39. உயர்ந்ததை விட்டு இழிந்ததை நாடுதல்
பரப்பு அமைந்து கேண்மின்! இது பாற்கலன்மேல் பூஞை
கரப்பு அருந்த நாடும் கடன்.
பொருள் : உலகப் பொருள்களின் மேல் பரந்து ஓடுகின்ற மனத்தை ஒரு நெறிப்படுத்தியாம் கூறுவதைக் கேளுங்கள். திருவருளை மறந்து உலகப் பொருள்களில் கிடைக்கும் அற்ப சுகத்தைப் பெறுதற்கு நீங்கள் விரைகிறீர்கள். இந்த விரைவு எது போன்றது எனில், பால் நிறைந்த கலத்தின் மேல் ஏறி அமர்ந்த பூனை அந்த பாலைப் பருக நினையாமல், சற்றுத் தொலைவில் காணப்படும் கரப்பான் என்னும் பூச்சியைப் பிடித்து உண்ணுதற்குக் கருதும் முறைமை போன்றதாகும்.
சொற்பொருள் :
பரப்பு - (திருவருளை மறந்து உலக நுகர்ச்சியில் நீங்கள் காட்டுகின்ற) மனவேகம்
அமைந்து - அடங்கப் பெற்று
கேண்மின் - யாம் கூறுவதைக் கேளுங்கள்.
இது - உலக நுகர்ச்சியில் நீங்கள் கொள்ளுகின்ற இந்த விரைவு (எது போன்றது எனில்)
பாற்கலன் மேல் - பாலை வைத்த கலத்தின் மேல்
பூஞை - ஏறி அமர்ந்த பூனை (அந்தப் பாலைப் பருக நினையாமல்)
கரப்பு - சற்றுத் தொலைவில் காணப்படும் கரப்பான் பூச்சியை
அருந்த - பிடித்து உண்ண
நாடும் கடன் - கருதும் முறைமை போன்றது ஆம்.
விளக்கம் :
பரப்பு அமைந்து கேண்மின் :
சிற்றூர்களில் பெண்கள் ஊர்ப்புறத்தில் உள்ள கிணற்றுக்கோ, குளத்திற்கோ சென்று நீர் எடுத்து வருவார்கள். அவர்கள் தலைமேலே பெரிய நீர்க்குடம் இருக்கும்.. அக் குடத்தின் மேல் மற்றொரு சிறிய குடமும் வைத்திருப்பார்கள். இவை போதா என்று இடுப்பிலும் ஒரு நீர்க் குடத்தை வைத்துக் கொண்டு வருவார்கள். வரும்போது ஊர்க் கதையெல்லாம் பேசுவார்கள்; கையை வீசிக் கொண்டு நடப்பார்கள். அவர்களைப் பார்த்தால் தலை மேல் உள்ள குடத்தையே மறந்து விட்டவர்களைப் போலத் தோன்றும். பார்க்கின்ற நமக்குத்தான் குடம் கீழே விழுந்து விடுமோ? என்ற கவலை உண்டாகும்! அப்படி அவர்கள் பேசிக் கொண்டும், கை வீசிக் கொண்டும் வந்தாலும் அவர்கள் மனம் நீர்க்குடத்தின் மேலேயே இருக்குமாம். ஆனால், அது நமக்குத் தெரியாது. அதுபோல ஞானிகள் உலகத்தில் மற்றவர்களைப் போல உண்டும் உடுத்தும் தொழில் செய்து வாழ்ந்தாலும் அவர்கள் மனம் திருவருளையே பற்றியிருக்கும்.
இந்த நிலையோடு நமது மனத்தின் நிலையை ஒப்பிட்டுப் பாருங்கள்! நமது மனம் ஓரிடத்தில் நில்லாமல் எங்கெல்லாமோ ஓடி அலைகிறது. பூசனை செய்யும்போது வெளியே ஏதேனும் ஓசை கேட்டால் மனம் அங்கே ஓடுகிறது. கோயிலுக்குப் போய் இறைவன் திருமுன் நிற்கும்போது கூட மனம் அக்காட்சியில் ஈடுபடாமல் பற்பலவற்றை எண்ணி அலைபாய்கிறது. நமது மன ஓட்டத்திற்கு ஓர் உவமை சொல்லலாம். வீதியில் பிள்ளைகள் பம்பரம் விடுகிறார்கள். பம்பரத்தில் கயிற்றைச் சுற்றி வேகமாக விடுகிறார்கள். அந்தப் பம்பரம் எங்கெல்லாமோ சுற்றிச் சுழல்கிறது. வரையறையின்றிப் பெரிதாக வட்டமடித்துச் சுற்றுகிறது. அதுபோல நம் மனமும் எப்போதும் சுற்றிச் சுழன்று கொண்டேயிருக்கிறது. இப்படிப்பட்ட மனமுடையவர்களுக்கு உபதேசம் செய்வது வீண் செயலாகும். அவர்கள் யார் என்ன சொன்னாலும் அதை ஏற்கமாட்டார்கள். அறியாக் குழந்தையிடம் வெறும் தாளைக் கொடுத்தாலும் அதைக் கிழித்து விடும். நூறு ரூபாய்த் தாளைக் கொடுத்தாலும் கிழித்தெறியும். இரண்டு தாளுக்கும் உள்ள வேறுபாடு அக்குழந்தைகளுக்குத் தெரியாது. அதே குழந்தைக்கு நூறு ரூபாய்த் தாளின் மதிப்பை உணரச் செய்து பிறகு கொடுத்தால் அது கிழித்தெறியாமல் பாதுகாக்கும். அதுபோலப் பரந்து ஓடுகின்ற, அமைதியற்ற மனம் உபதேசத்தின் அருமையை உணராது அதைத் தூக்கியெறிந்து விடும். ஆகவே முதலில் மனத்தை ஒரு நெறிப்படுத்த வேண்டும். அப்பொழுது தான் உபதேசத்தின் மதிப்பை உணர்ந்து பயன்படுத்திக் கொள்ள முடியும். இதுபற்றியே பரப்பமைந்து கேண்மின் என்றார் ஆசிரியர்.
பாற்கலன்மேல் பூனை :
இயல்பிலே இன்ப நாட்டம் உடைய உயிர், உயர்வற உயர்ந்த இன்பப் பொருளாகிய இறைப் பொருளை யல்லவா நாடி அடைய முற்பட வேண்டும்? நெல்லிக் கனியும் நிறை யின்னமுதும் போல இனிக்கும் மெய்ப் பொருளை யல்லவா புல்லிப் புணர விழைய வேண்டும்? அவ்வாறு விழையாமல் அழிதல் மாலையவாகிய உலகப் பொருள்களை யல்லவா பெற்று அனுபவிக்கத் துடிக்கிறது? ஆணவ மலமாகிய அழுக்கு நீங்கும் படியாக உலக வாழ்க்கை யென்னும் ஆற்றில் நீராடி வருக என்று உயிர்களைப் பணித்தான் இறைவன். ஆனால், உயிர்களோ ஆற்றின் பயனைக் கொள்ளாமையோடு சேற்றையும் அல்லவா வாரிப்பூசிக் கொள்கின்றன? ஐம்புல நுகர்ச்சியாகிய சேற்றில் அல்லவா அழுந்தி நிற்கின்றன? உயிர்கள் அறியாமையின் காரணமாக உயர்ந்ததில் வெறுப்பும் தாழ்ந்ததில் விருப்பும் கொண்டு நிற்கின்றன. இதனை ஓர் உவமையில் வைத்துக் காட்டுகிறார் ஆசிரியர். பசியோடு வருகிற ஒரு பூனை பாற்கலயத்தைப் பார்த்தது. அக்கலயம் உறியின்மேல் தொங்க விடப்பட்டிருந்தது. பூனை அதன் மேல் தாவி அமர்ந்தது. அந்த நேரத்தில் பக்கத்துச் சுவரிலே ஒரு கரப்பான் பூச்சி ஓடியது. அதைப் பார்த்த பூனை உயர்ந்ததாகிய பாலை மறந்தது. இழிந்ததாகிய கரப்பான் மீதே அதன் எண்ணம் சென்றது. பாலைக் குடிக்க விரும்பாமல் கரப்பானைத் தாவிப் பிடிக்க முயன்றது. அந்தப் பூனையின் நிலையில் நாம் இருக்கிறோம்; உயர்ந்ததாகிய திருவருள் இன்பத்தை நாடாமல், இழிந்ததாகிய சிற்றின்பத்தையே நாடி அலைகிறோம். அதனாலே துன்பத்தை அடைகிறோம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக