வெள்ளி, 3 நவம்பர், 2017

42. உள்ளிருந்து காண்பவன்

42. உள்ளிருந்து காண்பவன்
அகத்துறு நோய்க்கு உள்ளினர் அன்றி அதனைச்
சகத்தவரும் காண்பரோ தான்.

பொருள் : வீட்டில் ஒருவர் நோயுற்றால் அவரது நோயின் தன்மையை அவ்வீட்டினுள் உள்ளவரே அறிவார். வெளியில் உள்ள பிறர் அதனை அறிவாரோ? அறியமாட்டார். அதுபோல, உயிரிடத்துப் பொருந்திய அறியாமையாகிய நோயினது நிலையை உயிரினுள் இருப்பவனாகிய இறைவனே அறிய வல்லான். உலகத்தவராகிய பிறர் அதனை எங்ஙனம் அறிதல் இயலும்?
சொற்பொருள் :
அகத்து - வீட்டில் உள்ளார்க்கு
உறு - உற்ற
நோய்க்கு - நோயினது நிலையை
உள்ளினர் அன்றி - அவ்வீட்டினுள் இருப்பவர் அறிவரே யன்றி
அதனை - அதனை
சகத்தவரும் - வெளியில் உள்ள பிறர்
காண்பரோ - அறிவரோ? அறிய மாட்டார். (அதுபோல)
அகத்து - உயிரின் அகத்து
உறு - பொருந்திய
நோய்க்கு - அறியாமையாகிய நோயினது நிலையை
உள்ளினர் அன்றி - உயிரினுள் நிற்பவனாகிய இறைவனே அறிவான். அவனை யன்றி
அதனை - அவ் அறியாமை நிலையை 
சகத்தவரும் - உலகத்தவராகிய பிறர்
காண்பரோ - அறிய வல்லவரோ? அறியார்.

விளக்கம் :
அகம் என்பது வீடு. உள்ளினர் என்பது அவ்வீட்டினுள் உடன் உறைபவரைக் குறிக்கும். உவமைக்கு ஏற்ப, இச்சொற்களுக்கு இவ்வாறு பொருள் கொள்ள வேண்டும். இனி, உவமேயப் பொருளுக்கு ஏற்ப, அகம் என்பதற்கு உயிர் எனவும், உள்ளினர் என்பதற்கு உயிரின் உள்ளே உறைபவராகிய இறைவன் எனவும் பொருள் கொள்ள வேண்டும். பெரிய பதவியில் உள்ள அதிகாரி ஒருவர். அவருக்கு அன்று தாங்க முடியாத தலை நோவு. அதனால், அலுவலகத்திற்குச் செல்லவில்லை. அவரது மனைவிக்கு மட்டும்தான் நோய் பற்றித் தெரியும். அவள்தன் கணவருக்கு அருகில் இருந்து வேண்டும் உதவிகளைச் செய்து கொண்டிருந்தாள். நோய்க்கு உரிய மருந்துகளைக் கொடுத்தாள்; அதற்கேற்ற முறையில் உணவு செய்து கொடுத்தாள்.
இதற்கிடையில் வெளியே பல இடங்களிலிருந்து பல மனிதர்கள் அவரைத் தேடி வந்தார்கள். பரிந்துரைக் கடிதம் கேட்டுச் சிலர் வந்தார்கள். தமது குறைகளை முறையீடு செய்யச் சிலர் வந்தார்கள். அவரது அ<லுவலகப் பணி தொடர்பாகச் சிலர் வந்தார்கள். ஆனால், அவர்களுக்கெல்லாம் அவரது நோய் நிலை பற்றித் தெரியாது. வெளியிலிருந்து ஒரு காரியமாக வந்தனர்; பேசினர்; சென்றனர். அவ்வளவுதான். அவரது நோய் நிலை பற்றித் தெரிந்தவர் ஒருவர்தான். அந்த வீட்டில் உடனிருந்த அவரது துணைவியார்தான் அந்த ஒருவர். இதுவரை சொன்னதை உவமையாகக் கொண்டு, செய்யுளின் பொருளுக்கு வருவோம். உயிரை ஒரு பெருநோய் பிடித்து வருத்துகிறது. அதுதான் மலமாகிய நோய். உயிரில் உடனிருப்பவனாகிய இறைவன்தான் அந்த நோயின் தன்மையை அறிவான். அந்த நோய்க்கு ஏற்றவாறு அவன் வினைப் போகம் ஆகிய மருந்தினை ஊட்டி வருகிறான். இவற்றால் மலமாகிய பிணி சிறிது சிறிதாகத் தேய்ந்து வரும்.
அறியாமை தேயாதிருக்கும் பொழுது உயிருக்கு அருளின் மீது நோக்கம் செல்லாது. உலக நாட்டமே மிகுந்திருக்கும். அந்த நிலையில் அவ்வுயிர்க்கு அருளை உணர்த்தி என்ன பயன்? பசி ஏற்படாதவனுக்கு உணவை வழங்கினால் அது அவனுக்குப் பயன்படுமா? தாகம் எடுக்காதவனுக்குத் தண்ணீர் தரலாமா? அதுபோல, அருள் வேட்கையில்லாதவர்க்கு அருளை உணர்த்திப் பயனில்லை. அதுபற்றியே அறியாமை தேயாத பொழுது அருளை உணர்த்துவது குற்றம் என்று சொல்லப்படுகிறது. இனி, அறியாமை தேய்ந்த நிலைதான் பக்குவம் எனப்படும். பக்குவம் உடையவர் அருள் ஒன்றையே நாடி நிற்பர். அப்படிப்பட்டவர்க்கு அருளை உணர்த்துவது இன்றியமையாதது. அதுபற்றியே அறியாமை தேய்ந்தபின் அவர்க்கு அருளை உணர்த்தாதிருப்பதும் குற்றம் என்று சொல்லப்படுகிறது. அறியாமை தேய்தல் என்பது அகத்தின் கண் நிகழ்கின்ற நிகழ்ச்சி யாகும். அதனை வெளியில் உள்ள பிறமாந்தர் அறிதல் இயலாது. உயிர்க்கு உயிராய் உள் நிற்கின்ற முதல்வனே அறியாமை தேய்ந்த நிலையை உணர்வான். உணர்ந்து, ஞானாசிரியனாக வந்து அருளை உணர்த்துவான் என்பது இச்செய்யுளில் கூறப்பட்டது.
மற்றொரு பொருள் :
இச்செய்யுளுக்கு இன்னொரு வகையிலும் பொருள் கூறலாம். உடம்பிற்கு வந்த நோயின் தன்மையை அந்த உடம்பில் உறைகின்ற உயிர் அறியுமே யன்றி, அதன் தாய் தந்தையர் உற்றார் உறவினர் முதலிய பிறர் அறியமாட்டார். எடுத்துக் காட்டுக்கு ஒன்று கூறலாம். ஒருவருக்கு அடிவயிற்றில் குடல் இறங்கியிருக்கிறது. பல ஆண்டுகளாகியும் வலி தெரிவதில்லை. அதனால் அவரும் அதைப் பொருட்படுத்தாமல் விட்டுவிடுகிறார். யாரிடமும் தெரிவிக்காமல் இருந்து விடுகிறார்.
அவருடம்பில் குடலிறக்கம் இருக்கிறது என்பதை அவர் மட்டுமே அறிவார். உலகத்தார் அறிய மாட்டார். அவருக்கு வலியும் வேதனையும் ஏற்பட்டு அறுவை மருத்துவம் செய்தே ஆக வேண்டும் என்ற நிலை வரும்போது, அந்த நிலையை உணர்ந்து அவர் அதனைப் பிறருக்கு எடுத்துச் சொல்லும்போதே மற்றவர்களும் அதனை அறியும்படியாக நேர்கிறது. இதுபோலத் தமது உடம்பில் உள்ள நோய்களைப் பற்றி ஏதும் சொல்லாமல் வாழ்வோர் பலர். இதனையே அகத்துறு நோயை உள்ளினர் அறிவாரேயன்றிச் சகத்தவர் அறிவாரோ என்று இச்செய்யுள் கூறுகிறது. அகம் என்பது உடம்பைக் குறிக்கும். உள்ளினர் என்பது உடம்பில் உறையும் உயிரைக் குறிக்கும். உடம்பில் உற்ற நோயின் நிலையை அவ்வுடம்பில் வாழும் உயிரே அறியமுடியும். அதுபோல, உயிரில் உற்ற ஆணவ மலமாகிய நோயின் தன்மையை அவ்வுயிரில் உறைபவராகிய இறைவனே அறிய வல்லார். உலகத்தார் அறியமாட்டார். இப்படிப் பொருள் கூறுதற்கும் இச் செய்யுள் இடம் தந்து நிற்கிறது.

கருத்துகள் இல்லை:

திருமூலர் திருமந்திரம் - 275 - விளக்கம்

பாடல் விளக்கம்: மெய்தான் அறியும் செழுங்கடல் வட்டத்துப் பொய்தான் மிகவும் புலம்பும் மனிதர்கள் மெய்தான் உரைக்கில்விண் ணோர்தொழச் செய்குவன் ம...