26. அறியாமையை விளைவிப்பது ஆணவ மலமே
பன்மொழிகள்என்? உணரும் பான்மை தெரியாத
தன்மை இருளார் தந்தது.
பொருள் : பல சொற்கள் எதற்கு? முடிவாகச் சொன்னால் உயிரினது அறியுந்தன்மையை விளங்க வொட்டாதபடி தடுப்பது இருளாகிய ஆணவ மலத்தின் செயலாகும்.
சொற்பொருள் :
பன்மொழிகள் என்? - ஆணவ மலம் பற்றிப் பலவாறு சொல்லுதல் எதற்கு?
உணரும் பான்மை - உணரும் தன்மை உடையதாகிய உயிருக்கு அத்தன்மை
தெரியாத தன்மை - தோன்றாத நிலை
இருளார்தந்தது - ஆணவ மலமாகிய இருளால் வந்ததாகும்.
விளக்கம் :
உயிர் அறிவுடைய பொருள். ஆனால், அதனிடத்தில் அறியாமையும் காணப்படுகிறது. பல சமயங்களில் அதன் அறிவு விளங்காமற் போகிறது. அந்த அறியாமைக்கு - அறிவு விளங்காமைக்குக் காரணம் எதுவாக இருக்கும்? இந்த வினாவை எழுப்பிக் கொண்டு சமயவாதிகள் அதற்குப் பலவிதமான விடைகளைக் கூறியுள்ளனர்.
உயிரிடத்தில் அறியாமை யிருப்பது இயற்கை. அதற்குப் போய்க் காரணம் தேடுவது ஏன்? என்று ஒரு சாரார் கூறுவர். இஃது ஏற்கக் கூடியதன்று. ஒரு பொருளிடத்தில் இரண்டு மாறுபட்ட தன்மைகள் இயற்கையாக இருக்க முடியாது. அப்படி மாறுபட்ட தன்மைகள் காணப்பட்டால் அவற்றுள் ஒன்றை அதன் இயற்கை என்றும், மற்றொன்றைச் செயற்கை என்றும் கொள்ள வேண்டும். காட்டாக, நீரிடத்தில் குளிர்ச்சியும், மற்றொரு சமயத்தில் அதற்கு மாறாகிய வெப்பமும் காணப்பட்டால் வெப்பத்தைத் தீயின் சேர்க்கையால் வந்த செயற்கை எனவும், குளிர்ச்சியே நீருக்கு இயற்கை எனவும் கூறுகிறோம். அம்முறையில், உயிரிடத்தில் அறிவும் அதற்கு மாறாகிய அறியாமையும் காணப்படுவதனால் அவற்றுள் ஒன்றுதான் உயிருக்கு இயற்கையாகும். மற்றொன்று பிறிதொரு காரணத்தால் வந்த செயற்கையாகத்தான் இருக்க முடியும். அப்படிப் பார்த்தால் அறிவுப் பொருளாகிய உயிருக்கு அறிவுதான் இயற்கை என்பது சொல்லாமலே விளங்கும். அறியாமை என்பது அதற்கு வேறொரு காரணத்தால் வந்த செயற்கை என்று கூறிவிடலாம். இதனால், செயற்கையாய் வந்த அறியாமையை உயிரின் இயற்கை என்றல் பொருந்தாது என்பது விளங்கும்.
இனி, பிறப்பு நிலையில் உயிர் உடம்பின் சேர்க்கையைப் பெற்று நிற்கிறது. அறிவில்லாத உடம்பின் சேர்க்கையினாலே தான் உயிருக்கு அறியாமை உண்டாகிறது என்று கூறுகின்ற மதங்கள் உண்டு. இஃது அனுபவத்திற்கு ஒவ்வாத கருத்தாகும். உடம்பு ஊக்கமோடு செயற்படுகின்ற காலத்தில் உயிருக்கு அறிவு நன்கு விளங்குகிறது. உடம்பு செயலற்றுக் கிடக்கின்ற உறக்க நிலையிலும் மூர்ச்சை நிலையிலும் அறிவு சிறிதும் நிகழவில்லை என்பது அனுபவமாக அறிந்தது. இதனால், உடம்பின் சேர்க்கையால்- செயற்பாட்டினால் உயிருக்கு அறிவு விளங்குமே யன்றி மறைவதில்லை என்பது தெளிவாகும். இதுபற்றியே, உடம்பினால் உயிருக்கு அறியாமை உண்டாகவில்லை என்றும், அறிவை மறைத்து அறியாமையை உண்டாக்குகின்ற வேறொரு பொருள் இருத்தல் வேண்டும் என்றும் சைவ சித்தாந்தம் கொள்கிறது.
இனி, கன்மம் என ஒன்று உள்ளது என்பதையும், அதுவே உயிர்களின் இன்ப துன்பங்களுக்குக் காரணம் என்பதையும் பலரும் ஒப்புக் கொள்வர். அந்தக் கன்மமே உயிர்களின் அறிவைத் தடுத்து அறியாமையை உண்டாக்கும் என்று சில சமயவாதிகள் கூறுகின்றனர். கன்மம் செயற்படும் முறையை அறிந்தோமானால் இக்கருத்துப் பொருந்தாது என்பது புலனாகும். கன்மம் ஒருவருக்குத் தீமை தரவேண்டும் என்று இருந்தால் அந்த நேரத்தில் அக் கன்மம் அவருடைய அறிவைத் தூண்டித் தீமை வரும் வகையில் செலுத்தும். காட்டாக, ஒருவர் இரு சக்கர வண்டியில் சென்று கொண்டிருக்கிறார் என்று வைத்துக் கொள்வோம். எப்பொழுதும் மெதுவாக வண்டியை ஓட்டுவதே அவர்க்கு இயல்பு. ஆனால், இந்த நேரத்தில் அவர் படுகாயம் அடைந்து துன்பப்பட வேண்டும் என்று இருக்கிறது. ஆனால், அது அவருக்கு எப்படித் தெரியும்? அதற்கு ஏற்ப அவருடைய கன்மம் அவரது அறிவைச் செ<லுத்துகிறது. அதிவேகமாக வண்டியை ஓட்டும்படி அவரது அறிவைத் தூண்டுகிறது. அந்த விதி வழியே அவரது மதி செல்கிறது. விதி செலுத்த அவரும் விரைந்து வண்டியை ஓட்டுகிறார். அந்த விரைவு விபத்திலே முடிகிறது.
இவ்வாறே கன்மம் ஒருவருக்கு நன்மைதர வேண்டும் என்று இருந்தால் அந்த நேரத்தில் அக்கன்மம் அவருடைய அறிவை நல்ல முறையில் தூண்டி நன்மை வரும் வகையில் செலு<த்தும். மந்த அறிவுடைய ஒருவரையும் குறிப்பிட்ட ஒரு நேரத்தில் சிறப்பாகச் செயல்படும்படி தூண்டி அவரது கன்மம் அவருக்கு வெற்றியையோ, எதிர்பாராத பெரும் பயனையோ தேடித்தந்து விடும். இந்த நிகழ்ச்சியிலிருந்து ஓர் உண்மை தெரிய வரும். கன்மம் தன்னைச் செய்தவருக்கு நன்மை விளையும் முறையிலோ, தீமை விளையும் முறையிலோ அவரது அறிவைத் தூண்டி விடுமே யன்றி, அவரது அறிவைத் தடுத்து அறியாமையை உண்டாக்காது என்பது அந்த உண்மையாகும். அறிவைத் தடுத்து அறியாமையை உண்டாக்குவது கன்மமே என்றால் அதனால் உயிருக்குத் துன்பம் மட்டுமே வரவேண்டும். ஆனால், முன்னே கூறியபடி கன்மம் அறிவில்லாதவரையும் அறிவுத் திறனுடன் செயல்படும்படி வைத்து அவருக்கு இன்பம் பயப்பதையும் உலகியலில் காண்கிறோம். ஆதலால் கன்மத்திற்கு வேறாய், உயிரின் அறிவைத் தடை செய்யும் பொருள் ஒன்று இருத்தல் வேண்டும் என்று தெரிகிறது. அந்தப் பொருளையே ஆணவ மலம் என்று சைவ சித்தாந்தம் குறிப்பிடுகிறது. இதுகாறும் கூறியவற்றால் உயிரின் அறியாமைக்கு உடம்பின் சேர்க்கையே காரணம்; கன்மமே காரணம் என்பார் கூற்றுக்கள் பொருந்தா என்பது புலனாகும். ஆசிரியர் உமாபதிசிவம் பன்மொழிகள் என்? என்ற தொடரில், இன்ன பல கொள்கைகளையெல்லாம் குறிப்பாய் மறுத்துள்ளார் என்று கொள்ளலாம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக