வெள்ளி, 3 நவம்பர், 2017

31. அருளே தலையாய பொருள்

31. அருளே தலையாய பொருள்
அருளிற் பெரியது அகிலத்து இல் வேண்டும்
பொருளில் தலை யிலது போல்.

பொருள் : உலகியலில் ஒருவன் ஒரு சமயத்தில் ஒரு பொருளைத் தனக்கு இன்றியமையாததாகக் கருதி விடுவானாயின் அவனுக்கு அந்தச் சமயத்தில் அந்தப் பொருள்தான் மிக உயர்ந்த பொருளாகத் தோன்றும். அதனைக் காட்டிலும் மேலான பொருள் வேறொன்றும் இருக்க முடியாது. அதுபோல ஆன்மீக நெறியிற் செல்லும் ஒருவன் திருவருளையே தனக்கு இன்றியமையாத பொருளாகக் கருதி அதனையே வேண்டி நிற்பான். அவனைப் பொறுத்தவரையில் திருவருளைக் காட்டிலும் மேலான பொருள் இவ்வுலகில் வேறொன்றும் இல்லை.
சொற்பொருள் :
வேண்டும் பொருளின் - ஒருவனுக்கு ஒரு சமயத்தில் மிக இன்றியமையாததாக வேண்டப்படும் அந்த ஒரு பொருளைவிட
தலைஇலது போல் - தலை சிறந்ததாக வேறு எந்தப் பொருளும் அவனுக்குத் தோன்றாது. அதுபோல
அருளின் பெரியது - ஞானநெறியில் செல்பவனுக்குத் திருவருளை விடச் சிறந்த பொருள்
அகிலத்து இல் - இவ்வுலகில் வேறு எதுவுமே இல்லை.

விளக்கம் :
உலகியல் உண்மை யொன்றை எடுத்துக் காட்டி அருளியலை விளக்குகிறார் ஆசிரியர். ஒருவன் நீர் வேட்கையோடு வருகிறான்; பருகுவதற்குத் தண்ணீர் கிடைக்குமா என்று அலைந்து பார்க்கிறான். எங்குத் தேடியும் கிடைக்கவில்லை. அவனது நாக்கு வறண்டு போய்விட்டது. உதடுகள் காய்ந்து விட்டன. தண்ணீருக்காக அவன் தவிக்கிறான். அந்த நேரத்தில் தண்ணீருக்குப் பதிலாக வகை வகையான உணவுகளை அடுக்கடுக்காக அவன் முன்னே வைத்தாலும் அவற்றை அவன் நாடுவானா? அல்லது, விலையுயர்ந்த பொன்னையும் நவமணிகளையும் அவன் முன்னே குவித்தாலும் அவற்றை மதிப்பானா? இவையெல்லாம் அவனுடைய தாகத்தைத் தீர்க்குமா? அவனுக்கு வேண்டியது தாகத்தைத் தணிக்கின்ற நீர் ஒன்றுதான். அந்த நேரத்தில் நீர்தான் அவனுக்குத் தலையான பொருள். இன்னொரு நிகழ்ச்சிளைக் கூறுவோம். வீட்டில் குழந்தை தரையில் விளையாட்டுப் பொருள்களைப் பரப்பி வைத்துக் கொண்டு விளையாடிக் கொண்டிருக்கிறது. தாய் கடைவீதிக்குப் போய் வரலாம் என்று புறப்படுகிறாள். குழந்தையைப் பார்த்துக் கொள்ளும்படி சொல்லிவிட்டுச் செல்கிறாள். விளையாடிக் கொண்டிருந்த குழந்தைக்குத் தாயின் நினைப்பு வந்து விட்டது. அவ்வளவுதான். விளையாட்டுப் பொருள்களை வீசியெறிந்தது. அது வரையில் சிறந்தவையாக விளங்கிய அப்பொருள்கள் இப்பொழுது அக்குழந்தைக்கு ஒரு பொருட்டாகத் தோன்றவில்லை. இந்த நேரத்தில் தாய் தான் அதற்கு வேண்டும். அம்மாவை நினைத்து அழத் தொடங்கிவிட்டது. வீட்டிலுள்ள ஒவ்வொருவரும் அதன் அழுகையை நிறுத்த முயன்றார்கள். என்னென்ன பொருள்களையோ எடுத்து வந்து காட்டி அதன் கவனத்தை ஈர்க்கப் பார்த்தார்கள். ஆனால், அதன் அழுகை நின்றபாடில்லை. தாயைக் கண்டாலொழிய அதன் அழுகை ஓயாது. அக்குழந்தைக்கு அக்கணத்தில் வேண்டப்படுகிற ஒரே பொருள் தாய்தான். வேறு எந்தப் பொருளையும் அது நாடுவதில்லை. அக்குழந்தையைப் பொறுத்த மட்டில் அவள் தான் தலையாய பொருள். தாகமுற்றவன் தண்ணீரை நாடுதல் போலவும், அழும் குழந்தை தன் தாயை நாடுதல் போலவும் ஆன்மீக நெறியிற் செல்லும் சாதகன் திருவருள் ஒன்றையே வேண்டி நிற்பான்.
திருவருள் நாட்டம் வருதல் என்பது அவ்வளவு எளிதன்று. திருவருளே நமக்குப் புகல் என்ற உறுதியான எண்ணம் நமக்கு இல்லை. அப்படி நூல்கள் எடுத்துச் சொன்னாலும் நாம் நம்புவதாக இல்லை. எண்ணற்ற பிறவிகளை எடுத்து எடுத்து உலக வாழ்வு ஒன்றையே அறிந்த நமக்கு உலகப் பற்றே மீதூர்ந்து நிற்கிறது. அதனால், கண் கண்ட உலக சுகத்தையே பெரிது என்று நம்புகிறோம். காணாத திருவருள் இன்பத்தில் நமக்கு நம்பிக்கை பிறக்கவில்லை. பிறப்பினால் உண்டாகும் துன்பத்தையும், வாழ்க்கையின் முடிவில் இறப்பினால் உண்டாகும் துன்பத்தையும் நன்கு உணர்ந்து அஞ்சுபவர்க்கே உலகியலில் உவர்ப்பு ஏற்படும். பொறிகளால் நுகரும் இன்பங்களில் வெறுப்பு உண்டாகும். நிலையான புகலிடம் எது என்று தேடும் முயற்சி உண்டாகும். ஒருவன் தலையில் தீப்பற்றிக் கொண்டால் அவன் ஒரு கணமேனும் வாளா இருப்பானா? எங்கே தண்ணீர் என்று தேடி அங்குமிங்கும் ஓடி அலைவான். தண்ணீருக்காக அவன் தவிப்பது போலத் தம் நிலையை உள்ளபடி உணர்ந்தவரே திருவருளுக்காக ஏங்குவர். இப்படி ஆன்மீகப் பாதையில் செல்பவரை நோக்கியே அருளிற் பெரியது அகிலத்து இல் என்றார் ஆசிரியர்.

கருத்துகள் இல்லை:

திருமூலர் திருமந்திரம் - 275 - விளக்கம்

பாடல் விளக்கம்: மெய்தான் அறியும் செழுங்கடல் வட்டத்துப் பொய்தான் மிகவும் புலம்பும் மனிதர்கள் மெய்தான் உரைக்கில்விண் ணோர்தொழச் செய்குவன் ம...