34. உயிர்கள் மயக்கவுணர்வால் திருவருளை அறியாமை
பால்ஆழி மீன் ஆளும் பான்மைத்து அருள் உயிர்கள்
மால் ஆழி ஆழும் மறித்து.
பொருள் : அருளை ஆதாரமாகக் கொண்டுள்ள உயிர்கள் அவ் வருளைப் பொருந்தி நின்று பேரின்பத்தை நுகர அறியாமல், மாயையின் காரியமாகிய உலகப் பொருள்களையே நுகர விரும்பி மயக்கமாகிய கடலில் ஆழ்ந்து போய் உள்ளன. இது, பாற்கடலில் உள்ள மீன்கள் அப்பாலை உண்ணும் பொருள் என்று அறியாமல் அங்குள்ள சிற்றுயிர்களைப் பிடித்து உண்ணும் நிலையைப் போன்றது.
சொற்பொருள் :
அருள்உயிர்கள் - அருளை ஆதாரமாகக் கொண்டுள்ள உயிர்கள் (அவ்வருளை அறிந்து அனுபவியாமல்)
மால் ஆழி - (மாயை காரியமாகிய இழிந்த உலகப் பொருள்களையே விரும்பி அனுபவித்து) மயக்கமாகிய கடலில்
மறித்து - மீண்டும் மீண்டும்
ஆழும் - ஆழ்ந்து போய் உள்ளன. (இஃது எது போ<லும் என்றால்)
பால் ஆழி மீன் - பாற்கடலில் உள்ள மீன்கள்
ஆளும் பான்மைத்து - அப்பாலை நுகர அறியாமல், அங்குள்ள சிற்றுயிர்களைப் பிடித்து உண்ணும் தன்மை போன்றது.
விளக்கம் :
மாயை தரும் மயக்கம் :
மாயை உலகமாக விரிந்து நின்று, உயிர்களைக் கவர்ந்து வசப்படுத்துகிறது. மாயையின் கவர்ச்சித் தன்மையை நோக்கி அதனை மோகினி என அழைப்பர். நாடக மேடையில் கண்ணைக் கவரும் ஆடை அணிகளோடு ஓர் அழகு மங்கை தோன்றி ஆடுகிறாள். அவளது அழகும் ஆடலும் பார்ப்பவரைக் கவர்ந்து அவரது அறிவை வேறெங்கும் செல்லாதவாறு தடுத்துத் தம் வசப்படுத்தி விடுகின்றன. அவர்கள் தம்மை மறந்து அக்காட்சியில் ஈடுபட்டு நிற்கின்றனர். அந்நடன மங்கையைப் போல, மாயை தனது காரியமாகிய உலகப் பொருள்களால் மாந்தரின் அறிவை மயக்கி நிற்கிறது.
பொருளும் அருளும் :
மாந்தர் உலக வாழ்வில் மயங்கி, இறைவனது அருளைப் பெறவேண்டும் என்ற தெளிவு இல்லாமல், உலகப் பொருள்கள் மீது மேலு<ம் மே<லும் ஆசையைப் பெருக்கிக் கொள்கிறார்கள். நெடுகிலும் வாங்கிப் போட்ட நிலங்கள், வீடுகள், கணக்கு இல்லாத பணம் ஆகிய இவற்றை உடைய வாழ்க்கையைத்தான் சிறந்த வாழ்க்கை என்று பெரும்பாலான மக்கள் நினைக்கிறார்கள். ஆனால், அவர்கள் ஓர் உண்மையை மறந்து விடுகிறார்கள். இவ்வாறு தேடிய பொருள்கள் அமைதியைத் தருவதில்லை என்பதுதான் அந்த உண்மை. கணக்கில் வாராத பணத்தை எப்படி மறைத்து வைத்துக் காப்பது என்ற கவலை பலருக்கு. போற்றிப் பாதுகாக்கும் பொருள் நம்மை விட்டுப் போய் விடுமோ என்ற அச்சத்தினால் மன அமைதி போய் விடுகிறது. பொருள் இருந்தால் எல்லாவிதமான இன்பங்களையும் எய்தலாம் என்று எண்ணத் தோன்றும். மயக்கத்தினால் அவ்வாறு நினைத்தே பொருள்களோடு தொடர்பு ஏற்படுத்திக் கொள்கிறோம். ஆனால், அந்தப் பொருள்கள் நிலையானவை அல்ல. ஆதலால் அவற்றால் வரும் இன்பமும் எந்தச் சமயத்திலும் போய்விடலாம். நாம் பெறுகிற இன்பம் நிலையானதாக இருக்க வேண்டுமானால், என்றைக்கும் நிலையான பொருளோடு தொடர்பு இருக்க வேண்டும். எல்லா இன்பத்திற்கும் காரணமானதும் என்றும் நிலையானதுமான ஒன்றைப் பெற நாம் முயல வேண்டும். இறைவன் திருவருள்தான் அது. அதை மறந்து விட்டு, நிலையில்லாத பொருளுக்காக அலைகிறோம்.
திருவருள் இன்பத்தை நம்பாத நிலை :
எத்தனையோ காலமாக, எத்தனையோ பெருமக்கள் திருவருளின்பம் தான் நிலையானது என்பதை எடுத்துச் சொல்லியிருக்கிறார்கள். ஆனால், அவர்கள் மொழிகளில் நமக்கு நம்பிக்கை வரவில்லை. யார் யாரோ சொல்வதையெல்லாம் நம்பி விடுகிறோம். வானிலை அறிவிப்பாளர் அடுத்த 24 மணி நேரத்தில் சிற்சில இடங்களில் மழை பெய்யக் கூடும் என்று அறிவித்தால் அதை அப்படியே நம்பி விடுகிறோம். தேர்தலில் நிற்போர் அள்ளி வீசும் வாக்குறுதிகளை நம்பி வாக்களித்து விடுகிறோம். ஆனால், பல பெரியவர்கள் திருவருள் இன்பத்தை அனுபவமாக உணர்ந்து சொல்லியும் நாம் நம்புவதாக இல்லை. இந்த உலகம் ஐம்புல நுகர்ச்சிக்கு ஏற்ற பொருள்களைக் கொண்டிருக்கிறது. அவற்றைக் கண் முன்னாலே பார்க்கிறோம். கண்ணுக்குத் தெரியும் அப்பொருள்களிடத்திலே ஆசையும் நம்பிக்கையும் உண்டாகிறது. ஆனால், திருவருள் அனுபவம் அத்தகையதன்று. அது நமது புலன்களுக்கு எட்டாதது. அதனாலேயே அதனிடத்தில் நம்பிக்கை உண்டாகவில்லை.
மாந்தர் நிலைக்கு உவமை :
மாந்தர் உயர்ந்ததாகிய திருவருள் இன்பத்தை அறியாமல், இழிந்தனவாகிய உலக போகங்களில் விருப்பம் கொண்டு வாழ்கின்றனர். இன்பத்தை அடையப் போகிறோம் என்று எண்ணிக் கொண்டு துன்பத்தை அடைகின்றனர். இந்நிலைமையை விளக்கிக் காட்டவே பாற்கடலில் உள்ள மீன்கள் அந்தப் பாலை உண்டு வாழாமல் அங்குள்ள சிற்றுயிர்களைப் பிடித்து உண்ண அலைவதை உவமை காட்டுகிறார் ஆசிரியர்.
குறிப்பு :
பாற்கடலில் உள்ள மீன் உணவுக்காக அங்குள்ள சிற்றுயிர்களைத் தேடி அலையும் என்ற கருத்துச் செய்யுளில் வெளிப்படையாகச் சொல்லப் பெறவில்லை. பொருள் பொருத்தம் கருதி அக்கருத்து வருவித்து உரைக்கப் பட்டதாகும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக