29. உயிரின் பக்குவ காலத்தில் ஆணவம் நீங்குவதாகும்
ஒன்று மிகினும் ஒளிகவரா தேல் உள்ளம்
என்றும் அகலாது இருள்.
பொருள் : உயிரிடத்தில் ஆணவ இருள் இப்பொழுது மிகுந்திருந்தாலும் உயிர் திருவருள் ஒளியைச் சிறிது சிறிதாகப் பெற்று அந்த ஆணவ இருளைப் படிப்படியாக நீக்கிக் கொள்ளும். அங்ஙனம் இறைவனது திருவருள் ஒளியை உயிர் உணரவில்லை என்றால் ஆணவ இருளினின்றும் அஃது என்றுமே விடுபடாது போகும்.
சொற்பொருள் :
ஒன்று - ஆணவ மலமாகிய இருள்
மிகினும் - உயிரிடத்தில் மிகுந்திருந்தாலும் (உயிர் திருவருள் ஒளியைச் சிறிது சிறிதாகப் பெற்று அந்த ஆணவ இருளைப் படிப்படியாக நீக்கிக் கொள்ளும்)
உள்ளம் - உயிர்
ஒளிகவராதேல் - அவ்வாறு திருவருள் ஒளியைச் சிறிது சிறிதாக உணரவில்லையாயின்
இருள் என்றும் அகலாது - ஆணவ இருள் அவ்வுயிரை விட்டு என்றுமே நீங்காது.
விளக்கம் :
உயிரிடத்தில் இருளும் உண்டு. ஒளியும் உண்டு. இருள் என்பது ஆணவ மலம், ஒளி என்பது திருவருட் சத்தி. உயிர் தனது பக்குவமின்மை காரணமாக நுண்ணிய திருவருள் ஒளியைப் பற்ற மாட்டாமல் பருப் பொருளாகிய ஆணவ இருளில் அகப்பட்டு அதில் அழுந்தி நிற்கிறது. இச் செய்தி நாம் முன்னே அறிந்ததுதான். இருளில் நிற்போர் என்றுமே இருளில் இருந்து விடுவதில்லை. இருளில் இருக்க விரும்புவதும் இல்லை. அவ்விருளை நீக்கிக் கொள்ளவே யாவரும் முயல்கின்றனர்; வழி தேடுகின்றனர். அதுபோல ஆணவமாகிய இருளிடை அகப்பட்டவரும் அதனை நீக்கிக் கொள்ளும் முயற்சியை இன்று மேற்கொள்ளவில்லை யென்றாலும் இனி வருங்காலத்திலேனும் மேற்கொள்வர் என்பது உறுதி. உலகில் அறியாமையில் நின்றோர் பின்னர் அதிலிருந்து நீங்கி அறிவு பெறுவதைக் காண்கின்றோம். இஃது எதைக் காட்டுகிறது? ஆணவத்தில் பிணிப்புற்றவர் சிறிது சிறிதாக அதிலிருந்து நீங்கி வருகின்றனர் என்பதையே இது காட்டுகிறது. மாந்தர் பக்குவ நிலையில் உயர்ந்து உயர்ந்து, இறைவனைப் படிப்படியாக உணர்ந்து உணர்ந்து முடிவில் ஆணவத்தினின்றும் முற்றாக விடுபட்டு இறைவனை அடைவர். ஆசிரியர் உமாபதிசிவம் சிவப்பிரகாச நூலில் உயிர்களைக் குறிக்க வரும்போது ஓங்கி வரும் பல வுயிர்கள் (செ.33) என்கிறார். அறியாமையிற் கிடக்கின்ற உயிர்கள் ஆணவ இருளின் வலி முழுதையும் கெடுக்கும் பேரொளியாகிய திருவருளைப் படிப்படியாகப் பற்றிக் கொண்டு மேனிலை அடைதற்குரியவை என்பது கருதியே ஓங்கி வரும் என்ற அடைமொழி கொடுத்துக் கூறினார் எனலாம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக