வெள்ளி, 3 நவம்பர், 2017

சிவநெறித் திருக்குறள் திருவருட்பயன்

சிவநெறித் திருக்குறள்
உமாபதிசிவம் திருக்குறளை அடியொற்றியே தமது திருவருட்பயனை அமைத்துக்கொண்டார். அதற்குக் காரணம், அறநெறி, அருள்நெறி என்ற இருவகை நெறிகளுள் அறநெறியை உணர்த்துவதாகிய திருக்குறளுக்குப் பின் அருள்நெறியை உணர்த்தும் திருக்குறளாய் அமையுமாறு இதனைச் செய்தல் வேண்டும் என்று அவர் கருதியமையேயாகும். அக்கருத்துப் பற்றியே திருவருட் பயனை அகர உயிர்போல் என்று தொடங்கித் திருக்குறளை நினைப்பிக்கின்றார். நூல் முழுவதையும் குறள் வெண்பா யாப்பினாலே அமைத்துள்ளார். அதிகாரத்திற்குப் பத்துக் குறள்களாகப் பத்து அதிகாரங்களை ஆக்கியுள்ளார். சிவநெறித் திருக்குறள் என்று சொல்லுமாறு இந்நூலைச் செய்துள்ளார்.
தெள்ளுசீர்ப்புலமை வள்ளுவன் தனக்கோர்
நற்றுணை உடைத்தெனக் கற்றவர் களிப்ப
அருட்பயன் என்னா அதற்கொரு நாமம்
தெருட்படப் புனைந்து செந்தமிழ் யாப்பிற்
குறளடி வெள்ளை ஒரு நூறு இயம்பினன்

எனவரும் சிறப்புப் பாயிரப் பகுதியில் தெய்வப் புலமைத் திருவள்ளுவருக்கு ஒரு நல்ல துணை வாய்த்தது என்று அறிஞர்களிப்புறும் வண்ணம் திருவருட் பயனை உமாபதிசிவம் இயற்றினார் என்று பாயிர ஆசிரியர் கூறியுள்ளமையும் இக்கருத்தை வலியுறுத்தும்.
சிறந்த நூல்
குறள் வெண்பாவில் நூலியற்றப் பலரும் முன் வருவதில்லை. அதற்குத் தகுந்த காரணம் உண்டு. நினைத்த கருத்தையெல்லாம் குறள் வெண்பாவில் அத்துணை எளிதாக அமைக்க இயலாது. அமைக்க முடிந்தாலும் அக்கருத்தைச் சுவைபடச் சொல்ல முடியாது. சொற் சுவையும் பொருட்சுவையும் பொலியக் குறள் வெண்பாவினைக் கையாண்டு வெற்றி கண்டவர்கள் ஒரு சிலரே. உமாபதிசிவம் அவர்களில் ஒருவராகத் திகழ்கிறார். சொல்லுகிற பொருளுக்குச் சுவை யூட்டுவன உவமை, உருவகம் முதலிய அணிகளாகும். திருவருட் பயனில் இத்தகைய அணி நலன்களை நிரம்பக் காணலாம். கூகையினுடைய கண் இயல்பு அனைவருக்கும் தெரிந்தது. அதற்குப் பகலிலும் கண் தெரியாது. திருவள்ளுவர் கூகையை உவமையாக எடுத்தாண்டுள்ளார். பகல் வெல்லும் கூகையைக் காக்கை என்று கூறிக்காலம் அறிதலை வலியுறுத்தினார். உமாபதிசிவம் வேறொரு வகையில் இப்பறவையை உவமையாகப் பயன்படுத்துகிறார். திருவருள் ஒளியில் இருந்தும் அதனைத் தெரிந்துகொள்ள மாட்டாமல் ஆணவ இருளில் அழுந்தியிருக்கும் ஆன்மாவின் நிலை கூகையின் கண் போன்றது என்கிறார். ஐந்து உறுப்புக்களையும் ஓட்டினுள் அடக்கிக் கொள்ளும் ஆமையைப் போல ஞானிகள் இருப்பர் என்று அவர் கூறியிருப்பது, திருக்குறளை நினைப்பிக்கும் மற்றோருவமையாகும்.
திருக்குறளைப் போலத் திருவாசகத்திலும் நம் ஆசிரியர்க்கு ஈடுபாடு மிகுதி. வெள்ளத்துள் நாவற்றுதல், எரியுறு நீர் என்பன திருவாசகத்திலிருந்து அவர் பெற்ற உவமைகளாகும். பிறிது மொழிதல் அணியைத் திருவள்ளுவரைப் போல இவரும் பற்பல இடங்களில் அமைத்துள்ளார். ஆற்றாமை, இரக்கம், சினம், நகை முதலிய உணர்ச்சிகள் தோன்றக் கூறிச் செல்லும் இடங்கள் திருவருட்பயனில் உண்டு. உயிர்கள் படுந் துன்பத்தைக் கண்டு, அந்தோ! அருள் தெரிவது என்று? என இரங்கிக் கூறுவார். திருவருளைப் பற்றிக் கவலை கொள்ளாமல், உலகியலில் களிக்கின்ற உயிரின் போக்கைக் கண்டு சினந்து, இந்த உயிர்க்கு வீடு என்ன வேண்டிக்கிடக்கிறது? என்பார் போல, வெற்றுயிர்க்கு வீடு மிகை என்பார். இந்த உயிரைப் போய் சித்து என்று அழைக்கிறார்களே. இது நல்ல வேடிக்கை! என்று நகைத்துக் கூறுவார். இந்த உயிர் பேராற்றல் உடையதுதான் என்று புகழ்வது போலப் பழிப்பார். இப்படி உணர்ச்சி ததும்பக் கூறும் மொழி நடை உமாபதி சிவத்திற்குக் கை வந்தது; திருவள்ளுவரின் நடையை நினைவூட்டுவது.
சைவ சித்தாந்தப் பொருள் அனைத்தையும் நூறு குறட்பாக்களில் தொகுத்துக் கூறுகிற சிறந்த நூல் இது. சாத்திர நூல்களுள் பெரிதும் பயிற்சியில் உள்ள நூலும் இதுவேயாம். இந்நூலின் சிறப்புக் கருதி அறிஞர் பலர் இதற்கு உரை கண்டுள்ளனர். இந்நூலை முறையாகப் பயில்கின்றவர் சித்தாந்தப் பொருளை ஒருவாறு முற்ற உணர்ந்தவராவர்.

கருத்துகள் இல்லை:

திருமூலர் திருமந்திரம் - 275 - விளக்கம்

பாடல் விளக்கம்: மெய்தான் அறியும் செழுங்கடல் வட்டத்துப் பொய்தான் மிகவும் புலம்பும் மனிதர்கள் மெய்தான் உரைக்கில்விண் ணோர்தொழச் செய்குவன் ம...