வெள்ளி, 3 நவம்பர், 2017

20. இவ்வுயிர் திருவருளை உணர்வது எந்நாளோ?

20. இவ்வுயிர் திருவருளை உணர்வது எந்நாளோ?
அன்று அளவும் ஆற்றும் உயிர் அந்தோ அருள்தெரிவது
என்று அளவொன் றில்லா இடர்.

பொருள் : அநாதியாகிய அன்று தொட்டு இன்று வரையிலும் அளவற்ற துன்பங்களைத் தாங்கி நுகர்ந்து வருவனவாகிய உயிர்கள் மிகவும் இரங்கத் தக்கவை. அவை இறைவனது ஞானமாகிய திருவருள் ஒளியைப் பெற்றுத் துன்பம் நீங்கப் பெறுவது எந்நாளோ?
சொற்பொருள் :
அன்று - ஆணவ மலமாகிய இருளில் அழுந்திய அன்று தொட்டே
அளவும் - (அது காரணமாக வந்து) பொருந்துகின்ற
அளவு ஒன்று இல்லாஇடர் - அளவற்ற பெருந்துன்பத்தை
ஆற்றும் உயிர் - தாங்கி நுகர்வனவாகிய உயிர்கள்
அந்தோ - ஐயோ!
அருள் தெரிவது - இறைவனது ஞானமாகிய திருவருள் ஒளியைப் பெற்று இடர் நீங்குவது
என்று - எந்நாளோ?

விளக்கம் :
அளவொன்றில்லா இடர் :

அருளுள்ளம் கொண்ட நம் ஆசிரியர் உயிர்கள் படுந்துன்பம் கண்டு ஆற்றாமல் இவ்வாறு இரங்கிக் கூறுகின்றார். உயிர்களுக்கு உண்டாகும் கேட்டிற்கெல்லாம் ஆணவமாகிய இருளே மூலகாரணமாகும். அது அநாதி நிலையில் உயிரினது அறிவை முழுதுமாக மறைத்து நிற்கும். அதனால், உயிர் அறிவென்பது சிறிதும் இன்றிச் சடப்பொருள் போலவே கிடக்கும்; தான் ஒரு பொருள் உண்டு என்பதும் தோன்றாமல் உயிர் ஆணவத்தில் அழுந்திக் கிடக்கும். இதனினும் கொடிதான துன்ப நிலை வேறு என்ன இருக்கிறது? இத்துன்ப நிலை கண்டு இரங்கிய இறைவன் அவ்விருள் நிலையிலிருந்து உயிரை எடுத்து அதன் அறிவை விளங்கச் செய்வதற்கு உடம்பு முதலியவற்றைக் கொடுத்துப் பிறவியிற் செ<லுத்துகிறான். பிறப்பு நிலையில் ஆணவத்தின் ஆற்றல் சிறிது அடங்கப் பெறுகிறது. உயிரறிவு சிறிது விளங்குகிறது. இந்நிலையில் ஆணவம் வேறொரு செயலைச் செய்கிறது; ஓரளவு விளங்கிய உயிரறிவை அது திரிவுபடுத்துகிறது; நிலையாத பொருளை நிலைத்த பொருளாகக் கருதும்படி செய்கிறது. அற்பமான பொருளை உயர்ந்த பொருளாக மதிக்கும்படி செய்கிறது. இவ்வாறு ஆணவம் உயிருக்கு விபரீத அறிவை உண்டாக்குகிறது. உயிருணர்வை மயக்கி உலகியல் பொருள்கள் மீது அளவு கடந்த ஆசையைப் பெருக்கி அவற்றை என்னுடையவை என்று, விடாது பற்றும் படியாகத் தூண்டுகிறது.
ஒரு பொருளை என்னுடையது என்று நினைக்கும் போதுதான் துன்பம் உண்டாகிறது. எடுத்துக்காட்டுக்கு ஒரு நிகழ்ச்சியைக் கூறலாம். வீதியில் பிள்ளைகள் விளையாடுகிறார்கள். ஒருவன் அடித்த பந்து பாய்ந்து வந்து நமது வீட்டுக் கண்ணாடி உடைந்து போகிறது. அப்பொழுது நமக்கு எவ்வளவு வருத்தம் உண்டாகிறது! வீடு என்னுடையது என்ற பற்றே இத்துன்பத்தை விளைவிக்கிறது. இப்படி நடப்பதற்குப் பதிலாக, எதிர்த்த வீட்டுக் கதவின் கண்ணாடி உடைந்தால் நமக்குத் துன்பம் உண்டாவதில்லை. நமது வீட்டையே விற்று விட்டுச் செல்வதாக வைத்துக்கொள்வோம். ஒரு சமயம் அந்த வழியாகச் செல்ல நேர்கிறது. முன்பு நடந்தது போலவே ஒருவன் அடித்த பந்து பட்டு நமது பழைய வீட்டின் கண்ணாடிக் கதவு உடைகிறது. ஆனால், அதைக் கண்டு நமக்குத் துன்பம் ஏற்படுவதில்லை. அதற்குக் காரணம் அந்த வீடு என்னுடையது என்ற பற்று இப்பொழுது இல்லை. உலகப் பொருள்களின் தன்மை என்ன என்பதை நாம் தெரிந்து கொண்டால் துன்பமில்லை. நாம் ஒரு நண்பரது வீட்டிற்குப் போகிறோம். அவர் அவ்வளவு வசதி உடையவரல்லர். வீடு தேடி வருபவர்கள் அமர்வதற்கு அங்கே நல்ல இருக்கைகள் இல்லை. ஒரு மூலையில் உடைந்த நாற்காலி ஒன்று கிடக்கிறது. அதிலேதான் நாம் உட்கார வேண்டும். அதற்கு ஒரு கால் இல்லை. மற்றக் கால்களும் ஆடிக் கொண்டிருக்கின்றன. அந்த நாற்காலியின் தன்மையை நாம் நன்கு தெரிந்துகொண்டபடியால் மிகுந்த கவனத்தோடு அதிலே அமர்வோம்; கீழே விழுந்து துன்பப்பட மாட்டோம். அதுபோல, உலகில் நாம் காணும் எல்லாப் பொருள்களின் தன்மையையும் தெரிந்துகொள்ள வேண்டும். அவை யாவும் நிலையற்றவை என்பதைத் தெரிந்து கொண்டால் அவற்றால் வருத்தப்படமாட்டோம்.
உலகின் உண்மை நிலையைத் தெரியவொட்டாதபடி ஆணவம் நமது அறிவை மறைக்கிறது. வேறுபடுத்துகிறது. அதனாலேயே நமக்கு இத்தனை பற்றுக்கள்! இத்தனை துன்பங்கள்! பற்றினால் விளைவதே வினையாகும். நமக்குப் பிடித்தமான பொருள்களை, அவற்றின் மீது கொண்ட பற்றினால், எப்பாடு பட்டாகிலும் அடைவதற்கு முயல்கிறோம். நமக்குப் பிடித்தவை நம்மை விட்டுச் செல்லும் என்று தெரிந்தால் எப்பாடு பட்டாகிலும் அவை நம்மை விட்டு நீங்காமல் நிறுத்திக் கொள்ள முயல்கிறோம். அம்முயற்சிகள் யாவும் நல்லனவும் தீயனவுமாக அமைகின்றன. அவையே நல்வினை தீவினைகள் ஆகின்றன. அவ்வினைகள் பிறப்பிற்குக் காரணமாகின்றன. உயிர்களுக்குப் பிறத்தலும் இறத்தலும் பெருந்துன்பங்கள். மற்றை எல்லாத் துன்பங்களும் அவற்றுக்கு இடையே விளைவன. பிறப்புப் பெருந்துன்பமாதலைக் கருதியே திருவள்ளுவர் பிறவிப் பெருங்கடல் என்றார். அதனையொட்டி ஆசிரியர் உமாபதி சிவமும் சிவப்பிரகாச நூலில் இடர்க் கடல் (செ. 18) என்று குறிப்பிட்டார். அதனையே விரித்து அளவொன்றில்லா இடர் என இங்கே கூறியுள்ளார் எனலாம்.
அருள் தெரிவது என்று? :
உயிரை அறியாமையுட் படுத்தித் துன்பத்தை விளைவித்து வந்த ஆணவமலத்தின் சத்தி படிப்படியே மெலிவடைந்து பின் நீங்கும் நிலையை ஒரு காலத்தில் எய்தும். அந்நிலை மல பரிபாகம் எனப்படும். மல பரிபாகம் வருமானால் அவ்வுயிர் பற்றிலிருந்து விடுபடும். திருவருளையே பற்றாகப் பற்றும்; திருவருட் சார்பினால் இருள் மலச் சார்பை நீக்கிக் கொள்ளும்; இருளால் வந்த துன்பம் நீங்கப் பெற்று அருளால் வரும் பேரின்பத்தை நுகரும். இதனை,
புணரும் இருள் மலபாகம் பொருந்தியக்கால் 
அருளால்
உள் நிலவும் ஒளியதனால் இருளகற்றிப் பாதம்
உற்றிடும் நற் பசு வருக்கம் (செ.19)

என்னும் சிவப்பிரகாசச் செய்யுளால் அறியலாம். உயிரவை நிலையில் இறுதியாக நிற்கும் இக்குறளில் உயிர்கள் அருளைத் தெரிந்து இடர் நீங்குவது என்று? என வினவுகிறார். சிவப்பிரகாசத்தில் உயிரிலக்கணம் கூறும் செய்யுளில் அதனை அமைத்திருக்கிறார். மலபரிபாகம் வரும் காலத்தில் உயிர் குருவருளால் தன்னுள்ளே விளங்கும் திருவருள் ஒளியைப் பெற்று மல இருளைப் போக்கித் துன்பத்திலிருந்து விடுபடும் என்பதே அவ்விடையாகும்.
மூன்றாம் அதிகாரம்
இருள் மல நிலை
அனைத்தையும் இயக்குகின்ற முதற்பொருளாகிய பதியின் இயல்பை முதல் அதிகாரத்தில் கூறினார். அம் முதற்பொருளைச் சார்ந்து வாழ்வதற்குரிய உயிர்களின் இயல்பை இரண்டாம் அதிகாரத்தில் கூறினார். இனி, அவ்வுயிர்கள் முதற் பொருளாகிய இறைவனைச் சாரவொட்டாமல் தடுத்து அறியாமையை விளைத்து நிற்கும் இருளாகிய ஆணவமலத்தின் இயல்பை இம் மூன்றாம் அதிகாரத்தில் கூறலுறுகிறார். இவ்வதிகாரத்தின் பொருளைப் பின்வருமாறு சுருக்கித் தரலாம். பிறப்பால் வருவது துன்பம் என்பதை அனுபவமாகக் கண்டு பெரியோர்கள் எடுத்துக் கூறியுள்ளனர். பிறவித் தளையிலிருந்து நீங்கி எய்தக் கூடிய பேரின்ப நிலையைப் பற்றியும் அவர்கள் கூறியுள்ளனர். திருமுறை யாசிரியர்களும் பிறரும் இவ்வாறு அருளியிருப்பதைப் பல கால் படித்திருந்தும் மக்கள் இவ்வுண்மைகளை உள்ளவாறு உணரவில்லை. பிறவியிலிருந்தும் விடுபடுதல் வேண்டும். பேரின்ப வாழ்வைப் பெறுதல் வேண்டும் என்பதில் உண்மையான நாட்டம் கொள்ளவில்லை. அவ்வுண்மைகளைச் சிந்திக்க வொட்டாதபடி அவர்களது அறிவைத் தடுத்து நிற்கின்ற தடை ஒன்று உள்ளது. அதுவே ஆணவ மலம் என்ற பெயரால் குறிக்கப்படுகிறது. ஆணவ மலம் அறிவை மறைப்பது. அறியாமையை உண்டாக்குவது. இவ்வியல்பைத் தெரித்துக் காட்டும் வகையில் ஆணவ மலத்திற்கு இருள் என்ற பெயரையே இட்டு வழங்குகிறார் ஆசிரியர் உமாபதி சிவம்.
இரவு நேரத்தில் வந்து கவியும் புற இருளுக்கும் இந்த அக இருளுக்கும் உள்ள ஒற்றுமை வேற்றுமைகளைப் பின்வருமாறு சுட்டலாம். மறைத்தல் வலிமை என்பது இந்த இரண்டு இருளுக்கும் பொதுவாய் உரியது. புறவிருள் சடமாகிய கண்ணை மறைக்கும். அகவிருள் சித்தாகிய ஆன்மாவை மறைக்கும். புறவிருள் கண்ணை மறைக்கிறது என்பதை ஆன்மா உணர முடியும். ஆனால், அகவிருள் தன்னை மறைக்கிறது என்பதை ஆன்மா சிறிதும் அறிய முடிவதில்லை. வேறொரு வகையிற் சொன்னால், புறவிருள் தன்னைக் காட்டி நிற்கும். அகவிருள் தன்னைச் சிறிதும் காட்டிக் கொள்ளாது. இஃது இந்த இரண்டு இருளுக்கும் உள்ள வேற்றுமை. அகவிருளாகிய ஆணவம் உயிர்களை எப்போது வந்து பற்றியது? எப்படிப் பற்றியது? என்றெல்லாம் கேட்கலாம். ஆணவம் ஏதோ ஒரு காலத்திலே வந்து உயிர்களைப் பற்றியிருந்தால் அல்லவா இந்தக் கேள்விகளுக்கு விடை சொல்ல முடியும்! ஆணவம் உயிர்களை இடையிலே வந்து பற்றவில்லை. உயிர் உள்ள அன்றே அதனிடத்தில் ஆணவமும் உடனாக உள்ளது என்றே சைவ சித்தாந்தம் கூறுகிறது. அது பற்றியே ஆணவத்திற்குச் சகச மலம் என்ற பெயர் ஏற்பட்டது. சகசம் என்றால் உடன் தோன்றியது என்பது பொருள்.
இவ்வாறு உயிர்களிடத்தில் தொன்றுதொட்டே உள்ள ஆணவ இருள் உயிர்க்கு உயிராக உள்ள திருவருள் ஒளியை அவ்வுயிர்கள் உணராதபடி தடை செய்து வருகிறது. அவ்விருள் உயிரைப்பற்றி நின்று மறைக்குமே யன்றி உயிர்க்குயிராக விளங்கும் திருவருள் ஒளியைப் பற்ற மாட்டாது என்பதை உணர்தல் வேண்டும். உயிர்கள் எண்ணில. ஆனால் ஆணவ இருள் ஒன்றுதான். ஒன்றாகிய அவ்விருள் பலவாகிய உயிர்கள் அனைத்தையும் பொருந்தி நின்று மயக்கும் ஆற்றல் வாய்ந்தது. உயிரைக் கணவன் என்றும், அதனைக் கூடி நின்று மயக்கும் ஆணவ இருளை இல்லாள் என்றும் கூறலாம். இந்த இல்லாளுக்கு ஒழுக்கம் என்பது துளியும் இல்லை! இவள் பிற ஆன்மாக்கள் ஆகிய ஆடவர் பலரோடும் கூடியிருப்பவள் ஆயிற்றே. ஆனாலும், அவள் தன் கணவனாகிய ஆன்மாவுக்குத் தன் உண்மையியல்பைக் காட்டாமல் மறைத்துக் கற்புடையவள் போலத் தன்னைக் காட்டிக் கொள்கிறாள்! இந்த உருவகத்தின் கருத்து, ஆணவ இருள் உயிரை மறைத்து அறியாமையை உண்டாக்கி அந்த அறியாமையையே அறிவு போலக் காட்டி நின்று மயக்கும் என்பதாகும்.
உயிர்கள் படுந் துன்பங்களுக்கெல்லாம் மூல காரணம் இந்த ஆணவ மலமேயாகும். இஃது உயிரோடு இயற்கையாக ஒட்டியிருப்பதனால் இதனை உயிரின் குணம் என்று கூறலாமோ? எனில், அங்ஙனம் கூறுதல் கூடாது. ஆணவம் உயிரோடு இயற்கையாக இருப்பினும் அதனைக் குற்றம் என்றே கொள்ளுதல் வேண்டும். செம்பில் உள்ள களிம்பு போலவும், நெல்லில் உள்ள உமி போலவும் ஆணவம் உயிருக்கு இயற்கைக் குற்றம் ஆகும். இத்தகைய ஆணவம் இப்பொழுது உயிர்களிடத்தில் மிகுந்து நின்று உயிர்களை மயக்கி, உயர்ந்ததாகிய திருவருளை நோக்க விடாமல் தடுத்து இழிந்தனவாகிய உலக போகங்களையே நாடும்படி செய்கிறது. ஆயினும் இந்த நிலையே என்றும் நீடிக்காது. உயிர் பக்குவம் பெறுகின்ற காலம் வரும். அப்பொழுது திருவருள் ஒளியை உயிர் உணர்ந்து பற்றும். அந்நிலையில் ஆணவ இருள்வலி மடங்கி அகலும். உயிர்கள் திருவருளை உணரும் பக்குவ காலம் வரும் வரையில், அவை ஆணவ இருளிலிருந்து சிறிது விடுபட்டு ஓரளவு அறிவு விளக்கம் பெறுவதற்காக உடம்பையும், உடம்பிலுள்ள அறிகருவிகளையும், இந்த உலகையும் இறைவன் மாயையிலிருந்து படைத்துக் கொடுத்திருக்கிறான். இருளில் இடர்ப்படுபவனுக்குச் சிறிய விளக்கொளி போல மாயாகாரியமாகிய உடம்பு முதலியவை உயிர்களுக்குச் சிறிது அறிவைத் தருகின்றன. மாயை செய்யும் இவ்வுதவியைக் கருதியே விடிவாம் அளவும் விளக்கு அனைய மாயை என்றார் ஆசிரியர் உமாபதி சிவம். இனி இக் கருத்துக்களை விரிவாகக் காண்போம்.

கருத்துகள் இல்லை:

திருமூலர் திருமந்திரம் - 275 - விளக்கம்

பாடல் விளக்கம்: மெய்தான் அறியும் செழுங்கடல் வட்டத்துப் பொய்தான் மிகவும் புலம்பும் மனிதர்கள் மெய்தான் உரைக்கில்விண் ணோர்தொழச் செய்குவன் ம...