வெள்ளி, 3 நவம்பர், 2017

21. ஆணவ மலம் என்பது உண்டு

21. ஆணவ மலம் என்பது உண்டு
துன்றும் பவத்துயரும் இன்பும் துணைப் பொருளும்
இன்று என்பது எவ்வாறும் இல்.

பொருள் : இடையறாது தொடர்ந்து வருகின்ற பிறவித் துன்பமும், அது நீங்கிப் பெறுகின்ற பேரின்பமும், உயிர்கள் அதனைப் பெறுதற்குத் துணையாய் நிற்கும் இறைவனாகிய முதற் பொருளும் ஆகியவை இல்லாத பொருள்கள் என்று சொல்<லுவது எவ்வகையிலும் பொருந்தாது. அவ்வாறாகவும், மாந்தர் அவற்றை இல்லையெனக் கருதி வருவதற்குக் காரணம் இருத்தல் வேண்டும். அதுவே ஆணவ மலம்.
சொற்பொருள் :
துன்றும் - இடைவிடாது தொடர்ந்து வரும்
பவத் துயரும் - பிறவித் துன்பமும்
இன்பும் - அத்துன்பம் நீங்கி அடைவதாகிய முத்தியின்பமும்
துணைப் பொருளும் - அவ்விரண்டையும் உயிர்கள் பெறுவதற்குத் துணையாய் நிற்கும் இறைவனும்
இன்று என்பது - இல்லை என்று சொல்வது
எவ்வாறும் இல் - எவ்வகையிலும் பொருத்தம் இல்லாதது. (ஆயினும், உயிர்கள் அவையில்லை என்று கருதி நிற்பதற்குக் காரணம் வேண்டும். அதுவே இருளாகிய ஆணவமலம்.)

விளக்கம் :
பிறவித் துன்பம் :
துன்பத்தைத் தரும் பல பிணிகளை உடைய உடம்பிலே உயிர் கட்டுண்டிருக்கிறது. இந்த உடம்பு ஊனும் எலும்பும் தோலும் குருதியும் கொண்டு அமைக்கப் பெற்றது. ஊன் முதலியவற்றைத் தனித்தனியே கண்டால் அவை எவ்வளவு அருவருப்பைத் தருகின்றன! ஊனாகிய இறைச்சியைத் தனியே காணும்போது கண்ணை மூடிக் கொள்ளத் தோன்றுகிறது. கை, கால் எலும்புகளையும் தலையோட்டினையும் காணும்போது அச்சம் மேலிடுகிறது. குருதி சிந்திக்கிடப்பதைக் காணும்போது மயக்கமே வருகிறது. இப்படிப்பட்ட அருவருக்கத்தக்க பொருள்களைக் கொண்டு ஆக்கிய இந்த உடம்பு எவ்வளவு கவர்ச்சியை ஊட்டுகிறது! வெறும் குறுதியும் நரம்பும் என்பும் கூடிய கூட்டந்தானே இந்த உடம்பு என்று யாராவது நினைக்கிறார்களா? இவ்வுடம்பினைப் பெற்ற மாந்தர் அதனிடத்தில் தனிமோகம் கொள்கிறார்கள். அழகு படுத்திப் பார்க்கிறார்கள்; ஆசையோடு பேணுகிறார்கள். இந்த மயக்கத்தை என்னென்பது! இவ்வுடம்பு உயிருக்கு ஒதுக்கிடமேயன்றி நிலையாக வாழும் இடமன்று. எத்தனையோ பேர் நாம் கண்ணாரக் காணும்படி நடந்தார்; <உடுத்தார்; நரைத்தார்; இறந்தார். இறந்தவரைப் பற்றிச் சில காலம் சொல்லிக் கொண்டிருக்கிறோம். பிறகு அவரைப் பற்றி நினைப்பதும் இல்லை. அவரைப் பற்றிப் பேசுவதும் இல்லை. புதிதாக இறந்தவரைப் பற்றிப் பேசத் தொடங்கி விடுகிறோம்! உலகிலேயே மிகவும் வியப்பைத் தருவது எது தெரியுமா? <உலகில் அன்றாடம் மக்கள் இறந்து கொண்டேயிருக்கிறார்கள். அதைக் கண்டும், நான் நெடிது இருப்பேன் என்று ஒவ்வொரு வரும் நினைக்கிறார்கள். அதுதான் மிக வியப்பைத் தருவது.
நிலையற்ற உடற் பிறவியில் மாந்தர் படுந்துன்பங்கள் மூன்று வகைப்படும். அவை ஆதி பவுதிகம், ஆதி தைவிகம், ஆதி யான்மிகம் என்பவை. மழை, காற்று, வெப்பம், கால மாறுபாடு முதலிய பொது நிகழ்ச்சிகளால் வரும் துன்பங்கள் ஆதி பவுதிகம் எனப்படும். பிறப்பு இறப்புத் துன்பங்கள், எதிர்பாராத வகையில் தீப்பிடித்து மடிதல், வெள்ளத்திற்கு ஒரு சேரப் பலியாதல், கொடுமையான முறையில் சாலை விபத்து ஏற்படுதல் முதலியன ஆதி தைவிகம் எனப்படும். உடம்பிலும் மனத்திலும் வரும் பலவகை நோய்கள், மக்களாலும் பிற உயிர்களாலும் வரும் துன்பங்கள் முதலியன ஆதி யான்மிகம் என்னும் வகையில் அடங்கும். இவையே பிறவித் துன்பங்கள் எனப்படுகின்றன. அறிவுடையான் ஒருவன் தன் உடம்பின் தன்மையையும் உலகின் துன்ப நிலையையும் கருதுவானாயின் அவன் பிறவாமையைத்தான் விரும்புவான். ஆனால், நம்மில் எத்தனை பேர் பிறவாமையை நாடுகின்றனர். பெரும்பாலானவர் மேலும் அனுபவிக்க வேண்டும் என்றுதானே ஆசைப்படுகின்றனர். இஃது எதைக் காட்டுகிறது? எண்ணற்ற அருளாளர்கள் பிறவித் துன்பம் பற்றி எடுத்துக் கூறியும் அவர்கள் அதனை உணரவில்லை என்பதையே இது காட்டுகிறது.
திருக்குறள் முதலிய அற நூல்களையும், திருமுறைகள் முதலிய அருள்நூல்களையும் பயின்று தேர்ந்தவர் பலர் இருக்கிறார்கள். அவர்களும் பிறவித் துன்பத்தை உணராதவரோ என வினவலாம். ஆம் அவர்களும் உணராதவரேயாவர். உணர்தல் என்பது அனுபவமாக அறிதலைக் குறிக்கும். நெருப்புச் சுடும் என்பதை நாம் அனுபவமாக அறிந்துள்ளோம். அதனாலேயே அதற்கு அஞ்சுகிறோம். அதனை விட்டு விலகியே நிற்கிறோம். அதுபோலப் பிறவித் துன்பத்தை ஒருவர் உள்ளவாறு உணர்ந்திருந்தால் அவர் அதற்கு அஞ்ச வேண்டும். அதிலிருந்து விடுபடுவதற்கு வழி என்ன என்று தேட வேண்டும். நம்மில் பலர் நூல்கள் வழியாகப் பிறவித் துன்பத்தைத் தெரிந்து கொண்டிருக்கிறார்கள். வெறும் சொல்லளவில் அறிந்திருக்கிறார்களேயன்றி உள்ளவாறு அறியவில்லை. அவர்கள் உலக வாழ்க்கையிலே விள்ளமுடியாத விருப்பம் கொண்டிருப்பது ஒன்றே அவர்கள் பிறவித் துன்பத்தை உள்ளவாறு உணரவில்லை என்பதற்குப் போதிய சான்று ஆகும். பிறவித் துன்பத்தை அறியாமைக்குக் காரணம் என்ன? உயிரறிவில் உள்ள மறைப்பே அதன் அறியாமைக்குக் காரணமாகும். உயிர் என்ற ஒரு பொருளே இல்லை எனவும், பிறவி என்பதும் வினைத்துன்பம் என்பதும் ஆகிய எல்லாம் மக்களை ஏமாற்றுவதற்குப் புனைந்த கட்டுக் கதைகள் எனவும் சிலர் கூறுவர். அவர்களது அறிவில் உள்ள மறைப்பே உயிர், வினைத்துன்பம், மறுபிறப்பு ஆகிய இவற்றை உணரவிடாதபடி செய்து அவை இல்லை எனவும் சாதிக்கத் தூண்டுகிறது. அம் மறைப்பே ஆணவ மலம் எனப்படுகிறது.
பேரின்பம் :
உலகில் இன்பம் சிறிதாய் உள்ளது; நிலையற்றதாய் உள்ளது; துன்பம் கலந்ததாய் உள்ளது. ஆனால் இறையின்பமோ அழியாததாய், துன்பக் கலப்பே இல்லாததாய், மேலும் மேலும் வளர்வதாய் இருப்பது. அது பற்றியே அது பேரின்பம் எனப்படுகிறது. இளவேனிற் காலம். இனிய மாலைப் பொழுது. வானத்தில் முழு மதிநிலவைப் பொழிகிறது. அந்த இடம் பூக்கள் நிறைந்த பொய்கைக் கரை. அங்கே மெல்லிய பூங்காற்றுத் தவழ்ந்து வருகிறது. நல்ல வீணையின் இசை மிதந்து வருகிறது. அங்கிருந்து இவற்றையெல்லாம் ஒருங்கே நுகரும் இன்பம் எப்படிப்பட்டதோ அப்படிப்பட்ட சிறப்புடையது இறையின்பம் என்பர். கனியும் கரும்பும் இனிய பொருள்கள். அவற்றினும் மங்கை நல்லார் தரும் காதலின்பம் மிக இனியது. அவற்றையெல்லாம் விடச் சிறந்தது உலக முழுதையும் தன் அடிப்படுத்து ஆளும் அரச போகம். இப்படி அமைந்த பொருளும் பதவியும் ஆகிய இவற்றையெல்லாம் துச்சமெனக் கருதி ஒதுக்கும்படியாக எல்லையற்று விளைவதே இறையின்பம் என்பர். இப்படிப்பட்ட இறையின்பம் வெறுங் கற்பனை யன்று; ஏட்டளவில் உள்ளதும் அன்று. இப்பிறவிக்கு அப்பாற்பட்டதும் அன்று. அதனை அருளாளர்கள் அனுபவித்துப் பாடியிருக்கிறார்கள். அப் பேரின்பத்தை அனுபவித்த பிற்பாடு ஐம்பொறிகளினாலே வருகின்ற உலக இன்பம் யாவும் சுவையில்லாமற் போய்விடும். கரும்பும் துவர்த்துப் போய்விடும். செந்தேனும் கைத்துப் போய்விடும் என்று சொல்லியிருக்கிறார்கள்.
ஆயினும் உலக இன்பங்களை விட்டு விட நமக்கு மனம் வரவில்லை. வேறு இன்பம் இருப்பதாகச் சொல்லியும் நாம் அதை நம்பவில்லை. பேரின்பம் என்பது உள்ளது என்று நாம் உறுதியாக நம்பியிருந்தால் அதை அடைவதற்கு என்ன வழி என்று ஆராய்ந்து அவ்வழியிலே சென்றிருப்போம். அவ்வாறு நாம் செல்லவில்லை. பேரின்பத்தில் நமக்கு உண்மையான, உறுதியான நம்பிக்கை இல்லை என்பதையே இது காட்டுகிறது. அதனாலேயே உலக இன்பங்களை இறுகப் பற்றிக் கொண்டிருக்கிறோம். நமது அறிவில் உள்ள மறைப்பே பேரின்பத்தை நோக்க விடாமல் சிற்றின்பத்தையே நாடும்படி செய்கிறது. சிலர் பின்வருமாறு சொல்லுகிறார்கள். இப்பொழுதே பெற்று நுகர்தற்குரிய ஐம்புல இன்பம் இங்கிருக்க, இதை விட்டுப் போய் இதனினும் சிறந்த இன்பம் உண்டு என்று நம்பி அதைப் பெறுவதற்காகத் தம்மை வருத்திக் கொள்கிறார்களே, அவர்களைப் போன்ற மூடர் வேறு யாருண்டு? தாகமாக இருக்கும் போது தண்ணீர் கிடைக்கிறது. கிடைத்த நீரைப் பருகித் தாகத்தைத் தணித்துக் கொள்ளாமல் அதை வேண்டா என விலக்கி விட்டு வேறு எங்கோ ஓரிடத்தில் தண்ணீர் இருப்பதாகக் கேள்விப்பட்டு அதைத் தேடி அலைந்து துன்புறுகிற கதையைப் போன்றதே பேரின்பத்தை விரும்பிச் செல்வது என்று அவர்கள் சொல்லுகிறார்கள். அவர்களது அறிவிலுள்ள மறைப்பே இப்படியெல்லாம் அவர்களைப் பேச வைக்கிறது. அம் மறைப்பே ஆணவ மலம் எனப்படுகிறது.
துணைப்பொருள் :
நாம் பிறருக்கு உதவியாக இருக்கும் வரையில் உலகம் நம்மை மதிக்கிறது. இவரால் இனி நமக்கு உதவியில்லை என்று தெரிய வரும் போது உலகம் நம்மைப் புறக்கணிக்கிறது. எனவே உலகத்தார் உற்ற சார்பு ஆகார் என்பது விளங்கும். இது கருதியே இறைவனது திருவடி ஒன்றே உயிர்களுக்குப் பற்றுக்கோடு என்றும், பிறவித் துயரத்தைப் போக்கும் மருந்து என்றும் பெரியோர்கள் கூறியுள்ளார்கள். தாள் அலால் துணையும் இல்லை என்பது அப்பர் பெருமான் அருளிய வாக்கு. தாய்தான் மகனிடம் கடைசி வரை அன்பாக இருப்பாள். துணையாக இருப்பாள் என்பார்கள். ஆனால், அவளும் இப்பிறவியில் மட்டுந்தானே இப்படியிருக்க முடியும். இப்பொழுது தாயாக இருப்பவள் மறுபிறவியில் யார் வயிற்றிலோ பிறந்து அவளைத் தாய் தாய் என்று சொல்லுவாள். அப்பொழுது இந்த மகனை நினைக்கவா போகிறாள்.
எனக்குத் தாயாகியாள் என்னைஈங்கு இட்டுத்
தனக்குத் தாய் நாடியே சென்றாள்

என்று நாலடி கூறுகிறது. இப்படி உறவு நீங்காமல் என்றும் எல்லாவுயிர்களுக்கும் எவ்விடத்தும் தாய்போல் இருந்து அருள் புரிகின்றவன் இறைவன் ஒருவனே. தோன்றாத் துணையாய் இருந்தனன் தன்னடியோங்களுக்கே எனவும், புந்தி வட்டத்திடைப்புக்கு நின்றானையும் பொய்யென்பனோ எனவும் அப்பர் அருளிய மெய்ம் மொழிகள் கடவுள் உண்மையையும், உயிர்களுக்கு அவன் துணைப் பொருளாய் நிற்றலையும் தெளிவாகப் புலப்படுத்துகின்றன.
ஆயினும் சிலர் கடவுள் உண்மையை மறுத்துப் பின்வருமாறு கூறுவர். வண்ண மயில் கண்ணைக் கவரும் அழகினை உடையதாய் விளங்குகிறது. அதற்கு யாரும் அந்த அழகைத் தரவில்லை. சின்னக் குயில் இனிமையாகக் கூவுகிறது. அதற்கு யாரும் அந்தக் குரலினிமையைத் தரவில்லை. அவ்வாறே இவ்வுலகின் அமைப்பிற்கும் யாரும் காரணம் இல்லை. ஆனால், சமயவாதிகள் கடவுளே அனைத்திற்கும் காரணம் என்று கூறி உலகத்தாரை மயக்குகின்றனர். அவர்கள் கூற்று நகைப்பிற்குரியது. மலடிக்கு மகன் ஒருவன் இருந்தானாம்! அவன் முயற் கொம்பின் மீது ஏறினானாம்! வானத்தில் பூத்தமலரைப் பறித்தானாம்! இப்படிக் கூறினால் நகைப்புத்தானே உண்டாகும். அப்படியிருக்கிறது அவர்கள் பேச்சு. ஆதலால் இறைவன் ஒருவன் உண்டு என்பது பொய். இந்த முறையில் கடவுள் மறுப்பாளர் கூறிப் போவார். அவர்களது அறிவில் உள்ள மறைப்பே இப்படிப் பேச வைக்கிறது எனலாம். அம் மறைப்பே ஆணவ மலம் எனப்படுகிறது.
மூன்று வழிகள் :
ஒரு பொருளைப் பற்றித் தெரிந்து கொள்வதற்கு மூன்று வழி முறைகள் உள்ளன. சுருதி, யுக்தி, அனுபவம் என்பன அவை. சுருதி என்பது உயர்ந்தோர் சொன்ன நூல்கள். யுக்தி என்பது நம் பகுத்தறிவினால் ஆராய்ந்து அறிவது. அனுபவம் என்பது நம் வாழ்க்கையில் நாமே தெரிந்து கொள்வது. பவத்துயர் முதலியன உண்டு என்பதை இம் மூன்று வழிகளில் நாம் உணர்ந்து கொள்ள இயலும். அவ்வாறாகவும், மாந்தர் அவற்றை அறியாதவராய் அவை இல்லை எனவும் சாதிப்பர். ஆதலால் அதற்குக் காரணமாய் அவர்களின் அறிவை மறைத்திருக்கின்ற பொருள் ஒன்று உண்டு என்பது துணியப்படும் என்று இச் செய்யுளில் கூறுகிறார் ஆசிரியர்.

கருத்துகள் இல்லை:

திருமூலர் திருமந்திரம் - 275 - விளக்கம்

பாடல் விளக்கம்: மெய்தான் அறியும் செழுங்கடல் வட்டத்துப் பொய்தான் மிகவும் புலம்பும் மனிதர்கள் மெய்தான் உரைக்கில்விண் ணோர்தொழச் செய்குவன் ம...