41. வெளிவந்து நிற்கின்ற அருள்தலைவன்
அறியாமை உள்நின்று அளித்ததே காணும்
குறியாகி நீங்காத கோ.
பொருள் : உயிர் பக்குவம் உறாதநிலையில் இறைவன் அவ்வுயிரின் உள்ளாக மறைந்து நின்று அவ்வுயிர் அறியாதபடி அதன் அறிவைச் சிறிது சிறிதாக வளர்த்து வருவான். அவ்வுயிர் உண்மையை உணர்ந்து கொள்ளும் பக்குவம் எய்திய பொழுது அவ்விறைவனே கண்ணால் காணும் வடிவினையுடைய ஞானாசிரியனாய்த் தோன்றி வந்து அப்பக்குவ ஆன்மாவுக்குத் திருவருளைத் தெளிய உணர்த்துவான்.
சொற்பொருள் :
அறியாமை - (பக்குவம் வராத காலத்தில்) சிறிதும் அறிய முடியாதபடி
உள்நின்று - <உயிர்க்குயிராய் <உள்ளே மறைந்து நின்று.
அளித்ததே - அறிவை வளர்த்து வந்த அப் பரம் பொருளே (பக்குவம் உற்ற இப்பொழுது)
காணும் குறியாகி - கண்ணால் காணத் தக்க வடிவுடன் தோன்றி வந்து
நீங்காத - நீங்காமல் உடனாய் நின்று திருவருளைத் தெளிய உணர்த்துகிற
கோ - ஞானசிரியனாகிய தலைவன் ஆவான்.
விளக்கம் :
ஞானத்தை ஒருவர் பெற வேண்டுமாயின் அதற்குரிய பக்குவத்தை அவர் முதலில் பெறவேண்டும். பக்குவம் என்பது ஞானத்தைப் பெறுதற்குத் தகுந்த அறிவு நிலையே யாகும். ஐந்து வயதுக் குழந்தைக்குத் திருக்குறளைச் சொல்லித் தரமுடியாது. அதை வாங்கிக் கொள்வதற்கேற்ற அறிவுத் திறன் அஃதாவது பக்குவம் அக் குழந்தைக்கு அப்பொழுது இல்லை. எழுத்துக்கூட்டிப் படிக்கின்ற அளவுக்குத் தான் அதன் அறிவு நிலை உள்ளது. அதன் அறிவு நிலை படிப்படியாக வளர்ந்த பிற்பாடுதான் நுண்ணிய நூல்களைக் கற்கமுடிகின்றது. மாணாக்கர் ஒரே திருக்குறளைத்தான் கீழ் வகுப்பிலும் பயில்கின்றனர்; இளங்கலை வகுப்பிலும் பயில்கின்றனர். முதுகலை வகுப்பிலும் பயில்கின்றனர். மேல் மேல் வகுப்புகளில் செல்லச் செல்ல, திருக்குறளின் பொருள் மேல் மேல் விளக்கம் அடைகிறது. அதனை நுணுகி உணர முடிகிறது. மாணாக்கரின் அறிவுநிலை படிப்படியாக நுணுகிச் செல்கிறது என்பதையே இது காட்டுகிறது. இந்த அறிவு நுணுக்கமே பக்குவம் எனப்படுவது. உலகியற் கல்விக்கே தகுதி வேண்டுமானால் மெய்ப் பொருளை உணர்தலாகிய ஞானத்தைப் பெறுவதற்கு எத்துணைப் பக்குவம் வேண்டும்! உயிரின் அறிவை அறியாமையுட்படுத்தி மயங்கச் செய்வது ஆணவ மலம். ஆணவ மலம் வன்மையாய் உள்ள வரையில் அஃது உயிரறிவை நுணுகிச் செல்லவிடாது, பருப்பொருளாகிய உலகத்தையே நோக்கும்படி செய்யும். அந்த ஆணவ மலம் தேய்ந்து தேய்ந்து வரும்போதுதான் உயிரறிவு படிப்படியே அறியாமையிலிருந்து விடுபடும். அதிலிருந்து விடுபட விடுபட, உயிரறிவு நுணுகி நுணுகிச் செல்லும்; நனிநுண் பொருளாகிய இறைவனை உணரும் செவ்வியை எய்தும்; அந்நிலையில் உலகத்தை நோக்காது இறைவனது திருவருளை நோக்கத் தலைப்படும். இந்நிலையே சத்தி நிபாதம் எனப்படும். இதுவே ஞானத்தைப் பெறுதற்குரிய பக்குவ நிலையாகும்.
இதுகாறும் உயிர்க்குயிராய் மறைந்து நின்று செயற்பட்டு ஆணவ மலத்தைத் தேயும்படி செய்து உயிரறிவை வளர்த்து வந்த இறைவனே இப்பொழுது இவ்வுயிரின் பக்குவ நிலையைப் பார்த்தருளி அதற்கு மெய்யுணர்வை அளித்தற்கு ஞானாசிரியனாய் வெளிப்பட்டு வருவான் என்பது இச்செய்யுளில் கூறப்பட்டது. உயிரின் அறிவு பக்குவம் எய்தாதபொழுது சிவன் அதற்கு வினைக்கு ஈடானவற்றையே உணர்த்துவான் என்பதும், பக்குவம் எய்திய பொழுது தன்னையே உணர்த்தி நிற்பான் என்பதும் அறியத்தகும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக