11. உயிர்களின் தொகை
பிறந்தநாள் மேலும் பிறக்கும்நாள் போலும்
துறந்தோர் துறப்போர் தொகை.
பொருள் : இதுவரையில் பற்று நீங்கி முத்தி பெற்றவர்கள் எத்தனை பேர் என்பதை எண்ணிச் சொல்லுதல் முடியாது. இது, உலகம் தோன்றிய காலந்தொட்டு இது வரையில் வந்துபோன நாட்களை எண்ணிச் சொல்வது போல முடியாத செயல். அவ்வாறே, இனிமேல் பற்று நீங்கி முத்தி பெற இருப்பவர்களின் எண்ணிக்கையையும் சொல்லுதல் முடியாது. இதுவும், உலகம் முடியும் வரை இனி மேல் வர இருக்கின்ற நாட்களை எண்ணி அறிய முயல்வது போல முடியாத செயலேயாகும்.
சொற்பொருள் :
துறந்தார் தொகை - பற்றினை நீக்கி வீடு பெற்றவர்களது எண்ணிக்கை
பிறந்த நாள் போலும் - அவர்கள் அதற்கு முன்னே பிறந்து, பிறந்து உலக வாழ்வில் உழன்ற நாட்களின் எண்ணிக்கை போன்றதாகும்.
துறப்போர் தொகை - இனிமேல் வீடு பெற இருப்பவர்களது எண்ணிக்கையும்
மேலும் பிறக்கும் நாள் போலும் - அவர் வீடு பெறுங்காறும் மேலும் மேலும் பிறந்து உழல வேண்டிய நாட்களின் எண்ணிக்கை போன்றதாகும். (அஃதாவது, எண்ணிக்கை சொல்ல இயலாது என்பது கருத்து.)
விளக்கம் :
உலகில் எண்ணற்ற உடம்புகள் காணப்படுகின்றன. புல் பூண்டுகள் பயிர்கள், மரம் செடி கொடிகள் ஆகிய உடம்புகளில் உள்ள உயிர்கள்தாம் எத்தனை! இவை தவிர நிலத்தில் ஊரும் உடம்புகள், நீரில் இயங்கும் உடம்புகள், பறவை விலங்கு மக்கள் உடம்புகள் எனப் பல்வேறு வகையாகக் காணப்படும் உடம்புகளில் வாழும் உயிர்கள் தாம் எத்தனை எத்தனை! அவற்றைக் கணக்கிட முடியாது என்பதனாலே உயிர்கள் எண்ணிறந்தன என்று பொதுவாகச் சொல்லப்படுகிறது.
முடியாமைக்கு உவமை :
ஆசிரியர் உமாபதிசிவம் இச்செய்யுளில் உயிர்கள் எண்ணிலடங்கா என்பதைச் சொல்ல வருகிறார். அதனை ஒரு புதிய முறையில் சொல்கிறார். நம் மனத்தில் நன்கு பதியும்படி சொல்கிறார். முத்தி பெற்றவர் எண்ணிக்கையும், இனிப் பெற இருப்பவர் எண்ணிக்கையும் கணக்கிட்டுச் சொல்லு<தல் முடியாது. அம்முடியாமைக்கு உவமை சொல்லு<கிறார். இதுவரை உலகில் வந்து சென்ற நாட்களையும், இனிமேல் வரப் போகின்ற நாட்களையும் யாரேனும் கணக்கிட்டுச் சொல்ல முடியுமா? இம் முடியாமை போன்றது அம் முடியாமை என்கிறார்.
மக்கள் மேல் வைத்துக் கூறுதல் :
இங்கே ஒன்றை அறிதல் வேண்டும். ஆசிரியர் மக்களாகிய உயிர்களை மட்டுமே எடுத்துக் கொண்டு துறந்தோர் துறப்போர் தொகை என்று கூறுகிறார். வீடு பேற்றிற்கு வழியாய் இருப்பது பெரும்பாலும் மக்கட் பிறப்பே யாதலின் இங்கு மக்கள் மேல் வைத்துக் கூறினார் எனலாம். ஆயினும் அனைத்து உயிர்களையும் ஒரு சேரத் தொகுத்து அவை எண்ணில என்று ஓதுதலே அவர்க்குக் கருத்தாகும். இறுதியில் நின்ற தொகை என்ற சொல்லை நான்கு இடங்களிற் கூட்டி, துறந்தோர் தொகை பிறந்த நாள் தொகை போலு<ம்; துறப்போர் தொகை மேலு<ம் பிறக்கு நாள் தொகை போலும் என அமைத்துக் கொள்ள வேண்டும்.
துறப்போர் என்று கூறிய காரணம் :
மக்களை இரு திறத்தினராகப் பாகுபாடு செய்கிறார் ஆசிரியர். ஒரு வகையினர் முன்னரே முத்தி பெற்று விட்டவர்கள். இன்னொரு வகையினர் முத்தி பெறாமல் எஞ்சியுள்ளவர்கள். முத்தி பெற்றவரைத் துறந்தோர் எனக் குறிப்பிட்டது போல் முத்தி பெறாமல் இருப்பவரைத் துறவாதோர் என்றுதானே குறிப்பிட வேண்டும். ஆயின் ஆசிரியர் அவ்வாறு குறிப்பிடவில்லை. எஞ்சியிருப்பவரைத் துறப்போர் என்கிறார். இவரெல்லாம் இனிமேல் முத்தி பெறுதற்கு உரியவர்கள் என்ற கருத்தில் அப்படிக் குறிப்பிடுகிறார். துறவாதோர் என்ற சொல்லைப் பயன்படுத்தினால், அவர்கள் முத்தி பெறுவார்களோ, மாட்டார்களோ என்ற ஐயம் எழுவதற்கு இடம் ஏற்படும் அல்லவா? சில உயிர்களுக்கு முத்தி என்பதே கிடையாது என்றும், மீளா இருளுலகிலேயே அவை கிடக்கும் என்றும் கூறுகிற சமயங்கள் உண்டு. சைவ சித்தாந்தம் அவ்வாறு கூறுவதில்லை. எல்லா வுயிர்களுக்கும் முத்தி உண்டு. இன்று இல்லையேனும் வருங் காலத்தில் என்றேனும் எஞ்சியுள்ள எல்லா வுயிர்களும் வீடு பெற்றே தீரும் என்று உறுதியாகக் கூறுகிறது சைவ சித்தாந்தம். அந்த உறுதி பற்றியே உமாபதிசிவம் எஞ்சியுள்ளவர்களும் இனிமேல் முத்தி பெறுவார்கள் என்ற நம்பிக்கையோடு அவர்களைத் துறப்போர் என்று குறிப்பிடுகிறார் என்று கொள்ளலாம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக