வெள்ளி, 3 நவம்பர், 2017

40. திருவருளோடு பழகாத உயிர்

40. திருவருளோடு பழகாத உயிர்
இற்றைவரை இயைந்தும் ஏதும் பழக்கமிலா
வெற்றுயிர்க்கு வீடு மிகை.

பொருள் : உயிர் அன்று தொட்டு இன்று வரையிலும் திருவருளோடு தான் கூடியிருக்கிறது. ஆயினும் அத்திருவருளைத் தெரிந்து கொள்ளாமல் அதனோடு சிறிதேனும் பழகுதல் இல்லாமல் இருக்கிறதே. இப்படிப் பயனின்றி வாழ்கின்ற இந்த உயிருக்கு வீடு பெற என்ன தகுதி இருக்கிறது?
சொற்பொருள் :
இற்றை வரை - அநாதியாகிய அன்று தொட்டு இன்று வரையிலும்
இயைந்தும் - திருவருளோடு கூடியிருந்தும் (அதனைத் தெரிந்து கொள்ளாமல்)
ஏதும் பழக்கம் இலா - அத்திருவருளோடு சிறிதும் பழகுதல் இல்லாத
வெற்றுயிர்க்கு - வீணாக வாழ்வைக் கழிக்கின்ற <உயிருக்கு
வீடு - துன்பத்தினின்றும் நீங்குதலாகிய வீடு
மிகை - வேண்டாததே யாகும்.

விளக்கம் :
இடையில் ஏற்பட்ட பழக்கம் :
இப்போது நாம் கண், காது முதலிய இந்திரியங்களோடு பழகி வருகிறோம். அவற்றின் வாயிலாக உலகப் பொருள்களை அறிந்து அவற்றோடும் பழகி வருகிறோம். இந்திரியங்களோடும் உலகப் பொருள்களோடும் நமக்கு உள்ள இந்தப் பழக்கம் பிறவி வந்த பிற்பாடுதான். ஆகவே, இவற்றின் தொடர்பு நமக்கு என்றுமுள்ள தொடர்பு அன்று, இடையில் ஏற்பட்ட பழக்கம் இது என்பது புலனாகும். ஆயினும், இவற்றோடு கொண்ட பழக்கம் எத்துணை வலிமையானது என்பதை எண்ணிப் பாருங்கள்!
இந்த இந்திரியங்கள் நமக்கு வேறானவை என்ற எண்ணமே நமக்கு இருப்பதில்லை. அவையே நாம் என்று கருதிக் கொண்டு அவற்றோடு ஒன்றுபட்டு வாழ்கிறோம். சுவையான உணவு நாவிற் படும்போது என் நாக்கு இதை விரும்புகிறது என்று சொல்வதில்லை. எனக்குப் பிடித்திருக்கிறது என்று சொல்லி மகிழ்கிறோம். நாவே நாம் என்று இருப்பதையே இது காட்டுகிறது. இப்படி ஒவ்வொரு இந்திரியத்தோடும் அது அது நான் என்று ஒற்றுமைப் பட்டு வாழ்கிறோம். வாழ்நாள் முழுதும் இந்த இந்திரியங்களோடு இப்படி வேற்றுமையின்றிப் பழகி வருகிறோம். இவ்வளவு தூரம் நெருக்கமாகப் பழகி நின்றாலும் இந்த ஐம்பொறிகள் முதுமையில் மெல்ல மெல்ல நம்மிடமிருந்து விலகி ஓடப்பார்க்கின்றன. மூத்துத் தளர்ந்த நிலையில் இவை நம்மோடு ஒத்துழைப்பதில்லை. நமக்குத் தொல்லை தருகின்றன. நம்மைக் கைவிட்டு விடுகின்றன. இந்திரியங்களோடு பழகி வந்த நமது பழக்கம் இப்படியாக முடிகிறது.
இனம் இனத்தோடு சேர வேண்டும் :
உடம்பும் இந்திரியங்களும் உலகப் பொருள்களும் ஆகிய இவற்றோடு கொள்ளுகிற பழக்கம் உயிருக்கு இயற்கையானதன்று. இங்கே ஓர் உண்மையைத் தெரிந்து கொள்ள வேண்டும். இனம் இனத்தோடு சேரவேண்டும் என்பார்கள். உயிர் சித்து என்ற இனம். உடம்பும் உலகப் பொருள்களும் ஆகிய இவையெல்லாம் அறிவற்ற அசத்து என்ற இனத்தைச் சேர்ந்தவை. எனவே, இவை உயிருக்கு வேற்றினம் என்பது விளங்கும். சித்தாகிய உயிர் சித்தாகிய திருவருளோடு பழகுதலே முறை. அதுதான் உயிருக்கு இயற்கை. அதற்கு மாறாக உயிர் தன்னினம் ஆகிய திருவருளோடு பழகாமல், தன்னினம் அல்லாத வேற்றினமாகிய அசத்துப் பொருள்களோடு பழகி வருகிறது. முன்னே கூறியபடி அசத்துப் பொருள்கள் இடையிலே கை விட்டு நீங்கிவிடும். அப்படியின்றி, உயிர் எங்கே எப்படிச் சென்றாலும் அங்கே துணையாக நின்று உதவுவது திருவருளேயாகும். அதனால் பெரியோர் திருவருள் ஒன்றையே வேண்டி உருகிக் கண்ணீர் பெருகி நிற்பர். உனது திருவருள் என்று கிடைக்குமோ என்று இரைதேடும் கொக்குப்போலக் கவலையுடன் வாடி நிற்கின்றேன். நாயேனைப் பிரிந்திருக்க வேண்டும் என்று உனக்குத் தினையளவு கூட எண்ணமிருக்காது. நான்தான் உன் திருவடி மலரைப் பிரிந்திருக்கிறேன். உன்னை விட்டால் எனக்கு யார் உறவு? ஓடும், கோவணமுமே உறவு என்று நினைத்து, உள்ளம் கசிந்து, தேடும் பொருளும் சிவன் கழலே என நான் தெளிந்து கொண்டேன். உன் திருவடியன்றி வேறு பற்று எனக்கு இல்லை. என்றெல்லாம் சொல்லி வருந்தி நிற்பர். இவர்கள் நிலை இப்படி இருக்க நாமோ என்றும் தொடர்ந்து நிற்கும் தாயாகிய திருவருளை மறந்து, உலகப் பொருள்களையே பற்றி நின்று அவற்றோடு விடாமல் பழகி வருகிறோம்.
பன்னாடை போன்றவர்கள் நாம் :
நாமெல்லாம் இவ்வகையில் பன்னாடை போன்றவர்கள் எனலாம். பன்னாடை என்பது இழை நெருக்கம் இல்லாத துணிவகையாகும். அதற்கு நெய்யரி என்ற மற்றொரு பெயரும் உண்டு. நெய் என்பது தேனைக் குறிக்கும். காட்டில் எடுத்த தேனை வடிகட்டுவதற்குப் பன்னாடையைப் பயன்படுத்துவார்கள். பன்னாடை தன்மேல் வார்த்த தேனின் சாரத்தைக் கீழே ஒழுக விட்டு, வேண்டாத தூசி கசடு முதலியவற்றைத் தன்னிடம் வைத்துக் கொள்ளும். அந்த நிலையில் நாம் இருக்கிறோம். நிலையற்றனவாய் நம்மிடம் சிலகாலம் இருந்து செல்கின்ற பொருள்களையே நாம் விடாமல் பற்றி நிற்கிறோம். இப்பிறவியில் மட்டுமின்றி எப்பிறவியிலும் நம்மோடு தொடர்ந்து நின்று, தனு கரண புவன போகங்களையெல்லாம் தந்து காத்து வருகின்ற திருவருளை மறந்து விடுகிறோம். ஓரொரு சமயத்தில் திருவருளைப் பற்றிய நினைப்பு நமக்கு வருவதுண்டு. ஆன்மீகச் சொற்பொழிவைக் கேட்க நேரும்போது அந்நேரத்தில் மட்டும் திருவருளை நினைக்கிறோம். நமது ஆற்றலையும் மீறி, நாம் தடுக்க முயன்றும் முடியாமல் ஏதேனும் ஒரு துயர நிகழ்ச்சி நடந்து விட்டால் அப்போது திருவருள் நினைப்பு வருகிறது. மற்ற சமயங்களில் அதுபற்றிய நினைவே இருப்பது இல்லை. இவ்வாறு ஓரொரு சமயத்தில் திருவருளை நினைக்க நேர்ந்தாலும் அந்த நினைப்பு அழுத்தமாக இருப்பதில்லை என்பதே உண்மை. பாசி மூடிய குளத்தில் நீர் புலப்படுவதில்லை. அதிலே ஒரு கல்லை விட்டெறிந்தால் கல் விழுந்த அந்த நேரத்தில் மட்டும் பாசி சிறிது விலக நீர் புலப்படும். பிறகு மீண்டும் பாசி வந்து மூடிக் கொள்ளும். பாசி படர்ந்த அந்தக் குளம் போல நாம் இருக்கிறோம். கல்லெறிப்பட்ட அந்தக் கணத்தில் மட்டும் நீர் புலப்படுவது போலத் திருவருளை நினைக்க வேண்டிய நிகழ்ச்சி ஏற்படுகிற அப்போது மட்டும் திருவருளைச் சற்று நினைக்கிறோம். பற்பல பிறவிகளை எடுத்துப் பழகிய நமக்கு உலகப் பழக்கமே மீதூர்ந்து நிற்கிறது. உலகப் பழக்கம் உள்ள வரையில் திருவருளோடு பழகுதல் என்பது இயலாது.
வெற்றுயிர் :
இவ்வளவு காலமும் திருவருளோடு கலந்து நின்றும் அதைச் சற்றேனும் உணரமாட்டாத உயிரை வெற்றுயிர் என்று குறிப்பிடுகிறார் ஆசிரியர். மணிவாசகர் நீத்தல் விண்ணப்பத்தில் தன்னை வெற்றடியேன் (23) என்றும், வெறுந்தமியேன் (25) என்றும் சொல்லிக் கொள்வார். வெறுமை என்பதற்குப் பயனின்மை என்பது பொருளாகும். பயனின்மையாவது, இறைவனால் தரப்பெற்ற உடம்பையும் கருவிகளையும் கொண்டு அவனது அருளைப் பெற முடியாமல் பிழைகளையே பெருக்கிக் கொள்ளுதல்; எறும்புகளிடையே அகப்பட்ட புழு வென ஐம்புலன்களுக்கு ஆட்படுதல். சுருங்கக் கூறினால், வெறுமையான வாழ்வு என்பது திருவருளை மறந்து உலக வாழ்வில் மயங்கிக் களிப்பது. இவ்வாறு வாழும் உயிரையே இச் செய்யுளில் வெற்றுயிர் என்றார் ஆசிரியர் உமாபதிசிவம்.
ஐந்தாம் அதிகாரம்
அருளுரு நிலை
கட்டு :
நாம் உடம்போடு கூடிப் பிறப்பெடுத்து வாழ்கிறோம்; உடம்பிற்கு வேறு நான் என்பதை அறியாமல் உடம்பே நான் என்று கருதி வருகிறோம்; இவ்வுடம்பிற் கட்டுண்டு நிற்கிறோம். கட்டுண்டிருக்கிறேன் என்பதையும் அறியாமல் இருக்கிறோம். உடம்பில் உள்ள ஐம்பொறிகள் நம்மை வசப்படுத்தியுள்ளன. இயல்பிலே நமக்கு விரிந்த அறிவுண்டு. நமது விரிந்த அறிவை இவ்வைம் பொறிகள் கட்டுப்படுத்தி நிற்கின்றன. வலிய வேடர்கள் வழிச் செல்வோரை மறித்து அவர்களிடமுள்ள செல்வத்தைக் கவர்ந்து கொள்வது போல இந்த ஐம்பொறிகள் நமது அறிவாகிய பெருஞ் செல்வத்தைக் கவர்ந்து சிறுமைப்படுத்தியுள்ளன. இப்படிப் பட்ட ஐம்பொறிகளோடு கூடி அவையே நாம் என்று இருக்கிறோம். அவற்றினிடத்தில் கட்டுண்டிருக்கிறோம். அவ்வாறு கட்டுண்டிருக்கிற நமது நிலையையும் அறியாமல் இருக்கிறோம்.
இவ்வாறே மண், பொன் முதலிய உலகப் பொருள்களும் நம் அறிவைத் தம் வசப்படுத்தியுள்ளன. அந்தப் பொருள்களின் கவர்ச்சியில் மயங்கி அவற்றையே விடாமல் பற்றி நிற்கிறோம். சுருங்கக் கூறினால், உடம்பும், உடம்பிலுள்ள கருவிகளும், உலகமாகிய இடமும், அங்குள்ள நுகர்ச்சிப் பொருள்களும் ஆகிய யாவும் நம் அறிவை மீளவிடாமல் பிணித்துள்ளன எனலாம். அதுபற்றியே இவை கட்டுக்கள் எனப்படுகின்றன. கட்டு என்பது துன்பத்தைத் தருவது. ஒருவனது கையிலும், காலிலும் விலங்கு இட்டுத் தளைப்படுத்தினால் அக்கட்டு அவனுக்குத் துன்பத்தைத் தரும் என்பதைச் சொல்லவும் வேண்டுமோ? அவ்வாறே நாம் உடம்போடும் உலகத்தோடும் தொடக்குண்டு துன்பப்படுகிறோம்.
கட்டிற்குக் காரணம் :
இக்கட்டு நிலையும், துன்பமும் ஆகியன அறியாமையால் ஏற்படுவன. நாமல்லாத உடம்பை நாம் என்று கருதுவது அறியாமைதானே. எல்லாப் பொருள்களும் இறைவனது உடைமையாய் இருக்க, அவற்றை எனது எனது என்று கருதுவது அறியாமைதானே. எல்லாச் செயல்களும் இறைவன் செயலாய் இருக்க, என் செயல் என் செயல் என்று கூறுவது அறியாமைதானே. உயிர்க்குயிராய் உள்நின்று இயக்குபவன் அவனாய் இருக்க, நானே எல்லாம் என்று எண்ணுவது அறியாமைதானே. அறியாமை என்பது இவ்விடத்தில் தவறான அறிவை - மயக்க அறிவைக் குறிக்கும். இதனை விபரீத ஞானம் என்பர். இதுவே கட்டு நிலைக்கும் துன்பத்திற்கும் காரணம்.
ஞானம் ஒன்றே வழி :
கட்டு நிலையிலிருந்து நீங்க வேண்டுமானால் அதற்குக் காரணமாகிய அஞ்ஞானம் நீங்க வேண்டும். அஞ்ஞானம் என்பது தவறான அறிவு எனப் பார்த்தோம். தவறான அறிவு எப்பொழுது நீங்கும்? உண்மையறிவாகிய ஞானம் வரும்போது தவறான அறிவு நீங்கிவிடும். அஞ்ஞானம் இருள் போன்றது. ஞானம் ஒளி போன்றது. ஒளி வந்தாலன்றி அஞ்ஞானம் நீங்காது. கட்டு நிலையும் போகாது. எனவே கட்டிலிருந்து விடுபடுவதற்கு ஞானம் ஒன்றே வழி என்பது இதனால் விளங்கும். ஞானமாவது மெய்யறிவு. அஃதாவது பொருள்களின் இயல்பை உள்ளவாறு உணர்தல். பொருள்களாவன கடவுள், உயிர், உலகு என்பன. இம்மூன்றன் இயல்பையும் நாம் உள்ளவாறு உணர்தல் வேண்டும். நான் அறிவுப் பொருள். ஆயினும் அறிவற்ற உலகத்தோடு கூடி வாழ்கிறேன். இவ்வுலகச் சார்பு எனக்கு இயற்கையன்று. இஃது இடையில் வந்தது; இடையில் நீங்கக் கூடியது. எனக்குரிய உண்மையான சார்பு - என்றைக்கும் உள்ள நிலையான சார்பு - இறைவனாகிய சார்பேயாகும். அவனே எனக்கு வாழ்முதல். அவனே எனக்குப் புகல். அவனை அணைந்து இன்புறுதலே பிறவியெடுத்ததன் பயன். இவ்வாறு <உலக நிலையையும், நமது இயல்பையும், தலைவனாகிய இறைவனது இயல்பையும் உள்ளவாறு <உணர்தலே ஞானமாகும்.
ஞானத்தைத் தரும் ஆசிரியர் :
எந்த ஓர் அறிவையும் அதனை உடையவர்பால் பெறுவதே உயிரின் இயல்பாக இருக்கிறது. அம்முறையில், ஞானமாகிய மெய்யறிவை யாரிடம் பெறுவது? என்ற வினா எழுகிறது. அறிவைத் தரும் ஆசிரியன்மார் பல திறத்தினர். எழுத்து சொல் ஆகியவற்றை வடிவு அளவில் கற்பிப்பவர் கணக்காயர் எனப்படுவர். செய்யுட்களையும் நூல்களையும் பொருள் உணர்வு தோன்றக் கற்பிப்பவர் வித்தியாகுரு எனப்படுவர். சமயம், விசேடம் ஆகிய தீக்கைகளைச் செய்வித்துச் சிவ வழிபாட்டினைப் பிறருக்கு அளிப்பவர் கிரியாகுரு எனப்படுவர். சிவவழிபாட்டினை எவ்விதப் பயனும் கருதாது உண்மையான அன்போடு செய்துவரின் உலகியலில் உவர்ப்புத் தோன்றும். சிவனையே பற்றாக உணரும் நிலை உண்டாகும். அப்படிப்பட்ட பக்குவம் வந்த மாணாக்கர்க்கு <உயிர்ச்சார்பும் பொருட்சார்பும் ஆகிய தளைகளின் இயல்பைத் தெளிவித்துப் பாசத்தை அறுத்துச் சிவனது திருவடி ஞானத்தை உணர்த்துவோர் ஞானகுரு என்றும், ஞானாசிரியர் என்றும் சொல்லப்படுவர். இவரே ஏனை ஆசிரியர் யாவரினும் மேலானவர்.
ஞானாசிரியர் சிவமே :
ஞானாசிரியராய் வருபவர் சிவமே என்று சித்தாந்தம் கூறும். நாட்டவருள் உள்ள ஒருவர் போலத் தோன்றுகிற ஞானாசிரியர் உண்மையில் சிவமே என்பது எவ்வாறு பொருந்தும் என்ற ஐயம் எழுவது இயல்பு. இதனைத் தெளிய விளங்கிக் கொள்ளுதல் வேண்டும். ஆணவமலம் உயிரை வன்மையாய் பிணித்துள்ள வரையில், அந்த உயிர் உலக வாழ்வையே பெரிதாகக் கருதும்; உலகப் பொருள்களின் பின்னேயே ஓடி ஓடித் திரியும். திருவருள் நாட்டம் சிறிதும் வராது. இப்படிப்பட்ட உயிருக்கு ஞானத்தைப் பெற வேண்டும் என்ற வேட்கை தோன்றாது என்பது வெளிப்படை. இறையருளால், <உயிரைப் பற்றியுள்ள ஆணவ மலத்தின் சத்தி தேயும் காலம் வரும் பொழுது அந்த உயிருக்கு இது வரையில் இனியனவாய்த் தோன்றிய உலகப் பொருள்களின் மீது வெறுப்புத் தோன்றும். ஒப்பற்ற கடவுட் பொருளை உணர வேண்டும் என்ற விருப்பம் உண்டாகும். அவ்வாறு ஆணவ மலம் தன் வலி குன்றி நீங்கும் நிலையை எய்துதலே மலபரிபாகம் எனப்படும். மலபரிபாகம் சிறிது சிறிதாக வரவர, அதற்கேற்ப அந்த உயிர் உலகத்தை விடுத்து இறைவனது திருவருளை நோக்கத் தலைப்படும். திருவருளை நோக்கும் நிலையே சத்தி நிபாதம் எனப்படும். மலபரிபாகமும், சத்தி நிபாதமும் நிகழ்ந்த இந்த நிலைதான் உயிரின் பக்குவநிலை என்று சொல்லப்படுகிறது. ஞானத்தைப் பெறுதற்கு ஏற்றநிலை என்று கொள்ளப்படுகிறது.
இந்தப் பக்குவநிலை ஒருவர்க்கு வந்துற்றது என்பதை எப்படி அறிய முடியும்? பக்குவம் என்பது உயிரில் நிகழ்வது; அது வெளியே புலனாவதன்று. சில பொய்ம்மையாளர்கள் பக்குவம் உடையவர்போல நடிப்பார்கள். மெய் எல்லாம் நீறு பூசித் திகழ்வார்கள். ஆனால், செய்வதெல்லாம் ஊரை ஏமாற்றுகிற செயலாக இருக்கும். அவர்களது வெளித் தோற்றத்தைப் பார்த்து, என்ன பக்தி! என்ன பணிவு! என்று உலகோர் வியப்பார்கள். ஆனால் அவர்களது அகம் எவ்வளவு இரக்கமற்றது என்பதை அறியமாட்டார்கள். இதனால், வெளித் தோற்றத்தைக் கொண்டு ஒருவரது பக்குவத்தை அறிய முடியாது என்பது விளங்கும். <உள்ளே நிகழ்வதாகிய பக்குவத்தை அறியும் தகுதி உலகர்க்கு இல்லை என்றே சொல்லி விடலாம். அப்படியானால் வேறு யார் தாம் அறியவல்லார்? உயிருக்கு <<உயிராக இமைப் பொழுதும் நீங்காமல் இருக்கின்ற இறைவன் ஒருவனே அவ்வுயிரின் பக்குவத்தை அறியவல்லான். இது பற்றியே, ஆணவ மலம் தேய்ந்த நிலையையும் பார்த்தருளி இறைவனே குருவாக வந்து ஞானத்தை உணர்த்துவான் என்று சைவசித்தாந்தம் கூறுகிறது.
குரு வடிவம் :
இறைவன் குருவாகி வருவான் என்றால், நமக்கு <உள்ளது போன்ற மாயா காரியமாகிய மானுட உடம்பை எடுத்து வருவானா? என்று கேட்கலாம். அவ்வாறு அவன் மானுட உடம்பை எடுப்பான் எனில் உயிர் இனத்தவன் ஆகிவிடுவான். இறைவன் ஆகான். ஆகவே அவன் மானுட <உடம்பெடுத்து வருவான் என்றல் பொருந்தாது. இனி இறைவன் எவ்வாறு குருவடிவம் கொள்கிறான் என்பதை நோக்குவோம். மலமாகிய மாசு தீர்ந்து வாழும் தூய அறிவினராகிய ஆன்மாவைச் சுத்தான்மா என்பர். அவர் தற்போதம் இழந்து நிற்பவர்; அஃதாவது, நான் என்ற உணர்வு சிறிதும் இல்லாதவர். அவரிடத்தில் இறைவன் தயிரில் நெய் போல இனிது விளங்கி நிற்பான். (நம்மிடத்தில் பாலில் நெய்போல மறைந்து நிற்பான்) அவ்வாறு விளங்கி, அவரது இயல்புகளைக் கீழ்ப்படுத்தித் தன்னியல்பு மேம்பட நிற்பான். ஓர் எடுத்துக்காட்டுக் கூறினால் இது விளங்கும். பேயால் பிடிக்கப்பட்டவரிடத்தில் அவரது இயல்புகள் கீழ்ப்பட்டு நிற்பதையும் பேயின் இயல்புகளே நிகழ்வதையும் காணலாம். அதுபோல இறைவன் சுத்தான்மாவிடத்தில் அவரது இயல்பைக் கீழ்ப்படுத்தித் தன்னியல்பு மேம்பட்டுத் தோன்ற நிற்பான். இவ்வாறு நிற்பது ஆவேசித்து நிற்றல் எனப்படும். பேய் ஆவேசிக்கப்பட்டாரது செயல்களெல்லாம் அவர் செயல் ஆகாது பேயின் செயலே ஆவது போல, சுத்தான்மாவின் செயல்கள் யாவும் சிவனாகிய இறைவன் செயலேயாம். சுத்தான்மாவாகிய அவரே ஞானகுரு ஆவார். சிவன் அவரை ஆவேசித்து நின்று பக்குவமுடைய மாணவர்க்கு ஞானத்தை உணர்த்துவான். இதனால் ஞானகுரு நம்மனோரில் ஒருவரல்லர் என்பதும், அவர் சிவனே யாவர் என்பதும் விளங்கும்.
அதிகார வைப்பு முறை :
ஞானாசிரியர் நிலை பற்றிக் கூறுவதாகிய இந்த அதிகாரத்தை அருளது நிலைக்கு அடுத்தபடியாக வைத்த பொருத்தம் நோக்குதற்குரியது. முன்னை அதிகாரத்தில் அருளினது இயல்பும் உயிர்கள் அதனை உணரவேண்டியதன் இன்றியமையாமையும் கூறி முடித்தார் ஆசிரியர். அந்த அருளை எவ்வாறு பெறுவது? <உயிர் தனது முயற்சியினால் அருளைப் பெறுதல் என்பது இயலாது. ஞானாசிரியர் வழியாகவே அதனை உணர்ந்து பற்ற முடியும். ஆதலால் அருளது நிலையை முன்னே கூறி, அருளை உணர்தற்கு வாயிலாகிய ஞானாசிரியர் பற்றிக் கூறுவதாகிய இந்த அதிகாரத்தை அடுத்து வைத்தார் என்பது அறிதற்குரியது.
கூறப்பட்டுள்ள கருத்துக்கள் :
இந்த அதிகாரத்தில் கூறப்பட்டுள்ள கருத்துக்களைப் பின்வருமாறு மூன்றாய் வகுத்துக் காட்டலாம்.
1. ஞான குருவாலேயே ஞானத்தை அடைய முடியும்.
2. ஞானகுரு சிவமேயாவர்.
3. ஞானகுருவை உலகம் உணரமாட்டாது.

தொகுத்துக் காணுதல் :
உயிர் அறியாதவாறு உள் நின்று உணர்த்தி வந்த முதல்வனே அவ்வுயிரின் பக்குவ நிலையைப் பார்த்தருளிக் கண்ணாற்காணும் குரு வடிவம் தாங்கி வந்து ஞானத்தை உணர்த்துவான். ஆதலால் ஞானத்தைத் தரும் ஆசிரியரை இறைவன் எனவே தெளிந்து வழிபடுதல் வேண்டும். ஒரு வீட்டில் ஒருவர் உற்ற நோயை அவ்வீட்டில் அவருடன் வாழ்வோரே அறிந்து தீர்க்க முடியும். அதுபோல உயிருக்கு உற்ற ஆணவ மல நோயை உயிரோடு உடனிருக்கும் இறைவனே அறிந்து தீர்க்க முடியும். அவனே குருவாக வெளிவந்து தனது அருள் மொழியாலும், செய்கையாலும் அம் மலநோயை நீக்குவான். மானைக் காட்டி மானைப் பிடித்தல் என்பார்கள். இறைவனும் அச் செயலையே செய்கிறான். பக்குவ ஆன்மாவாகிய மாணவரை ஆட்கொள்ளுதற்கு அவரைப் போன்ற மக்கள் வடிவில் - குருவடிவில் - வருகிறார். மானிட வடிவில் தன்னைக் காட்டி மாணவரை வசப்படுத்துகிறார்.
எந்த ஒரு கலையையும் ஒருவர் தாமாகப் பயிலுதல் இயலாது. எக்கலையை அறிய விரும்பினாலும் அக்கலையில் வல்ல ஆசிரியரை நாடியே அதனை அறிந்து கொள்ள முடியும். ஞானத்திற்கும் இது பொருந்தும். ஆன்மாதனது உண்மை இயல்பை உணர்வது ஞானம். இறைவனை உள்ளவாறு உணர்வது ஞானம். இந்த ஞானத்தை ஒருவர் தாமே முயன்று பெற முடியாது. நூல்களாலும் பெற முடியாது. ஞானாசிரியரை நண்ணியே அதனைப் பெற முடியும். அஃதாவது, ஞானாசிரியர் உணர்த்தவே ஆன்மாவினது உண்மையியல்பும், தலைவனாகிய இறைவனது இயல்பும் உள்ளவாறு விளங்கும். இந்த ஞானத்தை இறைவன் உயிர்க்குயிராய் உள்ளிருந்தே உணர்த்தினால் என்ன? குருவாக வெளிவந்துதான் உணர்த்த வேண்டுமா? என்று கேட்கலாம். உயிரினது அறிவு படிமுறையில் விளங்கும் அறிவாகும். ஒருமுறை உணர்த்தினால் போதாது. பலகாலும் உடனிருந்து உணர்த்துதல் வேண்டும். அவ்வப்போது எழுகின்ற ஐயங்களை உடனிருந்து களைதல் வேண்டும். திருநோக்கம், பரிசம் முதலிய செய்கைகளால் பாசப் பற்றை அறுத்தல் வேண்டும். ஞானப் பொருளைக் கேட்பித்தும், சிந்திப்பித்தும், தெளிவித்தும் மாணவரை நெறிப்படுத்தல் வேண்டும். இவற்றின் பொருட்டே இறைவன் குரு வடிவம் கொள்கிறான். இங்ஙனம் தோன்றி வந்து உடனிருந்து உணர்த்தித் தெளிவித்தாலன்றி உயிர்திருவருளைத் தெளியமாட்டாது.
ஒருவரைப் பாம்பு கடித்துவிட்டது. நஞ்சை எப்படி இறக்குவது? பாம்புக்குப் பகையாகிய கீரியை அழைத்து வந்து அவன் மேல் விழுந்து புரளும்படி செய்தாலும் நஞ்சு இறங்காது. ஆனால், கீரிக்கு உரிய மந்திர பாவனையுடையோன் வந்து நோக்கிய மாத்திரத்தில் நஞ்சு இறங்கிவிடும். அதுபோல இறைவன் உயிர்க்குயிராய் உடனிருந்தாலும் உயிரிலுள்ள ஆணவ மலமாகிய விடம் நீங்குவதில்லை. அவன் ஞானாசிரியராக வந்து தனது அருள் நோக்கால் மாணவனைப் பார்த்த அளவில் அவனிடமுள்ள மலமாகிய விடம் நீங்கிவிடும். இவ்வாறு இறைவன் குருவாய் வரவில்லையென்றால், ஞானத்தை யார் உணரவல்லார்? சூரியனது முன்னிலையில் சூரிய காந்தக் கல்லிடத்தே நெருப்புத் தோன்றும். அதுபோல ஆசான் மூர்த்தியின் முன்னிலையில் மாணவனது அகத்தே ஞானம் தோன்றும். இத்தகைய ஞானகுருவினது பெருமையை உலகத்தார் சிறிதும் உணரமாட்டார். அவர்களது அறிவுதான் ஆணவ மலத்தால் மறைக்கப்பட்டுள்ளதே. அவர்களுக்கு உண்மை எங்கே தெரியப்போகிறது! பக்குவம் இல்லாத அவர்கள் திருவருளாகிய ஞானத்தையும் அறியமாட்டார்; அந்த ஞானமேயான குரு வடிவையும் அறிய மாட்டார். இவ்வாறு இவ்வதிகாரக் கருத்துக்களைத் தொகுத்துக் கூறலாம்.

கருத்துகள் இல்லை:

திருமூலர் திருமந்திரம் - 275 - விளக்கம்

பாடல் விளக்கம்: மெய்தான் அறியும் செழுங்கடல் வட்டத்துப் பொய்தான் மிகவும் புலம்பும் மனிதர்கள் மெய்தான் உரைக்கில்விண் ணோர்தொழச் செய்குவன் ம...