25. இருட்பாவை
பலரைப் புணர்ந்தும் இருட் பாவைக்கு உண்டுஎன்றும்
கணவர்க்கும் தோன்றாத கற்பு.
பொருள் : அக இருளாகிய பெண் ஆன்மாக்களாகிய ஆடவர் பலரோடு சேர்ந்திருப்பவள். ஆயினும், அந்த அந்த ஆன்மாவாகிய கணவர்க்குத் தன் உண்மை யியல்பை அவள் என்றுமே காட்டிக் கொள்ளமாட்டாள்; தன்னைச் சிறந்தவளாகவே காட்டி நிற்பாள்.
சொற்பொருள் :
இருட்பாவைக்கு - ஆணவம் என்னும் பெண்ணுக்கு
பலரைப் புணர்ந்தும் - அவள் ஆன்மாக்களாகிய ஆடவர் பலரோடு தொடர்பு கொண்டிருந்தும்
என்றும் கணவர்க்கும் தோன்றாத - அந்த அந்த ஆன்மாவாகிய கணவர்க்குத் தனது உண்மையியல்பை என்றுமே காட்டிக் கொள்ளாத
கற்பு உண்டு - கற்பு நிலை உள்ளது.
விளக்கம் :
உமாபதி சிவம் அறியாமையை ஒரு பெண்ணாக உருவகம் செய்து இருட்பாவை என்று குறிப்பிடுகிறார். அப்பெண் ஒழுக்கமில்லாதவள்; ஆடவர் பலரின் பின் திரிபவள். ஆனாலும் அவள் தனது கணவன் எதிரில் கற்பிற் சிறந்த பெண்ணாகத் தன்னைக் காட்டிக் கொள்கிறாள். அவனும் அவளை நம்பி விடுகிறான். இத்தகைய பத்தினைப் பெண் தனக்கு மனைவியாக வாய்த்ததை எண்ணிப் பெருமைப்படுகிறான். அவள் தனது உண்மை யியல்பை மறைத்துச் சிறந்தவளாகத் தன்னைக் காட்டுவது போல, அறியாமையும் தன்னை மறைத்து அறிவு போலக் காட்டி நிற்கிறதாம்! நாம் ஒரு காரியத்தில் ஈடுபடுகின்றோம். அச் செயலில் இடையிடையே சில தவறுகளையும் செய்கின்றோம். அத்தவறுகளைச் செய்கின்றபோது நாம் தவறாகச் செல்லுகின்றோம் என்பது நமக்குத் தெரிவதில்லை. அறியாமை காரணமாகவே அத் தவறுகளைச் செய்கின்றோம் என்பதும் தெரிவதில்லை. நாம் சரியாகச் செயல்படுவதாகவே நினைத்துக் கொள்கிறோம். நம்மிடத்திலுள்ள அறியாமை அறிவு போலவே தன்னைக் காட்டி நின்று மயக்குவதால் தவறான செயலும் சரியான செயலாகவே நமக்குப்படுகிறது. ஒருவர் மேற்கொள்ளுகிற ஒழுக்கம் தீயதாயினும் அதனைத் தனக்கு நன்மை பயப்பதாகவே அவர் எண்ணுகிறார். அவ்வாறு எண்ணும் படியாகச் செய்கிறது அவரிடமுள்ள அறியாமை. குடிப்பழக்கம், போதைப்பழக்கம் முதலியன உடையவர்கள் அவ்வழக்கம் உடலுக்குத் தீங்கு பயப்பதாயினும் அதனை விடாமையோடு, அது தமது உடலுக்கு <உறுதியளிக்கிறது என்றும் வாதிடுவார்கள்! அறியாமை அறிவு போலக் காட்டி நிற்கும் இடங்களில் இதுவும் ஒன்று.
அறியாமை செய்யும் இவ்வஞ்சனையைக் கருதியே அதனை, கணவனிடம் தன்னைச் சிறந்தவளாகக் காட்டிக் கொள்ளும் நல்லொழுக்கம் இல்லாத பெண்ணாக உருவகப்படுத்தினார் ஆசிரியர் என்பது அறிதற்குரியது. ஒருவர் அறியாமையில் இருக்கின்ற வரையில் தாம் அறியாமைப் பட்டிருப்பதை அவர் உணர்வதில்லை. பித்துப் பிடித்த ஒருவன் தனக்குப் பித்துப் பிடித்திருக்கிறது என்பதை அறிய மாட்டாதது போன்றது இந்நிலை. எப்பொழுது தன் அறியாமையை உணரலாம் என்றால், அறியாமை நீங்கி உண்மையறிவு வந்தபோதே நாம் இதுகாறும் அறியாமையில் இருந்தோம் என்பதை அறியமுடியும். நாடாளுவோர் தேர்தல் காலத்தில் ஊர் ஊராகச் சூறாவளிப் பயணத்தை மேற்கொள்வார்கள். தமது பேச்சைக் கேட்க வரும் கூட்டத்தைப் பார்த்து மக்கள் என் பக்கம் என்று தவறாக எண்ணிக் கொள்வார்கள். செய்தித் தாள்கள் வேறு விதமாக எழுதினால் அதனை நம்ப மாட்டார்கள். அவர்கள் அறியாமையில் இருக்கின்ற வரையில் தமது அறியாமையை எப்படி உணர முடியும்? தேர்தல் நடந்து முடிந்து முடிவுகள் வெளிவரும்போது தான் அடடா! நாம் தவறாக அல்லவா மதிப்பீடு செய்து விட்டோம் என்று தமது அறியாமையை உணர்வார்கள். பின்னால் உண்மை யறிவு வரும்போது தான் முன்னே இருந்த அறியாமை புலப்படும் என்பதற்கு இது ஒரு சான்று. இதனையே அறிதோறறியாமை கண்டற்றால் என்று குறிப்பிட்டார் வள்ளுவப் பெருந்தகையார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக