15. உயிருக்குச் சித்து என்ற பெயர் பொருந்துமோ?
பொறியின்றி ஒன்றும் புணராத புந்திக்கு
அறிவுஎன்ற பேர்நன்று அற.
பொருள் : ஐம்பொறிகளின் துணையின்றி ஒன்றையும் அறியமாட்டாத உயிருக்குப் போய் சித்து என்று பெயர் வைத்திருக்கிறார்களே. அந்தப் பெயர் மிக நன்றாய் இருக்கிறது! என்று இகழ்ச்சிக் குறிப்போடு கூறுகிறார் ஆசிரியர்.
சொற்பொருள் :
பொறிஇன்றி - ஐம்பொறிகளின் உதவியில்லாமல்
ஒன்றும் புணராத - ஒன்றையும் அறியமாட்டாத
புந்திக்கு - உயிருக்கு
அறிவு என்ற பேர் - சித்து (அறிவுடையது) என்று ஆன்றோர் கூறி வைத்த பெயர்
அறநன்று - மிகமிக நன்றாய் இருக்கிறது!
விளக்கம் :
உலகை அறிந்து வரும் உயிரைச் சித்து என்ற சொல்லால் குறிப்பிடுவர். சித்து என்பதற்கு அறிவுடையது என்பது பொருள். ஆனால், சைவ சித்தாந்தம் சில தடைகளை எழுப்பும். உயிர் சித்துப் பொருளாயின் அதற்கு அறியாமை என்பது இருத்தல் கூடாது. ஆனால், உயிர் அறியாமையால் கவரப்பட்டு அறிவையிழந்து நிற்கிறதே. அதனைச் சித்து என்று எவ்வாறு கூறுவது? மேலும், உயிர் சித்துப் பொருள் எனின், தானே அறிதல் வேண்டும்; கருவி கரணங்களைத் துணைக் கொள்ளாமலே அறிதல் வேண்டும். கண்கள் இன்றியே காணுதல் வேண்டும். செவிகள் இன்றியே கேட்டல் வேண்டும். இவ்வாறு உயிர்தானே தனித்து நின்று அறிதல் வேண்டும். இங்ஙனம் தானே விளங்குகிற அறிவு சுயம்பிரகாசம் எனப்படும். இத்தகைய இயற்கையறிவு உயிருக்கு இல்லையே. ஐம்பொறிகள், மனம் முதலிய அகக் கருவிகள், நூல்கள், தாய் தந்தையர், ஆசிரியர் முதலியோரால் அல்லவா உயிருக்கு அறிவு நிகழ்கின்றது. அதனைச் சித்து என்று எவ்வாறு கூறுவது?
இன்னும், உயிர்சித்துப் பொருளாயின் அதன் அறிவு என்றும் ஒரு தன்மையாய் இருத்தல் வேண்டும். ஒரு நிலைப்பட்டதாய் இருத்தல் வேண்டும். ஆனால் உயிருக்கு உணர்வு மாறிமாறியல்லவா நிகழ்கிறது. ஐம்பொறிகள் செயற்படும் போது உணர்வு நிகழ்தலையும், பொறிகள் அடங்கியபோது உணர்வு ஒழிதலையும் அனுபவமாகக் காணலாம். ஒரு நிலைப்படாமல் அலையும் ஐம்பொறிகளின் வயப்பட்டதாகிய உணர்வு எவ்வாறு ஒரு நிலைப்பட்டு நிற்கும்? ஐம்புலன்களாலும் தம் உணர்வு அலைக்கப்படுவதற்கு உவமையாக யானைப் போரிடை அகப்பட்ட சிறிய செடியைக் கூறினார் மாணிக்க வாசகர். மதம் பிடித்த யானைகள் ஒன்றோடொன்று தாக்குங் காலை அவற்றின் காலடியிற்பட்ட சிறு செடி மிதிபட்டுச் சிதைந்து அலைதல் போலப் புலன்களின் தாக்குதலால் அறிவு கலங்கி நிலைபேறின்றித் தவிக்கிறேன் என்கிறார். இங்ஙனம் ஒரு நிலைப்படாத உணர்வுடைய உயிரைச் சித்து என்று எவ்வாறு கூறுவது?
இக்கருத்துக்களையெல்லாம் உள்ளடக்கியே ஆசிரியர் இச்செய்யுளைச் செய்துள்ளார். தானே அறிய மாட்டாமல் ஐம்பொறிகளின் துணைக்கொண்டே அறிவதாய், அங்ஙனம் அறியும் போதும் ஒரு நிலைப்பட அறியாமல் மாறி வரும் உணர்வுடையதாய் உள்ள உயிருக்குச் சித்து என்ற பெயர் பொருந்தாது என்பது கருத்தாகும். உயிருக்குச் சித்து என்ற பெயர் பொருந்தாது எனில், அதனை அசித்து அல்லது சடம் என்று அழைக்கலாமா? என்ற வினா எழும். அதற்குரிய விடையை அடுத்த செய்யுளிற் காணலாம். முந்திய செய்யுளில் உயிர் கனவிலே திரிவு பட உணரும் என்பது கூறப்பட்டது. இச்செய்யுளில் நனவிலேயும் அது மற்றொரு பொருள் உணர்த்தவே உணரும் என்பது கூறப்பட்டது. இதனால் உயிருக்குத் தன்வயம் என்பது கனவு நிலையிலும் இல்லை, நனவு நிலையிலும் இல்லை என்பது வலியுறுத்தப்பட்டது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக