வெள்ளி, 3 நவம்பர், 2017

28. ஆணவம் இடையில் வந்தது அன்று

28. ஆணவம் இடையில் வந்தது அன்று
ஆசு ஆதியேல் அணைவ காரணம் என்? முத்தி நிலை
பேசாது அகவும் பிணி.

பொருள் : ஆணவ மலம் ஆகிய குற்றம் உயிரிடத்தில் முதலில் இல்லாமல் இடையிலே ஒரு காலத்தில் வந்து பற்றியது எனில், அவ்வாறு வந்து பற்றுவதற்குக் காரணம் யாது? (காரணம் இன்றியே வந்து பற்றியது என்று சொன்னால்) உயிர் முத்தி பெற்ற நிலையிலும் அவ் வாணவம் காரணமின்றி வந்து பற்றும் என்றாகும். காரணம் வேண்டாதபோது எந்த நிலையிலும் எந்த நேரத்திலும் அது சொல்லாமலே வந்து பற்றும் என்றாகி, முத்தி என்பதே இல்லையாகி விடும். ஆதலால் ஆணவ மலம் இடையிலே வந்ததன்று. அஃது உயிர்களிடத்தில் தொன்று தொட்டே உள்ளது.
சொற்பொருள் :
ஆசு - ஆணவ மலம் ஆகிய குற்றம்
ஆதியேல் - உயிர்களிடத்தில் முதலில் இல்லாமல், இடையே ஒரு காலத்தில் வந்து பற்றியது எனில்
அணைவ காரணம் என் - அவ்வாறு இடையிலே வந்து பற்றுதற்குக் காரணம் யாது? (காரணம் இன்றியே வந்து பற்றியது என்று கூறினால்)
முத்தி நிலை - உயிர்முத்தி பெற்ற நிலையிலும்
பிணி - அவ்வாணவமாகிய தடை
பேசாது - காரணம் சொல்ல வேண்டாமலே
அகவும் - வந்து அகப்படுத்துவதாகும்.

விளக்கம் :
இச் செய்யுளை வினாவும் விடையுமாகச் சுருங்கிய சொற்களைக் கொண்டு அமைத்துள்ளார் ஆசிரியர். அதன் பொருள் நிலை இனிது புலப்படுமாறு பின்வரும் முறையில் ஆசிரியர் - மாணவர் உரையாடலாக அமைத்துக் காட்டலாம்.
மாணவர் : ஆவண மலம் எப்பொழுது உயிரைப் பற்றியது?
ஆசிரியர் : உயிர் முதலில் ஆணவ மலத்தின் தொடர்பின்றி இருந்தது என்று கருதித்தானே இவ்வினாவைக் கேட்கிறாய்.
மாணவர் : ஆம், ஆம்.
ஆசிரியர் : ஆணவமாகிய மாசு முதலில் இல்லையென்றால் உயிர் தூயதாக விளங்கியது என்றுதானே பொருள்.
மாணவர் : அப்படித்தான் கொள்ள வேண்டும்.
ஆசிரியர் : முதலில் தூய்மையாக இருந்த உயிரிடம் பின்னர் ஆணவ மலம் சேர்ந்தது என்றால் அதற்குக் காரணம் வேண்டும் அல்லவா?
மாணவர் : காரணம் வேண்டும் என்று நீங்கள் கூறுவது எதனால்? சற்று விளக்கிக் கூற வேண்டுகிறேன்.
ஆசிரியர் : எந்த ஒன்றும் இடையில் வந்து சேருமானால், அதற்கு ஒரு காரணம் இருத்தல் வேண்டும். இதை விளக்குவதற்கு ஒரு நிகழ்ச்சியைக் கூறுகிறேன். ஒருவர் திருமணமே வேண்டா என்று வைராக்கியத்தோடு இருந்து விட்டார். வயது நாற்பதுக்கு மேல் ஆகிவிட்டது. தனியாகவே காலம் தள்ளி வந்தார். ஒருநாள் ஓர் அதிசயம் நடந்தது. அவர் ஒரு பெண்ணைத் திருமணம் செய்து கொண்டு வீட்டிற்கு அழைத்து வந்து குடும்பம் நடத்தத் தொடங்கி விட்டார்! அந்தப் பெண்ணைத் திருமணம் முடித்ததற்கு எது காரணமாக இருக்கும் என்பது பலரும் ஆர்வமாய் கேட்கும் கேள்வியாக அமைந்து விட்டது. அவர் முதலில் இருந்தபடி பின்னும் இருந்தால் அதற்குக் காரணம் தேட வேண்டியதில்லை. அப்படியின்றி இடையில் அந்தப் பெண் வந்து சேர்ந்தாள் என்றால் அம் மாறுதலுக்குக் காரணம் இருக்கத்தானே வேண்டும். இப்படி இடையில் வந்து சேர்கின்ற எந்நிகழ்வையும் ஆராய்ந்தால் அதற்குத் தக்க காரணம் இருத்தல் புலனாகும். அம்முறையில், முதலில் தூயதாய் இருந்த உயிரிடத்தில் பின்னே ஆணவமலம் சேர்ந்தது என்றால் அதற்கு ஒரு காரணம் வேண்டும். அதற்கு நீ என்ன காரணம் சொல்வாய்?
மாணவர் : தூயதாகிய உயிர் தனக்குக் கேடு விளைவிப்பதாகிய ஆணவத்தைத்தானே சென்று பற்றியிராது. ஆணவம் அறிவற்ற சடம் ஆதலால் அதுவும் உயிரை அறிந்து சென்று பற்றியிராது. இனி, மூன்றாவது பொருளாகிய இறைவன் பேரருள் உடையவன் ஆதலால் உயிருக்குத் துன்பத்தைத் தருவதாகிய ஆணவத்தை அதனோடு சேர்த்திருக்க மாட்டான். ஆகவே, எந்த விதத்திலும் காரணம் சொல்ல வழியில்லை. மற்று, இப்படிக் கொண்டால் என்ன?
ஆசிரியர் : எப்படிக் கொள்ளலாம் என்று சொல்லுகிறாய்?
மாணவர் : காரணம் இல்லாமலே எப்படியோ வந்து பற்றியது என்று கொண்டால் என்ன?
ஆசிரியர் : அப்படிக் கொண்டால் முத்தி என்பதே இல்லையாகி விடும்.
மாணவர் : நீங்கள் சொல்வது விளங்கவில்லை. முத்தி என்பது எப்படி இல்லாமற் போகும்?
ஆசிரியர் : முத்தி என்பது என்ன?
மாணவர் : உயிர் மலமாகிய மாசு நீங்கித் தூய்மையாய் விளங்கும் நிலை.
ஆசிரியர் : முதலில் தூய்மையாய் இருந்த உயிரைப் பின்னே மலம் வந்து பற்றும் என்று நீ சொன்னாய்.
மாணவர் : ஆம்.
ஆசிரியர் : அவ்வாறு பற்றுவதற்குக் காரணம் வேண்டுவதில்லை. காரணம் இன்றியே வந்து பற்றும் என்பதாகவும் சொன்னாய்.
மாணவர் : ஆமாம்.
ஆசிரியர் : அப்படியானால் மலம் நீங்கி முத்தி பெற்ற உயிரையும் பின்னர் அந்த மலம் வந்து பற்றக் கூடும் அல்லவா? அது பற்றுவதற்குக் காரணம் வேண்டா என்று நீயே சொல்லி விட்டாயே. காரணம் வேண்டாத போது அஃது எப்பொழுது வேண்டுமானாலு<ம் வந்து பற்றலாம்தானே. முதலில் தூய்மையாய் இருந்த உயிரை எப்படிக் காரணமின்றியே வந்து பற்றியதோ அப்படியே முத்தி பெற்றுத் தூய்மையாய் விளங்கும் உயிரையும் அது காரணமின்றியே பற்றும் என்று ஆகிறதே. அங்ஙனம் மறுபடியும் மலம் வந்து பற்றுமானால் அந்நிலை கட்டுநிலையே யன்றி எப்படி முத்தி நிலையாகும்? ஆதலால் காரணமின்றியே மலம் வந்து பற்றும் என்று சொன்னால் முத்தி என்பதே இல்லையாகி விடும் என்பதை உணர்வாயாக.
மாணவர் : இப்பொழுது நன்றாக விளங்கி விட்டது. ஆணவமலம் இடையிலே வந்து பற்றவில்லை என்பதைத் தெரிந்து கொண்டேன். அங்ஙனமாயின் உயிருக்கு ஆணவ மலத்தின் தொடர்பு எப்படி ஏற்பட்டது.
ஆசிரியர் : உயிர் ஒரு காலத்தில் ஆணவ மலத்தின் தொடர்பு இன்றி இருந்தது என்று சொன்னால் அல்லவா அதன் தொடர்பு எப்படி ஏற்பட்டது என்ற கேள்வியே எழும். சைவ சித்தாந்தம் அப்படிச் சொல்லவில்லை. உயிர் என்று உண்டோ அன்றே அதனிடத்தில் ஆணவ மலம் உண்டு. ஆகவே உயிர்தொன்று தொட்டு ஆணவ மலத்தோடு கூடியே உள்ளது என்பதை அறிவாயாக.
குறிப்பு :
ஆணவ மலத்தை ஆசு என்ற சொல்லால் குறிப்பிடும் வழக்கமுடையவர் நம் ஆசிரியர். ஆசு - குற்றம். சிவப் பிரகாசத்தில் இச்சொல்லாட்சியைப் பல இடங்களிற் காணலாம். இந்நூலிலும் முன்னர் ஆசுடன் அடங்கப் போக்குமவன் என வந்துள்ளமை நாம் அறிந்தது.
ஆதி - தொடக்கம் உள்ளது; ஒரு காலத்து வந்தது.
அகவும் - அகப்படுத்திக் கொள்ளும்.

கருத்துகள் இல்லை:

திருமூலர் திருமந்திரம் - 275 - விளக்கம்

பாடல் விளக்கம்: மெய்தான் அறியும் செழுங்கடல் வட்டத்துப் பொய்தான் மிகவும் புலம்பும் மனிதர்கள் மெய்தான் உரைக்கில்விண் ணோர்தொழச் செய்குவன் ம...