30. மாயை யாகிய விளக்கு
விடிவாம் அளவும் விளக்கனைய மாயை
வடிவாதி கன்மத்து வந்து.
பொருள் : மாயையினின்றும் உடம்பு முதலியவை தோன்றி உயிர்களைப் பொருந்துகின்றன. அவ்வாறு அவை வந்து பொருந்துவது அந்த அந்த உயிர்களின் வினைக்கு ஏற்பவேயாகும். ஆணவமாகிய இருள் நீங்கி விடிவு வரும் வரையிலும் மாயையின் காரியமாகிய இந்த உடம்பு முதலியவை உயிருக்கு விளக்குப் போல நின்று உதவுகின்றன.
சொற்பொருள் :
மாயை வடிவு ஆதி - மாயையினின்றும் தோன்றிய உடம்பு முதலியவை
கன்மத்து வந்து - உயிர்களை, அவைகளின் வினைக்கு ஏற்ப வந்து பொருந்தி
விடிவாம் அளவும் - ஆணவமாகிய இருள் நீங்கி விடியும் வரையில்
விளக்கு அனைய - விளக்குப் போல நின்று உயிர்களுக்கு நன்மை செய்வனவாம்.
விளக்கம் :
விடியும் வரையில் விளக்கு :
இதுவரை இருள் மலமாகிய ஆணவத்தின் இயல்பையே பேசி வந்த ஆசிரியர் இந்த இறுதிச் செய்யுளில் அதற்கு மாற்றுப் பொருளாகிய மாயையின் தன்மையினைக் கூறலு<றுகிறார். ஆணவம் அறிவை மறைக்கின்ற இருள் என்றால், மாயை அறிவை விளக்குகின்ற ஒளிப் பொருள் எனலாம். சூழ்ந்துள்ள இருளைச் சிறிதளவு நீக்கிக் கண்ணுக்குக் காட்டுகின்ற விளக்குப் போல மாயை உயிரைப் பற்றியுள்ள ஆணவ இருளை ஓரளவு நீக்கி அதன் அறிவை விளங்க வைக்கின்றது. விளக்கொளியினால் இருள் முற்றிலும் நீங்கி விடுவதில்லை. விளக்கொளி சிற்றொளியாக இருப்பதனால் அது சிறிதளவே இருளை நீக்குவதாக உள்ளது. ஒன்றுமே தெரியாத இருட்டில் விளக்கினை ஏற்றினால் அந்த விளக்கொளி இருளைச் சிறிதே விலக்கிப் பொருளை ஒருவாறு காணும்படி செய்கிறது. அந்தச் சிறிய விளக்கொளியும் இல்லையென்றால் நம்மால் யாதொன்றையும் காண முடியாத நிலையே உளதாகும்.
நமக்குக் கொடுக்கப்பட்டுள்ள உடம்பு மாயையினால் ஆனது. மாயையை விளக்கு எனக் குறிப்பிட்டோம். எனவே இந்த உடம்பும் விளக்குப் போன்றதேயாகும். உடம்பும் உடம்பிலுள்ள ஐம்பொறி முதலிய கருவிகளும் செயற்படுகிற போது நமக்குப் புற வுலகைப் பற்றிய அறிவு உண்டாகிறது. அவை செயலற்றுக் கிடக்கின்ற உறக்க நிலையில் நாம் யாதொன்றையும் அறிய மாட்டாமல் அறியாமையே வடிவாய் இருக்கின்றோம். இதனால் உடம்பினாலேயே நமக்கு அறிவு விளங்குகிறது என்பது புலனாகும். இது பற்றியே உடம்பினை விளக்கு என்றனர். விளக்கு என்பது ஓர் இடைக்கால ஏற்பாடே. அதுவே இருளை முற்றிலும் நீக்கி விடாது. இருள் முழுதும் நீங்க வேண்டுமாயின் பேரொளியாகிய சூரியவொளி வரவேண்டும். விளக்கொளியால் நீங்கியும் நீங்காமலும் இருந்த இருள் சூரியவொளி வரும் போதே அறவே அகலு<ம். அவ்விடியல் வரும் வரையில் இருளை நீக்கிக் கொள்வதற்கு ஓர் இடைக்காலத் துணையாக விளக்கினைக் கொள்கின்றோம். இறைவன் நமக்கு உடம்பினைக் கொடுத்ததும் இம்முறையிலேதான். நாம் உடம்போடு கூடியிருக்கின்ற நிலையும் ஓர் இடைக்கால ஏற்பாடுதான். ஆணவமாகிய இருளினின்றும் சிறிது விடுபடுவதற்கு இந்த உடம்பாகிய விளக்கு உதவுகிறது. ஆனால், அதுவே ஆணவ இருளை முற்றிலும் நீக்கிவிடாது. இருள் மலம் முழுதும் நீங்க வேண்டுமாயின் திருவருளாகிய சூரியவொளி வரவேண்டும். மாயா காரியமாகிய விளக்கொளியால் சிறிது விலகிய ஆணவ இருள் திருவருள் ஒளி வரும்போதே அறவே அகன்றொழியும். அந்த நிலையே சுத்தநிலை எனப்படும். அதுவே ஆன்மாவுக்கு விடிவு காலம். அவ்விடியல் வரும் வரையில் அகவிருளை ஓரளவு நீக்கிக் கொள்வதற்குத் தனு, கரணம் முதலிய மாயா கருவிகள் இடைக்காலத் துணையாக அமைகின்றன. இதுபற்றியே விடிவாம் அளவும் விளக்கு அனைய மாயை என்றார் ஆசிரியர்.
உடம்பு முதலியவை வினைக்கு ஏற்ப அமைதல் :
வடிவாதி என்பதற்கு வடிவு முதலிய காரியங்கள் என்பது பொருள். வடிவு என்பது உடம்பு. தனு, கரணம், புவனம், போகம் என்னும் நான்கையுமே வடிவாதி என்று குறிப்பிட்டார். உடம்பு முதலியவை எல்லார்க்கும் ஒரே வகையாக அமையவில்லை என்பது கண்கூடு. சிலருக்கு வலிமையான உடம்பு. சிலருக்கு நொய்ம்மையான உடம்பு. வலிமையான உடம்பாயிருந்தும் ஆயுள் குறைவான உடம்பாகச் சிலருக்கு அமைந்து விடுகிறது. நொய்ம்மையான உடம்பாயிருந்தும் நீண்ட ஆயுள் உடையதாகச் சிலர் உடம்பு அமைந்து விடுகிறது. இவ்வாறு அவரவர் உடம்பில் அமைந்திருக்கும் கருவிகளும் வெவ்வேறு இயல்பினவாகவே உள்ளன. சிலருக்குக் கண்பொறி, செவிப்பொறி முதலியவை கூரியனவாக அமைந்து நலம் செய்கின்றன. வேறு சிலருக்கு அவை குறைபாடுடையனவாக அமைந்து விடுகின்றன. இதற்கெல்லாம் என்ன காரணம்? அவரவரும் முன்னே செய்து கொண்ட வினையே இவ்வேறுபாடுகளுக்குக் காரணம் ஆகும். அந்த முன்வினை பிராரத்த வினை எனப் பெயர் பெறும். பிராரத்த வினையை ஒட்டியே இப்பிறவி அமைகிறது. அவரவரும் இப்பிறப்பில் தத்தமக்குரிய தனு, கரண, புவன, போகங்களைப் பிராரத்த வினைக்கு ஈடாகவே பெற்றுள்ளனர். இப்பிறப்பில் ஒருவர் துன்பத்தையே மிகுதியாக அனுபவிக்க வேண்டும் என்ற பிராரத்தம் இருந்தால் அதற்கேற்ப அவருக்கு நோயுள்ள உடம்பு (தனு) அமையும். நன்கு செயற்படாத கருவிகள் (கரணம்) அமையும். தீய சுற்றுச் சூழல் (புவனம்) அமையும். நுகர் பொருள் (போகம்) நிரம்பாத நிலை அமையும். இதுபோலவே ஒருவர் வாழ்வில் உயர்நிலையை அடைய வேண்டும் என்ற பிராரத்தம் இருந்தால் அதற்கேற்ப அவருக்கு முயற்சியுள்ள உடம்பு அமையும். ஊக்கமுடன் செயற்படும் கருவிகள் அமையும். வாய்ப்பான சூழலும் சார்பும் அமையும். இப்படி உடல், கருவி, இடம், நுகர் பொருள் ஆகிய நான்கும் அவரவர் கன்மத்திற்கு ஏற்பவே வந்து அமைவதனால் வடிவாதி கன்மத்து வந்து என்று குறிப்பிட்டார் ஆசிரியர்.
உயிரினது அறிவை மறைத்து அறியாமையை விளைவிக்கின்ற அக இருளாகிய ஆணவ மலத்தின் இயல்பை முந்திய அதிகாரத்தில் பார்த்தோம். இந்த இருளாகிய மலத்தைப் போக்க வல்லது எது? அது இறைவனது பேரறிவாகிய அருள் ஒளியே யாகும். அதனைச் சூரிய ஒளியோடு ஒப்பிடலாம். பேரொளியாய் எங்கும் அருக்கனென நிற்கும் அருள் என்று உமாபதி சிவம் கூறுவார். (செய்யுள் 32) சூரிய ஒளி செய்யும் செயல்கள் இரண்டு. ஒன்று, எங்கும் சூழ்ந்துள்ள இருளை நீக்கி உலகப் பொருள்களைக் காட்டுவது. மற்றொன்று, தனக்கு முதலாகிய சூரியனைக் காட்டுவது. சூரிய ஒளியின் உதவியாலேயே உலகப் பொருள்களை அறிந்து அனுபவிக்கின்றனர் மாந்தர். ஆயின் அவர்கள் சூரியவொளியை நினைப்பதில்லை. அதன்மீது கருத்துச் செலுத்துவதில்லை. அவர்கள் உலகப் பொருள்களிலேயே அழுந்தி நிற்பதுதான் அதற்குக் காரணம். இனி, உலகப் பொருள்களை நோக்காமல் தமது பார்வையைச் சூரிய ஒளியின் மீது செலுத்தி அதனைப் பற்றிக் கொண்டு அதன் வழியே மேலே நோக்கினால் அவர்களுக்கு அச்சூரிய ஒளி மேலேயுள்ள சூரியனைக் காட்டும். இறைவனது ஞானமாகிய அருளும் இவ்வாறே இரண்டு வகையில் செயல்படுகிறது. அது பக்குவமில்லாத உயிர்களுக்கு உலகைக் காட்டி உலகையே நோக்கும்படி செய்யும். இனி, உலக ஆசையைத் துறந்து தன்னை நாடுகின்ற பக்குவ ஆன்மாக்களுக்கு அவ்வருள் தன்னைக் காட்டிப் பின் தனக்கு முதலாய் உள்ள சிவத்தையும் காட்டும்.
உயிரில் உள்ள ஆணவம் அகவிருள் என்றால், உயிர்க்கு உயிராய் உள்ள திருவருளை அகவொளி எனலாம். உள்ளொளி என்பார் உமாபதிசிவம் (செய்யுள் 24). பேரறிவே வடிவான திருவருளை உணர்வு என்ற சொல்லாலும் குறிப்பிடுவர் (செய்யுள் 35). அருளைச் சத்தி என்று முன்னே குறிப்பிட்டார் ஆசிரியர். அது பதியாகிய சிவத்தை விட்டு என்றும் பிரியாதது. (செய்யுள் 2) அஃது, எல்லாவுயிர்களோடும் தொடர்புற்று நிற்கிறது; அவ்உயிர்களை மும்மலங்களோடு தொடர்புபடுத்தி உலக வாழ்க்கையில் செலுத்துகிறது. இவ்வாறு உயிர்களுக்குக் கட்டுநிலையை ஏற்படுத்திய அருளே பின் பக்குவமடைந்த உயிர்களைப் பாசமாம் பற்று அறுத்துப் பதியாகிய சிவத்தினிடம் சேர்க்கிறது. இவ்வாறு பதி பசு பாசம் ஆகிய முப்பொருள்களையும் தொடர்புபடுத்தி நிற்பது அருளேயாகும். இதுபற்றியே, இதுவரையில் முப்பொருள்களின் இயல்புகளைத் தனித்தனியே கூறிவந்த ஆசிரியர் அவை அனைத்தையும் தொடர்பு படுத்தி நிற்பதாகிய அருளினது தன்மையை இந்த நான்காவது அதிகாரத்தில் கூறலுறுகிறார் என்று கருதலாம்.
உலகிலேயே மிகவும் சிறந்த பொருள் எது? இதற்கு எல்லோரும் அவரவர் மனநிலைக்கேற்ப விடையளிப்பர். பணத்தினாலே எல்லாம் பெறமுடியும்; எதையும் சாதிக்க முடியும்; ஆகவே செல்வந்தான் சிறந்தது என்போர் பலர். உண்பதற்காகவே பிறந்தோம் என்று கருதுகிற சிலர், அறுசுவை உணவே அவனியில் சிறந்தது என்பர். மனைவி மக்களையே சிறந்த பொருளாக மதித்து வாழ்வோர் உண்டு. இவையெல்லாம் உலகியல் நோக்கில் சிறந்தவையாகக் கருதப்படுகின்றன. ஆனால், இறையனுபவம் வாய்ந்த பெரியோர் இவற்றை ஒரு பொருளாகக் கொள்ளார். இப்பொருள்கள் மீது மையல் கொண்டு வாழும் மக்களை நோக்கி, வைத்த நிதி பெண்டிர் மக்கள் குலம் கல்வி என்னும் பித்தவுலகு என்பார் மணிவாசகர். நம் ஆசிரியராகிய உமாபதி சிவம் அருளே பெறுதற்குரிய தலையாய பொருள் என்றும், அதனைக் காட்டிலும் மேலான பொருள் இவ்வுலகில் வேறொன்றும் இல்லை என்றும் தெளிவிக்கிறார். உயிர்கள் பிறவிக்கு வரும்போது தாம் விரும்பிய உடம்பைத் தாமே எடுத்துக் கொண்டு வருகின்றவா? அந்த ஆற்றல் உயிர்களுக்கு இருக்குமானால் சீரான, செம்மையான, குறைபாடில்லாத அழகான உடம்பையல்லவா அவை எடுத்துக் கொண்டு வரும். ஆனால், அப்படிப்பட்ட உடம்பு பலருக்கு அமையவில்லையே. சர்க்கரை நோய் முதலிய நோய்களையுடைய உடம்பையல்லவா பெற்றுள்ளார்கள். இதயம் முதலிய உள் உறுப்புக்களில் இயற்கையிலேயே குறைபாடு சிலருக்கு அமைந்து விடுகிறது. சிலருக்கு கண் இருந்தும் காண முடியாத நிலை. வாய் இருந்தும் பேச முடியாத நிலை. இதையெல்லாம் பார்க்கும் பொழுது அவரவர்க்கு அமைந்த உடம்பைத் தாமே எடுத்து வரவில்லை என்பது உறுதியாகிறது. உயிர்களின் வினைக்கேற்ப அவற்றிற்கு உடம்பைத் தருவது திருவருளே ஆகும்.
உயிர்களுக்கு வாழ் இடமாக உள்ளதும் திருவருளே. ஆயினும் அவை திருவருளை அறிய மாட்டாது துன்புறுகின்றன. ஆற்றைக் கடக்கின்ற ஒருவனுக்குத் தாகம் ஏற்பட்டால் அந்த ஆற்றுநீரை அள்ளிப் பருகித் தாகத்தைத் தணித்துக் கொள்ளலாம். அவ்வாறு செய்யாமல் வெள்ளத்துள் நாவற்றி நிற்கின்ற அவனது நிலையில் நாம் இருக்கிறோம். திருவருளிடத்தில் நாம் இருந்தும் அதனைக் கருதாமல் இருக்கிறோம். நிறைந்த இன்பத்துள் நின்றும் அதனை நுகரமாட்டாது துயருறுகிறோம். ஆணவ மலம் நமது உணர்வை மறைத்து உயர்ந்ததில் வெறுப்பும், இழிந்ததில் விருப்பம் தோன்றும்படியாகச் செய்கிறது. அதன் காரணமாக உயர்ந்த திருவருள் இன்பத்தை நாடாமல் அற்ப இன்பத்தைத் தரக் கூடிய உலகப் பொருள்களையே நாடி அலைந்து துன்பத்தைத் தேடிக் கொள்கிறோம். இந்நிலைமை, பாற்கடலில் உள்ள மீன்கள் அந்தப் பாலை உண்டு வாழாமல், அங்கே திரியும் சிறு பூச்சிகளைப் பிடித்து உண்ண அலைவது போன்றதாகும். பாற்குடத்தின் மேலே அமர்ந்துள்ள பூனை அந்தப் பாலை உண்ணக் கருதாமல் பக்கத்தில் சுவரில் ஓடுகிற கரப்பான் என்னும் சிறு பூச்சியை பிடிக்க முயல்வது போன்றதாகும். எல்லாவற்றையும் தாங்கி நிற்கும் நிலம் போலத் திருவருளே நமக்கு ஆதாரமாய் நின்று தாங்குகிறது. வழிப்போக்கனுக்குப் பின்வரும் துணைவன் போல நம் உணர்விற்கு உணர்வாய் உடன் நின்று உதவுகிறது. அன்று தொட்டு இன்றுவரை திருவருளோடு கூடியிருந்தும் அதனோடு சிறிதும் பழகாமல், அதனைப் பற்றிக் கவலைப்படாமல் வாழ்கிறோம். திருவருளைச் சிந்தித்து உணர்ந்தாலன்றி வீடு பெறும் தகுதி நமக்கு ஏது? என்று கூறுகிறார் உமாபதி சிவம். இனி, இக்கருத்துக்களை விரிவாகக் காணலாம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக