வெள்ளி, 3 நவம்பர், 2017

60. திருவருளின் வசப்பட்டிரு

60. திருவருளின் வசப்பட்டிரு
கண்டபடியே கண்டு காணாமை காணாமை
கொண்ட படியே கொண்டிரு.

பொருள் : மாணாக்கனே, அறியாமையாகிய கேவலம் வந்து பொருந்தாதவாறு, கருவிகளை உனக்கு வேறாகக் கண்டு நீங்கித் திருவருள் ஞானத்தைப் பற்றி நின்றாய். பின்னும் அவ்வாறு அதனையே விடாது பற்றி நிற்பாயாக. அவ்வாறு நின்றால் அத்திருவருள் உன்னைத் தன்னிடத்து அடக்கிக் கொள்ளும். அது உன்னை விழுங்கிக் கொள்ளுமாறு அதற்கு இசைந்த நிலையினையே நீயும் மேற்கொண்டிரு.
சொற்பொருள் :
கண்டபடியே - மாணாக்கனே, கருவிகளை உன்னின் வேறாகக் கண்டு நீங்கித் திருவருள் ஞானத்தைப் பற்றி நின்றாய் இனியும் அவ்வாறே
காணாமை காணாமை - கருவிகள் நீங்கினமை காரணமாக அறியாமையாகிய கேவலம் வந்து பொருந்துமாகலின், அது பொருந்தாதவாறு
கண்டு - அத்திருவருளையே விடாது பற்றி நின்று
கொண்டபடியே கொண்டு இரு - அத்திருவருள் உன்னைத் தன்னிடத்து அடக்கிக் கொள்ளுதற்கு இசைந்த நிலையினையே நீயும் மேற்கொண்டு இரு.

விளக்கம் :
கருவிகளை நீங்கித் திருவருளோடு கூடுதல் :
கண், செவி முதலிய புறக்கருவிகளும், மனம் முதலிய அகக் கருவிகளும் உயிருக்குப் புலனுணர்வைத் தருமேயன்றி மெய்யுணர்வைத் தரமாட்டா; அவை உலகத்தைக் காட்டுமேயன்றி உயிரின் இயல்பையோ, உயிரின் கண் உள்ள திருவருள் ஞானத்தையோ காட்டமாட்டா. அக்கருவிகள் உலகையே காட்டி உயிரை மயக்குவதால் அம் மயக்கத்தில் ஆழ்ந்த உயிர் அக்கருவிகளையே தானாகக் கருதி நிற்கும். அக்கருவிகள் சடம் என்பதையும், தான் அவற்றிற்கு வேறாய் உள்ள அறிவுப் பொருள் என்பதையும் ஞானாசிரியர் உணர்த்த உயிர் உணரும். அவரது உபதேசத்தைப் பெற்றுச் சிந்திக்கின்ற முறையினால் அக் கருவிகளைத் தனக்கு வேறாகக் கண்டு நீங்கும். அவ்வாறு நீங்கிய உயிருணர்வில் திருவருள் ஞானம் இனிது விளங்கித் தோன்ற உயிர் அதனோடு கூடும்.
காணாமை காணாமை :
இங்கு ஓர் ஐயம் எழும். கருவிகளை நீங்கினால் உயிருக்கு அறியாமை அல்லவா உண்டாகும். கனவு, உறக்கம், மூர்ச்சை போன்ற நிலைகளில் உயிர் கருவிகளினின்றும் நீங்கி அறியாமையைத் தலைப்படுதல் யாவரும் அறிந்தது. அப்படியிருக்க, கருவிகளை நீங்கிய உயிர் திருவருளைக் கண்டு அதனோடு கூடும் எனல் எவ்வாறு பொருந்தும் என்பதே அவ்ஐயம். இது பற்றிய விளக்கத்தை அடுத்த அதிகாரத்தின் முன்னுரையில் காணலாம். இங்கும் அதனைக் கூறுவோம். கருவிகள் சோர்வுற்றுச் செயற்படாமல் தாமே நீங்கும் போது தான் உயிர் யாதொன்றையும் அறிய மாட்டாமல் அறியாமையைப் பொருந்தும். அவ்வாறு உண்டாகின்ற அறியாமை நிலைகளே கனவு, உறக்கம் போன்றவை. இனி, கருவிகள் நீங்காமல் இருக்கவும், உயிர் அவற்றைத் தனக்கு வேறு எனக் கண்டு நீங்க முடியும். கருவிகளை நீங்குதலாவது, அவற்றின் வழிப் படாதிருத்தல். அவற்றைப் பற்றி நின்று புலன் உணர்வில் செல்லாதிருத்தல். இவ்வாறு கருவிகளை வேறு எனக் கண்டு அவற்றைப் பற்றாது விடுத்தால், தன்னறிவில் விளங்குகிற திருவருளாகிய ஞானத்தை உயிர் பற்றிக் கொள்ளும். அந்த ஞானம் எல்லாவற்றையும் அறிகின்ற இறைவனது ஞானம் ஆதலின் அதனைப் பற்றிய உயிருக்கு அறியாமை எங்ஙனம் உண்டாகும்? இக்கருத்தையே முதலடியில் உணர்த்தியுள்ளார் ஆசிரியர். காணாமை காணாமை கண்டபடியே கண்டு எனச் சொற்களை அமைத்துக் கொள்ள வேண்டும். முதலில் உள்ள காணாமை என்பதற்கு அறியாமை என்பது பொருள். அடுத்துள்ள காணாமை என்பதற்குக் காணாதவாறு எனப்பொருள் கொள்ளுதல் வேண்டும். எனவே காணாமை காணாமை கண்டு என்பதற்கு அறியாமை ஏற்படாதவாறு கருவிகளை விட்டு நீங்கித் திருவருள் ஞானத்தை உனதறிவில் கண்டு என்பது பொருளாகும்.
திருவருள் அடக்கிக் கொள்ளுதல் :
உயிர் எந்நிலையிலும் தனக்குத் துணையாய் நின்று உதவும் திருவருளை மறந்து, யான் என முனைத்து நிற்றலே அதற்குமாசு ஆகும். அம்முனைப்பு சீவபோதம் எனப்படும். உயிர் திருவருளைக் கண்டு அதன் வழியில் நிற்பின், அத்திருவருள் யான் என்னும் சீவபோதத்தை எழவொட்டாது தன்னுள் அடக்கிக் கொள்ளும். அதனால் உயிர் மாசு நீங்கித் தூய்மையுறும். எனவே உயிரைத் தூய்மைப்படுத்துவது சிவனது அருளே என்பது விளங்கும்.
ஏழாம் அதிகாரம் உயிர் விளக்கம்
அறிவும் அறியாமையும் :
மாயையின் காரியங்களாகிய உடம்பையும் கருவிகளையும் கொண்டு உலகை அறிந்து வருகிறோம். இவைகள் நமக்கு உலக அறிவைத் தருகின்றன. இக்கருவிகள் நம்மை விட்டு நீங்கும்போது அறிவு நிலையும் நீங்குகிறது; அறியாமை மேலிடுகிறது. கருவிகள் நீங்குதல் என்பதன் பொருள், அவை சோர்வுற்றுச் செயற்படாமல் மடங்கி நிற்றல் என்பதாகும். அவ்வாறு நீங்கிய கருவிகள் மீண்டும் வந்து கூடிச் செயற்படும்போது நாம் அறியாமையிலிருந்து விடுபட்டுப் பழையபடி உலகை அறிந்து வருகிறோம். இது நமது அன்றாட அனுபவம் ஆகும். விழிப்பு நிலையில் எல்லாக் கருவிகளும் நன்கு செயற்படுவதனால் அறிவு நன்கு விளங்குகிறது. ஆனால், எப்பொழுதும் விழிப்பு நிலையிலேயே இருக்க முடிகிறதா? அவ்வாறு இருக்க நாம் விரும்பினாலும் கருவிகள் நம்மோடு ஒத்துழைப்பதில்லை. அவை நம்மிடம் சொல்லாமலே நம்மை விட்டு நீங்குகின்றன! கண்கள் சோர்ந்து இமை மூடுகின்றன. செவி முதலிய ஏனைய கருவிகளும் படிப்படியாகச் செயலிழக்கின்றன. உறக்கம் வந்து நம்மைத் தழுவிக் கொள்கிறது. விழிப்பு என்பது அறிவு நிலை என்றால், உறக்கம் என்பது அறியாமை நிலையாகும். இந்த இரண்டிற்கும் இடைப்பட்ட கனவு என்ற நிலை உண்டு. கனவு என்பது அரை குறையான அறிவு நிலையாகும். இனி உறக்க நிலையையும் தாண்டிப் பேருறக்கம் என்ற நிலை வரும். அதற்கும் அப்பால் மூச்சுக் காற்றும் இயங்காமல் நிற்கிற, முழு அறியாமையில் உயிர் அழுந்துகிற உயிர்ப்பு அடங்கல் என்ற நிலையும் உண்டு. இப்படி விழிப்பு, கனவு, உறக்கம், பேருறக்கம், உயிர்ப் படங்கல் என்ற ஐந்து நிலைகளை நாம் நாள்தோறும் அடைகிறோம். சிலசில கருவிகள் செயற்படாமல் நீங்க நீங்க, இந்த நிலைகளும் படிப்படியாக உண்டாகும்.
விழிப்பு நிலையிலிருந்து ஒவ்வொரு நிலையாகக் கடந்து உயிர்ப் படக்க நிலைக்குச் செல்வதும், பின் மீண்டும் அங்கிருந்து ஒவ்வொரு நிலையாகக் கடந்து பழையபடி விழிப்பு நிலைக்கு வருவதுமாகப் போக்குவரவு செய்கிறோம். விழிப்பு நிலையிலிருந்து இறங்க இறங்க அறியாமை மிகுந்து வரும். கீழ்நிலையிலிருந்து மேலே செல்லச் செல்ல அறிவு விளங்கி வரும். வேறு வகையாகச் சொன்னால், கருவிகள் நீங்க நீங்க அறியாமையும், கருவிகள் சேரச் சேர அறிவு நிலையும் உண்டாகும் எனலாம். கருவிகள் நீங்கி அறியாமைப்படும் நிலையைக் கேவலம் என்றும், கருவிகளோடு கூடி அறிவு விளங்கும் நிலையைச் சகலம் என்றும் கூறுவர். எனவே, கேவலம் என்பது அறியாமையைக் குறிக்கும். சகலம் என்பது அறிவு நிலையைக் குறிக்கும்.
நினைப்பும் மறப்பும் :
இனி, விழிப்பு நிலையிலிருந்து இறங்காமலே, அஃதாவது நன்றாக விழித்திருந்து உலகத்தை நன்றாக அறிந்து நிற்கும் போதே நமது உணர்வில் பல நிலைகள் உண்டாகும். அதனை இங்கே விளக்குவோம். ஒருவர் வங்கியில் ஒரு பெருந்தொகையை எடுத்து ஒரு பையில் வைத்துக் கொண்டு வீட்டிற்குப் புறப்பட்டார். காலம் கெட்டுக் கிடக்கிறது. அதனால் வழியில் எங்கேயும் நிற்கக் கூடாது; வேடிக்கை பார்க்கக் கூடாது என்றெல்லாம் எண்ணிக் கொண்டு நடந்தார். ஆனால், வரும் வழியில் ஒரு நண்பர் அவரைப் பிடித்துக் கொண்டார். நெடு நாட்களுக்குப் பிறகு சந்திக்க நேர்ந்ததால் அவர் இவரை விடுவதாக இல்லை. நாட்டு நடப்புகள் பற்றி அவர் பேசிக் கொண்டே போனார். அவரிடமிருந்து தப்பித்தால் போதும் என்றாகி விட்டது இவருக்கு. ஒரு வழியாக அவரிடம் விடை பெற்று விரைவாகக் கிளம்பினார். அந்த விரைவில் பணப்பையை அந்த இடத்திலே மறந்து போய் வைத்துவிட்டார். வீட்டிற்குப் போய்ப் பார்த்தால் பையைக் காணவில்லை. எப்படியிருக்கும் அவருக்கு? ஒரு கணம் மூச்சே நின்று விட்டது போல் ஆகிவிட்டது. நெஞ்சு படபடத்தது. மயக்கம் வருவது போன்ற நிலை. அப்படியே பொத்தென்று இருக்கையில் விழுந்து கண்ணை மூடிக் கொண்டார். அவரது துணைவியார் பதறிப் போனார். உங்களுக்கு என்ன ஆயிற்று? என்று கண் கலங்கி நின்றார். சிறிது நேரம் சென்ற பின் மயக்கம் ஒருவாறு தெளிந்தது; படபடப்புத் தணிந்தது. துன்ப மிகுதியால் செய்வதொன்றும் தோன்றாமல் மனம் கலங்கி நின்றார். பின்பு கலக்கம் நீங்கி அந்தப் பணப்பையை எங்கே, எவ்வாறு தவறவிட்டோம் என்று எண்ணிப் பார்த்தார். நண்பரோடு பேசிக்கொண்டு நின்ற அந்த இடத்தில் தான் அதனை விட்டிருக்க வேண்டும் என்ற துணிவு பிறந்தது. உடனே அதனைத் தேடிப் புறப்பட்டார். நல்ல காலமாக அந்தப் பை அங்கேயே கிடந்தது. அவருக்கு உண்டான மகிழ்ச்சிக்கு அளவில்லை.
பொருளை ஓரிடத்தில் வைத்து விட்டு மறந்தது, பின் அப்பொருளைப் பற்றிய நினைவு வந்தது என்ற இரண்டிற்கும் இடையே அவருக்கு ஏற்பட்ட பல நிலைகளை இங்கே காணலாம். முதலில் மயக்கநிலை, பின் ஒருவாறு தெளிந்த நிலை, செயலற்றுக் கலங்கிய நிலை, பின் அந்தப் பொருள் எங்கே, எப்படிப் போயிருக்கும்? என்று சிந்தித்த நிலை இந்த இடத்தில் தான் அதனை விட்டிருப்போம் என்ற நினைவு தோன்றிய நிலை என இப்படிப் பல நிலைகள் தோன்றியதைக் கண்டோம். இன்னொரு நிகழ்ச்சியைக் கூறுவோம். ஒரு நாள் நான் கடை வீதி வழியே சென்று கொண்டிருந்தேன். எதிரே அழகான சிறிய காரை ஓட்டிக் கொண்டு ஒருவர் வந்தார். நடுத்தர வயதிருக்கும். நல்ல எடுப்பான தோற்றம். உயர்ந்த நிலையில் இருப்பவராகத் தோன்றியது. என்னைக் கண்டவுடன் அவர் வண்டியை நிறுத்தி இறங்கினார். வணக்கம் செலுத்தினார். எனக்கு ஒன்றும் புரியவில்லை. அவர் இன்னார் என்பதும் தெரியவில்லை. திகைப்பே ஏற்பட்டது.
அவர் பேசத் தொடங்கினார். <உங்களை என்னால் என்றும் மறக்க முடியாது. உங்களால் தான் நான் இந்த நல்ல நிலைமைக்கு வந்திருக்கிறேன் என்றார். உடனே, அவர் என்னிடம் பயின்ற மாணவர் என்பது தெரிந்து போயிற்று. ஆனால், எப்பொழுது பயின்றார்? என்பது நினைவில் இல்லை. அவரது பெயரும் நினைவுக்கு வரவில்லை. பழைய நினைவுகளைக் குடைந்து பார்த்தேன். சட்டென்று அவரது பெயர் எனது நினைவில் தட்டுப்பட்டது. அதைத் தொடர்ந்து, அவருடைய பழைய உருவம், படித்த காலத்தில் அவர் செய்த குறும்புகள் முதலியவையெல்லாம் பளிச்சென்று தெரிந்தன. முதலில் அவர் இன்னார் என்றே தெரிந்து கொள்ள முடியாமல் இருந்தேன். சிறிது நேரம் திகைத்து நின்றேன். பிறகு சிறிது சிறிதாகத் தெளிவு பிறந்தது. அவரைப் பற்றிய பல செய்திகளை நினைவுக்குக் கொண்டு வர முடிந்தது. ஒரு பொருளை அறியுமிடத்தில் உயிருணர்வில் இப்படிப் பல நிலைகள் தோன்றும். இவையெல்லாம் விழிப்பு நிலையிலே ஏற்படுகிற பல நிலைகளாகும். சுருங்கச் சொன்னால், விழிப்பு நிலையில் மாறி மாறி வரும் நினைப்பும் மறப்புமே இவை எனலாம். கருவிகள் கூடியும் குறைந்தும் செயற்படுவதனால் நினைப்பும் மறப்பும் உண்டாகின்றன. அறியாமையைக் கேவலம் என்றும், அறிவு நிலையைச் சகலம் என்றும் முன்னே குறிப்பிட்டோம். மறப்பு என்பது அறியாமை தானே. அதனால் மறப்பு கேவலம் எனப்படும். அறிவு நிலையாகிய நினைப்பு சகலம் எனப்படும். உயிர் நாள்தோறும் இடையறாது வரும் நினைப்பும் மறப்பும் ஆகிய சகல கேவலங்களிற் பட்டுச் சுழலும்.
இரவும் பகலும் :
மெய்ந்நூல்கள் கேவலத்தை இரவு என்ற குறியீட்டினால் உணர்த்தும்; சகலத்தைப் பகல் என்ற குறியீட்டினால் உணர்த்தும். வெளியுலகில் இரவும் பகலும் மாறி மாறி வருதல் போல உயிருணர்வில் கேவலமும், சகலமும் ஆகிய - மறப்பும், நினைப்பும் ஆகிய இரவு பகல் மாறி மாறி வருகின்றன. இதனை விளங்கும் படியாகச் சொன்னால், உயிர் ஐம்பொறி முதலிய கருவிகளின் வசப்பட்டு நின்று, உலகப் பொருள்களை அறிந்து, அந்தப் புலன் <உணர்வில் அழுந்தி நிற்கும் என்பதாகும். உயிர் புலனுணர்வில் மயங்கி நிற்கும் போது தன்னியல் பையும் அறிய மாட்டாது. தன்னுள் இருந்து இயக்கும் தலைவனையும் அறிய மாட்டாது.
கருவிகளை நீங்குதல் :
கருவிகளின் இயல்பு என்ன வென்றால், அவை உயிரியல்பை உணரவிடாமற் செய்து தம்மையே காட்டி நிற்கும். ஓர் எடுத்துக்காட்டுக் கூறினால் இது விளங்கும். பளிங்கின் மேல் பல நிறங்களைத் தீட்டி வைத்தால் அவ்வேற்று நிறங்கள் பளிங்கின் ஒளியைத் தெரிய விடாமல் மறைக்கும்; தம்மையே பளிங்கின் நிறமாகக் காட்டி நிற்கும். அதுபோல <உயிரைப் பொருந்திய ஐம்பொறி முதலிய கருவிகள் உயிரியல்பை உணர்த்தாது, தம்மால் கவரப்பட்ட புலன்களின் உணர்வையே தோற்றுவிக்கும். உயிர் அப்புலனுணர்வில் மயங்கித் தன்னியல்பை மறந்து நிற்கும். உயிர் பக்குவமுற்ற காலை ஞானாசிரியரின் உபதேசத்தைப் பெற்றுக் கருவிகளைத் தன்னின் வேறாகக் கண்டு நீங்கும். கருவிகளை விட்டு நீங்குவது எப்படி? என்று கேட்கலாம். பிடிக்காத வீட்டை விட்டு நீங்கி வேறு இடத்திற் குடிபுகலாம். வேண்டாத மனைவியைக் கூட விட்டு விலகலாம். ஆனால் எப்போதும் உடனாகவே வருகின்ற இந்த உடம்பையும் கருவிகளையும் விட்டு எப்படி நீங்க முடியும்? என்று வினவலாம். இங்கே நீங்குதல் என்றால் இடத்தால் நீங்குதல் அன்று; அறிவால் நீங்குதலாகும். அஃதாவது கருவி கரணங்கள் நமக்கு வேறானவை என அறிவால் தெளியக் கண்டு அவற்றில் பற்றுச் செய்யாது நிற்பதே நீங்குதல் எனப்படும்.
திருவருளைச் சேர்தல் :
உயிருக்கு அமைந்த சார்புகள் இரண்டே. ஒன்று அசத்தாகிய சார்பு; பிறிதொன்று சத்தாகிய திருவருட் சார்பு. அசத்தாகிய கருவி கரணங்களின் சார்பு இடையில் வந்தது. ஆகலின் அஃது உயிருக்குச் செயற்கையான சார்பாகும். திருவருட் சார்பே என்றுமுள்ள இயற்கையான சார்பாகும். ஆதலால் மேற்கூறியவாறு செயற்கையாகிய கருவிகளின் சார்பு நீங்கிய பொழுதே உயிர் திருவருட் சார்பைப் பெற்று விடும். இங்கே ஓர் ஐயம் எழலாம். கருவிகள் நீங்கினால் உயிருக்குக் கேவலம் ஆகிய அறியாமையல்லவா உண்டாகும்? கருவிகள் நீங்கியதும் உயிர் உறக்கம், பேருறக்கம் முதலிய நிலைகளை அடைவது இதைத்தானே காட்டுகிறது. அப்படியிருக்க, உயிர் கருவிகளை நீங்கினால் திருவருளைச் சேரும் என்று கூறுவது எப்படிப் பொருந்தும் என்று கேட்கலாம். இவ்விடத்தில் ஒன்றைத் தெரிந்து கொள்ளல் வேண்டும். கருவிகள் சோர்வுற்றுத் தாமாகவே நீங்கும் பொழுது தான் உயிருக்கு அறியாமை உண்டாகும். அப்படியின்றிக் கருவிகள் நன்கு செயற்படினும், அவை நாமல்ல என்று கண்டு நீங்கினால், அவற்றின் வசப்படாமல், அவற்றில் பற்றுச் செய்யாமல் நின்றால்-உயிர் திருவருளையே சேர்வதாகும். உயிர் வியாபகப் பொருள். அதன் அறிவும் வியாபகமானது. இதுவே உயிரின் உண்மை நிலை. இந்த விரிந்த அறிவு கட்டு நிலையில் விளங்காமல் இருந்தது. அதன் அறிவை விளக்குவதற்காகவே கருவிகள் சேர்ந்தன. கருவிகள் சிறுமையுடையவை. அதனால், அவற்றால் விளங்குகின்ற அறிவும் சிற்றறிவாய் அமைந்தது. உயிர் கருவிகளை வேறாகக் கண்டு நீங்கித் திருவருளைச் சேரும் என்று அறிந்தோம். இந்நிலையில், உயிரறிவை விளக்குவது திருவருளேயன்றிக் கருவிகள் அல்ல. திருவருள் வியாபக அறிவாதலால் அதனால் விளங்குகிற உயிரறிவும் வியாபகத் தன்மையைப் பெறுகிறது. சிற்றறிவு நீங்குகிறது.
இரவு பகல் அற்ற இடம் :
இங்ஙனம் கருவிகளையும் அவற்றால் வரும் புலன் உணர்வுகளையும் நீங்கி உயிர் திருவருளைச் சேர்ந்து நிற்றலையே இரவு பகல் அற்ற இடத்தில் இருப்பதாக நூல்கள் கூறும். திருவருட் சார்பு இரவு பகலற்ற இடமாதல் எப்படி என்பதை நோக்குவோம். உயிர் திருவருள் ஒளியில் நிற்கும் போது ஒன்றையும் அறியாமையாகிய கேவலம் எப்படித் தலை காட்டும்? ஆகவே அது இரவு என்பது நீங்கிய இடம் ஆகிறது. அதுகாலை கருவிகள் செயற்பட்டுச் சிற்றறிவைத் தருமாயினும் திருவருளால் வியாபக அறிவு விளங்கிய பிற்பாடு அச் சிற்றறிவு என்ன பயனைச் செய்யும்? எல்லாவற்றையும் விளங்கக் காட்டும் சூரியவொளி வந்த பின்னர் எரிகின்ற விளக்கின் ஒளி போன்றது அச்சிற்றறிவு எனலாம். உயிர் பேரறிவாகிய திருவருள் ஒளியில் நிற்கும்போது சிற்றறிவாகிய சகலம் எப்படித் தலைக்காட்டும்? ஆகவே அது பகல் என்பது நீங்கிய இடம் ஆகிறது. இவ்வாறு திருவருள் ஞானத்தால் உயிருக்கு அறியாமையும் சிற்றறிவும் நீங்கி விடுதலால் திருவருட்பேறு இரவு பகல் அற்ற இடம் எனக் கூறப்படுவதாயிற்று.
திருவருளைச் சேர்தல் என்பதன் பொருள் :
நமக்கு இனியவராகிய ஒருவர் வேறோர் இடத்தில் இருந்தால், அவர்பால் சேர்வதற்கு நாம் அந்த இடத்திற்கு நடந்தோ வாகனத்திலோ செல்லுதல் வேண்டும். இஃது உடம்பின் செயல் ஆகும். திருவருளைச் சேர்தல் என்பது அப்படியன்று. திருவருள் வேறு எங்கோ, கண் காணாத இடத்தில் இல்லை. அஃது உயிரிலேயே உடனாக இருப்பது. அதனைச் சேர்தல் என்பது அதனை அறிதலேயாகும். எனவே இஃது அறிவின் செயலாகிறது. அறிதல் மூன்று வகையாய் நிகழும். பொதுவாக அறிதல், ஐயமாக அறிதல், தெளிவாக அறிதல் என்பன அவை. திருவருளை அறிதலிலும் இப்படி நிலைகள் நிகழும்.
ஐய நிலை :
ஞானாசிரியர் செய்த உபதேசத்தைக் கேட்டுச் சிந்தித்த காலத்தில் ஐம்பொறி முதலிய கருவிகளைத் தனக்கு வேறாகக் காணும் அறிவு ஐயமாக நிகழும். இந்த ஐய நிலையே ஆன்மதரிசனம் ஆகும். அது காலை கருவிகளை நீங்கியும், நீங்காமலும் நிற்கும் நிலையே உளதாகும். கருவிகளை நீங்கித் திருவருளை ஒருவாறு உணர்ந்தும் பின் திருவருளை மறந்து மீண்டும் கருவிகளோடு கூடி உலகத்தை அறிந்தும் இவ்வாறு அங்கும் இங்குமாய் அலமரும் நிலையே உளதாகும். பாசப் பற்று முற்றிலும் அறாத நிலையில் ஏற்படும் தடுமாற்றம் இது. ஊசற்கயிறு முற்றும் அறாத பொழுது ஊசற்பலகை கயிற்றிலும் நில்லாது தரையிலும் வீழாது நிற்பது போன்றது இது என முந்திய அதிகாரத்தில் குறிப்பிட்டோம்.
தெளிவுணர்வு :
சிந்தனையின் பயனாய் இந்த ஐயநிலை நீங்கித் தெளிவுணர்வு உண்டாகும். தெளிவுணர்வாவது, பொருட்சார்பும், உயிர்ச் சார்பும் ஆகிய பற்றுக்களை யெல்லாம் விடுத்துச் சிவத்தையே தனக்கு உயிராகத் தெளிந்து நிற்றல். இதற்குச் சான்றாக விளங்கும் ஒரு நிகழ்ச்சியைக் கூறுவோம். சிவனடியார்க்கு மகேசுரபூசை செய்து வணங்கும் முறைமையினை ஒருவர் மேற்கொண்டிருந்தார். அவரது மனைவியாரும் அதற்கு உறுதுணையாக நின்றார். அந்நியமப்படி அவர் ஒரு நாள் தம் வீட்டிற்கு வந்திருந்த அடியார்களை ஒவ்வொருவராக அணுகிப் பாதபூசை செய்தார். அவரது மனைவியார் பக்கத்தில் நின்று பாதம் விளக்க நீர் வார்த்து வந்தார். ஒரு சிவனடியார்க்குப் பாத பூசை செய்யும் முறை வந்தபோது அந்த அம்மையார் அவ்வடியவரை இனங் கண்டு கொண்டார். அவர் முன்னொரு சமயம் அவ்வீட்டில் பணி செய்த வேலையாள். இப்பொழுது அடியவர் கோலத்தில் வந்திருக்கிறார். இந்த எண்ணம் வந்ததும் அந்த அம்மையார் சற்றுத் தயங்கி நின்றார். பாத பூசையில் ஈடுபட்டிருந்த கணவர் அவரது மன ஓட்டத்தைத் தெரிந்து கொண்டார். இவ்வாறு எண்ணுவது இயல்புதானே என்று அவர் கொள்ளவில்லை. செய்தது மனைவிதானே என்று பொறுத்துக் கொள்ளவும் இல்லை. சிறிதும் கண்ணோட்டம் இன்றி வாளையெடுத்து அவரது கையை வெட்டினார். பின் பாத பூசையை முடித்து அடுத்த நிகழ்ச்சியாகிய அன்னம் பாலிப்பையும் தாமே நிறைவேற்றினார்.
எப்படிப்பட்ட உறுதி இது! சிவனடிப்பற்றையன்றி மற்றோர் பற்றில்லார் என்பதையல்லவா இது காட்டுகிறது. மனைவிக்கு இப்படி நேர்ந்து விட்ட பிறகும் மனங்கலங்காமல் சித்த சலனம் அடையாமல் சிவப்பணியை நடத்தி முடித்த இச்செயல், சிவத்தையன்றி வேறொன்றையும் பொருளாகக் கொள்ளாத அவரது தெளிவுணர்வைப் புலப்படுத்துவதாகும். இவ்வாறு திருவருளை முதலில் பொதுவாகவும், பின்னர் ஐயமாகவும், அதன் பின்னர்த் தெளிவாகவும் உணர்ந்த உயிர் அத்தெளிவுணர்வால் திருவருளை இறுகப் பற்றிக் கொள்ளும். திருப்பெருந்துறை இறைதாள் பூண்டேன்; புறம் போகேன்; இனிப்புறம் போகல் ஒட்டேனே என்று சொல்லும் நிலை இதுவாகும்.
திருவருளோடு ஒன்றாய் நிற்றல் :
முன்னே உள்ள ஐய நிலையில் உயிர் திருவருளுக்கு வேறாக நிற்கும். வேறாய் உள்ள வரையில் பாசப்பற்று முழுதுமாக நீங்குவதில்லை. தெளிய உணர்ந்த இந்நிலையில் உயிர்வேறாய் நில்லாமல் திருவருளோடு ஒன்றாய் நிற்கும். கயிறு முற்றும் அறப் பெற்ற ஊசற் பலகை தரையை அடைவது போலத் திருவருளைச் சேர்ந்து விடும். நான் என்னும் தற்போதத்தை இழந்து திருவருளுக்குள் அடங்கி நிற்கும். தன் செயலற்று அனைத்தையும் திருவருட் செயலாக உணரும்.
உயிர் விளக்கம் :
திருவருள் ஒளியில் மூழ்கி நிற்கும் இந்நிலையில் உயிரைப் பற்றியுள்ள மல இருள் முற்றிலும் நீங்கும். திருவருளும் சிவனும் கதிரும் கதிரவனும் போல்வர் என்பது நாமறிந்ததே. கதிரவன் காணப்படுவதற்கு முன்னே கதிர்கள் பரவி இருளை நீக்குதல் போலச் சிவனை அடைதற்கு முன்பே திருவருள் விளக்கம் ஏற்பட்டு மல இருள் நீங்கும் என அறியலாம். இதனால், இவ்வதிகாரம் திருவருட் பேற்றினைக் கூறுவது என்பதும், திருவருளால் மலமாகிய மாசு நீங்கி உயிர் தூய்மை பெறும் முறைமை உணர்த்துவதால் இதன்கண் கூறப்படும் நிலை ஆன்ம சுத்தி என்பதும், அது பற்றியே அப்பொருள்பட இவ்வதிகாரத்திற்கு உயிர் விளக்கம் எனப் பெயரிட்டார் ஆசிரியர் என்பதும் அறிதற்குரியன.
அதிகாரப் பொருள் நிலை :
இவ்வதிகாரத்தின் பொருள் நிலையைப் பின்வருமாறு தொகுத்து உணரலாம்.
தெளிவுணர்வால் திருவருளை இறுகப் பற்றிய உயிர் அத்திருவருளுக்கு வேறாய் நில்லாமல் அதனோடு ஒன்றாய் நிற்கும். வெயிலில் வந்தவன் குளிர்ந்த மர நிழலைக் கண்டபோது ஓடிச் சென்று அந்நிழலையடைந்து அதனுள் அடங்கி நின்று இன்புறுவதைப் போன்றது இது.
பித்தம் உள்ள நாவிற்கு இனிய பாலும் கசப்பாகத் தோன்றும். பித்தம் நீங்கிய பிறகு அதே நா பாலின் இனிய சுவையை அறியும். அதுபோல ஆணவ மலமாகிய நோய் இருக்கும் வரையில் ஆன்மாவுக்குத் திருவருள் வேண்டாத பொருளாகத் தோன்றும். மலநோய் தீர்ந்த முத்தி காலத்தில் அவ்வான்மாவுக்குத் திருவருள் இனிய உறவுப் பொருளாகத் தோன்றும். மலம் நீங்கிய உயிர் தனது <உண்மை இயல்பாகிய வியாபக அறிவைப் பெறும். அந்நிலையிலும் திருவருள் விளக்கவே, அதன் வியாபக உணர்வு விளங்குகிறது. இதனை உணராமல், திருவருளை மறந்து நானே எல்லாம் அறிகிறேன் எனவும், என்னால் எல்லாம் செய்தல் கூடும் எனவும், நானே பிரம்மம் எனவும் மயங்கி உணரும். மலம் நீங்கியும், மலவாசனை நீங்காத நிலையில் அதனால் உண்டாகின்ற யான் எனது என்னும் செருக்கினால் நிகழ்வது இது. இப்பேதைமை உணர்வு உயிருக்கு மாசு ஆகும். அதனை நீக்கித் தெளிவு பெறுதல் வேண்டும். திருவருள் ஒளியும் ஆணவ மலமாகிய இருளும் ஒரு வகையில் ஒற்றுமை உடையன. எவ்வாறெனில் ஆணவ இருளின் வயப்பட்ட வரும் தம்மை முழுதும் அறியாது கிடப்பர். அருளின் வயப்பட்ட வரும் தம்மை முற்றாக யிழந்து நிற்பர். மேலும் ஆணவ இருளில் உள்ளவர்க்கும் உலகம் புலப்படுவதில்லை. அருள் நிலையில் உள்ளவர்க்கும் உலகம் புலப்படுவதில்லை. அஃதாவது அவர்க்கு <உலகம் சிவமாய்த் தோன்றும். மாயா காரியப் பொருளாக அதனை அவர் பார்ப்பதில்லை என்பது கருத்தாகும்.
உலகச் சார்புகளை விடுத்துத் தன்னையே சார்பாக உணர்ந்து ஒழுகும் மெய்யன்பரை இறைவன் தாங்கிக் கொள்வான். தன்னையே விடாது பற்றி நிற்கும் குழந்தையை எடுத்துத் தாய் தன் இடுப்பிலும் தோளிலும் வைத்துச் சுமப்பது போலத் தன்னையே புகலாக அடைந்த அவ்வன்பரை இறைவன் எடுத்துச் சுமப்பான். அவர் எச்செயல் செய்யினும் அதனைத் தன் செயலாகக் கொண்டு வினைகள் அவரைச் சாராதவாறு காப்பான். பளிங்குத் தூண் காலையிலும் மாலையிலும் பிற பொருள்களின் நிழல்களைத் தன்னிடம் கொண்டிருக்கும். ஆனால், உச்சி வேளையில் அது சூரியவொளி ஒன்றையே முழுமையாகப் பெற்று நிற்கும். அந்நேரத்தில் பிற பொருள்களின் நிழல்களை அது பற்றாது. பகலவன் ஒளியில் மூழகி நிற்கும் அப்பளிங்குத் தூண் போல உயிர் பிற <உலக <உணர்வுகளைப் பற்றாமல் திருவருள் உணர்வு ஒன்றையே பற்றி நிற்குமாயின், மலவாசனை அடியோடு நீங்கும். இருளில் நடப்போர், முன்னே வழிகாட்டிச் செல்கின்ற தீப்பந்தத்தின் பின்னே செல்வது போல, உயிர் எச்செயலைச் செய்யினும் திருவருளை முன்னிட்டுத் தான் அதன் பின்னே நிற்க வேண்டும். திருவருளை முன்னிட்டுச் செய்தலாவது, நான் செய்கின்றேன் என்னும் முனைப்புச் சிறிதும் இன்றி, எல்லாம் உன்னுடைமையே; எல்லாம் உன் அடிமையே; எல்லாம் உன்னுடைய செயலே; நீ செய்விக்க நான் செய்கின்றேன்; நான் உன் கருவி மாத்திரமே; எனக்கென்று என்ன செயலிருக்கிறது? நீயே எல்லாம் என்று உண்மையாக உணர்ந்து செய்தலாகும். இதுவே அருள் வழி நிற்றல் ஆகும்.
கட்டு நிலையில் உயிர் திருவருளுக்கு வேறாய் நின்றது. அப்பொழுது ஆணவ மலமே முன் நிற்க, உயிர் அதன் வழிப்பட்டு நின்றது; நான் ஒரு முதன்மைப் பொருள் என்று கருதியது. தன் முனைப்போடு கூடிய முயற்சிகளைச் செய்து வினைகளை ஈட்டியது; மாயா காரியமாகிய உலகப் பொருள்களை அடையத் துடித்தது. முத்தி நிலையில் இந்நிலை அடியோடு மாறுகிறது. இப்பொழுது உயிர் திருவருளுக்கு வேறாய் இல்லை. நானே எல்லாம் என்ற பேதைமை உணர்வு நீங்கித் திருவருளே எல்லாம் என்ற தெளிவுணர்வைப் பெற்றுத் திருவருளோடு ஒன்றாய் நிற்கிறது. திருவருளை முன் நிறுத்தி உயிர் அதன் வழிப்பட்டு நிற்கிறது. நான் என்ற உணர்வு மாய்ந்து போன இந்நிலையில் ஆணவ மலத்திற்கு என்ன வேலை! அஃது உயிரிடத்தில் இருந்தும் இல்லையாகிறது. மனம் மொழி மெய்களால் யாதொன்று செய்யவரினும் அச்செயலைச் தன்செயலாக நினையாது திருவருட் செயலாக உணர்வதால் வினையும் இல்லையாகிறது. நெருப்பைக் கரையான் அரிக்க முடியுமா? அதுபோல், அருளைச் சார்ந்து அருளாய் நின்ற உயிரை மாயையின் காரியமாகிய தனுகரண புவன போகங்கள் மயக்கி ஆசைக் குழியில் வீழ்த்த முடியுமா? ஆகவே மாயையும் தோல்வியடைந்து நீங்குகிறது. இவ்வாறு மலம் மாயை கன்மம் ஆகிய மாசு படிந்திருந்த உயிர் திருவருள் ஞானத்தைப் பெற்று அம்மாசுகள் நீங்கித் தூய்மையடைந்து விளங்கும் மாட்சிமையை இவ்வதிகாரத்தில் காணுகின்றோம்.

கருத்துகள் இல்லை:

திருமூலர் திருமந்திரம் - 275 - விளக்கம்

பாடல் விளக்கம்: மெய்தான் அறியும் செழுங்கடல் வட்டத்துப் பொய்தான் மிகவும் புலம்பும் மனிதர்கள் மெய்தான் உரைக்கில்விண் ணோர்தொழச் செய்குவன் ம...