வெள்ளி, 3 நவம்பர், 2017

19. ஆன்ம அறிவுக்குக் கூகையின் கண் உவமை

19. ஆன்ம அறிவுக்குக் கூகையின் கண் உவமை
ஊமன்கண் போல ஒளியும் மிகஇருளே
யாம்மன்கண் காணாதவை.

பொருள் : கூகையின் கண் பகலில் சூரியவொளியில் கலந்து நின்றாலும் அவ்வொளியை அறியாது இருள் வயப்பட்டிருக்கும். அதுபோல, அநாதியில் உயிர்கள் பேரறிவாகிய திருவருள் ஒளியோடு கூடியிருந்தும் அவ்வொளியை அறியாதனவாய் ஆணவ இருளின் வயப்பட்டு இருளாய் நிற்கும்.
சொற்பொருள் :
மன் - இறைவனது
கண் - பேரறிவாகிய திருவருளை
காணாதவை - (அதனோடு அநாதியே கூடியிருந்தும்) அறியாது நிற்கும் உயிர்கள்
ஊமன் கண்போல - கூகையினது கண் சூரியனது ஒளியிற் கலந்து நின்றாலும் அதனை அறியாது நிற்பது போல
ஒளியும் - ஒளியிடத்தும்
இருளே மிக ஆம் - அறியாமையிருளில் மூழ்கி இருளாயிருக்கும் தன்மையையே மிகப் பெற்றிருக்கும்.

விளக்கம் :
திருவருளை உணராமை :

உயிர்கள் முதலிலேயே திருவருளோடுதான் கூடியுள்ளன. ஆயினும் அத்திருவருளை உணர மாட்டாமல் உள்ளன. அதற்கு என்ன காரணம்? இறைவனை நோக்க உயிர் பருப்பொருளாகும். உயிரினது அறிவு பரு அறிவாய் நிற்றலின் நுண்ணிய அறிவாகிய திருவருளை அது முதலிலேயே பற்றமாட்டாததாயிற்று. உயிர் யாதொரு பொருளையும் யாரொருவர் உணர்த்தினாலும் அதனைச் சிறிது சிறிதாக அறியுமே யன்றி ஒருங்கே முழுதுமாக அறிய மாட்டாது. படிமுறையில் பல காலும் மெல்ல மெல்ல அறிந்தே முடிவில் நுண் பொருளை அறிய வல்லதாகும். இத்தன்மையுடையதாகிய உயிரறிவு நுண்ணியதாகிய திருவருளை முதலிலேயே பற்ற மாட்டாதிருப்பதிலே என்ன வியப்பு? இப்படிப்பட்ட சிற்றறிவுடைய உயிரை ஆணவமலம் மறைத்துக் கொள்ளுதல் அன்றே ஏற்பட்டது. எனவே உயிர்களுக்கு இயல்பிலே உள்ள அறிவுக் குறைபாடும் அதனால் வந்த மல மறைப்புமே அவை திருவருளை உணராமைக்குக் காரணம் எனலாம். அறிவுக் குறைபாடே பக்குவமின்மை எனப்படும். இயல்பிலேயே பக்குவமின்றி நிற்பனவாகிய உயிர்கள் அது காரணமாக அநாதியே சத்தோடு (திருவருளோடு) கூடி நின்றும் சத்தில் அழுந்திச் சத்தாய் நில்லாது, அசத்தாகிய ஆணவத்தைச் சார்ந்து அதன் வண்ணமாய் அசத்தாய் நின்றன என அறியலாம்.
ஊமன் கண் :
அநாதியே திருவருள் உடனிருந்தும் அதனைச் சார்தலின்றி இருளில் அழுந்திய உயிரின் அறிவிற்குக் கூகையின் கண்ணை உவமை கூறினார் ஆசிரியர். ஊமன் என்பது கூகையைக் குறிக்கும் ஓர் அரிய சொல். அரை யிரவில் ஊமன் பாராட்ட உறங்கிற்றே என்னும் முத்தொள்ளாயிரச் செய்யுள் அடியில் (செ:66) இச்சொல்லாட்சியைக் காணலாம்.
மன் கண்:
கண்-அறிவு. மன் என்பதற்குத் தலைவன் என்பது பொருள். வானாடர் காணாத மன் என இச்சொல்லை இப்பொருளில் ஆசிரியர் ஆண்டுள்ளார். தலைவனாகிய இறைவனது அறிவு மன் கண் எனப்பட்டது. இனி, மன் கண் என்பதற்கு நிலைபெற்ற பேரறிவு என்றும் பொருள் கூறலாம். ஊமன் கண்ணிற்குப் போல, மன் கண் காணாத வற்றுக்கு ஒளியும் மிக இருளே யாம் என அமைத்துக் கொள்ள வேண்டும்.
இச் செய்யுளை இங்கு வைத்த முறைமை :
உயிர்கள் திருவருளை உணரா என்ற இக்கருத்தை இனிவரும் அதிகாரமாகிய அருளது நிலையில் பல செய்யுட்களில் கூறியுள்ளார். உணர்வை உணரா உயிர், புரையை உணரா புவி என அங்கே ஆசிரியர் கூறியுள்ளமை காணலாம். அக்கருத்தே பட, மன் கண் காணாதவை எனவும், ஒளியும் மிக இருளே யாம் எனவும் கூறுவதாகிய இச் செய்யுளையும் அவ்வதிகாரத்தில் வைப்பது தானே முறை? அவ்வாறு செய்யாமல் இச்செய்யுளை இவ்வதிகாரத்தில் வைத்தது என்ன காரணம் பற்றி? என்னும் வினா சிந்திப்போர் உள்ளத்தில் எழாமற் போகாது. உயிர்கள் உடம்போடு கூடாமல், பிறவிக்கு வராமல், இருந்த அம் முதல் நிலை அநாதி நிலை எனப்படும். தத்தமக்கு ஏற்ற உடம்பினைப் பெற்றுப் பிறவி யெடுத்த நிலை சகல நிலை எனப்படும். அநாதி நிலையில் ஆணவமாகிய இருள் உயிர்களை மறைத்து முழு அறியாமையை உண்டு பண்ணும். சகல நிலையில் அவ்விருள் உயிர்களுக்கு விபரீத உணர்வாகிய மயக்க உணர்வை உண்டு பண்ணும்.
இவ்விரு நிலைகளுள் சகல நிலை பற்றி வரும் மயக்க வுணர்வையே அருளது நிலை என்ற அதிகாரத்தில் எடுத்துக் காட்டுகிறார் ஆசிரியர். மயக்க உணர்வால் திருவருளை மறந்த சிறுமையையே உணர்வை உணரா உயிர், புரையை உணரா புவி, என அங்கே விளக்கிச் செல்லுகிறார். அநாதியில் உயிர்கள் ஆணவ இருளில் அழுந்தி அறியாமையாய் நின்று திருவருள் ஒளியை உணராத சிறுமையையே ஊமன் கண்ணை உவமை காட்டி இச்செய்யுளில் விளக்க முற்படுகிறார் ஆசிரியர். கூகையினது கண் இயல்பான அதன் அமைப்பினால் பகலில் சூரியவொளியைக் காண மாட்டாமல் இருளில் நிற்கிறது. அதுபோல உயிர்களும் அவற்றினது அறிவு நிலையில் இயல்பாக உள்ள குறைபாட்டினால் நுண்ணிய திருவருள் ஒளியைப் பற்றமாட்டாமல் இருளில் அழுந்தி நிற்பன ஆகின்றன. இதனால், உயிர்களின் அறிவு நிலை பற்றியும், அது காரணமாக அநாதியே இருளில் அழுந்தித் திருவருளை உணரமாட்டாது நிற்கும் சிறுமை பற்றியும் கூறுவதாகிய இச் செய்யுளை உயிர்களின் இயல்பு பற்றியதாகிய இவ்வதிகாரத்தில் வைத்தது பொருத்தமே என்பது விளங்கும்.
எனவே, பொதுவாக நோக்கும்போது இச்செய்யுளின் கருத்தும், அருளது நிலையில் உள்ள செய்யுட்களின் கருத்தும் ஒன்றுபோலத் தோன்றினாலும் இச்செய்யுளின் உட்கிடை வேறு; அவற்றின் உட்கிடை வேறு. அருளதுநிலை என்ற அதிகாரத்தில், சகல நிலையில் உயிர்கள் மயக்கவுணர்வில் அழுந்தியதால் திருவருளை உணராமை கூறப்பட்டது. இச் செய்யுளில், அநாதி நிலையில் உயிர்கள் அறியாமையில் அழுந்தியதால் திருவருளை உணராமை கூறப்பட்டது. இவ்வாறு வேறுபடுத்தி உணர்ந்து கொள்ள வேண்டும். இதுகாறும் கூறியவற்றால், ஊமன் கண் என்னும் இச் செய்யுளை அருளது நிலை என்ற அதிகாரத்தில் வைக்காமல் இங்கு வைத்த ஆசிரியரின் கருத்தும், முறைமையும் இனிது விளங்குவதாகும்.

கருத்துகள் இல்லை:

திருமூலர் திருமந்திரம் - 275 - விளக்கம்

பாடல் விளக்கம்: மெய்தான் அறியும் செழுங்கடல் வட்டத்துப் பொய்தான் மிகவும் புலம்பும் மனிதர்கள் மெய்தான் உரைக்கில்விண் ணோர்தொழச் செய்குவன் ம...