வெள்ளி, 3 நவம்பர், 2017

33. அருளே உயிரையும் உடம்பையும் கூட்டுவித்தல்

33. அருளே உயிரையும் உடம்பையும் கூட்டுவித்தல்
ஊன் அறியாது என்றும்; உயிரறியாது ஒன்றும்; இவை
தான் அறியாது ஆரறிவார் தாம்.

பொருள் : உடம்பு சடம். அதற்கு எக்காலத்திலும் அறிவு இல்லை. ஆகவே அது தனக்குரிய உயிரை அறிந்து சென்று சேர மாட்டாது. உயிரும் இருள் மலத்தால் மூடப் பெற்று அறிவிழந்து நிற்கிறது. ஆகவே அதுவும் தனக்குரிய உடம்பை அறிந்து எடுத்துக் கொள்ளாது. அப்படியானால் இந்த உயிர் இன்ன உடம்பைப் பெறுதற்குரியது என்று அறிந்து கூட்டுவிப்பது எது? இவ்விரண்டையும் கூட்டிச் செயற்படுத்துவது திருவருளே யாகும். திருவருள் கூட்டுவிக்காமல் வேறு யார் அறிந்து கூட்டுவிக்க முடியும்?
சொற்பொருள் :
ஊன் - உடம்பு
என்றும் அறியாது - எக்காலத்திலும் அறிவுடையதாவதில்லை. (ஆகவே, அது தனக்குரிய உயிரை அறிந்து தேடிச் சென்று அடையாது.)
உயிர் ஒன்றும் அறியாது - உயிரும் ஆணவ மலத்தால் மூடப்பெற்று ஒன்றையும் அறிய மாட்டாது நிற்கிறது. (ஆகவே, அதுவும் தனக்குரிய உடம்பை அறிந்து எடுத்துக் கொள்ளாது.) 
(இந்நிலையில்)
இவை - உடம்பும், உயிரும் ஆகிய இவ்விரண்டையும்
தான்அறியாது - திருவருள் அறிந்து கூட்டுவிக்காமல்
ஆர்அறிவார் - வேறு யார் அறிந்து கூட்டுவிப்பார்?

விளக்கம் :
இச்செய்யுளில், பாரிசேடம் (ஒழிபு) என்ற முறையால் திருவருள் உண்மையைப் புலப்படுத்துகிறார் ஆசிரியர். பாரிசேடமாவது, மூன்று பொருள்கள் உள்ள இடத்தில் இரண்டினை விலக்கி எஞ்சியுள்ளதைத் துணிவது. முதலில் ஓர் எடுத்துக்காட்டினால் இதனை விளங்கிக் கொள்வோம். கணவன், மனைவி, குழந்தை என்போர் அடங்கிய சிறிய குடும்பம் அது. அன்று விடுமுறை. கணவன் வீட்டில் இருந்து குழந்தையைக் கவனித்துக் கொண்டிருக்கிறான். மனைவி கடைவீதிக்குச் சென்றிருக்கிறாள். அந்த நேரம் பார்த்து யாரோ ஒருவர் தேடி வருகிறார். கணவன் குழந்தையை நடுக் கூடத்தில் விட்டுவிட்டு வந்து, வந்தவரோடு சிறிது நேரம் பேசிவிட்டு அவர் போன பிற்பாடு வீட்டிற்குள்ளே வருகிறான். விட்ட இடத்தில் குழந்தையைக் காணவில்லை. அடுத்த அறையை எட்டிப் பார்க்கிறான். அங்கே தொட்டிலில் அது கண் வளர்கிறது. குழந்தையும் தொட்டிலும் சேர்ந்தது எப்படி? தொட்டில் அறிவற்ற சடம். அது சென்று குழந்தையை எடுத்துக் கொள்ளாது. குழந்தை அறிவுடையதாயினும் அது தானே சென்று தொட்டிலைச் சேர்வதற்கேற்ற வலிமை இல்லாதது. அப்படியானால் குழந்தையையும் தொட்டிலையும் கூட்டுவிக்க வீட்டில் மூன்றாமவர் இருக்கிறார் என்பதையும், அவர் கடைக்குச் சென்று திரும்பிய தன் மனைவியே என்பதையும் அவன் தெரிந்து கொள்கிறான். இவ்வாறு உண்மையைத் துணிவதே பாரிசேடமாகும்.
இனி, இச்செய்யுளின் பொருளுக்கு வருவோம். உடம்பும் உயிரும் இணைந்தது எப்படி? உடம்பு சடமாதலின் அது தனக்குரிய உயிரை அறிந்து சென்று அடையாது. உயிர் அறிவுடையதாயினும் ஆணவ மலத்தால் அறிவிழந்திருப்பதனால் அதுவும் தனக்குரிய உடம்பை அறிந்து சென்று அடையாது. அப்படியானால் உடம்பையும் உயிரையும் கூட்டுவிப்பதாகிய மூன்றாவது பொருள் இருக்கிறது என்பது தெளிவாகும். அதுவே திருவருள். இவ்வாறு பாரிசேட முறையால் திருவருள் உண்மையை உணர்த்துகிறார் ஆசிரியர். உடம்பை எடுப்பதும், உடம்பில் வாழ்வதும், உடம்பிலிருந்து போவதும் நம்முடைய கையில் இல்லை. திருவருளே நம் வினைக்கு ஏற்ப உடம்பைத் தருகிறது. ஆணவ மலமும் அதனை ஒட்டியதாகிய கன்ம மலமும் உள்ள வரையில் வேறுவேறு உடம்புகளிற் புகவேண்டிய நிலையே இருக்கும். நமக்கு வருகிற சில துன்பங்களை நம்மால் போக்கிக் கொள்ள முடியும். பசியினால் உண்டாகும் துன்பம், உடல்நலக் குறைவினால் வரும் துன்பம் முதலியவற்றை ஓரளவு நம்முடைய முயற்சியினால் நீக்கிக் கொள்கிறோம். ஆனால், உடம்பெடுத்து வருவதும் போவதுமாகிய பிறப்பு இறப்புத் துன்பங்களை நம்மால் மாற்றுவதற்கு இயலாது. அதற்குத் திருவருளின் துணை வேண்டும்.

கருத்துகள் இல்லை:

திருமூலர் திருமந்திரம் - 275 - விளக்கம்

பாடல் விளக்கம்: மெய்தான் அறியும் செழுங்கடல் வட்டத்துப் பொய்தான் மிகவும் புலம்பும் மனிதர்கள் மெய்தான் உரைக்கில்விண் ணோர்தொழச் செய்குவன் ம...