35. பின்னே வரும் துணை
அணுகு துணை யறியா ஆற்றோனில், ஐந்தில்
உணர்வை உணரா உயிர்.
பொருள் : தனக்குப் பின்னே துணையாக வருகின்றவனை அறியாது தனி வழியில் அச்சத்துடன் நடந்து செல்லு<ம் வழிப்போக்கனைப் போல உயிர்கள் தமக்குத் தோன்றாத் துணையாய் பின்நின்று உதவும் பேரறிவாகிய திருவருளை உணராது துன்புறும். மற்றுமோர் உவமை கூறலாம். உயிர் உடன் நின்று செலுத்தவே ஐம்பொறிகள் செயற்படுகின்றன. ஆனால், அவ்வாறு தம்மைச் செலுத்தி நிற்கும் உயிரை அவை அறிவதில்லை. அந்த ஐம்பொறிகளைப் போல உயிர்கள் தமது அறிவிற்குத் துணையாய் உள்ள திருவருளை உணராது நிற்கும்.
சொற்பொருள் :
அணுகு துணை - தனக்குப் பின்னே பாதுகாவலாக வருகின்ற துணைவனை
அறியா - அறியாமல் தனிவழியில் அஞ்சி நடந்து செல்லுகின்ற
ஆற்றோனில் - வழிப்போக்கனைப் போலவும்
ஐந்தில் - (தம்மை உள்நின்று செலுத்தும் <<உயிரை அறிய மாட்டாத) ஐம்பொறிகளைப் போலவும்
உயிர் - உயிர்கள்
உணர்வை - பேரறிவாகிய திருவருளை
உணரா - உணராது நிற்கும்.
விளக்கம் :
துணைவனை அறியா வழிப்போக்கன் :
நாமெல்லாம் பிறவி என்ற நீண்ட வழியில் சென்றுகொண்டு இருக்கிறோம். ஒருநாள் இருநாளில் சென்றுவிடக் கூடிய தொலைவாக இருந்தாலே துணையோடல்லது நெடுவழி போகேல் என்பார்கள். அப்படியிருக்க, நாம் போகின்ற தொலையா வழிக்குத் துணை வேண்டாமா? உலக வாழ்வில் நமக்குத் துணையாக, நம்முடைய செயலுக்கு உதவி செய்பவராகப் பலர் இருப்பதைக் காண்கிறோம். ஆனால் யாரொருவரை நாம் துணையாக எண்ணியிருக்கிறோமோ அவருக்கு வலிமை குறையும்போது அவரால் ஒரு பயனும் பெற முடியாமல் போய் விடுகிறதே. மேலும், ஓரிடத்தில் துணையாக நிற்பவர் மற்றோரிடத்தில் துணையாக நிற்க இயலாது. ஒரு காலத்தில் துணையாக இருப்பவர் மற்றொரு காலத்தில் துணையாக இருக்க இயலாது. காட்டாக, வகுப்பறையில் ஆசிரியர் துணையாக நிற்பார். அவரே வயலில் நாற்று நடுகிற இடத்தில் துணையாக வரமுடியுமா? அந்த இடத்தில் அவரால் யாதொரு உதவியும் செய்ய இயலாது. அந்தத் தொழிலில் பழக்கமுடைய வேறு சிலர்தான் அந்த இடத்தில் உதவ முடியும். நெருக்கடி மிகுந்த சாலையில் அதனைக் கடப்பதற்குக் காவல்துறையைச் சேர்ந்தவர் துணையாக நிற்கிறார். அவரே ஆற்றைக் கடப்பதற்கும் துணை செய்யவேண்டும் என்றால் அது முடியுமா? அங்கு அவர் துணை பயன்படாது. ஆற்றைக் கடப்பதற்குப் படகு செலுத்துபவரின் துணையே வேண்டும். இப்படி ஒவ்வோர் இடத்திற்கும் ஒவ்வொரு காலத்திற்கும் ஏற்றபடி துணைகள் அமைகின்றன.
எல்லாக் காலத்திலும் எல்லா இடத்திலும் எந்த நிலையிலும் நமக்குத் துணையாக வரக் கூடியவர் யாரேனும் உண்டா? உலக மாந்தர்க்கு அத் திறன் இல்லை. திருவருள் ஒன்றுதான் அப்படிப்பட்ட பெரிய துணையாக விளங்குவது. திருவருள் உயிரோடு ஒட்டியதாய் எப்போதும் பிரிப்பின்றி நிற்பது; உயிர் செல்லும் இடங்களில் எல்லாம் உடன் வருவது; அது நம்மை எப்போதும் பற்றிக் கொண்டிருக்கிறது. உலகத்தில் வேறு யாரும் துணையில்லை; நீ தான் துணை என்று நாம்தான் அதனை இறுகப் பற்றிக் கொள்ளாமல் இருக்கிறோம். அதன் இருப்பையும் தெரிந்து கொள்ளாமல் இருக்கிறோம். உயிர்களாகிய நாம் திருவருளை உணராதிருப்பதற்கு இரண்டு உவமைகள் கூறியுள்ளார் ஆசிரியர். அணுகு துணையறியா ஆற்றோன் என்பது முதல் உவமை. ஆறு - வழி; ஆற்றோன் என்பதற்கு வழிப்போக்கன் என்பது பொருள். தனக்குக் காவலாகத் தன்பின்னே வருகின்ற துணைவனை அறியாது இருட்டு வழியில் நடுக்கத்துடன் பயணம் செய்யும் வழிப்போக்கனைப் போல உயிர்களாகிய நாம் இருக்கிறோம். பின்னே தொடர்ந்து வருகின்ற துணைவன்தான் திருவருள். வழிப்போக்கன் திரும்பிப் பார்த்தால் பின்னே வரும் துணைவனைத் தெரிந்து கொள்வான். அச்சமும் கவலையும் நீங்குவான். அதுபோல, உயிர்களாகிய நாம் வெளியுலகிற் செல்லும் நமது நாட்டத்தைத் தடுத்து உள்முகமாகத் திரும்பி நோக்கினால் திருவருளை உணர்ந்து கொள்ளலாம்; கவலையும் துன்பமும் நீங்கலாம்.
<உயிரை அறியாத ஐம்பொறிகள் :
மாணவருக்கு முதல் உவமை பற்றிப் பின்வருமாறு ஐயம் எழலாம். வழிப்போக்கனுக்குப் பின்னே வரும் துணைவன் அவனிலிருந்து இடத்தால் விலகி நிற்கின்றான். அதனாலேயே வழிப்போக்கன் அவனைத் தெரிந்து கொள்ள இயலாமற் போகிறது. அது போலத் திருவருள் உயிரிலிருந்து விலகி நிற்கவில்லையே. உயிரோடு ஒன்றுபட்டு அல்லவா உள்ளது. அப்படியிருந்தும் அதனை உயிர் உணர்ந்து கொள்ளாதது ஏன் என்பதே அவ் ஐயம். அந்த ஐயத்தை நீக்குதற்கு ஐம்பொறிகளை உவமை கூறுகின்றார் ஆசிரியர். கண் முதலிய பொறிகள் உருவம் முதலியவற்றைத் தாமே அறிவதில்லை. உயிர் உடனிருந்து செலு<த்தவே அவை அறிகின்றன. ஆயினும் அவை உயிர் தம்மோடு உடன் நிற்பதையோ, உயிர் தம்மைச் செலுத்துகிறது என்பதையோ அறிவதில்லை. அந்த ஐம்பொறிகளின் நிலையில் உயிர் உள்ளது. தம்மோடு ஒன்றுபட்டுள்ள உயிரை அறிய மாட்டாத அந்த ஐம்பொறிகளைப் போல, உயிரும் தம்மோடு ஒன்றுபட்டுள்ள திருவருளை அறியாது; திருவருள்தான் தன்னை இயக்கி வருகிறது என்பதையும் அறியாது.
ஐம்பொறிகள் சடம். ஆகையால் அவை தம்மோடு ஒன்றுபட்டுள்ள உயிரை அறியாததில் வியப்பேதும் இல்லை. ஆனால், உயிரோ அறியும் தன்மையுடைய சித்து. அது சித்தாய் இருந்தும் தன்னோடு ஒன்றுபட்டுள்ள திருவருளை அறியாதிருப்பது ஏன்? எனக் கேட்கலாம். சித்தாகிய உயிர் ஆணவமலத்தின் வயப்பட்டிருக்கிறது. ஆணவ மலம் உயிரைப் புற உணர்வு உடையதாகச் செய்கிறது. அஃதாவது, புறவுலகையே நோக்குமாறு செய்து உலகப் பொருள்கள் மீது ஆசையை உண்டாக்குகிறது. அதே நேரத்தில் உயிர் உள்முகமாக நோக்கித் தன்னை உணர விடாதபடியும் செய்கிறது. இவ்வாறு உயிர் ஆணவ மலத்தால் புறவுணர்வு மாத்திரம் உடையதாய், அகவுணர்வை இழந்து நிற்கிறது. எனவே உயிர் சித்தாய் இருந்தும் அக வுணர்வு இன்றி நிற்பதனால், தன்னோடு ஒன்றாய் உள்ள திருவருளை அறிய முடியாது போகிறது. இவ்வகையில், திருவருளை உணரமாட்டாத உயிர், தன்னைச் செலுத்துகிற உயிரை அறிய மாட்டாத ஐம்பொறிகளைப் போன்றதாகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக