81. அனைத்து நூற்பொருளும் ஐந்தெழுத்தின் பொருளேயாம்
அருள்நூலும் ஆரணமும் அல்லாதும் ஐந்தின்
பொருள் நூல் தெரியப் புகின்.
பொருள் : அருள் நூலாகிய ஆகமங்களும், அற நூலாகிய வேதங்களும், இவையல்லாத பிற நூல்களும் ஆகிய யாவும் திருவைந்தெழுத்தின் பொருளை விளக்கும் நூல்களேயாம்.
சொற்பொருள் :
அருள் நூலும் - அருள் நூல் ஆகிய ஆகமங்களும்
ஆரணமும் - அறநூல் ஆகிய வேதமும்
அல்லாதும் - இவ்விரு முதல் நூல் அல்லாத புராணம், இதிகாசம் முதலிய ஏனைய எல்லா நூல்களிலும்
தெரியப் புகின் - ஆராய்ந்து பார்த்தால்
ஐந்தின் பொருள் நூல் - திருவைந்தெழுத்தின் பொருளை விரித்துக் கூறும் நூல்களாகவே முடியும்.
விளக்கம் :
இறைவன் அருளிச் செய்தவை முதல் நூல்கள் எனப்படும். அவை வேதமும் ஆகமமும் ஆகும். அவற்றுள் வேதம் பொது நூல் என்று கொள்ளப் பெறும். ஆகமம் சிறப்பு நூல் என்று கூறப்படும். பொது நூல் என்பது உண்மையை முற்றாக உணர்த்தாது ஓரளவாக உணர்த்துவது. உலகமாந்தர் உண்மையை ஓரளவே உணரவல்லவர். அவர் பொருட்டாகச் செய்யப்பட்டதே பொது நூல். சிறப்பு நூல் உண்மையை முற்ற உணர்த்துவது. சத்தி நிபாதர் முற்ற உணர வல்லவர். அப் பக்குவர் பொருட்டாகச் செய்யப்பட்டதே சிறப்பு நூலாகும். பொது நூலின் நோக்கம், மக்களுக்கு அறம் முதலியவற்றை உணர்த்தி அவர்களை உலகியலில் நிறுத்துவது. இம் முறையில் அமைந்த பொது நூலாகிய வேதம் அறநூல் எனப்படுவதாயிற்று. சிறப்பு நூலின் நோக்கம், உலகியலில் உவர்ப்புற்ற சத்தி நிபாதர்க்கு இறைவனது திருவருளைத் தெளிவித்து அவரை அருள் நெறியில் நிறுத்துவது. அம்முறையில் அமைந்த சிறப்பு நூலாகிய ஆகமம் அருள் நூல் எனப்படுவதாயிற்று.
இச் செய்யுளில் ஆகமத்தை அருள்நூல் என்று குறிப்பிட்டமையால் ஆரணமாகிய வேதம் அறநூல் என்பதுதானே பெறப்படும். இம்முதல் நூல்களை அடியொற்றி எழுந்த வழி நூல், சார்பு நூல்களாயிருப்பவை. மிருதி, புராணம், இதிகாசம் என்பவை. இந்த எல்லா வகை நூல்களின் கருத்தையும் ஆராய்ந்து பார்த்தால், அவையெல்லாம் திருவைந்தெழுத்தின் பொருளாகிய பதி பசு பாசங்களை விளக்கிக் கூறும் நூல்களாய் இருத்தல் புலனாகும். ஆசிரியர் உமாபதி சிவம் சிவப்பிரகாச நூலில்,
பல கலை ஆகம வேதம் யாவையினும் கருத்துப்
பதி பசு பாசம் தெரித்தல்
எனக் கூறியுள்ளமை காணலாம். எனவே, எல்லா நூற்பொருள்களும் திருவைந்தெழுத்தினுள் அடங்கியுள்ளன என்பது இனிது விளங்கும். அவ்வம்மதத்தினர் தாம் கொண்டுள்ள முடிவைப் பல வகையாக விளக்காமல் சுருக்கமாக ஒரு தொடரில் அமைத்துக் கூறுவதுண்டு. அவ்வாறு சுருக்கமாகத் தொகுத்துக் கூறும் தொடர் மகாவாக்கியம் எனப்படும். வடமொழி வேதம் ஒவ்வொன்றிற்கும் மகா வாக்கியம் உண்டு. அவ்வாறே சிவ நெறிக் கொள்கையின் முடிவைத் தொகுத்துக் கூறும் மகா வாக்கியமாக விளங்குவது திருவைந்தெழுத்தாகும். திருவைந்தெழுத்து எல்லா நூற்பொருளும் திரண்டு கூடிய பெருமொழியாய் இருப்பது என அதன் சிறப்பை இம்முதற் செய்யுளில் கூறினார் ஆசிரியர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக