வெள்ளி, 3 நவம்பர், 2017

14. உயிருக்குத் தன்வயமான செயலில்லை

14. உயிருக்குத் தன்வயமான செயலில்லை
கண்டவற்றை நாளும் கனவில் கலங்கியிடும்
திண்திறலுக்கு என்னோசெயல்.

பொருள் : நாள்தோறும் நனவில் தெளிவாகக் கண்டு பழகிய பொருள்களைக் கனவில் மாறுபடக் கண்டு மயங்குகிற, இந்த அற்பமான உயிருக்கு என்ன சுதந்திரமான செயல் இருக்கிறது?
சொற்பொருள் :
நாளும் கண்டவற்றை - பல நாளும் பார்த்துப் பழகித் தெளிவாக உணர்ந்த பொருள்களை
கனவில் - கனவு காணும்போது அக்கனவில்
கலங்கியிடும் - மாறுபடக் கண்டு மயங்குகின்ற
திண் திறலுக்கு - பெருவலிமை உடையதாகிய உயிருக்கு
செயல் என்னோ - சுதந்திரமான செயல் என்ன இருக்கிறது?

விளக்கம் :
உயிருக்குத் தன்வயம் எனப்படும் சுதந்திரம் இல்லை என்பதைக் கனவு நிகழ்ச்சியில் வைத்துக் காட்டுகிறார் ஆசிரியர். நனவில் தாம் தெளியக் கண்டறிந்த உண்மைகளுக்கு மாறானவற்றைக் கனவுலகில் காணும் போது சிலர் திடுக்கிட்டுக் கண் விழிப்பார்கள். சிலர் அச்சத்தினால் வாய் வெருவுவார்கள். இதற்கு எடுத்துக்காட்டாக ஒரு நிகழ்ச்சியைக் கூறலாம். ஒருவர் பட்டப்பகலில் ஒரு குட்டித் தூக்கம் போடுகிறார். தூக்கத்தில் ஒரு துன்பக் கனவு காணுகிறார். தமது உயிர் நண்பரே கத்தியை ஏந்திக் கொண்டு தம்மைக் கொல்ல வருவது போலக் கனாக்கண்டு துணுக்குற்றுக் கண் விழிக்கிறார். அந்த நேரத்தில் அறைக் கதவைத் தட்டும் ஓசை கேட்கிறது. அவர் எழுந்து போய் திறக்கிறார். வாசலிலே கனவில் தம்மைக் கொல்ல வந்த அந்த நண்பரே கண்ணெதிரில் நிற்கிறார்! என்ன பகலிலேயே உறக்கமா? கனவு கண்டீரா? என்று கேட்கிறார். கண்ட கனவை எப்படிச் சொல்வார் அவரிடம்?
இந்தக் கனவு அவர் விருப்பப்படியா வந்தது? இல்லையே. இப்படிக் கனவில் நடக்கும் என்று அவர் சிறிதேனும் எதிர்பார்த்தாரா? இல்லையே. இஃது எதைக் காட்டுகிறது? கனவு என்பது அவர் வசத்தில் இல்லை. கனவு காண்பதற்குக் காரணமாகிய மனம் முதலிய கருவிகளும் அவர் வசத்தில் இல்லை என்பதைத்தானே காட்டுகிறது. முத்தொள்ளாயிரம் என்ற பழைய இலக்கியத்தில் ஒரு சுவையான நிகழ்ச்சி வருகிறது. மன்னன் வீதி வழியாகத் தேரில் சென்றான். வீரமும் அழகும் நிறைந்த அவனது தோற்றம் ஒரு நங்கையைக் கவர்ந்தது. அவளையறியாமலே அவளது உள்ளம் அவனிடத்தில் சென்றது. எப்பொழுதும் அவனைப் பற்றியே நினைவு. நிறைவேறக் கூடிய காதலா இது? வெளியே சொல்லக் கூடிய செய்தியா இது? ஒருநாள் இரவில் அவள் ஓர் இன்பக் கனவு கண்டாள். மன்னனாகிய காதலன் தன்னிடம் நெருங்கி வருவது போலவும் கொஞ்சிப் பேசுவது போலவும் கனவிற் கண்டாள். அந்த நிலையில் விழிப்பு வந்துவிட்டது. அந்தக் கனவை உண்மையென்றே நம்பிவிட்டாள் அந்தப் பேதை! அன்பிற்குரியவன் தன் அருகில் இருப்பதாக எண்ணிக் காந்தள் மலர் போன்ற கைகளால் படுக்கையைத் தடவிப் பார்க்கிறாளாம்!
இது போன்ற, நடப்பியல் உண்மைக்கு மாறான இன்பக் கனவுகளைக் கண்டு கொண்டிருக்கும் போது சிலர் இடையே விழித்துக் கொள்வர். இந்த விழிப்பு வந்து கெடுத்து விட்டதே என்று நொந்து கொள்வர். அந்தக் கனவு மேலும் தொடராதா என்ற ஆசையில் மீண்டும் உறங்க முயல்வர்! ஆனால், உறக்கமும் வராது. போன கனவு வராது. தாம் விரும்பியபோது விரும்பிய வண்ணமே கனவு காணும் திறன் உயிர்களுக்கு ஏது? உயிர் நனவிலே கண்டபடி கனவிலே காண இயலாது. வினை வசத்தால் வருந்த வேண்டியதாயின், உயிரோடிருப்பவரை இறந்தவர்போலக் கனவிற் காணும்; மகிழ வேண்டியதாயின், இறந்தவரை உயிரோடு இருப்பவர் போலக் கனவிற் காணும். இது போலப் பல வகையில் கனவில் மாறுபடக் கண்டு மயங்குவதால் உயிர் சுதந்திரமற்றது என்பது விளங்கும்.
திண் திறல் :
உயிர்கள் யாவும் இறைவனது ஆணைக்கு உட்பட்டு வினை வழியே செல்லுகின்றவை. ஆனால், இதை உணராமல் என் செயல், என் செயல் என்று எண்ணிச் செருக்குகின்றன. உயிருக்கென்று என்ன செயலிருக்கிறது? என்ன வலிமை இருக்கிறது? சிற்றறிவும் சிறு தொழிலும் உடைய இந்த அற்பமான உயிர் தன்னைப் பேராற்றல் உடையதாகக் கருதிக் கொள்கிறது. நனவில் கண்ட பொருள்களைக் கனவில் மாறிக் காணுகிற இந்த உயிர் அடடா! திண்ணிய வலிமை உடையது தான்! என்று கேலி செய்வார் போலத் திண் திறல் என்று உயிரைக் குறிப்பிடுகிறார் ஆசிரியர்.

கருத்துகள் இல்லை:

திருமூலர் திருமந்திரம் - 275 - விளக்கம்

பாடல் விளக்கம்: மெய்தான் அறியும் செழுங்கடல் வட்டத்துப் பொய்தான் மிகவும் புலம்பும் மனிதர்கள் மெய்தான் உரைக்கில்விண் ணோர்தொழச் செய்குவன் ம...