிய எவையாயினும் அவையெல்லாம் ஞானத்தைத் தந்து, பின், ஞானம் வழியாக முத்தியைத் தரும் என்பதே உண்மை. ஆகவே, ஞானம் இல்லாமல் முத்தியை அடைதல் இயலாது எனவும், ஞானமே முத்திக்கு நேர்வழி எனவும் அறியலாம். இன்னொன்றையும் கருதல் வேண்டும். ஞானம் இன்றியே வேள்வி, தானம் முதலியவை வீட்டைத் தருதல் இயலும் என்று கூறினால் அதற்கு என்ன பொருள்? ஞானம் இல்லாமலும் முத்தியடையலாம் என்பதுதானே அதன் பொருள். ஞானம் இல்லாத நிலை என்பது அஞ்ஞானம்தானே. ஞானம் இன்றியே வீட்டை அடையலாம் என்றால் அஞ்ஞானத்தில் இருந்து கொண்டே முத்தி நிலையைப் பெறலாம் என்று ஆகிவிடுகிறது. இஃது எவ்வாறு பொருந்தும்?
அஞ்ஞானத்தால் <உண்டாவது கட்டுநிலை என்று அறிந்திருக்கிறோம். எனவே அஞ்ஞானத்தில் இருந்து கொண்டே வீட்டையடையலாம் என்றால் கட்டுநிலையே வீட்டுநிலை என்றாகி விடும்! இதை விட நகைப்பிற்கு இடமானது வேறு என்ன இருக்க முடியும்? ஆதலால், ஞானம் இன்றிப் பிறவகையினாலும் முத்தியைப் பெறலாம் என்பது சற்றும் பொருந்தாத கூற்றேயாகும். ஞானமாகிய ஒளி வர, அஞ்ஞானமாகிய இருள்தானே விலகி, முத்தி எளிதில் கைகூடும். ஆகவே ஞானம் ஒன்றே முத்திக்கு நேர்வழி எனவும், ஞானம் தவிர வேறு எதுவும் முத்தியை நேரே தரவல்லது ஆகாது எனவும் நன்கு உணர்ந்து கொள்ளுதல் வேண்டும். சிவஞான போதம் ஞானத்தை நன்னெறி என்று குறிப்பிடும். இங்கு நம் ஆசிரியர் ஞானத்தை நெறி என்ற சொல்லால் குறித்துள்ளார்.
எல்லாம் அகன்ற நெறி :
பக்குவப்படுவதற்கு முன்பு ஒருவன் எப்படியெல்லாமோ வாழ்கிறான். வீடு, வாசல், செல்வம் ஆகிய இவையே நிலையானவை என்று எண்ணுகிறான். உண்மையிலே துன்பம் கொடுப்பன எல்லாம் அவனுக்கு இன்பமாகத் தோன்றுகின்றன. யார் யாரையோ தனக்கு உறவு என்றும், அவர்கள் தாம் தன்னைத் தாங்குவார்கள் என்றும் நம்புகிறான். ஊர் வேண்டும், பேர் வேண்டும், உற்றார் வேண்டும் என்று அவற்றையே மெய்யென்று நினைத்து வேண்டுகிறான். ஆனால், பக்குவம் வந்தவுடன் - குருநாதரை அடைந்து அவரது <உபதேசத்தைப் பெற்றவுடன் - இந்த உலக மயக்கம் போய் விடுகிறது. முன்பு எவற்றை மெய் யென்று பாராட்டினானோ அவற்றை இப்பொழுது பொய் என்று தெளிந்து வெறுத்து ஒதுக்குகிறான். இறைவன் ஒருவனே மெய்ப் பொருள்; அவனே உயிர்த் துணை என்ற ஞானம் கைவந்தவுடன் உலக ஆசை முதலிய குற்றங்களெல்லாம் ஓடி மறைகின்றன.
இக்கருத்தைத் திருமூலர் தமக்கே உரியமுறையில் சுவைபட ஒரு விடுகதை போலச் சொல்லுகிறார். எனக்கென்று ஒரு தோட்டம் இருந்தது. சில தீயவர்கள் அதிற் புகுந்து அதனைத் தங்களுடையதாக ஆக்கிக் கொண்டனர். நானும் அவர்களோடு ஒட்டியே வாழும்படி நேர்ந்தது. ஒரு சமயம் சிறிது இடத்தைத் தோண்டிக் குழி செய்து கத்தரி விதையை ஊன்றினேன். என்ன வியப்பு! அந்த விதையினின்று பாகற்கொடி முளைத்துப் படர்ந்தது. அப்பாகற் கொடியோ பூசணிப் பூவைப் பூத்தது. அந்தப் பூவோ வாழைக்காயைக் காய்த்தது. அந்தக் காய் பழுத்துக் கனிந்தது. அங்கே குடியிருந்த அந்த அற்பர்கள் இதையெல்லாம் பார்த்து அஞ்சி விட்டனர். எனக்கு ஒரு பெரிய கும்பிடு போட்டுவிட்டு ஓடி விட்டனர். இவ்வாறு திருமூலர் தாம் கூறவந்த பொருளை வெளிப்டையாகக் கூறாமல் மறைத்துக் கூறியுள்ளார். அவர்கூற வந்த பொருளை நோக்குவோம். ஆன்ம அறிவு என்பதைத்தான் அவர் தோட்டம் என்று குறிப்பிடுகிறார். காமம், வெகுளி, மயக்கம் முதலிய குற்றங்களே அதில் குடியிருந்த அற்பர்கள். குழியைத் தோண்டியது என்பது அவர் ஒரு குருநாதரை அடைந்து வழிபட்டமையைக் குறிக்கும். அதில் கத்தரியை விதைத்தது அவர் குருவின் உபதேசத்தைக் கேட்டதைக் குறிக்கும். கத்தரி விதையினின்றும் பாகற்கொடி முளைத்தது என்பது, குருவின் உபதேசத்தைப் பெற்றவுடன் அவருக்கு உலகியலில் வெறுப்புத் தோன்றிய நிலையைச் சுட்டுவதாகும். பாகற்கொடி பூசணிப் பூவைப் பூத்தது என்பது, உலகின் மேல் ஏற்பட்ட வெறுப்புணர்ச்சியிலிருந்து வீடு பேற்றில் விருப்பம் உண்டாயிற்று என்பதை உணர்த்துகிறது. வாழைக்கனி பேரின்ப வாழ்வைக் குறிக்கிறது. அந்தத் தீயவர்கள் அஞ்சி ஓடினார்கள் என்பது ஞானம் வந்தபின் காமம், வெகுளி முதலிய குற்றங்கள் ஆன்ம அறிவை விட்டு அகன்றமையைக் குறிப்பதாகும். இவ்வாறு பாசப்பற்று முதலிய குற்றமெல்லாம் அகலும் படியாகச் செய்வது ஞானம் ஆதலின் ஞானத்தை எல்லாம் அகன்ற நெறி என்றும், குருவடிவில் நின்று அதனை அருளும் இறைவனைப் பேரறிவான் என்றும் குறிப்பிட்டார் நம் ஆசிரியர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக