27. ஆணவம் உயிரின் குணம் அன்று
இருள்இன்றேல் துன்புஎன்? <உயிர் இயல்பேல் போக்கும்
பொருள் உண்டேல் ஒன்றாகிப் போம்.
பொருள் : ஆணவம் என்ற அக இருள் இல்லையாயின் உயிர்களுக்குத் துன்பம் உண்டாவதற்குக் காரணம் யாது? இந்த ஆணவம் உயிரின் குணம் என்றால், அதனைப் போக்கும் பொருளாகிய திருவருளால் அது கெடும் பொழுது, குணமாகிய அது கெடவே உயிரும் அதனோடு இல்லையாய் ஒழியும். ஆனால், முத்தி நிலையில் ஆணவம் மட்டுமே கெட, உயிர் அழியாதிருத்தலால் ஆணவம் உயிரின் குணமன்று. அஃது உயிருக்கு அநாதியே உள்ள குற்றம் என்பது புலனாகும்.
சொற்பொருள் :
இருள்இன்றேல் - ஆணவ மலமாகிய அகவிருள் இல்லையென்று சொன்னால்
துன்புஎன் - ஆன்மாக்களுக்குத் துன்பம் உண்டாவதற்கு வேறு என்ன காரணம்?
உயிர் இயல்பேல்- இந்த ஆணவம் ஆன்மாவின் குணமே யன்றி, அதனின் வேறாகிய ஒரு தனிப்பொருள் அன்று என்று சொன்னால்
போக்கும் பொருள் உண்டேல் - அதனைப் போக்கும் பொருளாகிய திருவருளால் அது கெடுமாயின்
ஒன்றாகிப் போம் - குணமாகிய அது கெடவே, ஆன்மாவும் அதனோடு இல்லாதொழியும்.
விளக்கம் :
இருளும் துன்பமும் :
இரவு நேரத்தில் இருள் நமக்கு இடர்ப்பாட்டினை உண்டாக்குகிறது. அன்று இரவுக்குள் செய்து முடித்தாக வேண்டும் என்ற நிலையில் நாம் ஒரு வேலையில் ஈடுபட்டிருப்போம். அந்த நேரம் பார்த்து மின் தடை ஏற்பட்டு விளக்கு எரியாது போகும். அந்த இருட்டில் என்ன செய்ய முடியும்? எதைப் பார்க்க முடியும்? மின்வரவை எதிர்பார்த்துக் கொண்டு இருளில் செய்வதறியாது விழித்து நிற்போம்! மிகுந்த நேரம் ஆகியும் மின்சாரம் வராது. இது என்ன சோதனை! நமது பாடு எப்படியிருக்கும்? இருள் தருகிற துன்பம் இது. இந்த இருள் வேறொரு வகையிலும் துன்பம் தருவதுண்டு. இரவு நேரத்தில் விளக்கைப் பிடித்துக் கொண்டு நடந்து செல்கிறோம். பாதை ஒழுங்காக இல்லை. மேடும் பள்ளமுமாக உள்ளது. விளக்கொளியைத் துணையாகக் கொண்டு நடந்தும் ஓரிடத்தில் குழியில் தடுமாறி விழுகிறோம். காலை ஒடித்துக் கொள்கிறோம். இந்தத் துன்பத்திற்கு எது காரணம்? இருள்தான் காரணம். மங்கலான விளக்கொளியில் இருள்தான் குழியை வழி போலத் தவறாக உணரும்படி செய்து அதில் கால் வைக்கும் படியும் செய்தது. அதனால் வந்த துன்பம் இது. முதல் நிகழ்ச்சியில் இருள், பார்வையை முற்றிலும் மறைத்து ஒன்றையும் அறியவொட்டாதபடி செய்து அதனால் துன்பத்தை விளைவித்தது. அடுத்த நிகழ்ச்சியில் இருள், பார்வையை மயக்கித் தவறாக உணரும்படி செய்து துன்பத்தைத் தந்தது. இவ்வாறு இருள் இரு விதங்களில் செயற்பட்டுத் துன்பந்தரும் என்பதை அறியலாம்.
இந்தப் புற இருளைப் போன்றது அக இருளாகிய ஆணவம். புற இருளைப் போல ஆணவமும் இரு நிலைகளிற் செயற்பட்டு உயிர்களின் துன்பத்திற்குக் காரணமாகும். அநாதி நிலையில் ஆணவ இருள் உயிர்களை முழுவதும் மறைத்து முழு மூடமாக்கித் துன்பத்தில் மூழ்கச் செய்யும். இது, இரவு நேரத்தில் இருள் கண்ணை முழுதும் மறைத்து ஒன்றையும் அறிய விடாமற் செய்த நிலையைப் போன்றது. பின்னர் ஆணவ இருள், உயிர்கள் பிறப்பிற்கு வந்த சகல நிலையில், சிறிது விளங்கிய உயிர்களின் அறிவைத் திரிவு படுத்தி மயக்கிப் பொருள்களைத் தவறாக உணரும்படி செய்து பெருந்துன்பத்தில் ஆழ்த்தும். இது, சிறிது வெளிச்சமுள்ள நேரத்தில் இருள் பார்வையை வேறுபடுத்திக் குழியை வழி என்று தவறாகக் கருதும்படி செய்த நிலையைப் போன்றது. ஆணவத்தின் செயற்பாடும் அதனால் உண்டாகும் துன்பமும் பற்றி முன்னே 20 ஆம் செய்யுளின் உரையில் விரிவாகக் கூறப்பட்டுள்ளது. எனவே, எல்லா வகையான துன்பத்திற்கும் அடிப்படைக் காரணம் ஆணவ இருளே யாகும். இது கருதியே, இருள் இன்றேல் துன்பு என் என வினவுகிறார் உமாபதி சிவம்.
ஆணவம் உயிரின் குணமன்று :
ஆணவம் உயிரிடத்தில் தொன்று தொட்டு உடனாக உள்ளதே. அதனை உயிரின் குணம் என்று கொண்டால் என்ன? என்று கேட்கலாம். ஒரு பொருளிடத்தில் உடன் தோன்றுவதெல்லாம் அதன் குணம் என்று சொல்வதற்கில்லை. எடுத்துக் காட்டாகச் செம்பினிடத்தில் களிம்பு உடன் தோன்றுகிறது. அதனைச் செம்பினது குணம் என்று கூறுவார் இல்லை. களிம்பு செம்பிற்குக் குற்றமே யன்றிக் குணமாகாது. அரிசி தோன்றிய அன்றே அதனிடத்தில் உமியும் அமைகின்றது. உமி அதற்குக் குற்றமே யன்றிக் குணமாகாது. ஒரு பொருளுக்குக் குணம், குற்றம் என்ற இரண்டு உண்டு. இரண்டும் பொருளிடத்தில் முதலிலேயே உள்ளவை யாயினும் குணம் என்பது பொருளை விட்டுக் கடைசி வரையில் நீங்காமல் இருக்கும். குற்றம் என்பது முதலில் பொருளோடு தோன்றியதாயினும் பின்பு அதனை விட்டு நீங்கிவிடும். முற்கூறிய எடுத்துக்காட்டுகளில் இவ்வுண்மை விளங்கும். இரச வாதம் செய்வோர் செம்பை உருக்கிப் பதமறிந்து இரச குளிகையைச் சேர்க்கும் பொழுது செம்பி<லுள்ள களிம்பு முழுதும் நீங்கப் பெறுகிறது. நெல்லைக் குற்றும் பொழுது உமி அரிசியை விட்டு நீங்கி விடுகிறது. இதனால், களிம்பும் உமியும் குற்றங்களே யாதல் புலனாகும். உயிர் என்று உண்டோ அன்றே அதனிடத்தில் ஆணவமும் உடன் இருப்பது பற்றி அதனைக் குணம் என்று கூறிவிடக் கூடாது. ஆணவம் குணம் என்றால் அஃது உயிரைவிட்டு என்றும் நீங்காமல் இருக்க வேண்டும். ஆனால், முத்திக் காலத்தில் உயிரைப் பற்றியிருந்த ஆணவம் முழுதும் நீங்கி விடுவதை அருளாளர் வாக்குகள் தெளிவுபடுத்துகின்றன. தாயுமானவர் கூறுவதை இங்கே குறிப்பிடலாம்.
களிம்பு தோய்ந்த செம்பு போல நான் ஆணவ மலத்தோடு கூடியிருந்தேன். செம்பைப் புடம் இட்டுப் பதம் அறிந்து இரச குளிகையைச் சேர்த்துக் களிம்பைப் போக்குவது போல, இறைவன் என்னை ஞானமாகிய நெருப்பிலே கனிவு பெற உருக்கிப் பருவம் அறிந்து தனது திருவருளாகிய குளிகையைக் கொண்டு என்னைப் பற்றியிருந்த மலமாகிய களிம்பினைப் போக்கி என்னைத் தூயபொன் ஆக்கித் தனது திருவடியிற் சேர்த்தான் என்று கூறுகிறார் (சின்மயானந்த குரு.7) இதனால் முத்தி நிலையில் மலம் <உயிரை விட்டு நீங்குதல் தெளிவு. இவ்வாறு பின்னால் நீங்குவதால் அஃது உயிரின் குணமன்று என்பது விளங்கும். மேலும், குணம் அழியுமானால் குணத்தை உடைய பொருளும் அழியும். குணம் கெடப் பொருள் மட்டும் நிற்கும் என்பது என்றும் நிகழாத ஒன்று. ஆனால், முத்தியில் மலம் கெட உயிர் நின்று இறையின்பத்தைத் துய்க்கும் என்று சொல்லப்படுகிறது. மலம் உயிரின் குணமாயின், மலம் கெட உயிரும் அல்லவா கெட வேண்டும்? அவ்வாறு நிகழாமையால் மலம் உயிரின் குணம் ஆகாமை விளங்கும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக