வெள்ளி, 3 நவம்பர், 2017

3. ஒப்பு இல்லாதவன்

3. ஒப்பு இல்லாதவன்
பெருமைக்கும் நுண்மைக்கும் பேரருட்கும் பேற்றின்
அருமைக்கும் ஒப்பின்மை யான்.

பொருள் : எல்லாவற்றிலும் பெரிய பொருளாய் நிற்கும் தன்மையில் அவனை ஒப்பார் இல்லை. எல்லாப் பொருளிலும் உட்கலந்து நிறைந்து நிற்கும் நுண்மையில் அவனை ஒப்பார் இல்லை. எல்லாவுயிர்களிடத்திலும் கொண்டிருக்கும் மாறாத பெருங்கருணைத் திறத்தில் அவனை ஒப்பார் யாருளர்? பிறர் தன்னைப் பெறுவதற்கு அரியனாய் நிற்கும் நிலைமையிலும் அவன் ஒப்பார் இல்லாதவனே. இவ்வாறு பெருமை, நுண்மை, பேரருள், பெறுதற்கு அருமை ஆகிய இந்நான்கு திறத்திலும் தனக்கு ஒப்பாக வேறொன்று இல்லாத சிறப்பினை உடையவன் எம் இறைவன்.
சொற்பொருள் :
பெருமைக்கும் - எல்லாப் பொருள்களையும் தன்னுள் அடக்கிக் கொண்டு, அவை எல்லாவற்றினும் தானே பெரிய பொருளாய் நிற்கும் தன்மையிலும்
நுண்மைக்கும் - எல்லாப் பொருள்களின் ஊடும் உட்கலந்து நிறைந்து நிற்கும் நுண்மையிலும்
பேரருட்கும் - எல்லாவுயிர்களிடத்திலும் வைத்திருக்கும் மாறாத பெருங்கருணையிலும்
பேற்றின் அருமைக்கும் - பிறர்தன்னைப் பெறுதற்கு மிகவும் அரியனாய் நிற்கும் நிலைமையிலும்
ஒப்புஇன்மையான் - தனக்கு ஒப்பாக வேறொன்று இல்லாத சிறப்பினை உடையவன் எம் இறைவன்.

விளக்கம்
பெருமை : கடவுட் பொருள் தன்னை அடக்கி நிற்பதொரு பொருள் இன்றித் தானே எல்லாப் பொருளையும் தன்னுள் அடக்கி நிற்கும் பெரும் பொருள் ஆகும். வடமொழியில் கடவுளைப் பிரம்மம் என்பர். பிரம்மம் என்பதற்குப் பெரியது என்பதே பொருள். கடல்வெளி விரிந்த நீர்ப் பரப்பு முழுவதையும் தன்னுள்ளே அடக்கிக் கொண்டு நிற்கிறது. அதுபோலப் பதிப் பொருளாகிய இறைவன் சித்தாகிய உயிர்களையும் சடமாகிய உலகங்களையும் தன் கண் அடங்கக் கொண்டு நிற்கிறான். பிறவற்றைத் தன்னுள் அடக்கி நிற்கும் பெருநிலை வியாபகம் எனப்படும். அதனுள் அடங்கி நிற்கும் நிலை வியாப்பியம் எனப்படும். அம் முறையில் கடவுள் வியாபகம். ஏனைய உயிர்களும் உலகங்களும் கடவுளிடத்தில் வியாப்பியம். கடவுள் வியாபகமாய் நிற்றலின் அதற்குக் காலம், இடம் என்ற எல்லை யாதும் இல்லை. மேல், கீழ், புடை ஆகிய எல்லா இடங்களிலும் இங்ஙனம் எல்லையின்றிப் பரந்து நிற்றலை அகண்டாகாரம் என்பர். காலை வேளையில் பலகணி வழியாக நுழையும் சூரிய வொளிக் கற்றையில் மிதக்கும் நுண்ணிய துகள்கள் தாம் எத்துணைச் சிறியவை! எங்கும் விரிந்து கிடக்கும் அண்ட கோடிகள் எல்லாம் அத்துணைச் சிறியவாகத் தோன்றும்படியாக நிற்கும் பெரிய பொருள் இறைவன்.
நுண்மை :
இறைவன் எல்லாவற்றிலும் நுண்ணியன். ஆதலால் அவன் எல்லாப் பொருள்களிடத்தும் உள்ளீடாய்க் கலந்து நிற்பான். அங்ஙனம் எல்லாவற்றிலும் உள்ளுறைந்து நிற்றலை விளங்கிக் கொள்வதற்கு எள்ளில் நிறைந்திருக்கும் எண்ணெய்யை அவனுக்கு எடுத்துக்காட்டாகக் கூறுவர். முன்னே கூறிய பெருமை என்பது அவன் எல்லாப் பொருளையும் கடந்து நிற்கும் பெரு நிலையாகும். இங்குக் கூறிய நுண்மை என்பது அவன் எல்லாப் பொருளிலும் கலந்து நிற்கும் கலப்பு நிலையாகும். கடந்த நிலையைக் குறிக்கும் பெயர் கடவுள் என்பது. கலந்த நிலையைக் குறிக்கும் பெயர் இறைவன் என்பது. இறுத்தல் என்ற சொல்லிலிருந்து இறைவன் என்ற சொல் வந்தது. இறுத்தல் என்பதற்குத் தங்குதல் என்பது பொருள். எனவே எங்கும் தங்கி இருப்பவன் என்ற கருத்தில் இறைவன் எனப்பட்டான். எப்பொருளிலும் எவ்விடத்திலும் இவ்வாறு தங்கி நின்று இயக்குபவன் சிவபெருமான் ஒருவனே. அவ்வகையில் இறைவன் என்னும் பெயர் சிவபெருமானுக்கே உரியதாகும். அப்பெயர் அவனுக்கே வழங்கப்பட்டிருத்தலைப் பழைய நூல்களிற் காணலாம். இறைவன் நுண்ணியன் ஆதலால் பருப்பொருள்களாகிய மலங்களால் பற்றப்படாமல் என்றும் தூயவனாய் நிற்பான் என்பதும் விளங்கும். அவனது பெருமையின் முன் அண்டமும் ஓர் அணுவாய்த் தோன்றும்! அவனது நுண்மையின் முன் அணுவும் ஓர் அண்டமாய்த் தோன்றும்!
பேரருள் :
இறைவன் அளவில்லாத அருளுடையவனாதல் பற்றி அவனைக் கருணைக் கடல் என்று போற்றுவர். அவன் எண்ணில்லாத உயிர்கள் மேல் இரக்கம் கொண்டு, கைம்மாறு சிறிதும் கருதாது அவைகள் நலமடைதற் பொருட்டே அளவற்ற செயல்களை எப்பொழுதும் மேற்கொண்டு செய்து வருகிறான். உயர்ந்த மக்கட் பிறவியைப் பெற்ற நாம் தலைவனாகிய அவனை மறந்து நம்மையே தலைவராகக் கருதுகிறோம். நமது மனத்தை அவனிடத்திலே செலுத்தாமல் உலகியலிலே செலுத்தி வருகிறோம்; அவன் விதித்த விதிகளைப் பின்பற்றாமல் நடக்கிறோம். ஆயினும் அவன் நம்மை ஒருபோதும் வெறுத்து விலக்கியதில்லை. அவனுடைய அருளுக்கு அளவில்லை. அன்பிலே தாயன்பு சிறந்தது. ஈடு இணையற்றது என்பர். அவளது அன்பின் நிலையும் ஒரொரு சமயம் மாறி விடுவதைப் பார்க்கிறோம். ஆயின் இறைவனது கருணையோ என்றும் ஒருபடித்தாய் நிற்பது. அது பற்றியே இறைவனைத் தாயினும் இனியன் என்று பெரியோர்கள் கூறுகின்றனர். அவனுக்கு ஆட்பட்டவர்கள் அவனது பேரருளை நினைந்து எப்படியெல்லாம் உருகுகின்றனர்!
தந்தையே, அடியேனை அன்பினாலே உனக்குத் தொண்டனாகச் செய்தாய்; உனது திருவருள் நோக்கினாலே என்னைத் தூய்மை செய்தருளினாய்; மிகவும் அரியவனாகிய நீ எனக்கு மிகவும் எளியவனாகி இரங்கி ஆண்டு கொண்டாய். நான் ஒரு பேதை; நாயினும் கடைப்பட்டவன். நான் செய்த குற்றங்கள் அத்தனையும் நீ பொறுத்துக் கொண்டாய். இத்தனையும் என் போன்றவர் அளவிற்கு உரியனவோ? அல்ல. எம் பெருமான் தனது பேரருளை என் மீது வைத்த தன்மையை என்னென்பேன்! இரும்பு போன்ற வலிய மனமுடைய என்னை மெல்ல மெல்ல ஈர்த்து உன் இணையடிகளிற் சேர்த்துக் கரும்பு தருசுவையை எனக்குக் காட்டினாய். துன்பத்தைத் தரும் பிறப்பு இறப்புக்களில் அழுந்திக் கிடந்த ஆதரவற்ற அடியேற்கு உனது பாதமலர் காட்டியது உன் பேரருளே யன்றோ? நாய்க்குப் பொன் தவிசு இடுவது போல அடியேற்கு உன் பொன்னருள் கிடைத்தது. அடியேனை அஞ்சேல் என்று ஆண்டாய். நின்னருளால் நான் உய்ந்தேன். உனது பரங் கருணைத் தடங்கடலில் நான் படியுமாறு எனக்கு அருள் புரிவாயாக. இவ்வாறு இறைவனது பெருங் கருணைத் திறத்தினை வியந்துருகிப் பாடியுள்ள பான்மையை நமது தேவார திருவாசகங்களிற் காணலாம்.
பேற்றின் அருமை :
இறைவன் பெறுதற்கு அரியவன். அவனை அடைய வேண்டின் முதலில் உலக நெறியில் உவர்ப்பு ஏற்பட வேண்டும்; சிவத் தொண்டு, சிவ பூசை முதலியவற்றை இடைவிடாது உள்ளன் போடு செய்துவரல் வேண்டும். அதன் பயனாக இரு வினையொப்பு என்னும் பக்குவ நிலை வரல் வேண்டும். ஞானாசிரியர் வாய்க்க வேண்டும். அவர் காட்டும் நெறியிலே வழுவாது நின்று உண்மை ஞானத்தைப் பெற வேண்டும். இங்குக் கூறிய இத்தனை சாதனைகளில் நின்று ஞானத்தைப் பெறுதல் என்பது அத்துணை எளிதோ? இதனைக் கருதியே,
பல்லூழிக் காலம் பயின்று அரனை அர்ச்சிக்கில்
நல்லறிவு சற்றே நகும்

என்றனர் பெரியோர். உயிர்களாகிய நாம் இப்படிப்பட்ட மெய்ந் நெறியிற் செல்லாமல் உலகியலிலேயே உழன்று கொண்டிருக்கிறோம். இதற்குக் காரணம் நம்மிடத்திலுள்ள பாசத் தடையே யாகும். இத்தடை என்று நீங்குமோ? அதற்கு இன்னும் எத்தனை பிறவிகள் வேண்டுமோ? பெறுதற்கு அரியவன் பெருமான் என்று உமாபதி சிவனார் சொல்வது எவ்வளவு உண்மை! இதனைக் கற்போர்க்கு அப்படியானால் இறைவனைப் பெறவே முடியாதா? என்று ஐயமும் திகைப்பும் ஏற்படலாம் அல்லவா? அதனை உணர்ந்தே, அவன் பேரருளாளன் என்ற கருத்தையும் உடன் சொல்லியிருக்கிறார் ஆசிரியர்.
அன்று தொட்டே உயிர்களோடு உடனாய் நிலைபெற்றுள்ள இறைவன் அவ்வுயிர்களைத் தானாக்கிக் கொள்ள வேண்டும் என்ற பெருங்கருணை உடையவன். அதற்குத் தடையாக இருப்பது ஆணவ மலம். உயிர்களைப் பற்றியுள்ள அம்மல சத்தியைத் தன் திருவருட் சத்தியினால் சிறிது சிறிதாக நீக்கி வருகிறான். இவ்வாறு செய்வதில் அவனுக்கு ஒருபோதும் சலிப்பு உண்டாதல் இல்லை. அவனது பேரருளே எல்லாவுயிர்களுக்கும் உய்தியைத் தரவல்லது. அவனது அருளையே பற்றாகப் பற்றினால் பாசப் பற்று நீங்கி வாழலாம்; இறைவனைப் பெறலாம். எனவே, இறைவன் பெறுதற்கு அரியவனாகவும் இருக்கிறான். திருவருள் உதவியினால் பெறுதற்கு உரியவனாகவும் இருக்கிறான். இவ்வாறு பேற்றின் அருமை என்பதோடு முன்னே உள்ள பேரருள் என்பதையும் இணைத்து நோக்கிப் பொருள் கொள்ளுதல் வேண்டும்.
சிவப்பிரகாசக் கருத்து :
ஆசிரியர் உமாபதிசிவம் தமது சிவப்பிரகாசம் என்ற நூலில் பதியாகிய பரம்பொருளின் இயல்பைச் சொல்லும் போது,
செலஅரிதாய் செல்கதியாய் சிறிதாகிப் பெரிதாய் (செ.13)
என்கிறார். அத்தொடரின் மறுவடிவமாகவே திருவருட் பயனில் இச்செய்யுள் அமைந்துள்ளது என்பது நோக்குதற்குரியது. செலஅரிதாய் என்பதற்கு ஏற்ப இங்கே பேற்றின் அருமை என்பது உள்ளது. செல்கதியாய் என்பதன் பொருளை இங்கே பேரருள் என்பது விளக்கி நிற்கிறது. சிறிதாகி என்பதை இங்கே நுண்மை என்று குறிப்பிடுகிறார். பெரிதாய் என்பதை அப்படியே பெருமை என்று இங்கே அமைத்துக் கொள்கிறார். பெரிதாய் என்பதைப் பெருமை என அமைத்துக் கொண்டாற் போலச் சிறிதாகி என்பதையும் சிறுமை என அமைத்துக் கொள்ளலாமே. அப்படிச் செய்யாமல், சிறுமை என்பதற்குப் பதிலாக நுண்மை என்ற சொல்லை இங்கே ஆளக் காரணம் என்ன? என்று கேட்கலாம். சிறுமை என்ற சொல் நுண்மையைக் குறிக்கும். சான்றாக சிற்றம்பலம் என்பது சிறுமை+அம்பலம் எனப் பிரிந்து, நுண்ணிய அருள்வெளி எனப் பொருள்படும். இதில் சிறுமை என்பது நுண்மையைக் குறித்து நிற்றலைக் காணலாம்.
மேற்காட்டிய சிவப்பிரகாசத் தொடரிலும் நம் ஆசிரியர் இறைவனது நுண்மையைக் குறிப்பதற்குச் சிறிதாகி என்ற சொல்லையே ஆண்டிருத்தல் கண்கூடு. அப்படியானால், திருவருட்பயனில் சிறுமை என்ற சொல்லை அவர் ஏன் பயன்படுத்தவில்லை? நுண்மை என்ற சொல்லை ஏன் பயன்படுத்த வேண்டும்? எனில், வெண்பாவாகிய யாப்பே அதற்குக் காரணம் எனலாம். பெருமைக்கும் சிறுமைக்கும் என்று பாடினால் யாப்புக் கெடும். பெருமைக்கும் நுண்மைக்கும் என்று அமைத்தால் யாப்புக் கெடாது. அது கருதியே நுண்மை என்ற சொல்லைப் பயன்படுத்தினார் ஆசிரியர். வேறு நயம் கருதி அதனை இங்கே பயன்படுத்தினார் என்று கருத வேண்டியதில்லை. இனி, சிவப்பிரகாசத் தொடரிலுள்ள நான்கு கருத்துக்களையும் திருவருட் பயனில் அதே வரிசையில் நிறுத்தவில்லை; மாற்றி எதிர் நிரலாக அமைத்துள்ளார் என்பதையும் காணலாம். எனவே சிவப் பிரகாசத் தொடரைப் பின்னிருந்து நோக்கினால் பெருமை, நுண்மை, பேரருள், பேற்றின் அருமை என்ற வரிசை முறை கிடைத்துவிடும்.

கருத்துகள் இல்லை:

திருமூலர் திருமந்திரம் - 275 - விளக்கம்

பாடல் விளக்கம்: மெய்தான் அறியும் செழுங்கடல் வட்டத்துப் பொய்தான் மிகவும் புலம்பும் மனிதர்கள் மெய்தான் உரைக்கில்விண் ணோர்தொழச் செய்குவன் ம...