36. திருவருளும் நிலமும்
தரையை அறியாது தாமே திரிவார்;
புரையை உணரா புவி.
பொருள் : நிலமே எல்லாவற்றிற்கும் ஆதாரமாய் இருந்து அனைத்தையும் தாங்கி நிற்கிறது. ஆயினும் மாந்தர் தம்மைத் தாங்கி நிற்பது நிலம் என்பதனைச் சிறிதும் நினைத்துப் பார்ப்பதில்லை. நிலத்தின் உதவியை அறவே மறந்து தாமே தமக்கு ஆதாரம் என்று எண்ணித் திரிவர். அதுபோலத் திருவருள்தான் தம்மைத் தாங்கி நின்று நடத்துகிறது என்பதனைச் சிறிதும் உணராமல் உயிர்கள் இவ்வுலகில் வாழ்கின்றன.
சொற்பொருள் :
தரையை அறியாது - மாந்தர் நிலத்தின்மேல் வாழ்ந்தும், நிலம்தான் தம்மைத் தாங்கி நிற்கிறது என்பதை நினையாமல்
தாமே திரிவார் - தாமே தமக்கு ஆதாரம் என்று எண்ணித் திரிவர். (அதுபோல)
புவி - உயிர்கள்
புரையை உணரா - திருவருளால் எல்லாவற்றையும் பெற்று நின்றும், அவற்றைத் தந்து தம்மை வழிநடத்துவது திருவருள் என்பதைச் சிறிதும் உணர்வதில்லை.
விளக்கம் :
திருவருளே ஆதாரம் :
இறைவனது திருவருள் அவனது திருவடியாகச் சொல்லப் பெறும். அளவிடற்கரிய இறைவனது பெருமையைக் கூற வந்த மணிவாசகர், அவனது திருவடி கீழுலகம் ஏழினுக்கும் கீழாக உள்ளது என்று கூறுகிறார். பாதாளம் ஏழினும் கீழ் சொற்கழிவு பாதமலர் (திருவெம்பாவை 10) இதன் கருத்து இறைவனது திருவடியே எல்லாவற்றையும் தாங்கிக் கொண்டிருக்கிறது என்பதாகும். எல்லாவற்றுக்கும் ஆதாரமாக இருந்தாலன்றித் தாங்குவது என்பது அமையாது. அப்படிப்பட்ட ஆதாரப் பொருள் திருவருள். திருவருளே ஆதாரம் என்பதை எப்படி விளங்கிக் கொள்வது? எல்லோருக்கும் தெரிந்த ஓர் எடுத்துக்காட்டின் மூலம் அவ்வுண்மையை விளங்க வைக்கிறார் ஆசிரியர். நிலம்தான் நம்மையெல்லாம் தாங்கி நிற்கிறது. நிலமாகிய ஆதாரம் இல்லையென்றால் நம்மால் நிற்க முடியுமா? ஓட முடியுமா? நிமிர்ந்து கைவீசி நடக்கத்தான் முடியுமா? அந்த நிலத்தைப் போல இருப்பது திருவருள். நமது வாழ்வுக்கு முதலாக இருந்து தாங்கி நடத்துவது திருவருள்.
அன்றாட வாழ்க்கையில் உணரலாம் :
இத்தகைய திருவருளை எல்லோரும் அவரவருடைய வாழ்க்கையில் நன்றாக உணரலாம். வாழ்க்கையின் ஒவ்வொரு கணத்திலேயும் உணரலாம். அதற்கு மனம்தான் வேண்டும். எதிர்பாராத நிகழ்ச்சிகள் நம் வாழ்க்கையில் எத்தனையோ நடக்கின்றன. சான்றுக்கு ஒன்றைக் காட்டலாம். ஒரு திரைப்படம் பல மாதங்களாக ஓடிக் கொண்டிருக்கிறது. அதில் அப்படி என்னதான் இருக்கிறது என்று பார்க்க வேண்டும் என்ற ஆசை நமக்கு! நமக்கு இருக்கின்ற ஆசை மனைவிக்கும் இருக்காதா? ஆகவே அவளையும் அழைத்துச் செல்லலாம் என்று முடிவு செய்கிறோம். ஒரு நண்பரோடு தொலைபேசி மூலமாகத் தொடர்பு கொண்டு அந்தப் படத்திற்கு இரண்டு நுழைவுச் சீட்டுகள் வேண்டும் என்று சொல்லுகிறோம். அவரும் மாலை 5 மணிக்கே கொண்டு வந்து தருவதாக வாக்களிக்கிறார். (அது அவரால் மட்டுமே முடியும்!) அதன்படி நாமும் காத்திருக்கிறோம். அந்த நேரமும் வந்தாயிற்று. ஆனால், அவர் வரவில்லை. நேரம் செல்லச் செல்ல நம்மனம் பதைக்கிறது. அவரோ கடைசி வரையில் வரவேயில்லை. எப்படியிருக்கும் நமக்கு? அந்த நண்பரை மனத்திற்குள் திட்டித் தீர்க்கிறோம். மறுநாள் காலையில் செய்தித் தாளைப் பார்த்ததும் நாம் அதிர்ந்து போகிறோம். நாம் போக இருந்த அந்தத் திரையரங்கு தீப்பற்றிக் கொண்டதாம். தீக்குப் பலியானோர் பலர். உயிர் அச்சத்தோடு ஓடிய மக்கள் கூட்டத்தில் மிதிபட்டு மாண்டோர் மிகப் பலர். படுகாயங்களோடு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டோர் இன்னும் பலர். இந்த சோகச் செய்தியைப் படித்ததும் நேற்று அந்த நண்பர் வராததே நல்லதாய்ப் போயிற்று என்று நினைக்கிறோம். அவர்தான் நம்மைக் காப்பாற்றியதாகக் கருதுகிறோம். இறைவனுடைய திருவருள் என்று நினைக்க நமக்கு மனம் இல்லை.
மாந்தரது செருக்கு :
எல்லா நலம் தீங்குகளையும் திருவருள் வருவிக்கிறது என்பதை உணராமல் மாந்தர் நன்மை வரும்போது நம்முடைய பெருமையால் அதனை அடைந்தோம் என்று செருக்குக் கொள்கிறார்கள்; தீங்கு வரும்போது பிறர் செய்தார் என்று எண்ணிக் கோபம் கொள்கிறார்கள். கோபுரத்தின் கீழ்ப் பகுதியில் அமைக்கப்பட்டிருந்த ஒரு பொம்மை நினைத்ததாம். இவ்வளவு உயரமான கோபுரத்தை நானல்லவா தாங்கி நிற்கிறேன்! நானில்லை என்றால் இந்தக் கோபுரம் இப்படி நிமிர்ந்து நிற்க முடியுமா? என்று எண்ணிச் செருக்குக் கொண்டதாம்! அதுபோல மாந்தர் திருவருளை மறந்து தாமே மற்றவர்களைத் தாங்குவதாக எண்ணிக் கொள்கிறார்கள்; நான் இத்தனை பேருக்குத் தலைவன் என்று அகந்தை கொள்கிறார்கள். இஃது எது போன்றது எனில், எல்லாரையும் எல்லாவற்றையும் தாங்குவது நிலமாக இருக்க, அதனை மறந்து அவரவரும் தாமே தமது ஆற்றலால் நிற்பதாகவும், உலவுவதாகவும் கருதிக் கொள்வது போன்றதாம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக