வெள்ளி, 4 ஜூன், 2021

ஐந்தாம் தந்திரம் - 17. புறச்சமய தூடணம்

ஐந்தாம் தந்திரம் - 17. புறச்சமய தூடணம்

பண் :

பாடல் எண் : 1

ஆயத்துள்நின்ற அருசம யங்களும்
காயத்துள் நின்ற கடவுளைக் காண்கில
மாயக் குழியில் விழுவ மனைமக்கட்
பாசத்துள் உற்றுப் பதைக்கின்ற வாறே.

பொழிப்புரை :

முதுநூல்களின் கூற்றை அறவே புறக்கணித்து, முழுதும் தம் அறிவைக் கொண்டே ஆராய்தலாகிய அத்தொழிலில் நிற்கின்ற புறச்சமயங்கள் புறப்பொருள்களை எவ்வளவு ஆராய்ந் துணரினும், அவ்வாராய்ச்சி அறிவினுள்தானே உள்ள கடவுளைக் காணமாட்டாதனவாகின்றன. அதனால், அவை பொய்ம்மையாகிய குழியில் வீழ்ந்து கெடுவன ஆகின்றன. ஆகையால், அவையெல்லாம் மனைவி மக்கள் முதலாகிய தளையில் அகப்பட்டுத் துன்புறுதற்கான வழிகளேயாகும்.

குறிப்புரை :

`அறுசமயத்தவர் காண்கிலர், விழுவர்` என்பனவும் பாடம். `அதனுள்` என்பதில் அன்சாரியை தொகுத்தல் பெற்றது, அறிவுள் நிற்பவனை ஒற்றுமைபற்றி உடலுள் நிற்பவனாக ஓதினார். முன்னும், பின்னும் பல இடங்களில் இவ்வாறே ஓதுதல் காண்க. மாயம் - பொய்; இங்கு மயக்கத்தைக் குறித்தது. ``பதைக்கின்ற ஆறே`` என்னும் பயனிலைக்கு, `அவை` என்னும் எழுவாய் வருவித்துக் கொள்க.

இதனுள் `ஆய்தல்` என்பது `சிவனே முதற்கடவுள்` என்னும் சைவத்தின் துணிபை முற்றாகவும், ஒருவாறாகவும் மறுத்துக் கூறுதலை ஆதலின், அச்செயலையுடையன மேற்கூறிய மதங்களேயாதல் அறிக. ஈற்றடியில் சகரமும் போலிவகையால் இன எதுகையாம். அன்றி, `உயிரெதுகை பெற்றது எனினும் அமையும்`.

இதனால், புறச் சமயங்கள் சிவனது முதன்மையைச் சிறிதும் உணராதனவும், முற்ற உணராதனவுமாய்க் கேடுபயத்தல் கூறப்பட்டது.


பண் :


பாடல் எண் : 2

உள்ளத்து ளேதான் உகந்தெங்கும் நின்றவன்

வள்ளற் றலைவன் மலருறை மாதவன்

பொள்ளற் குரம்பைப் புகுந்து புறப்படும்

கள்ளத் தலைவன் கருத்தறி யார்களே.

பொழிப்புரை :

உயிர்க்கு உயிராய் அவற்றின் அறிவில் பொருந்தி யிருத்தலை விரும்பி, அண்டத்தில் உலகெங்கும் நிறைந்தும், பிண்டத்தில் உள்ளக்கமலத்தில் தியானப்பொருளாய் விளங்கியும் நிற்பவனும், அருள் வள்ளலும், அனைத்துலகிற்கும் தலைவனும், பொள்ளல் நிறைந்த உடலில் உயிர்ப்பாய், உட்புகுதல் வெளிவருதல் களைச் செய்தும் உயிர்களால் அறியப்படாது மறைந்து நிற்பவனும் ஆகிய முதற்பெருங்கடவுளாம் சிவபெருமானைப் புறச் சமயிகள் தங்கள் கருத்தில் கொள்ளமாட்டாதவர்களாகின்றனர்.

குறிப்புரை :

`இஃது அவர் வினை யிருந்தவாறு` என்பது குறிப் பெச்சம். `எங்கும் நிற்றல் முதலிய பலவற்றிற்கும் உயிர்கள்மீது வைத்த கருணையே காரணம்` என்றற்கு, உள்ளத்துள்ளே நிற்றலை விரும் பினமையை முதற்கண் தனிப்பட எடுத்து ஓதினார். ``உள்ளம்`` என்பது அறிவைக் குறித்தது என்னை? ``மலர்`` எனப் பின்னர் இதயத்தைக் குறித்தலின். ``தவம்`` என்றது தியானத்தை. தவன் - தவத்தால் அடையப்படுபவன். புகுதல் புறப்படுதல்களைக் கூறினமையின், அஃது உயிர்ப்பாதல் விளங்கிற்று.

``என்னு ளேஉயிர்ப் பாய்ப்புறம் போந்துபுக்

கென்னு ளேநிற்கும் இன்னம்ப ரீசனே`` 1

என்று அருளினமையும் இங்கு நோக்கத்தக்கது. இறைவன் உயிர்களின் உயிர்ப்பாய் நிற்றல். அவை உடலொடு நிலைத்து நின்று, அந்தக் கரணங்களின்வழி வினைகளை நுகர்ந்தும், ஈட்டியும் வருதற் பொருட்டாம். உயிர்ப்பு இதயத்துடிப்பின் வழித்தாதலையும், இறைவன் இதய வெளியில் ஆடுபவனாகக் கூறப்படுதலையும் இங்கு நினைக்க. இங்ஙனம் உயிர்ப்பாய் உள்ளவனை அறியமாட்டாதவர் தங்களை அறிவராக (ஞானியராக)ச் சொல்லிக்கொள்ளுதல் நகை விளைப்பது என்பதாம். `தலைவனை` என்னும் இரண்டனுருபு தொகுத்தல் பெற்றது.

இதனால், புறச்சமயிகள் உண்மை ஏதுக்கள் பல இருப்பவும் அவற்றைக்கொண்டு உண்மையைக் கருதியேனும் உணர மாட்டாதவ ராயிருத்தல் கூறப்பட்டது.


பண் :


பாடல் எண் : 3

உள்ளத்தும் உள்ளன் புறத்துளன் என்பவர்க்

குள்ளத்தும் உள்ளன் புறத்துளன் எம்மிறை

உள்ளத்தும் இல்லை புறத்தில்லை என்பவர்க்

குள்ளத்தும் இல்லை புறத்தில்லை தானே.

பொழிப்புரை :

எங்கள் இறைவனாகிய சிவபெருமானை அகச் சமயிகள் பொதுவாகவும், சிறப்பாகவும், `அகம், புறம்` என்னும் இரண்டிடங்களிலும் உள்ளவனாக அறிந்து, இயன்ற அளவில் அவனை அணுக முயல்கின்றனர். அவர்கட்கு அவன் அவர்களது தகுதிக்கு ஏற்ப அவ்விடங்களில் ஏற்ற பெற்றியால் அகப்படுகின்றான். புறச்சமயிகள் அவனை `எவ்விடத்திலும் இலன்` எனக் கூறிப் பிணங்கு கின்றார்கள், அவர்கட்கு அவன் அவற்றுள் ஓரிடத்தும் காணப்படுதல் இல்லை.

குறிப்புரை :

``உண்மையுமாய் இன்மையுமாய்``1 என்ற திரு வாசகத்திற்கும் இதுவே கருத்தாதல் அறிக. நான்கிடத்தும் ``புறத்தும்`` என்னும் எச்ச உம்மை தொகுத்தல் பெற்றது. தான், அசைநிலை, ஏகாரம், தேற்றம்.

இதனால், புறச்சமயிகள் அச்சமயத்தை விட்டு அகச்சமயம் புகுந்தன்றி உய்யமாட்டாமை கூறப்பட்டது.


பண் :


பாடல் எண் : 4

ஆறு சமயமும் கண்டவர் கண்டிலர்

ஆறு சமயப் பொருளும் அவனலன்

தேறுமின் தேறித் தெளிமின் தெளிந்தபின்

மாறுதல் இன்றி மனைபுக லாமே.

பொழிப்புரை :

புறச்சமயங்கள் ஆறனையும் தோற்றுவித்தவர்கள் மெய்ப் பொருளைக்கண்டு அதனைப் பிறருங் காணவழி கூறினா ரல்லர். அதனால் சிவன் அந்த ஆறுசமயப்பொருளில் ஒன்றேனும் ஆயிற்றிலன். இந்த உண்மையை, உலகீர், தெளிமின்கள்! நன்கு தெளி மின்கள்!! தெளிந்தீர்களாயின், அதன்பின் தவற்றின் நீங்கி, நேர் வழியை அடைந்து, வீடு பெறுதல் கூடும்.

குறிப்புரை :

``சமயம்`` என்றது இங்குப் புறச் சமயத்தையே யாதல் வெளிப்படை. காணுதல் - உணர்தல். அதுபின் பிறர்க்கு உணர்த்தி யதனைக் குறித்தது. இனி, ``சமயம்`` என்றதனை ஆகுபெயராக்கி, `அவற்றை உணர்ந்தும்நூலை ஆக்கியவர்` என்று உரைப்பினும் ஆம். இச் சமயத்தவரும். இவர்தம் நூல்களும் பசுக்களும், பசு வாக்கியங் களும் ஆதலின், அவராலும் அவர்தம் நூலாலும் மெய்ப்பொருள் பற்றப்படாதாயிற்று.

``இருமுச் சமயத் தொருபேய்த் தேரினை

நீர்நசை தரவரு நெடுங்கண் மான்கணம்

தவப்பெரு வாயிடைப் பருகித் தளர்வோடும்

அவப்பெருந் தாபம் நீங்கா தசைந்தன`` 2

எனவும்,

``சடங்கொண்ட சாத்திரத்தார் சாக்கியர் சமண்குண்டர்

மடங்கொண்ட விரும்பியராய் மயங்கிஓர் பேய்த்தேர்ப்பின்

குடங்கொண்டு நீர்க்குச்செல்வார்`` 1

எனவும் போந்த திருவாக்குகளும் புறச்சமயங்கள் மயக்க உரைக ளாதலை விளக்குதல் காண்க.

``அவன்`` என்றது, மேல், ``எம் இறை`` என்றதனைச் சுட்டிற்று. ``தேறித் தெளிமின்`` என்றது ஒருபொருட் பன்மொழி மறித்தும் இவ்வாறு கூறியது வற்புறுத்தற் பொருட்டு. மாறுதல் - நெறியின் நீங்குதல். `அஃது இன்றி` எனவே, நேர்வழியைப் பற்றுதல் பெறப்பட்டது. `வீடு` என்பது இல்லத்திற்கும் பெயராய் வழங்குதலின், அச் சொல் நயம் பற்றி ``மனைபுகலாமே`` என்றார். `வழி தவறிச் சென்று காடு மேடுகளில் அலையாமல், நேர்வழியைக் கண்டு, அதன் வழி விரைவில் இல்லத்தை அடைந்து இன்பறலாம்` என்பது நயம். இங்கு, ``அவன் அலன்`` என்று, சிவமாய் விளங்காமையை ஆதலின், ``அறுவகைச் சமயத் தோர்க்கும் அவ்வவர் பொருளாய்`` 2என்றாற் போல்வன இதனொடு மாறுகொள்ளாமை அறிக.

இதனால், புறச் சமயங்கள் வீடாகிய பேரின்பத்தைப் பயவாமையே யன்றிப் பிறவியாகிய பெருந்துன்பத்தை மிகுவித்தல் கூறப்பட்டது.


பண் :


பாடல் எண் : 5

சிவமல்ல தில்லை இறையே சிவமாம்

தவமல்ல தில்லை தலைப்படு வார்க்கிங்

கவமல்ல தில்லை அறுசம யங்கள்

தவமல்ல நந்திதாள் சார்ந்துய்யும் நீரே.

பொழிப்புரை :

சிவம் அல்லது வேறு பதிப்பொருளும், சிவமாம் பயனைத் தருகின்ற தவம் அல்லது வேறு தவமும் இல்லை. ஆறாகக் கூறப்படுகின்ற புறச்சமயங்கள் தம்மை அடைந்தவர்க்கு இவ்வுலகில் வீண் முயற்சியாவதன்றி வேறு இல்லை. அதனால், அவை தவமாதல் இல்லை. ஆகையால் மெய்ப்பொருளை அடைய விரும்புகின்ற வர்களே, நீங்கள் சிவபெருமானது திருவடியைச் சார்ந்து பிழை மின்கள்.

குறிப்புரை :

`சிவம் அல்லதில்லை அறையே` என்பது பாடமாயின், `சிவம்` என்பதன்றிப் `பொருள் பொதிந்த சொல் வேறில்லை` என உரைத்து, `சிவமன்றி வேறு மெய்ப்பொருள் இல்லை` என்பது அதனாற் போந்த பொருளாகக் கொள்க. ``சிவமாந் தவம்`` என்பதில், பெயரெச்சம், `நோய் தீரும் மருந்து` என்பது போலத் `தவமல்லது இல்லை தவம்` என ஒருசொல் வருவிக்க, ``அவம்`` என்பதன்பின், `ஆதல்` என்பது எஞ்சிநின்ற கருவிப் பெயர் கொண்டது. `அவை தவமல்ல` என எழுவாய் வருவித்துக்கொள்க. ``நீர்`` என்றது உண்மையைத் தலைப்பட விரும்பினோரையாதலின், அவரே விளிக்கப்படுவாராயினர். ``சிவத்தைப் பேணின் தவத்திற் கழகு`` 1 என்றார் ஔவையாரும்.

இதனால், புறச் சமயம் வேறு முயற்சியைப் பயத்தலல்லது` பயன் தாராமை கூறப்பட்டது.


பண் :


பாடல் எண் : 6

அண்ணலை நாடிய ஆறு சமயரும்

விண்ணவ ராக மிகவும் விரும்பியே

முண்ணின் றழியும் முயற்றில ராதலின்

மண்ணின் றொழியும் வகைஅறி யார்களே.

பொழிப்புரை :

சிவபிரானை இகழாது போற்றுகின்ற அகச் சமயங்கள் ஆறிலும் நிற்போர் அவ்வச்சமயக் கடவுளரது உலகத்தை அடைந்து இன்புற்றிருக்க, புறச் சமயிகள் அவற்றை விடுவித்துப் பிற விண்ணுலகங்களை அடைதலை மிகவும் விரும்பி, வினைக்கட்டி னின்றும் வெளிப்படமாட்டாது, அதனுள் நின்றே அழிகின்ற அவச் செயலாதலால், அவர்கள் பிரகிருதிக்கு மேல் செல்லும் வழியை அறியாதவர்களேயாவர்.

குறிப்புரை :

`ஆறு சமயமும்` என்பது இரட்டுற மொழிதலாய், `வேறு விண்ணவர் ஆக` எனப்பொருள் தந்து, ``மிகவும் விரும்பியே`` என்பத னோடும் இயைந்தது. ``முள்`` என்றது முட்புதரை. `வினையைக் காடாக உருவகித்துக் கூறலும் மரபு` என்பது, ``நெறியைப் படைத்தான் நெருஞ்சில் படைத்தான் ... ... ... 2 என இதனுட் பின் வருதலும், ``இருவினை மாமரம்``3 என்றமையும் போல்வன பற்றி உணர்க. முயற்று - முயற்சி; என்றது தவத்தை யாகலின், `அதனை யிலர்` என்றது. அவச்செயலை உடையாராதலைக் குறித்தது. ``மண்`` என்றது அது முதல் பிரகிருதிகாறும் உள்ள தத்துவங்கட்கு உபலக்கணமாய், அவ்வத் தத்துவ புவனங்களின் மேல் நின்றது.

அகச்சமயம் ஆறாவன:- பாசுபதம், மாவிரதம், வைரவம்` சாத்தம். காணாபதீயம், கௌமாரம் என்பன. காபாலமும், காளா முகமும், பாசுபதம், மாவிரதம் என்பவற்றுள்ளே அடங்கும். `சாத்தம்` என்றது சுத்த சாத்தத்தையே; வாம மதத்தையன்று. இம்மதங்களில் நிற்போர் சிவதீக்கை பெறுதலில்லையாயினும், உருத்திரன் முதலி யோரைச் சிவனது மூர்த்தி பேதங்களாகக்கருதி வழிபடுதலும், சிவனைத் தேவருள் ஒருவனாக வைத்து இகழ்தல் இன்மையும் உடைய ராகலின். இவரை ``அண்ணலை நாடியசமயர்`` என்றும், இவர் பிர கிருதிக்கு மேல் உள்ள சீகண்ட வுருத்திரர் முதலிய உருத்திரலோகங் களை அடைவர் ஆகலின் பிறரை ``மண்ணின் றொழியும் வகையறி வார்களாய், விண்ணவராவர்`` என்றும் அருளிச் செய்தார். இவருள் பாசுபதர் மதம் முதலியவற்றையே பொதுமையில் `சைவம்` என வைத்து, `சைவம், வைணவம், சாத்தம், காணாபத்தியம், கௌமாரம், சௌரம்` எனச் சமயங்கள் ஆறு என்பாரும் உளராயினர். சைவத்தை நீக்கி, `சௌமியம்` என்பது கூட்டி, `ஆறு` என்பாரும் ஒருசாரார்.

`உலகாயதர் விண்ணவராக விரும்புதல் இன்மையின்` அங்ஙனம் விரும்புபவராகக் கூறியது புத்தர் முதலிய பிறரையேயாம். அவரெல்லாம் தாம் தாம் ஓர் உலகத்தை முத்தியுலகமாகக் கற்பித்துக் கொண்டு அவற்றின்கண் செல்ல விரும்பினாராயினும், அவர் அடைவது பிரகிருதிக்குக் கீழ் உள்ள தத்துவ புவனங்களையே என்பது நாயனாரது திருவுள்ளமாதலின் அவரை, `மண்ணின்றொழியும் வகையறியாதவர்` என்று அருளிச்செய்தார்.

இதனால், புறச்சமயங்கள் பிரகிருதியைக் கடப்பிக்க மாட்டாமை கூறப்பட்டது.


பண் :


பாடல் எண் : 7

சிவகதி யேகதி மற்றுள்ள எல்லாம்

பவகதி பாசப் பிறவிஒன் றுண்டு

தவகதி தன்னொடு நேரொன்று தோன்றில்

அவகதி மூவரும் அவ்வகை ஆமே.

பொழிப்புரை :

சிவனது உலகத்தையும், சிவனையும் அடைவதே பிறவியற்ற முத்தியாம். அவையன்றி, `முத்தி` எனப் பிறராற் கூறப் படுவன எல்லாம் முத்தியல்லாத பிறப்பு நிலையேயாம். அதனால், அவைகளில் எல்லாம் பாசத்தால் வருகின்ற பிறவியாகிய ஒரு பெருந் துன்பம் இருக்கவே செய்யும். அதனால், சிவனை நோக்கிச் செய்யப் படுவனவாகிய சரியை முதலிய நெறிகள் ஒருவனுக்குக் கிடைக்கு மாயின், முத்தியுலகம் அல்லவாய்ப் பிறவி யுலகங்களாகிய `அயன், அரி, அரன்` என்னும் குணமூர்த்திகள் மூவரது பதவிகளும் அத் தன்மையவாய்ப் போம்.

குறிப்புரை :

அஃதாவது, `அவன் அப்பதவிகளை எய்தாது, மேற்கூறிய சாலோகம் முதலியவற்றையே அடைவான்` என்பதாம். ``கதி`` என்றது பத முத்தி பரமுத்திகளை. பத முத்தியடைந்தோரும், ``நாதனே முன் நிற்கின்``1 பரமுத்தியை அடைவர் ஆதலின், அதுவும் `பிறவியற்ற நிலை` எனப்பட்டது.

ஒன்று - ஒன்றாய் பெரிய துன்பம். `உண்டே` என்னும் தேற்றேகாரம் தொகுத்தல். தவகதி - தவமாகிய நெறி. தவமாவது சரியை முதலியனவே யாதல் அறிக. `அதனொடு நேர்தலாகிய ஒரு பேறு வாய்க்குமாயின்` என்க. ``மூவர்`` என்றது ஆகுபெயர்.

இதனால், அகச் சமயங்களை மேல்; `அண்ணலை நாடிய` சமயங்களாகக் கூறினமை பற்றி, அவையும் தவநெறிபோலும்` எனவும், அவற்றால் அடையும் நிலைகளும் `முத்திபோலும்` எனவும் நிகழும் ஐயம் அறுக்கப்பட்டது.


பண் :


பாடல் எண் : 8

நூறு சமயம் உளவாம் நுவலுங்கால்

ஆறு சமயம்அவ் ஆறுட் படுவன

கூறு சமயங்கள் கொண்ட நெறிநில்லா

ஈறு பரநெறி இல்லா நெறியன்றே.

பொழிப்புரை :

சமயங்களைப் பற்றிச் சொல்லுமிடத்துச் சிறி யனவும், பெரியனவும் ஆகிய பல வேறுபாடுகளால் சமயங்கள் மிகப் பலவாய் உள்ளன. `அகம், புறம்` என்பவற்றுள் `ஆறு` என ஒருவாறு வரையறுத்துக் கூறப்படும் சமயங்கள் மேற்கூறிய பலவற்றுள்ளே உள் ளனவாம். அங்ஙனம் சொல்லப்படும் சமயங்கள் பலவும் `உண்மை` எனக் கொண்ட நெறிகளிலே மக்கள் நின்று இறுதியாக அடையும் மேலான் நெறி, மேற் கூறிய அவற்றுள் ஒன்றிலும் இல்லாத நெறியாம்.

குறிப்புரை :

`அந்நெறி சித்தாந்த சைவமாம்` என்பதே நாயனாரது திருவுள்ளமாதலும், அந்நெறி பிற சமயங்களில் இல்லாமையும் இத் தந்திரத்தின் தொடக்கத்திலே அருளிப் போந்த மந்திரங்களான் அறிக. ``நூறு`` என்றது, `மிகப் பல` என்றவாறு. ``ஆறு`` எனப் பொதுப்பட அருளிச் செய்ததனால், அகம், புறம் இரண்டும் கொள்ளப்படுவ ஆயின. பின் வந்த ஆறு, நெறி. `ஆற்றுள்`, `ஈற்று` என்னும் ஒற்றுக்கள் தொகுத்தல் பெற்றன. நில்லா - நின்று. `அவற்றுள் இல்லா நெறி` என்க.

இதனால், `சித்தாந்த சைவத்துக்கு நிகராகாமை பற்றி இங்கு இகழ்ந்து கூறினும், பிற சமயங்கள் அதற்குப் படிகளாய் உள்ளன` எனக் கூறி, ஐயம் அறுக்கப்பட்டது.


பண் :


பாடல் எண் : 9

கத்துங் கழுதைகள் போலுங் கலதிகள்

சுத்த சிவன்எங்கும் தோய்வற்று நிற்கின்றான்

குற்றந் தெரியார் குணங்கொண்டு கோதாட்டார்

பித்தேறி நாளும் பிறந்திறப் பார்களே.

பொழிப்புரை :

தம் குரல் பிற உயிர்கட் கெல்லாம் கடியனவாய் வெறுக்கப்படுதலை அறியாது உவகையால் உரத்துக் கத்துகின்ற கழுதைகள்போலப் பாழ்நெறி நூல்களை உரத்து ஓதுகின்ற கன்மிகள், தம் குற்றத்தை உணர மாட்டார்கள். தூயனவாகிய சிவன் எல்லாப் பொருளிலும் நிறைந்து நின்றும், ஒன்றிலும் தோய்வின்றி நிற்கின்ற சிறப்பை அறிவு நூல்களைக் கற்கும் முகத்தால் உணர்ந்து பாராட்ட மாட்டார்கள். மற்று, மயக்கம் மிகுந்து, வீணே பிறந்தும், இறந்தும் உழல்வார்கள்.

குறிப்புரை :

``கத்தும்`` என உடம்பொடு புணர்த்ததனால் பயனில் லாத நூல்களாம். உவமை அதுபற்றியதாகலின் உவமிக்கப்பட்டார் பயனில்லாத நூல்களை ஓதுபவராயினர். பாராட்டிக் கற்கின்றவர் களைக் குறித்து.

``அலகுசால் கற்பின் அறிவுநூல் கல்லா

துலகநூல் ஓதுவ தெல்லாம் - கலகல

கூஉந் துணையல்லால் கொண்டு தடுமாற்றம்

போஉந் துணையறிவா ரில்``

(நாலடி)

என்றார் பிறரும். கலதி - முகடி; ``கலதிகள்`` என்றது, `நல்வினை யில்லார்` என்றதாம். ``சுத்த சிவன்`` என்றது, `பிறவற்றிற் கலந்தும் அந் நிலை கெடான்` என்றற்கு `தோய்வுற்று` என்பது பாடமன்று. ``குற்றந் தெரியார்`` என்பதை முதலடியின் இறுதியிற் கூட்டி யுரைக்க. `குற்றந் தெரியார்`` என்பது பாடமாயின், அஞ்ஞானமாகிய குற்றம் நீங்கப் பெறார்; அதனால், குணங்கொண்டு கோதாட்டார்` என்க. `அக்குணங் கொண்டு` எனச் சுட்டு வருவித்து உரைக்க. கோதாட்டல் - பாராட்டல்.

``குற்றங்கள் நீக்கிக் குணங்கொண்டு கோதாட்டி`` 1

என்று அருளிச் செய்தார் வாதவூரடிகளும். மூன்றாம் அடி இன வெதுகை பெற்றது.

இதனால், பிற சமயங்களின் நிற்பாரது கல்வியின் இழிவு கூறப்பட்டது.


பண் :


பாடல் எண் : 10

மயங்குகின் றாரும் மதிதெளிந் தாரை

முயங்கி இருவினை மூழை முகப்பா

இயங்கப் பெறுவரேல் ஈறது காட்டில்

பயங்கெட் டவர்க்கோர் பரநெறி ஆமே.

பொழிப்புரை :

புறச் சமயங்களில் நின்று அறிவு மயங்குகின்றவர் களும் சைவசமயத்தை அடைந்து அறிவு தெளிந்தவர்கள்பால் சென்று கூடி, இருவினைப்பயன்கள் அகப்பையால் முகக்கும் அளவில், உடலூழாய்க் கழியும்படி ஒழுக வல்லவராயின், அவர்கட்கு அவ்வுடல் வாழ்க்கை முடிகின்ற நிலை தோன்றும்பொழுது யம பயம் இல்லாது ஒழிய, ஒப்பற்ற பரமுத்தி நிலை கிடைக்கும்.

குறிப்புரை :

``மயங்குகின்றாரும்`` என்னும் உம்மை இழிவு சிறப்பு `தெளிந்தாரும்` என்பது பாடமன்று. மூழை - அகப்பை. மூழை முகப் பதாவது உணவை முகக்கின்ற அகப்பை அதனை முகந்தொழிதல் அல்லது உண்ணுதல் இன்றி வாளா புறத்தே ஊற்றிவிடுதல் போல இருவினைகளின் பயனாகிய இன்பத்துன்பங்களை விருப்பு வெறுப் பின்றி உடலூழாக்கிக் கழியவிடுதல். இந்நிலை திருவருள் நெறியில் நிற்பார்க்கல்லது கூடாமையானும், திருவருள் நெறி சைவ சமயத்தில் அல்லது இல்லாமையானும் `புறச் சமயத்தவர் சைவ சமயிகள்பால் பகை பாராட்டாது நட்புக்கொண்டு பழகுவாராயின், பேரின்பமாகிய நலத்தைப் பெறுவர்` என்றார்.

``நிலத்தியல்பால் நீர்திரிந் தற்றாகும் மாந்தர்க்

கினத்தியல்ப தாகும் அறிவு`` 1

எனவும்,

``கல்லாரே யாயினும் கற்றாரைச் சேர்ந்தொழுகின்

நல்லறிவு நாளுந் தலைப்படுவர்`` 2

எனவும் கூறப்படுதல் அறியத்தக்கது. ``காட்டில்`` என்பது `தோன்றில்` எனத் தன் தன்வினையாய் நின்றது. ``கெட்டு`` என்பதனை, `கெட` எனத் திரிக்க. ``அவர்க்கு`` என்பதனை, ``பெறுவரேல்`` என்பதன் பின்னர்க் கூட்டி உரைக்க. ``ஈறது... ... ஆமே`` என்பதற்குப் பிறவாறும் உரைப்ப.

இதனால், புறச் சமயத்தவரும் சைவ சமயிகளை அடையின் பயன் பெறுதல் கூறப்பட்டது.


பண் :


பாடல் எண் : 11

சேயன் அணியன் பிணிஇலன் பேர்நந்தி

தூயன் துளக்கற நோக்கவல் லார்கட்கு

மாயன் மயக்கிய மானுட ராம்அவர்

காயம் விளைக்கும் கருத்தறி யார்களே.

பொழிப்புரை :

சேயர்க்குச் சேயனாயும், அணியர்க்கு அணிய னாயும் நின்று, ஒன்றிலும் தொடக்குண்ணாதிருக்கின்ற அவனதுபெயர் `நந்தி` என்பதாகும். அவன்தன்னை அலைவின்றி ஒரு பெற்றியே நோக்கி நிற்பார்க்குத் தெளிவைத் தருபவனாயும், அங்ஙனம் நோக்கா தார்க்கு மயக்கத்தைத் தருபவனாயும் இருக்கின்றான். அவனது மாயத்தால் மயங்கிய மக்களாகிய புறச்சமயிகள் தமக்குக் கிடைத்துள்ள மக்கள் உடம்பு தரும் பயனை அறியும் அறிவிலராய் அப்பயனை இழப்பர்.

குறிப்புரை :

`சேயன் அணியன் ஆகிய பிணியிலனது பேர் நந்தி` என்க. பிணி - பிணிப்பு; முதனிலைத் தொழிற்பெயர். சேயன் முதலிய மூன்றும் எதிர்மறை வினைக்குறிப்புப் பெயர். பின்னர், ``மாயன்`` என்றலின், ``தூயன்`` என்பது அதன் மறுதலையை உணர்த்திற்று. மாயன் - மாயத்தை - மயக்கத்தை - செய்பவன். `துளக்கற நோக்கு வார்க்குத் தூயன்` எனவே. மாயனாதல், அங்ஙனம் நோக்காதார்க் காயிற்று. ஐந்தொழிலில் அருளலையே `தெளிவித்தல்` எனவும், மறைத்தலையே `மயக்குதல்` எனவும் கூறினார். இவை இரண்டும் அவரவரது பக்குவம் பற்றியாம். அதனால், பக்குவம் இல்லாதார் புறச் சமயங்களையே `மெய்ச்சமயம்` என மயங்கி, மக்கட் பிறப்பின் பயனை எய்தா தொழிவர் என்பதாம்.

``பரசம யங்கட் கெல்லாப் பாக்கியம் பண்ணொ ணாதே`` 1

என்ற சிவஞான சித்தியையும் நோக்குக.

இதனால், புறச் சமயங்களின் நீங்குதல் பக்குவம் இல்லா தார்க்குக் கூடாமை கூறப்பட்டது.


பண் :


பாடல் எண் : 12

வழியிரண் டுக்கும்ஓர் வித்தது வான

வழியது பார்மிசை வாழ்தல் உறுதல்

சுழியறி வாளன்றன் சொல்வழி முன்னின்

றழிவறி வார்நெறி நாடகில் லாரே.

பொழிப்புரை :

`பிறப்பு, வீடு` என்னும் இருவழிகட்கும் வித்தாய் உள்ளது, நிலவுலகில் வாழ்தலாகிய ஒரே வழியாம். அதனால், இவ்வுலகில் வாழ்பவர் யாவராலும் அடையப்படுவது, பிறவிச் சூழலின் நிலையை அறிந்து, அதனை அகற்ற வல்ல ஆசிரியனது உப தேசமாகிய வழியே. ஆயினும், அத்தகைய ஆசிரியன் உளனாதலைக் கண்டு வைத்தும், தாம் கெடும் நெறியை அறிந்து அந்நெறியிலே செல்வோர் அவ்வாசிரியன் அறிவுறுத்தும் நெறியைப் பெற விரும்புதல் இலர்.

குறிப்புரை :

``உறுதல்`` என்றது, அதன் செயப்படுபொருள் மேல் நின்ற ஆகுபெயர். ``சுழி`` என்பதற்கு, `தலைப்பொறி` என உரைப்பினும் ஆம். `சொல்லாகிய வழி` என்க. `முன்னின்றும்` என்னும் சிறப்பும்மை தொகுத்தலாயிற்று. `அந்நெறி` எனச் சுட்டு வருவித்து உரைக்க.

இதனால், புறச் சமயிகள் நல்லாசிரியரை யடுத்து நன் னெறியை உணர அறியாமை கூறப்பட்டது.


பண் :


பாடல் எண் : 13

மாதவர் எல்லாம்மா தேவன் பிரான்என்பர்

நாதம தாக அறியப் படும்நந்தி

பேதம்செய் யாதே பிரான்என்று கைதொழில்

ஆதியும் அந்நெறி ஆகிநின் றானே.

பொழிப்புரை :

பெரிய தவத்தையுடையோர் யாவரும், `மகா தேவன்` என்பதைத் தன் பெயராக உடைய சிவனே முதல்வன் என ஒருபடித்தாகக் கூறுவர். அதனால், அவர் கூறிய வாறே அறியப்படுபவ னாகிய சிவனைச் சிறிதும் வேறுபடாத அக்கருத்துடன், `முதல்வனே` என்று அழைத்துக் கும்பிட்டால், அந்தச் சிவனும் நன்னெறியாய் நின்று நலம் தருவான்.

குறிப்புரை :

நாதம் - தலைமை. பிரான், அண்மை விளி பயனிலைப் பெயராகக் கொண்டுரைப்பின். அது முன்னரே கூறப்பட்டதாதல் அறிக. ``நந்தியை`` என்னும் இரண்டனுருபு தொகுத்தல் பெற்றது. ``அந்நெறி`` என்பதே, `அம் நெறி` எனப் பிரித்துப் பொருள் கூறுக. அம் - அழகு; நன்று. `அந்நெறி` எனச் சுட்டாகவே கொள்ளின், `தானே பிரானாம் நெறி` என உரைக்க.

இதனால், `சிவ நெறி யல்லாதன பலவும் அறியாதார் கொள்ளும் மயக்க நெறியே` என்பது கூறப்பட்டது.


பண் :


பாடல் எண் : 14

அரநெறி அப்பனை ஆதிப் பிரானை

உரநெறி யாகி உளம்புகுந் தானை

பரநெறி தேடிய பத்தர்கள் சித்தம்

பரனறி யாவிடிற் பல்வகைத் தூரமே.

பொழிப்புரை :

`உலகியலின் மேம்பட்ட வீட்டு நெறியாது` என்று ஆராய்கின்ற அன்பர்களது உள்ளம், சிவ நெறித் தந்தையும், முதற் கடவுளும், ஞான நெறியாய் ஞானிகளது உள்ளத்து விளங்கு பவனும் ஆகிய சிவனை அறியா தொழியுமாயின், அவ்வுள்ளங்கள் பலவகையாலும் வீட்டு நெறிக்கு மிகச் சேய்மைப்பட்டனவே யாகும்.

குறிப்புரை :

``யதா சர்மவ தாகாசம் வேஷ்ட இஷ்யந்தி மானவா;I

ததாசிவ மவிக்ஞாய துக்க ஸ்யாந்தோ பவிஷ்யதி II``

என்னும் உபநிடத வாக்கியத்தையும்,

``பரசிவ னுணர்ச்சி யின்றிப் பல்லுயிர்த் தொகையும் என்றும்

விரவிய துயர்க்கீ றெய்திவீடுபே றடைது மென்றல்

உருவமில் விசும்பின்தோலை உரித்துடுப்பதற் கொப்பென்றே

பெருமறைபேசிற்றென் னின்பின்னுமோர்சான்று முண்டோ`` 1

எனவும்,

``மானிடன் விசும்பைத்தோல்போல் சுருட்டுதல் வல்லனாயின்

ஈனமில் சிவனைக் காணா திடும்பைதீர் வீடு மெய்தும்

மானமார் சுருதி கூறும் வழக்கிவை ஆத லாலே

ஆனமர் இறையைக் காணும் உபாயமேயறிதல் வேண்டும்`` 2

எனவும் இதனை மொழிபெயர்த்துக் கூறியவற்றையும் இங்குக் காண்க. உரம் - அறிவு. ``உரனென்னும் தோட்டி`` 3 என்பதும் காணத்தக்கது. ``பரன்`` என்பதை அவ்விடத்துத் தொகுக்கப்பட்ட இரண்ட னுருபை விரித்து, ``புகுந்தானை`` என்பதன்பின் கூட்டி உரைக்க.

இதனால், புறச்சமயங்கள் வீட்டுநெறி ஆகாமை கூறப்பட்டது.


பண் :


பாடல் எண் : 15

பரிசறி வானவன் பண்பன் பகலோன்

பெரிசறி வானவர் பேற்றில் திகழும்

துரிசற நீநினை தூய்மணி வண்ணன்

அரிதவன் வைத்த அறநெறி தானே.

பொழிப்புரை :

மாணவனே, உயிர்களது வினையின் தன்மைகளை அறிந்து அவற்றிற்கு ஏற்ப அவைகளைப் படைப்புத் தொழிலிற் படுத்துகின்ற பிரமன், உயர்குணமாகிய `சத்துவ குணத்தை உடையன்` எனக் கூறப்படுகின்ற மாயோன். பகலவன், மக்களோடு படுத்து நோக்குங்கால் உயர்ந் தோராக எண்ணப்படுகின்ற இந்திரன் முதலிய தேவர்கள் இவர்களது பதவியில் விளங்க விருப்பும் உனது விருப்பம் அறும்படி நீதூய மாணிக்கம் போலும் நிறத்தை உடைய சிவனைநினை; ஏனெனில் அவன் அருளிச்செய்த சிவநெறி ஒன்றே அடைதற்கு அரிய நல்ல நெறியாகும்.

குறிப்புரை :

பெரிது, `பெரிசு` என மருவிற்று. அப்பண்புகொள் பெயர். `பெரும்பொருள்` என நின்று, உயர்வை யுடையாரைக் குறித்தது. அன்றி ஆகுபெயராய் நின்ற பண்புப் பெயர்` என்றலுமாம். `பெரிசாக` என ஆக்கம், வருவிக்க. ``திகழும்`` என்பது திகழ விரும்பும் காரணத்தின்மேல் நின்றது. `வண்ணனை, என்னும் இரண்டனுருபு தொகுத்தல் பெற்றது. அருமை, நிலையுடையதாதல் பற்றிக் கூறப்படுவது.

இதனால், புறச்சமயங்கள் பிற தேவர்களது பதவிகளை நிலை யுடையனவாகக் கருதும் குற்றத்தைப் பயப்பனவாதல் கூறப்பட்டது.


பண் :


பாடல் எண் : 16

ஆன சமயம் அது இதுநன் றெனும்

மான மனிதர் மயக்க மதுவொழி

கானங் கடந்த கடவுளை நாடுமின்

ஊனங் கடந்த உருவது வாமே.

பொழிப்புரை :

`அதுவே பொருத்தமான சமயம், இதுவே நன்றான சமயம்` என ஓரோர் காரணம் பற்றிப் பற்றுக் கொண்டு பிதற்றுகின்ற மக்களது பிதற்றலால் உண்டாகின்ற மயக்கம் உம்மை விட்டு நீங்க, நீவிர் நாதம் கடந்த கடவுளாகிய சிவனை நினையுங்கள்; ஏனெனில், அந்த நினைவே குற்றமற்ற வகைமையைத் தருவதாம்.

குறிப்புரை :

மானம் - அபிமானம். `மாயம்` என்பது பாடமன்று. ``மனிதர் மயக்கம்`` என்னும் ஆறாவதன் தொகை `வாளது வெட்டு` என்பதுபோல நின்றது. ``மயக்கமது`` என்னும் அது, பகுதிப்பொருள் விகுதி. `ஒழிய` என்பதன் ஈற்று அகரம் குறைந்து நின்றது. அன்றி வினைத்தொகை யாக்கி, `ஒழிக்கின்ற கடவுளை` எனலுமாம். ``கானம்`` என்னும் இசையின் பெயர் சொல்லொற்றுமையால் நாத தத்துவத்தைக் குறித்தது. ``உரு`` என்பது `வண்ணம்` என்னும் பொருட் டன்மையை உணர்த்திற்று. உருவைத் தருவதனை ``உரு`` என்றார்.

இதனால், புறச்சமயிகள் தம்மில் ஒற்றுமையிலாராய் மாறுபட்டுப் பலதலைப்பட்ட கருத்துக்களைக் கூறிமக்களை அலைக்கழிப்பவராதல் கூறப்பட்டது.

``தம்மை - உணரார்; உடங்கியைந்து தம்மிற்

புணராமை கேளாம் புறன்`` 1

என்றார் சிவஞான போதத்திலும்.


பண் :


பாடல் எண் : 17

அந்நெறி நாடி அமரர் முனிவரும்

சென்னெறி கண்டார் சிவனெனப் பெற்றார் பின்

முன்னெறி நாடி முதல்வன் அருளிலார்

செந்நெறி செல்லார் திகைக்கின்ற வாறே.

பொழிப்புரை :

தேவர்களும், முனிவர்களும் `சிறப்புடைய நெறி யாது` என ஆராய்ந்து உணர்ந்து சென்ற நெறியையே நேரிய நெறியாகக் கொண்டு ஒழுகி, அதனால், சிவனேயாய் நின்ற பேற்றினைப் பெற்றார் சத்திநிபாதர். மற்றுச் சத்திநிபாதம் இல்லாதவர் தம் மனம் சென்ற நெறியையே நேரிய நெறியாக்கொண்டு முற்கூறிய நேரிய நெறியிற் செல்லமாட்டாது, பிறவிக் கடலுட் கிடந்து கலங்கு கின்றது இரங்கத்தக்கது.

குறிப்புரை :

`இரங்கத்தக்கது` என்பது சொல்லெச்சம். அம்நெறி - அழகியநெறி. ``முதல்வன் அருள்`` என்றது சத்திநிபாதத்தை, பின்னதில். ``அருளிலார்`` என்பதனால், முன்னதில் ``அஃது உடையார்`` என்பது பெறப்பட்டது. முன்நெறி வினைத்தொகை.

இதனால், புறச்சமயங்கள் சத்திநிபாதம் வாயாத உலகர்க்கே உரியனவாய்ப் பிறவிக் கடலைக் கடப்பியாமை கூறப்பட்டது.


பண் :


பாடல் எண் : 18

உறுமா றறிவதும் உள்நின்ற சோதி
பெறுமா றறியிற் பிணக்கொன்றும் இல்லை
அறுமா றதுவான அங்கியுள் ஆங்கே
இறுமா றறிகிலர் ஏழைகள் தாமே.

பொழிப்புரை :

அடையத்தக்க நல்ல நெறியை அறிய எழுகின்ற அறிவைச் சாருமாற்றை அறிந்துவிடுமாயின், பிழை யாதும் இல்லையாகும். ஆனால், அறிவில்லாத மக்கள், குற்றங்கள் யாவும் எரிந் தொழிதற்கு ஏதுவாம் நெருப்பாகிய அந்த அறிவினுள் புகுந்து தம் அல்லலை ஒழியுமாற்றை அறிகின்றார்களில்லை.

குறிப்புரை :

`அதனால், அவர்கள் புறநெறிகளிற் சென்று அல்லல் உறுகின்றார்கள்` என்பது குறிப்பெச்சம். ``அறிவது`` என்றது அறிவை. உம்மை சிறப்பு. அறுதற்கும், இறுதற்கும் வினை முதல்கள் வருவிக்கப்பட்டன.

இதனால், புறச் சமயங்கள் மயக்க அறிவினை யுடையார்க்கு ஆவன ஆதல் கூறப்பட்டது.


பண் :


பாடல் எண் : 19

வழிநடக் கும்பரி சொன்றுண்டு வையம்

கழிநடக் குண்டவர் கற்பனை கேட்பர்

சுழிநடக் குந்துய ரம்மதி நீக்கிப்

பழிநடப் பார்க்குப் பரவலு மாமே.

பொழிப்புரை :

பிறவிச்சுழலிலே கிடந்து எய்துகின்ற துன்பங்களை யெல்லாம் போக்கி, அதனால், அறிவுடையவர் பழிக்கும் பழியையும் போக்கிக்கொள்ள விரும்புவார்க்கு நிலத்திலே பயணம் செய்தல் போன்ற நல்லவழி ஒன்று உண்டு. அதைப் போற்றி அடைதல் அத்துன்பங்கள் நீங்கும் காலம் வரப்பெறாதோ ரெல்லாம் சுழிவழியே பயணம் செய்வோர் போலப் புறச் சமயிகள் கூறும் கற்பனை உரைகளை `மெய்` என்று கேட்டு அவற்றின்படியே நடப்பர்.

குறிப்புரை :

மூன்றாம் அடி முதலாகத் தொடங்கி, முதலடியில், ``வையம்`` என்பதனை முன் வைத்து, ``பரவலும் ஆம்`` என்பதற்கு முன்னே கூட்டி உரைக்க. ``வையத்தின்கண் வழி நடக்கும்`` என்க. தரை வழியாகப் பயணம் செய்வோர் துன்பம் இன்றிக்குறித்த இடத்தை அடைதலும், சுழிவழியாகப் பயணம் செய்வோர் ஓரிடத்தும் தரையை அடையாவிடின் சுழன்று கொண்டே இருப்பவராதலும் அறிக. காலம், சத்தி நிபாதம் காலம், ``ஒன்று உண்டு`` எனக்கூறியொழிந்தமையால், `அஃது அருமறையாய், (அரிய இரகசியமாய்) தக்கார்க்கே உணர்த்தப் படுவது` என்னும் குறிப்பினதாயிற்று. அவ் ஒன்றாவது, சித்தாந்த சைவமாம்.

இதனால், புறச் சமயங்கள் வெறும் சுழற்சியாய்ப் பயன் தாராது உலகரை மயக்கி நிற்பனவாதல் கூறப்பட்டது.


பண் :


பாடல் எண் : 20

வழிசென்ற மாதவம் வைக்கின்ற போது

பழிசெல்லும் வல்வினைப் பற்றறுத் தாங்கே

அழிசெல்லும் வல்வினை ஆர்திறம் விட்டிட்

டுழிசெல்லில் உம்பர் தலைவன் முன்ஆமே.

பொழிப்புரை :

``வையத்தின் கண் வழி நடக்கும் பரிசு ஒன்று உண்டு`` என மேற்கூறப்பட்ட வழியிலே சென்றதாகிய பெரிய தவம் தனது பயனைக் கொடுக்கின்ற காலத்தில் மக்கள் தங்கட்குப் பழிவரக் கூடியதான வலிய வினைக்கட்டினை அறுத்தொழித்து, அது காரணமாக, முன்பெல்லாம் அழிவு வழியில் சென்று கொண்டிருந்த அச்செயலில் பொருந்துதலாகிய தன்மையை விடுத்து நல்ல இடத்தை அடைவர். அங்ஙனம் அடைந்தால், தேவர் பிரானாகிய சிவன் வெளிநின்று அருள் புரிவான்.

குறிப்புரை :

`வைக்கின்ற` என்பதற்குச் செயப்படுபொருள் வருவிக்கப்பட்டது. `வாய்க்கின்ற` எனப்பாடம் ஓதலுமாம். பழி, அறிவுடையோர் பழித்துச் சொல்லும் சொல். ``அழி`` என்னும் முதனிலைத் தொழிற் பெயர் அதனைத்தரும் வழியை உணர்த்திற்று. `அழிவில் செல்லும் அவ்வினை` என்க. ஆர்தல் - பொருந்துதல். ``உழி`` என வாளா கூறினமையின், சிறந்த இடமாயிற்று. அது, ஞானமாகிய நிலம் என்க. ``செல்லில் என்ற அனுவாதத்தால், `செல்லுவர்` என்பதும் பெறப்பட்டது.

இதனால், தவம் உடையார்க்கே புறச்சமய மயக்கம் நீங்கிப் பயன் உண்டாதல் கூறப்பட்டது. தவமாவது, மேற் கூறிய சரியை முதலிய மூன்றுமே யாதலை நினைக. இங்கு, ``மாதவம்`` என்றதும் அதனைக் குறித்தற் பொருட்டேயாம்.


கருத்துகள் இல்லை:

திருமூலர் திருமந்திரம் - 275 - விளக்கம்

பாடல் விளக்கம்: மெய்தான் அறியும் செழுங்கடல் வட்டத்துப் பொய்தான் மிகவும் புலம்பும் மனிதர்கள் மெய்தான் உரைக்கில்விண் ணோர்தொழச் செய்குவன் ம...