32. அருள் பேரொளியாய் நிற்றல்
பெருக்க நுகரவினை பேரொளியாய் எங்கும்
அருக்கண் எனநிற்கும் அருள்.
பொருள் : உலக மக்கள் பல்வேறு தொழில்களில் ஈடுபட்டு வருவாய் ஈட்டவும், பின் நுகரவும் துணை புரிந்து நிற்கும் சூரியன் பேரொளியாய் எங்கும் பரவி நிற்றல் போல, இறைவனது திருவருட் சத்தி உயிர்கள் நல்வினை தீவினைகளைச் செய்து புண்ணிய பாவங்களை ஈட்டவும் அவற்றின் பயன்களாகிய இன்ப துன்பங்களை நுகரவும் துணை செய்து பேரறிவாய் எங்கும் நிறைந்து நிற்கும்.
சொற்பொருள் :
அருக்கன் என - உலகர் பல தொழில்களில் ஈடுபட்டுப் பொருள் ஈட்டுதற்கும், அதனை நுகர்வதற்கும் துணைபுரியும் வகையில் சூரியன் பேரொளியாய் எங்கும் பரவி நிற்றல் போல
அருள் - இறைவனது திருவருள்
வினைபெருக்க - உயிர்கள் நல்வினை தீவினைகளைப் புரிந்து புண்ணிய பாவங்களை ஈட்டுவதற்கும்
நுகர - அவற்றின் பயன்களாகிய இன்பத் துன்பங்களை நுகர்வதற்கும் (துணைசெய்து)
பேரொளியாய் எங்கும் நிற்கும் - பேரறிவாய் எங்கும் நிறைந்து நிற்கும்.
விளக்கம் :
திரோதான சத்தி :
இறைவனது சத்தி பற்றி 2-ஆம் செய்யுளின் உரையில் கூறியிருப்பதை இங்கே நினைவு கூர்தல் வேண்டும். அச்சத்தி ஆணவ மலத்திற் கட்டுண்ட உயிர்களிடத்து மறைந்து நின்று அம்மலத்தின் ஆற்றலைச் செயற்படுத்தி உயிர்களின் அறிவை மறைப்பிக்கும். ஆணவ மலம் சடம் ஆதலின் அது தானே தொழிற்படாது. சத்தியே அதனைத் தொழிற்படுத்துகிறது. அங்ஙனம் சத்தியினால் செயற்பட்டு ஆணவமலம் உயிர்களிடத்தே தனது செயலைச் செய்கிறது. ஆணவத்தின் செயலாவது, உயிரறிவைத் திரிவுபடுத்தி விபரீத வுணர்வாகிய மயக்க வுணர்வை விளைவிப்பது. அம் மயக்க வுணர்வினாலேயே உயிர்கள் இழிந்த உலக போகத்தை உயர்வாக மதித்து அவற்றைப் பெறுவதற்காக நல்வினை தீவினைகளில் ஈடுபடுகின்றன. அவ்வினைகளால் மேலும் மேலும் பிறவியிற்பட்டுத் துன்புறுகின்றன. இறைவனது சத்தி ஆணவமலத்தை ஏன் செயற்படுத்தவேண்டும்? ஆணவம் செயற்படுவதனால் அல்லவா உயிர்களுக்கு வினை உண்டாகிறது. வினையின் காரணமாகப் பிறப்பு உண்டாகிறது. பிறப்பினால் துன்பம் உண்டாகிறது என்று கேட்கலாம். இறைவனது சத்தி ஆணவ மலத்தைச் செயற்படுத்துவது உயிர்களின் நன்மைக்காகத்தான். ஆணவத்தைச் செயற்படுத்துவது உயிர்களுக்குத் துன்பத்தைத் தருவதாயிருக்க, அஃது உயிருக்கு நன்மையைத் தருவது எங்ஙனம்? என்று ஐயுறலாம். இதற்கு விடை கூறுவோம். சடப்பொருள் செயற்படச் செயற்பட அதன் சத்தி மெலிவு அடைந்து தேயும். இதற்கு ஒரு சிறிய எடுத்துக் காட்டினைத் தருவோம். நமது உடம்பிலுள்ள நரம்புகள் இளமையில் வலிமையோடு விளங்குகின்றன. இந்த நரம்புகள் இதே சத்தியோடு என்றும் இருப்பதில்லை. உடம்பின் செயற்பாட்டினால் நாளடைவில் நரம்புகளின் சத்தி வலிகுன்றிப் போவதைக் காணலாம். இவ்வாறு வலிமடங்கிப் போவது சட சத்திக்கு உரிய தன்மையாகும்.
ஆணவ மலமும் சடப்பொருள். அது செயற்படச் செயற்பட உயிரைப் பிணித்துள்ள அதன் சத்தி மெலிவடையும். உயிரைப் பற்றியுள்ள ஆணவ மலத்தின் சத்தியை மெலிவித்தற் பொருட்டே இறைவனது சத்தி அதனைச் செயற்படுத்துகிறது. ஆணவமலம் மெலிந்து தேய்வதுதானே உயிருக்குப் பெரியநன்மை. நோயாளி ஒருவனுக்கு மருந்து கொடுத்து அனுப்புகிறார் மருத்துவர். அந்த மருந்து வாயிற் பட்டாலே கசக்கிறது. இந்தக் கசப்பான மருந்தைப் போய் எனக்குத் தருகிறாரே. இவர் என்ன வைத்தியர்? என்று அந்த நோயாளி நினைக்க மாட்டான். தனது நன்மை கருதியே அம் மருந்தைத் தந்துள்ளார் என்றே அவன் மதித்துப் போற்றுவான். அந்த நோயாளியின் நிலையில் உயிர்களாகிய நாம் இருக்கிறோம். ஆணவ மலந்தான் நம்மிடமுள்ள நோய். வினையும், வினையினால் வரும் துன்பங்களும் அந்நோயைத் தீர்க்கக் கூடிய கசப்பான மருந்துகள். நோய் நீங்க வேண்டுமானால், அவற்றை ஏற்றுத்தான் ஆக வேண்டும். இவ்வாறு கட்டு நிலையில் ஆணவ மலத்தைச் செயற்படுத்தி உயிர்கள் நல்வினை தீவினைகளைச் செய்து அவற்றின் பயன்களை நுகர்ந்து வருமாறு செய்கின்ற இறைவனது சத்தி திரோதான சத்தி (மறைப்புச் சத்தி) என்று சொல்லப்பெறும். இச் செய்யுளில் அருள் என்று குறிக்கப்படுவது இத் திரோதான சத்தியேயாகும்.
சத்தியும் சூரியவொளியும் :
இச்செய்யுளில் இறைவனது சத்தி சூரியவொளி போன்றது என்று கூறப்பட்டுள்ளது. சூரியவொளி உலக மக்கள் பல்வேறு தொழில்களைச் செய்து பொருள் ஈட்டி அவற்றை நுகரத் துணை செய்யும். இறைவனது சத்தியாகிய பேரொளி உயிர்கள் நல்வினை தீவினைகளைச் செய்து இன்ப துன்பங்களாகிய பயன்களை நுகரத் துணை செய்யும். இஃது ஒப்புமை. இனி, வேற்றுமையை நோக்குவோம். சூரியவொளி சட சத்தியாகும். அஃதாவது அறிவற்ற சத்தியாய் இருப்பது. உலக மக்களுக்கு உதவ வேண்டும் என்று அறிந்து அது செயற்படுவதில்லை. இறைவனது சத்தி சிற் சத்தியாகும். அஃதாவது அறிவாகிய சத்தியாய் இருப்பது. அஃது ஒவ்வொரு உயிரின் நிலையையும் அறிந்து அந்தந்த உயிரை அதன் அதன் நிலைக்கேற்பச் செயற்படுத்தி வருவது. மேலும், சூரியவொளி உலகின் ஒரு பக்கத்தில் மட்டுமே ஒளிரும். மறுபக்கம் இருளாக இருக்கும். அது போலன்றி இறைவனது சத்தி அங்கு இங்கு எனாதபடி எங்கும் பிரகாசமாய் நிற்பதாகும். இவை வேற்றுமை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக