24. இன்று வரையிலும் நீங்காது உள்ளது
அன்று அளவி உள்ளொளியோடு ஆவியிடைஅடங்கி
இன்று அளவும் நின்றது இருள்.
பொருள் : உயிரிடத்தில் இரண்டறக் கலந்து நிற்கின்ற உள்ளொளியாகிய இறைவனோடு ஆணவமாகிய இருளும் அன்றே உடன் கலந்திருக்கிறது. அந்த இருள் இறைவனுக்குக் கீழ்ப்பட்டதாய் அடங்கி உயிரை மட்டுமே பற்றி நிற்கிறது. அன்று தொட்டு இன்று வரையிலும் உயிரை விட்டு நீங்காமலே உள்ளது.
சொற்பொருள் :
இருள் - அக இருளாகிய ஆணவ மலம்
ஆவியிடை - உயிரிடத்தில்
உள்ளொளியோடு - அக ஒளியாகிய இறைவனோடு
அன்று அளவி - (தானும்) அநாதியே இரண்டறக்கலந்து
அடங்கி - இறைவனுக்குக் கீழ்ப்பட்டதாய் அடங்கி
இன்றளவும் - இன்று வரையிலும்
நின்றது - நீங்காமல் உள்ளது.
விளக்கம் :
ஒளி, இருள் :
உயிரோடு இறைவன் இரண்டறக் கலந்திருக்கின்ற போது அவனுக்கு எதிராகிய ஆணவ மலமும் உயிரில் உடன் கலந்துள்ளது என்பது எங்ஙனம் கூடும் என வினவலாம். ஒளிக்கும் இருளுக்கும் ஒன்றே இடம் என்பதை அறிந்தால் இந்த வினா எழாது. பகலில் ஒளியும் இருளும் ஓரிடத்தில் தான் உள்ளன. ஒளி மேலிட்டபோது இருள் அந்த இடத்தை விட்டு ஓடிவிடவில்லை. அதே இடத்திலேயே மடங்கிப் போய் சிறிதும் புலனாகாமல் உள்ளது. ஆனால், உலக வழக்கில் இருள் நீங்கியதாகச் சொல்லுகிறோம். அதன் பொருள், இருள் ஒளி முன்னர் தன் சத்தி கெட்டு மடங்கிக் கிடக்கிறது என்பதேயாகும். விளக்கு மெலிகின்றபோது அதுகாறும் அவ்விடத்தில் மடங்கி நின்ற இருள் மேலிடும். இதனை விளக்கு அற்றம் பார்க்கும் இருளே போல் என்று திருக்குறள் கூறும். உயிரிடத்தில் ஒளியாகிய இறைவனும் இருக்கிறான். இருளாகிய ஆணவ மலமும் இருக்கிறது. இரண்டிற்கும் இடம் உயிர்தான். ஆயின் அகவொளியாகிய இறைவன் முன் அக விருளாகிய ஆணவம் என்றும் கீழ்ப்பட்டதாய் அடங்கியே நிற்கும் என அறியலாம்.
கடல், நீர், உப்பு :
பதியாகிய இறைவன், பசுவாகிய உயிர், பாசமாகிய ஆணவம் ஆகிய இம்முப்பொருள்களும் ஒன்றாய்க் கலந்தே உள்ளன. அவை கலந்து நிற்கும் முறையை ஓர் எடுத்துக் காட்டினால் விளங்கிக் கொள்ளலாம். கடல்வெளி என்பது விரிந்தது. அதில் நீர் நிறைந்திருக்கிறது. அந்நீரில் உப்புக் கலந்திருக்கிறது. கடலும் நீரும் உப்பும் ஆகிய மூன்றும் ஒன்றாய்க் கலந்தே உள்ளன. விரிந்த அக்கடல் வெளியைப் போன்றவன் இறைவன். அதில் அடங்கியிருக்கும் நீர் போன்றது உயிர். அந்நீரில் கலந்திருக்கும் உப்புப் போன்றது ஆணவ மலம். இறைவன், உயிர், ஆணவம் ஆகிய மூன்றும் ஒன்றாய்க் கலந்தே நிற்பினும் அவை தம்முள் சமம் ஆகா என்பதை இவ்வுவமையால் அறியலாம். இறைவனில் உயிரும், உயிரில் ஆணவமும் அடங்கி நிற்பனவாகும். கடல்வெளி நீருக்கும் நீரிலுள்ள உப்புக்கும் ஆதாரமாக இருப்பது போல, இறைவனே ஏனைய பசு, பாசங்களையெல்லாம் தன்னில் அடக்கிக் கொண்டு அவற்றிற்குத் தானே ஆதாரமாய் நிற்கின்றான். தன்னுள் பிறவற்றை அடக்கி நிற்கின்ற பெருநிறைவை வியாபகம் என்பர். அதனுள் அடங்கி நிற்பதை வியாப்பியம் என்பர். எனவே இறைவன் வியாபகம், ஏனையவை அவனில் வியாப்பியம். உப்பு பருப்பொருள் ஆதலின் அது நுண்ணியதாகிய கடலைப் பற்றுவதில்லை; பருப்பொருளாகிய நீரையே பற்றி நிற்பதாகும். கடலும், நீரும் ஆகிய இரண்டும் ஒருங்கு இருக்கவும் எப்படி உப்பு கடலைப் பற்றுவதில்லையோ அப்படியே இறைவனும் உயிரும் ஆகிய இரண்டும் ஒருங்கு இருக்கவும் ஆணவம் நுண் பொருளாகிய இறைவனைப் பற்றுவதில்லை; பருப்பொருளாகிய உயிரையே பற்றி நிற்பதாகும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக