திருவருட்பயன் - முன்னுரை
சைவ சித்தாந்தத்தின் அருமை பெருமைகளைத் தெரிந்துகொள்ள வேண்டும் என்ற ஆர்வம் வளர்ந்து வருகின்ற காலம் இது. அதற்கு உதவுகின்ற வகையில் நமது சைவத் திருமடங்களும், ஆங்காங்குள்ள சைவ அமைப்புக்கள் பலவும் சைவ சித்தாந்தப் பயிற்சி வகுப்புகளை ஆண்டுதோறும் சிறந்த முறையில் திட்டமிட்டு நடத்தி வருகிறது. அப்பயிற்சி வகுப்புகளில் நடத்தப்பெறும் பாட நூல்களில் இன்றியமையாத இடத்தைப் பெறுவது திருவருட்பயன் ஆகும். சாத்திர நூல்கள் பதினான்கனுள், சைவ சித்தாந்தக் கோட்பாடுகளை முதலிலிருந்து முடிவு வரையில் முழுமையாகவும், அதே சமயத்தில் எளியைமாகவும், மாணவர் நிலைக்கு ஏற்பப்பொருள்களைப் பாகுபடுத்தி முறையாகவும் விளக்கிச் செல்லுகிற - சொல்லுகிற ஒரு நூல் உண்டு என்றால் அது திருவருட் பயனே யாகும்.
இந்நூல் இரண்டு வரிகளையுடைய சிறிய குறட்பாக்களால் ஆனது என்றாலும் திருக்குறளைப் போல மிகவும் அரிய பெரிய கருத்துக்களைத் தன்பாற் கொண்டதாகும். ஆகவே இதனை உரையின் துணையின்றிக் கற்பது எளிதன்று. திருவருட் பயனுக்குப் பழைய உரைகளோடு இக்காலத்தில் எழுந்த உரைகளும் பலவாக உள்ளன. அந்த உரைகளினின்றும் இந்த விளக்கவுரை சில வகையில் வேறுபட்டு நிற்கிறது. இவ்வுரை நூலைப் படிக்கும்போது ஆசிரியரே வகுப்பறையில் நேர் நின்று பேசுவது போன்ற உணர்ச்சி பிறக்கும் வகையில் எழுதப் பெற்றிருப்பது இந்நூலின் தனித்தன்மை என்று கூறலாம். இந்நூலைப் பெற்றுப் பயின்ற பலரும் தெரிவித்த கருத்து இது. இந்நூலில் முன்னுள்ள பகுதிகளை மாணாக்கர் ஓரளவு எளிதாகப் புரிந்து கொள்ள இயலும். ஆயின் பின்னுள்ள பகுதிகள் அனுபவத்தில் வைத்து உணர்ந்து கொள்ளுதற்குரிய அரிய பொருள்களைத் தன்பால் அடங்கக் கொண்டுள்ளன. உலகியலில் அழுந்தி நிற்கும் நம்மனோர்க்கு அவற்றை உள்ளவாறு விளங்கிக்கொள்ளுதல் இயலாத ஒன்று. நம்மவர் நிலையே இதுவென்றால் மாணாக்கர் நிலையைச் சொல்லவும் வேண்டுமோ?
அவர்களும் திருவருட்பயனிலுள்ள அனுபவப் பொருள்களை ஓரளவாவது பற்றிக் கொள்ளுமாறு செய்தல் வேண்டும். அதற்கு என்ன செய்வது? அருளியல் வாழ்வில் நின்று வாழ்ந்து காட்டியவர்களாகிய, செயற்கரியவற்றைச் செய்த பெரியோர்களாகிய நமது நாயன்மார்களின் செயல்கள் யாவும் திருவருள் அனுபவ நிலைகளை நாம் உணர்ந்து கொள்ளுதற்கு உதவும் சீரிய எடுத்துக்காட்டுகள் அன்றோ? ஆதலால் பெரிய புராண அடியார்களாகிய அவர்களின் அருளியல் வாழ்வில் நிகழ்ந்த பல நிகழ்ச்சிகளை மாணாக்கரின் உளங்கொள்ளும்படியாக ஆங்காங்கே எடுத்துக் காட்டி அனுபவ வுண்மைகளை விளக்கியுள்ளமை இந்நூலின் மற்றொரு தனித்தன்மையாகும்.
பேரருளாளராகிய உமாபதி சிவனார் திருவருட் பயனைத் திருமுறைகளின் பிழிவாகவே தந்துள்ளார் என்பதை அதில் ஆழ்ந்து தோய்ந்த அன்பர்கள் உணர்வார்கள். அந்த முறையில், திருமுறைகளிலிருந்து எத்தனையோ ஒப்புமைப் பகுதிகளை இங்கே எடுத்துக்காட்ட முடியும். அவ்வாறு அமைந்த மேற்கோள் செய்யுட்களை இவ்வுரையில் மிகுதியாகக் காட்டிச் சென்றால் அதனால் பெரும் பயன் விளையாது என்று கருதி, ஏற்ற இடங்களில் சாத்திர, தோத்திரக் கருத்துக்களைச் செய்யுள் வடிவில் அப்படியே தராமல், எவை எந்நூல்களிலிருந்து பெறப்பட்டன என்ற சுவடு கூடத்தெரியாதபடி மாற்றித் தரப்பட்டுள்ளது. ஒவ்வொரு செய்யுளின் கீழேயும் சொற்பொருள் என்ற தலைப்பில் பதவுரை புதிதாக எழுதிச் சேர்க்கப்பட்டுள்ளது. தனித்துவம் வாய்ந்த உமாபதி சிவனாரின் சொல்லாட்சியையும், கொண்டு கூட்டிப் பொருள் காணும் படியாக அவர் பாக்களை யாத்துள்ள பான்மையையும் தெளிவாக அறிந்துகொள்ள இப்பதவுரை உதவும். இவ்வுரை நூல் மாணவர் <உலகுக்கும், சைவ சித்தாந்தம் பற்றி அறிய விரும்பும் மற்றையோருக்கும் பெரும் பயன் தரும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக