22. அக இருளாய் நிற்பது
இருளான தன்றி இலது எவையும் ஏகப்
பொருளாகி நிற்கும் பொருள்.
பொருள் : உலகத்திலுள்ள பல வகைப்பட்ட பொருள்களையும் அவைகளுடைய தன்மை தோன்றாதபடியும், அவை யாவும் தானேயாய்த் தோன்றும்படியும், மறைத்து நிற்கும் பொருள் இருளையன்றி வேறில்லை. இந்தப் புற இருளைப் போலப் பதி, பசு, பாசம் ஆகிய அறியத்தக்க பலவகைப் பொருள்களையும் அவைகளுடைய தன்மை தோன்றாதபடி மறைத்து நிற்பது ஆணவ மலம் ஆகிய அகவிருளாகும்.
சொற்பொருள் :
எவையும் - காணத்தக்க <உலகப் பொருள் யாவும்
ஏகப் பொருளாகி - தானேயாய்த் தோன்றி (அஃதாவது, அப்பொருள்களின் தன்மை தோன்றாதபடியும், அவை யாவும் இருளாகிய தானேயாய்த் தோன்றும்படியும் செய்து)
நிற்கும் பொருள் - அவற்றுள் ஒன்றையும் காணவொட்டாது கண்ணை மறைத்து நிற்கும் பொருள்
இருளானது அன்றி இலது - இருள் எனப்படுகிற அவ்வொன்றை யன்றிப் பிறிதில்லை. (இஃது உவமை. இந்தப் புற இருளைப் போல, மேலே சொன்ன துன்றும் பவத்துயர் முதலிய அறியத்தக்க பொருள்களுள் ஒன்றையும் அறியவொட்டாது உயிரறிவை மறைத்து நிற்பது ஆணவ மலமாகிய அக இருளாகும் என்னும் கருத்தை இங்கு வருவித்துக் கொள்ளுதல் வேண்டும்.)
விளக்கம் :
இரவு நேரத்தில் படித்துக் கொண்டிருக்கிறோம். திடீரென்று விளக்குகள் அணைகின்றன. எங்கும் ஒரேயிருள். பக்கத்தில் உள்ள பொருள்கூடத் தெரியவில்லை. மெழுகுவர்த்தியைத் தேடலாம் என்று எழுகிறோம். சில அடி தூரம் நடந்திருப்போம். அங்குள்ள சுவரில் தெரியாமல் முட்டிக் கொள்கிறோம். வழியில் ஒரு நாற்காலி கிடக்கிறது. அது நமக்குத் தெரியவில்லை. அது நம் காலை இடறிக் காயப்படுத்துகிறது. அதையும் தாண்டிச் செல்லும்போது கீழே கிடந்த கயிற்றின் மீது காலை வைக்கிறோம். என்னவோ, ஏதோ என்ற பதைப்புடன் தாவிக் குதிக்கிறோம். நல்ல வேளையாக அப்பொழுது விளக்குகள் எரியத் தொடங்குகின்றன. அந்த விளக்கொளியில் கீழே கிடந்தது கயிறுதான் என்பதைத் தெரிந்து கொண்டு ஆறுதல் அடைகிறோம். இந்த நிகழ்ச்சியில், சுவர் சுவராகத் தோன்றவில்லை. நாற்காலி நாற்காலியாகத் தோன்றவில்லை. கயிறு கயிறாகத் தோன்றவில்லை. எல்லாம் இருளாகத் தோன்றுகின்றன. இருள் அவற்றின் தன்மையை மறைத்து, எவையும் தானேயாய்த் தோன்றும்படி நிற்கிறது. இந்தப் புற இருளைப் போல இறை, உயிர், உலகம் ஆகியவற்றின் தன்மையைத் தெரியவொட்டாதபடி உயிரறிவை மறைத்து நிற்கின்ற அகவிருள் உண்டு. அதுவே ஆணவம் எனப்படுகிறது. அது பிறவித் துன்பத்தை மறைத்து அதை இன்பமாகக் காட்டி அதன் மீது ஆசை கொள்ளும்படி செய்யும். அழியாத வீட்டின்பத்தை மறைத்து அதைப் பெறுதற்குரிய வழியிற் செல்லவிடாது தடுக்கும். இறைவனைப் பற்றிய எண்ணம் எழாதபடி மறைத்து அகந்தையை உண்டாக்கி மயக்கும்.
இந்த ஆணவத்தின் செயற்பாட்டினைச் சூரபன்மனின் நடத்தையில் நன்கு காணலாம். போர்க்களத்தில் சூரபன்மன் முருகப் பெருமானது பேருருவக் காட்சியினைக் கண்டு நல்லுணர்வு பெற்றான். இவர்தான் யாவர்க்கும் தலைவர் என்று தெளிந்தான். இவரை வலம் வர வேண்டும்; கை குவித்து வணங்க வேண்டும்; இவருக்கு அடிமையாய் வாழவேண்டும் என்றெல்லாம் எண்ணினான். ஆனால், அவ்வாறு செய்யவில்லை. மாண் பிறந்த மானம் அவனைத் தடுத்துவிட்டது. அதுவும் ஆணவத்தின் வெளிப்பாடுதான். அகந்தை பழையபடி தலையெடுத்தது. என்னைப் போன்ற வீரன் யார் இருக்கமுடியும்? முருகப் பெருமானுக்கு நேர் நின்று போர் செய்தேன் என்ற புகழ் எனக்கு எப்போதும் இருக்கும். இந்த உடம்பு நில்லாது. இது போனால் போகட்டும் என்று சொல்லிப் போர் செய்யப் புறப்பட்டான். நன்மை தராது எனத் தெரிந்த பின்பும், முன் தொடங்கிய செயலை விடாமல் செய்து முடிக்கப் புறப்பட்ட சூரபன்மன் ஆணவத்திற்கு நல்ல எடுத்துக்காட்டு. முந்திய செய்யுளில் ஆணவம் என்றொரு பொருள் உண்டு என்று கூறி அதன் உண்மையைச் சுட்டினார் ஆசிரியர். இச்செய்யுளில் அஃது இருள் போன்றது என்று கூறி அதன் இயல்பைச் சுட்டினார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக