100. உலகின்மேல் கருணை
கள்ளத் தலைவர் துயர் கருதித் தம்கருணை
வெள்ளத்து அலைவர் மிக.
வெள்ளத்து அலைவர் மிக.
பொருள் : உலக மாந்தர் இறைவனை மறந்து தம்மையே தலைவராகக் கருதி நான் எனத் தருக்கி வாழ்வர். அத்தருக்கினால் விளைவது வினையாகும். அவ்வினையினால் விளைவது துன்பமே யாகும். இவ்வாறு மாந்தர் தம் அறியாமையினால் படும் துன்பத்தைக் கண்டு ஞானிகள் அவர் மீது இரக்கம் கொள்வர். அவ்இரக்க மிகுதியால், அவர் கேட்பினும் கேளாது போயினும், அவர்க்கு உண்மையினை எடுத்துரைக்க முற்படுவர். கனிவாகவும் சில சமயங்களில் கடுமையாகவும் அறிவுரை கூறுவர். இவ்வாறு சிவனை அணைந்தோர் சிவனைப் போலவே பேரருள் உடையவராய் இருந்து உலகிற்கு உய்யும் நெறி காட்டுவர்.
சொற்பொருள் :
கள்ளத் தலைவர் - எச்செயலுக்கும் தம்மையே தலைவராகக் கருதி, இறைவனுக்குரிய தலைமையைத் தமதாக்கித் கொள்ளுகின்ற அறியாமையை உடைய <உலக மாந்தர்
துயர் கருதி - அவ்வறியாமை காரணமாகப்படும் துன்பத்தை எண்ணி
தம் கருணை வெள்ளத்து - (சிவனை அணைந்தோராகிய ஞானிகள்) தமது இரக்க மிகுதியால்
மிக அலைவர் - மிகவும் பரிவுகொண்டு உய்யும் நெறியைக் காட்ட முற்படுவர்.
விளக்கம் :
சிவத்தை அணைந்து இன்புறுபவர்கள் மற்ற மாந்தரைப் போலவே உடம்புடன் உலகில் வாழ்கிறார்கள். அவர்களுக்கு இரண்டு நிலைகள் உண்டு. ஒன்று, இந்த உலகையும் உடலையும் மறந்து இன்பத்தில் தோய்ந்திருக்கும் நிலை. மற்றொன்று, அந்த நிலையிலிருந்து மீண்டு உலக நினைவுக்கு வரும் நிலை. முன்னைய நிலை பேசாத மோன நிலை; ஆனந்த நிலை. பின்னைய நிலை அருள் நிலை; உலக நினைவுக்கு வந்து பேசும் நிலை. பேசுகிற நிலைக்கு வரும் போது அவர்கள் தாம் பெற்ற சொல்லொணாத இன்ப அனுபவத்தினை உலகத்திற்கு உணர்த்தி நிற்பர். மேலும் உலகத்தார் நிலையைக் காணும்போது அவர்கள் மேல் கருணை கொண்டு அறிவுறுத்த முற்படுவர். அவர்கள் உள் முகமாக ஒன்றி நுகர்ந்த அனுபவத்தை வெளிமுகத்துக்கு வந்து கூறும்போது தாம் பெற்ற இன்பத்தைப் பெருமித உணர்ச்சியோடு பேசுவார்கள். பருந்து தன் இரு சிறகுகளையும் விரித்து எல்லையற்ற வானத்தில் எந்தப் பறவையும் செல்லாத உயரத்தில் பறந்து மிதப்பதைப் போன்றது அந்த நிலை. இனி உலகத்தார் படுந்துன்பங்களை உளங்கொண்ட போது அவர்கள் உள்ளத்தில் கருணை பிறக்கும். அப்போது மக்களைப் பார்த்துப் பயனற்ற வழியில் செல்லாதீர்கள்; இப்படிச் செல்லுங்கள் என்ற உபதேசம் பிறக்கும்.
புகழும் செல்வமும் சேர்த்த மருத்துவர் ஒருவர் நோயாளிக்கு என்று பெரிய மருத்துவமனை கட்டியிருப்பார். தனக்கு என்று தனியே ஒரு மாளிகையை அமைத்துக் கொண்டிருப்பார். தன்னுடைய வளமனையில் இருக்கும்போது அவர் அங்குள்ள வசதிகளை அனுபவித்துக் கொண்டு கவலையின்றியிருப்பார். அவரைப் பார்த்தால் மருத்துவர் என்றே சொல்ல முடியாது. அவரிடம் மருத்துவருக்குரிய கோலத்தைப் பார்க்க முடியாது. கழுத்திலே கருவியை மாட்டியிருக்க மாட்டார். கையிலே மருந்துச் சீட்டு வைத்திருக்க மாட்டார். ஒரு செல்வரைப் போலத் திகழ்வார். அவரே மருத்துவமனைக்கு வந்து விட்டால் அவர் நிலையே வேறாக இருக்கும். அவரது கருத்தெல்லாம் நோயாளிகளின் மீதே இருக்கும். நோயின் தன்மையைக் கண்டறிந்து அவரவர் நிலைக்குத் தகுந்தபடி மருந்து எழுதிக் கொடுப்பதிலேயே அவர் மூழ்கியிருப்பார். அந்த மருத்துவரைப் போலச் சீவன் முத்தராகிய ஞானிகளும் திருவருள் இன்பமாகிய மாளிகையிலேயே எப்பொழுதும் திளைத்திருக்க மாட்டார்கள். உலகமாகிய மருத்துவமனையில் நடமாடும் நோயாளிகளைக் குணப்படுத்த வருவார்கள். அவர்களுக்கு நன்மை செய்ய வேண்டும் என்ற கருணையினால் உபதேசம் என்ற நன் மருந்தினைத் தருவார்கள்.
ஞானசம்பந்தப் பெருமான் அப்படிப்பட்டவர். இம்மையிலே இன்பமாய் வாழலாம் என்பதைப் பல இடங்களில் வலியுறுத்தி மக்களுக்கு நம்பிக்கை யூட்டியவர். உங்களுக்கு உடற் பிணி தீர வேண்டுமா? திருக்கானப்பேர் என்ற தலத்திற்குச் சென்று வழிபாடு செய்யுங்கள் என்கிறார் அவர். யார் போனாலும் உறுபிணியைப் போக்கிக் கொள்ள முடியுமா? எனில், போய் வழிபடுகிற முறையிலே வழிபட்டால் பயன் உண்டாகும். கைகளிலே வெறும் மலர்களை எடுத்துச் சென்றால் போதாது. உள்ளத்தில் ஞானமாகிய மலரை ஏந்திச் சென்று பூசிக்க வேண்டும். ஞான மலர் என்பது என்ன? திருக்கானப் பேர் இறைவனே நமக்கு எல்லாம் தருபவன் என்ற உறுதி வரவேண்டும்; அவன் பிறவி நோயையே போக்கவல்ல பெருமான். அவன் உடம்பில் உற்ற பிணியையும் கெடும்படி செய்வான் என்ற தெளிவு வரவேண்டும். இந்தத் தெளிந்த அறிவே ஞானம். அதுவே ஞானமலர். அந்த மலரோடு சென்று, மனம் பொருந்திச் செய்யும் வழிபாடே நற்பயனைத் தரும்.
மானமா மடப்பிடி வன்கையால் அலகிடக்
கானமார் கடகரி வழிபடும் கானப்பேர்
ஊனமாம் உடம்பினில் உறுபிணி கெட எண்ணின்
ஞானமா மலர் கொடு நணுகுதல் நன்மையே.
அணைந்தோராகிய பெருமக்கள் உலகின் மேல் கருணை கொண்டு அறிவுறுத்த முற்படுவர் என்பதனை இது போலும் திருமொழிகளான் உணரலாம்.
-திருச்சிற்றம்பலம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக