வெள்ளி, 3 நவம்பர், 2017

37. திருவருளை இழந்தவர்

37. திருவருளை இழந்தவர்
மலை கெடுத்தோர் மண் கெடுத்தோர் வான் கெடுத்தோர் ஞானந்
தலை கெடுத்தோர் தற்கேடர் தாம்.

பொருள் : திருவருள் உணர்வை இழந்தவர் மலையை இழந்தவரோடு ஒப்பர்; நிலத்தை இழந்தவரோடு ஒப்பர்; வானை இழந்தவரோடு ஒப்பர். அவர் தமக்குத் தாமே கேடு செய்து கொள்பவர் ஆவார்.
சொற்பொருள் :
ஞானம் தலை கெடுத்தோர் - சிவஞானமாகிய திருவருளை உணராது வாழ்வோர்
மலை கெடுத்தோர் - மலைமேல் பல காலம் குடியிருந்தும், அம்மலைதான் தம்மைத் தாங்கி நிற்கிறது என்று எண்ணாது வாழ்பவரோடு ஒப்பர். (மேலும்)
மண் கெடுத்தோர் - நிலத்தின்கண் வாழ்ந்தும், அந்நிலம் செய்யும் உதவியை நினையாமல் வாழ்பவரோடு ஒப்பர். (இன்னும்)
வான் கெடுத்தோர் - வான் ஆகிய வெளியில் தாம் உலவியும், அவ்வானே தாம் இயங்குவதற்கு இடம் கொடுப்பது என்பதை உணராது வாழ்பவரோடு ஒப்பர்.
தற்கேடர் - இவ்வாறு திருவருளை உணராது வாழ்பவர் தமக்குத் தாமே கேடு செய்து கொள்பவர் ஆவார்.

விளக்கம் :
திருவருளை இழந்தவர் :
எல்லா உயிர்களுக்கும் நிலைக்களமாய் நின்று தாங்கியும் அவற்றை இயக்கியும் வருவது திருவருள். ஆயின், மாந்தர் தம்மைச் செலுத்துகின்ற திருவருளைச் சிறிதும் உணராதவராய், திருவருள் நாட்டம் இல்லாதவராய், உலக வாழ்வில் அழுந்தி யுள்ளனர். இவர்களையே ஞானந் தலை கெடுத்தோர் என்று குறிப்பிடுகிறார் ஆசிரியர். இங்கு ஞானம் என்பது திருவருளாகிய பேரறிவைக் குறிக்கும். தலைகெடுத்தோர் என்பதில் தலை என்பதற்குத் தனியே பொருளில்லை. கெடுத்தல் என்பது இழத்தல் எனப் பொருள்படும். எனவே, திருவருளை இழந்தவரே ஞானம் தலை கெடுத்தோர் எனப்பட்டார் என்பது விளங்கும். திருவருளை இழத்தலாவது, அருள் இடமாக வாழ்ந்தும் அதனை அறியாதிருத்தல்.
மூன்று உவமைகள் :
திருவருளை இழந்தவர் நிலையை மூன்று உவமைகள் கொடுத்து உணர்த்துகிறார் ஆசிரியர். அவ்வுவமைகளைப் பின்வருமாறு விளக்கிக் காட்டலாம்.
1. ஊட்டி, கொடைக்கானல் முதலிய மலைகளில் வீடு கட்டிக் கொண்டு வாழ்வோர் நிலத்திற்கு மேல் இவ்வளவு உயரமான இடத்தில் தாம் இருப்பதையோ, அம் மலை சிறிது நிலை குலைந்தாலும் தம் நிலை என்னவாகும் என்பதையோ சிறிதும் எண்ணிப் பார்ப்பதில்லை. அன்றாட வேலைகளில் மூழ்கி, மலையே தமக்கு ஆதாரம் என்பதை அடியோடு மறந்து அவர்கள் வாழ்கிறார்கள். அவர்களையே மலை கெடுத்தோர் என்று குறிப்பிடுகிறார் ஆசிரியர். அஃதாவது, மலையில் இருந்து கொண்டே அம் மலையின் உதவியைச் சிறிதும் உணராமல் வாழ்வோர். அவர்களைப் போன்றவரே திருவருள் நிலையை உணராதிருப்போர்.
2. நிலமின்றி உயிர் வாழ்க்கை இல்லை. மாந்தர் நிலத்தில் தோன்றி, நிலத்தில் வாழ்ந்து, நிலத்தில் மடிகிறார்கள். உடம்போடு கூடிய உயிர்கள் வாழ்வதற்கு வேண்டிய உணவு முதலிய நுகர்ச்சிப் பொருள்களைத் தந்து உதவுவது நிலமேயாகும். நிலத்தின் ஈர்ப்பு ஆற்றல் அன்றோ நம்மை யெல்லாம் தாங்கி நிற்கிறது. இவ்வா றெல்லாம் தாய் போலத் தாங்குகிற நிலத்தின் உதவியைச் சிறிதும் நினையாமல், பொருளை ஈட்டும் முயற்சியிலேயே பொழுதை யெல்லாம் போக்கி ஆடி ஓடி அலைவர் மாந்தர். அவர்களையே மண் கெடுத்தோர் என்று குறிப்பிடுகிறார் ஆசிரியர். அஃதாவது, மண்ணிடையே வாழ்ந்தும் அதன் உதவியைச் சிறிதும் எண்ணாதிருப்போர். அவர்களோடு ஒப்பர் திருவருள் நிலையை உணராதவர்.
3. வான் எல்லாப் பொருளுக்கும் இடமாய் அவற்றை இருக்கச் செய்கிறது. மாந்தர் போய் வந்து இயங்குவதற்கு இடம் தருகிறது. வான் ஆகிய வெளியில் உலவும் மாந்தர் அவ்வெளியின் உதவியைச் சிறிதேனும் நினைத்துப் பார்ப்பதுண்டா? வெளியானது இடம் தருவதனால் அன்றோ மக்கள் நடமாட முடிகிறது. அதனை மறந்து தம் திறனாலேயே நடமாடுவதாக அவர்கள் எண்ணிக் கொள்கிறார்கள். அவர்களையே வான் கெடுத்தோர் என்று குறிப்பிடுகிறார் ஆசிரியர். அஃதாவது, வான் ஆகிய வெளியில் இயங்கியும் அதன் உதவியைச் சிறிதும் எண்ணாதிருப்போர். அவர்களோடு ஒப்பர் தம்மை இயக்குகிற திருவருளை உணராதிருப்போர்.
மூன்று உவமைகள் சொல்லக் காரணம் :
இச்செய்யுளில் ஞானமாகிய திருவருளுக்கு உவமையாக மலை, மண், வான் ஆகிய மூன்று பொருள்களைக் கூறியுள்ளார் ஆசிரியர். இவ்வாறு ஒரு பொருள் மேல் மூன்று உவமைகளைக் கூறுவது எதற்கு? என்று கேட்கலாம். இதற்குப் பின்வருமாறு விடை கூறலாம். திருவருள் எங்கும் வியாபித்து நிற்பது. எங்கும் என்பதை மேல், கீழ், புடை (பக்கம்) என்னும் மூவிடங்களாக விரித்துக் கூறலாம் அல்லவா? உமாபதி சிவம் அவ்வாறு கொண்டு, அவ்விடங்களிற் பரந்து நிற்கும் திருவருளுக்குத் தனித்தனியே உவமை சொல்லப் புகுந்து, முறையே மலையையும் மண்ணையும் வான் ஆகிய வெளியையும் கூறினார் எனலாம். மேல் என்பதற்கு ஏற்ப மலையும், கீழ் என்பதற்கு ஏற்ப மண்ணும், உலவும் இடமாகிய புடை என்பதற்கு ஏற்ப வானும் பொருந்திய உவமைகளாயின. இதற்கு முந்திய செய்யுளில் தரையை அறியாது தாமே திரிவார் என்று கூறிக் கீழ் இடமாகிய நிலத்தை எடுத்துக் காட்டி, அதுபோலத் திருவருள் அனைத்துப் பொருளையும் தாங்கி நிற்றலை உணர்த்தினார். அப்படியானால், மேல் புடை ஆகிய இடங்களில் திருவருள் தாங்கி நிற்றல் இல்லையோ? என்னும் ஐயம் மாணாக்கர்க்கு எழலாம் அல்லவா? அவ் ஐயம் அறுத்தற் பொருட்டே மலையும் மண்ணும் வானும் போல மேல், கீழ், புடை ஆகிய எவ்விடத்திலும் தாங்கி நிற்பது திருவருளே என இச்செய்யுளில் வரையறுத்துக் கூறி முடித்தார் என்பது உணர்தற்குரியது. இவ்வுவமை மூன்றனுள் மலை என்பது மண்ணில் அடங்கி நிற்பது. அந்த மண்ணோ வானில் அடங்கி நிற்பதாகிறது. இந்த மூன்றுக்கும் உள்ள இவ் இயைபு கருதியே, மலை மண் வான் என அந்த வரிசை முறையில் நிறுத்தினார் ஆசிரியர் எனலாம்.
இங்கு ஓர் வினா எழலாம். மலை, மண் உள்ளிட்ட எல்லாவற்றையும் தன்னுள் அடக்கி நிற்பது வான் தானே. அந்த வான் ஒன்றையே திருவருளுக்கு உவமையாகக் கூறினால் போதுமே. பிறவற்றைக் கூறுதல் எதற்கு? என்று கேட்கலாம். இவ்வாறு கேட்பது பொருந்துவதே. நாம் அறிந்த பொருள்களிலே மிகவும் பெரியது வானமே. அதுவே பிற பொருள்கள் எல்லாவற்றையும் தன்னுள்ளே அடங்கக் கொண்டு விரிந்து நிற்பது. அதுபற்றியே எங்கும் நிறைந்து நிற்பதாகிய திருவருளை வான் என உருவகப்படுத்திக் கூறினார் பெரியோர். அருள்வெளி எனவும், சிதாகாசம் எனவும், சிற்பர வியோமம் எனவும் (வியோமம் - வெளி) வரும் வழக்குகளைக் காணலாம். தன்னருள் வெளிக்குளே அகிலாண்ட கோடியெல்லாம் தங்கும்படிக்கு இச்சை வைத்து என்பது தாயுமானவர் வாக்கு. வான் ஆகிய வெளி ஒன்றையே திருவருளுக்கு உவமையாகக் கூறுவது பொருந்துமாயினும், மாணவர் எளிதில் விளங்கிக் கொள்வதற்காக, மேலே தாங்கி நிற்பது மலை, கீழே தாங்கி நிற்பது மண், இடையே உலவுவதற்கு இடம் கொடுப்பது வான் என்ற முறையில் அம் மூன்றையும் உவமையாகக் கூறி, மேல் கீழ் புடை என எவ்விடத்தும் உயிர்களுக்குத் தாரகமாய் இருப்பது திருவருளே எனத் தெளிவித்தார் ஆசிரியர் எனக் கொள்ளலாம்.
தற்கேடர் :
திருவருளில் இருந்தும் திருவருளை யறியாதவர் வினைத் துன்பத்திற்கு ஆட்படுகிறார்; திருவருளால் பெறுதற்குரிய மெய்யுணர்வினைப் பெறாதே போகிறார். வீடு பேறாகிய பெரும் பயனையும் இழந்தவராகிறார். சுருங்கக் கூறினால், தமக்குத் தாமே கேடு செய்து கொள்பவர் ஆகிறார். திருவருளின் உதவியினால் நன்மையைத் தேடிக் கொள்ளாமல் இவ்வாறு துன்பத்தை வருவித்துக் கொள்கிறார்களே என்ற இரக்கக் குறிப்புத் தோன்ற அவரைத் தற்கேடர் என்று சுட்டுகிறார் ஆசிரியர்.

கருத்துகள் இல்லை:

திருமூலர் திருமந்திரம் - 275 - விளக்கம்

பாடல் விளக்கம்: மெய்தான் அறியும் செழுங்கடல் வட்டத்துப் பொய்தான் மிகவும் புலம்பும் மனிதர்கள் மெய்தான் உரைக்கில்விண் ணோர்தொழச் செய்குவன் ம...