1. எங்கும் நிறைந்து நின்று இயக்குபவன்
அகர உயிர்போல் அறிவாகி எங்கும்
நிகரில் இறை நிற்கும் நிறைந்து.
பொருள் : பதிப்பொருள் தனக்கு ஒப்பாக வேறு ஒரு பொருளும் இல்லாதது. அது பேரறிவாய் எங்கும் நீக்கமின்றி நிறைந்து நிற்கும். அகரமாகிய உயிரெழுத்து மற்றைய எல்லா எழுத்துக்களிலும் இயைந்து நின்று அவற்றை இயக்குவது போலப் பதிப்பொருள் பிற எல்லாப் பொருளிலும் வேற்றுமையின்றிக் கலந்து நின்று அவற்றை இயக்கும். எனவே பதியாகிய இறையே உலகிற்கு முதல் என்பது விளங்கும்.
சொற்பொருள் :
அகர உயிர்போல் - அகரமாகிய உயிரெழுத்து பிற எல்லா எழுத்துக்களிலும் இயைந்து நின்று அவற்றை இயக்குவது போல
நிகர்இல் இறை - தன்னோடு ஒப்பதாக ஒரு பொருளும் இல்லாத பதியாகிய இறை.
அறிவாகி - பேரறிவு உடையதாய்
எங்கும் - பிற எல்லாப் பொருள்களிடத்தும்
நிறைந்து நிற்கும் - வேற்றுமையின்றிக் கலந்து நின்று அவற்றை இயக்கும்.
விளக்கம்
நிகரில் இறை : பதியாகிய இறைவன் எல்லா முதன்மையும் உடையவன். எல்லா முதன்மையும் உடையவனாக ஒருவன் தான் இருக்க முடியும். எனவே இறைவன் ஒருவனே என்பதும், அவன் தன் நிகர் இல்லாதவன் என்பதும் விளங்கும். இறைவன் ஒருவனே யாயின் நூல்களில் பல கடவுளர் பேசப்படுகின்றனரே என ஐயுறலாம். அக் கடவுளர் பலரும் இறைவனது அருளால் அந்நிலையை அடைந்தவர்கள். அவர்களெல்லாம் உயிர்களாகிய பசுக்களே யாவர். அவர்களுக்கும் பிறப்புண்டு; ஆயுட்காலம் வரையில் வாழ்வுண்டு; பின் இறப்பு உண்டு. அவர்களுக்கு அளவுபட்ட ஒவ்வொரு செயலில் மட்டும் முதன்மையுண்டு. அம் முதன்மைகள் அவர்கள் செய்த புண்ணியத்திற்கு ஏற்ப இறைவன் கொடுத்தனவாகும். அவர்களை அதிகார மூர்த்திகள் என்பர். அரசனது செயல்களை அவனது ஆணையைப் பெற்று நடத்தும் அதிகாரிகளைப் போன்றவர்கள் என அவர்களைக் குறிப்பிடலாம். அவர்கள் ஒவ்வொன்றில் முதன்மையுடையவராய் இருக்க, சிவபெருமானாகிய பதியே எல்லா முதன்மையும் உடையவனாயிருத்தலால் அவனே முழுமுதற் கடவுள் என்பதும், நிகரில் இறை என்பதும் ஐயமற விளங்கும்.
இறைவனுக்கு உவமை :
தனக்கு உவமையில்லாத இறைவனுக்கு உவமை கூறுகிறார் ஆசிரியர்; அகர உயிர்போல் எங்கும் நிறைந்து நிற்கும் என்கிறார். வள்ளுவரது முதற் குறளில் இவ்வுவமை இடம் பெற்றுள்ளது என்பதை அறிவோம். ஞான சம்பந்தர் முதலிய திருமுறையாசிரியர்களின் வாக்கில் இடம்பெற்ற பெருமையும் இவ்வுவமைக்கு உண்டு. இவ்வுவமை இறைவனுக்கு எவ்வகையில் பொருந்துகிறது என்பதை நோக்குவோம். ஒலிக்கும் முயற்சிகளுள் முதல் முயற்சி வாயைத் திறத்தல். அந்த முதல் முயற்சியிலேயே வாயைத் திறந்த அளவிலேயே - உண்டாவது அ என்னும் ஒலி. மற்றைய ஒலிகள் வாயைத் திறப்பதோடு வேறு பிற முயற்சிகளும் செய்யப் பிறப்பனவாகும். வாயைத் திறத்தலாகிய அம் முதல் முயற்சியின்றிப் பிற முயற்சிகள் நிகழா என்பது தெளிவு. அம் முதல் முயற்சியோடு கூடியே பிற முயற்சிகள் நிகழ்கின்றன. எனவே முதல் முயற்சியில் பிறப்பதாகிய அகர ஒலியோடு கூடியே பிற முயற்சியில் பிறப்பனவாகிய மற்றைய ஒலிகள் எழுகின்றன என்பதும் அகரவொலி யின்றிப் பிற எழுத்தொலிகள் இல்லை என்பதும் புலனாகும். எனவே, எழுத்துக்களுக்கெல்லாம் அடிநிலையாய் இருப்பது அகர வுயிரே யாகும். அகர வுயிரே பிற எல்லா எழுத்துக்களிலும் கலந்து நின்று அவற்றின் இயக்கத்திற்கு அடி நிலையாய் நிற்கிறது. அகர வுயிர் பிற எழுத்துக்களுக்கு முதலாதல் போல இறைவன் உலகிற்கு முதலாய் நிற்கிறான்.
எழுத்துக்கள் உயிரெழுத்தும் மெய்யெழுத்தும் என இருவகைப்படும். அவ்விருவகை எழுத்துக்களிலும் அகரவுயிர் கலந்திருக்கிறது. உலகம் சித்தும், சடமும் என இரு வகைப்படும். சித்து என்பது அறிவுடைய உயிர்களின் தொகுதியைக் குறிக்கும். இவ்விரண்டும் சேர்ந்ததே உலகம். சித்தும் சடமுமாகிய இவ்விரண்டிலும் இறைவன் வேறறக் கலந்து நிற்கிறான். எழுத்துக்களின் இயக்கத்திற்கு அகரவுயிர் இன்றியமையாதது. அது போலச் சித்தும் சடமும் ஆகிய உலகத்தின் இயக்கத்திற்கு இறைவன் இன்றியமையாதவன். இவ்வாறு உவமைக்கும் பொருளுக்கும் உள்ள பொருத்தங்களைச் சுட்டலாம்.
உவமை பொருள்
1. உயிரெழுத்துக்கள் சித்தாகிய உயிர்கள்
2. மெய் எழுத்துக்கள் சடமாகிய பொருள்கள்
3. உயிரும் மெய்யுமாகிய எழுத்துக்களை இயக்கும் அகரம் சித்தும் சடமும் ஆகிய உலகை இயக்கும் இறைவன்
சித்தும் சடமுமாகிய அனைத்துப் பொருள்களையும் இறைவன் இயக்குகிறான் எனின், அவன் ஒரு காலத்தில் தானே அனைத்துப் பொருளையும் அறிந்து நிற்கிறான் என்பதும் பெறப்படும். அவ்வாறு முழுவதையும் ஒருங்கே அறிந்து நிற்கும் அவனது அறிவு முற்றறிவு எனப்படும். இத்தகைய பேரறிவுடையவன் ஆதலைக் குறிக்கவே அறிவாகி என்றார். இறைவனே உலகிற்குத் தலைவன் என்பதும், அவனே அனைத்து இயக்கத்திற்கும் முதல் என்பதும் இச்செய்யுளில் உணர்த்தப்பட்டன.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக