ஞாயிறு, 21 ஜூன், 2020

இரண்டாம் தந்திரம் - 9. சருவ சிருட்டி

இரண்டாம் தந்திரம் - 9. சருவ சிருட்டி


பண் :

பாடல் எண் : 1

ஆதியோ டந்தம் இலாத பராபரம்
போதம தாகப் புணரும் பராபரை
சோதி யதனிற் பரந்தோன்றத் தோன்றுமாம்
தீதில் பரைஅதன் பால்திகழ் நாதமே.

பொழிப்புரை :

இம் மந்திரத்தின் பொருளைக் கீழ்வரும் குறிப்புக்கள் பற்றி உரைத்துக் கொள்க.

குறிப்புரை :

முதற்பொருளாகிய கடவுட்பொருள், பொருளால் ஒன்றேயாயினும், `சிவம், சத்தி` எனத் தன்மையால் இரண்டாய் இருக்கும். அஃது யாதொரு செயலையும் மேற்கொள்ளாது இயல்பாய் இருக்கும் நிலையில் `ஒன்றைத் தொடங்குவது` என்பதும், `முடிப்பது` என்பதும் இல்லையாகையால், அந்நிலை ஆதி அந்தம் இல்லாததாம். அந்நிலையில் நிற்கும் கடவுட்பொருளை, `பராபர சிவம்` என்னும் பெயரால் குறிப்பர்.
`பராத்பரம்` என்பது மருவி, `பராபரம்` என வழங்கும். பராத்பரம் - மேலானவற்றுக்கும் மேலானது; (தனக்குமேல் ஒன்று இல்லாதது) சிவம் பராபரமாய் நிற்கும்பொழுது அதன் சத்தி `பராபரை` எனப்படும். பராபரமாய் நிற்பதே சிவத்தின் சொரூபநிலை; அஃதாவது அதன் இயற்கைத் தன்மை. பராபரையாய் நிற்பதே சத்தியின் சொரூப நிலை; இயற்கைத் தன்மை. `பராபரை` என்னும் இயற்கை நிலையில் சத்தி, அறிவேயாய் (ஞானமேயாய்) நிற்கும். ஆகவே, `ஞானமே சத்தியின் சொரூபம்` என்பது விளங்கும். இதனையே சிவஞானசித்தி, (சூ. 1.62) ``சத்தியின் வடிவே தென்னில் தடையிலா ஞானமாகும்`` என்றது. இதுவே இங்கு, ``போதம தாகிப் புணரும்`` எனப்பட்டது. போதம் - அறிவு; ஞானம்.
இவ்வாறு இயற்கை நிலையில் உள்ள பராபர சிவம் `உயிர்களை உய்விக்க வேண்டும்` என்னும் விருப்பத்தால் உலகத்தை உண்டாக்க நினைக்கும். அந்நிலை உலகத் தோற்றத்திற்குத் தொடக்க நிலையாதலால், அந்நிலையில் நிற்கும் சிவம் `ஆதி சிவன்` என்றும், அதன் சத்தி `ஆதி சத்தி` என்றும் சொல்லப்படும். ஆதி சிவனே `பரசிவன்` என்னும் பெயர்க்கும், ஆதி சத்தியே `பராசத்தி` என்னும் பெயர்க்கும் உரியவராதல் இந்நூலில் பெறப்படுவது. சிவஞானசித்தி முதலிய சாத்திரங்கள் இங்குக் கூறிய பராபர சிவனையே, `பரசிவன்` என்றும், பராபரை என்னும் சத்தியையே `பராசத்தி` என்றும் கூறி, ஆதி சிவனையும், ஆதி சத்தியையும் அப் பெயராலேயே கூறும். இந்நிலையில் சிவம் சத்திகள் இவ்வாறு, `ஆதி சிவன், ஆதி சத்தி` எனப்படுதலால், பராபர சிவனும், பராபர சத்தியும் முறையே அநாதி சிவன், அநாதி சத்தியாதல் விளங்கும். இவ்வாறாகவே ``சோதியதனில் பரம் தோன்றத் தீதில் பரை தோன்றும்`` என்றார். ``சோதி`` என்றது பராபர சிவத்தை. வாளா, ``தோன்றும்`` என்றாராயினும், `பராபர சத்தியினின்றும் தோன்றும்` என்பது ஆற்றலால் இனிது விளங்கிற்று. எனவே, இத்தோற்ற முறை பின்வருமாறு அமைதல் அறியப்படும்.
பராபரசிவம் (அநாதிசிவன்) பராபரசத்தி (அநாதிசத்தி)
ß ß பரசிவம் (ஆதிசிவன்) பராசத்தி (ஆதிசத்தி)
ஆதி சத்தியே, `திரோதான சத்தி, திரோதாயி` என்றெல்லாம் சொல்லப்படும். அளவிலா ஆற்றலுடைய கடவுட் பொருள் உலகத்தை ஆக்குதற்கு அதன் ஆற்றலுள் ஒருசிறுகூறே போதும் ஆதலின், `பராபர சிவத்தில் ஆயிரத்தில் ஒருகூறே பரசிவன்` (ஆதிசிவன்) என்றும் `பராபர சத்தியில் ஆயிரத்தில் ஒருகூறே பராசத்தி` (ஆதிசத்தி) என்றும் ஆகமங்கள் அளவிட்டுரைக்கும். `பரசிவம், பராசத்தி` (ஆதிசிவன், ஆதிசத்தி) என்னும் வேறுபாடுகள் முதல்வன் தன்னில்தான் கொண்டுள்ள வேறுபாடுகளேயன்றி மற்றொரு பொருளினால் கொள்ளும் வேறுபாடுகள் அல்ல.
பராபரசிவன் ஆதி சிவனாய் நின்று உலகைச் செயற் படுத்துமிடத்துத் தனது ஆற்றலாகிய ஆதி சத்தியாலே எல்லா வற்றையும் செய்தலின், அச்சத்தி செயற்படுமாற்றிற்கு ஏற்பவே தான் அதனோடு கூடியிருப்பான்.
இயற்கை நிலையில் ஞானமாத்திரமாய் இருக்கும் சத்தி, பின் உலகைத் தொழிற்படுத்த விரும்பும் நிலையில் அவ்விருப்பமாகிய இச்சையும், அத்தொழில் முறையை அறியும் ஞானமும், அறிந்தவாறே செய்யும் கிரியையும் என மூன்றாகி நிற்கும். ஆகவே `இச்சா சத்தி, ஞானசத்தி, கிரியாசத்தி` என ஆதி சத்தி ஒன்றே மூன்றாகும். இம்மூன்று சத்திகளுள் இச்சா சத்தி, ஏறுதல், குறைதல், ஒடுங்கல் என்பன இன்றி, எப்பொழுதும் ஒரு நிலையிலே நிற்கும். ஏனைய ஞானம் கிரியை இரண்டும் `ஏறுதல், குறைதல், ஒடுங்கல்` என்னும் வேறுபாடுகளை உடையனவாகும். அவ்விடத்து ஆதி சிவன் தனது ஆதிசத்தியின் வழி முதற்கண் எழுத்தோசையைத் தோற்றுவிக்க விரும்பி அதனைத் தோற்றுவிக்குமாற்றை ஞான சத்தியால் பொதுவாக அறிவான். அதனால், அவனே அந்நிலையில், `நாதம்` எனப் பெயர் பெறுவான். இறைவனை, `நாதன்` எனக் கூறுதல் இதுபற்றியே என்பர். இவ்வாறு `நாதம்` என்னும் நிலையில் நின்ற சிவன் எழுத்தோசையின் பொது நிலையாகிய நாதத்தைத் தோற்றுவித்தற்பொருட்டு அதன் தோற்றத்திற்கு நிலைக்களமாகிய நாத தத்துவத்தைச் சுத்தமாயை யினின்றும் தோற்றுவித்து, அதன்கண் நிற்பான். நாதனாகிய சிவன் ஆதி சத்தியின் வழித் தோன்றுதலின், ``அதன்பால் திகழ் நாதம் தோன்றும்`` என்றார். `தோன்றும்` என்பது சொல்லெச்சம். இதனால் இத்தோற்றம் பின்வருமாறு அமைதல் அறியலாம்.
பராபரசிவன் (அநாதிசிவன்) பராபரசத்தி (அநாதிசத்தி)
ß ß ஆதிசிவன் ஆதிசத்தி சுத்த மாயை
ß ß நாதம் நாத தத்துவம்.
`பராபரம் பராபரையைப் புணரும்` எனவும் `பராபரை பராபரத்தைப் புணரும்` எனவும் இருவகையாகவும் இயைத்துக் கொள்ளவைத்தார். அவை இருவேறு பொருள்கள் அல்ல என்பது விளங்குதற்கு.
இதனால், படைப்புத் தொடக்கம் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 2

நாதத்தில் விந்துவும் நாதவிந் துக்களில்
தீதற் றகம்வந்த சிவன்சத்தி என்னவே
பேதித்து ஞானங் கிரியை பிறத்தலால்
வாதித்த இச்சையில் வந்தெழும் விந்துவே. 

பொழிப்புரை :

இதன் பொருளையும் கீழ்வரும் குறிப்புரை பற்றி உரைத்துக்கொள்க.

குறிப்புரை :

மேற்கூறிய `நாதன்` என்னும் சிவன், பொதுவாய் நாத மாத்திரமாய்த் தோன்றிய எழுத்தோசையைச் சிறப்பாகத் தோற்றுவிக்க விரும்பிக் கிரியா சத்தியால் பொதுவாக முயல்வான். அவ்வாறு அவன் பால் எழும் முயற்சியே `விந்து` என்னும் சத்தியாவாள். அவள், மேற் குறித்த நாத தத்துவத்திலிருந்து `விந்து` என்னும் தத்துவத்தைத் தோற்று வித்து, அதன்கண் நிற்பாள். அதனால் ``நாதத்தில் விந்துவும்`` என்றார்.
பின்னர் ``நாத விந்துக்களின்`` என்றதில் இன் சாரியை யின்பின் `கீழ்` எனப் பொருள் தரும் கண்ணுருபு விரிக்கப்படும்.
``ஞானம், கிரியை`` என்றது சிவன் சத்திகளுக்கு நிரல் நிறை. ``சிவன் சத்தி என்ன`` என்றது, `சிவன் என்றும், சத்தி என்றும் இருவர் தோன்றுவர்` என்றவாறு. `பேதித்து ஞானம் கிரியை பிறத்தலால்` என்றது, `ஆதி சத்தி தானே, ஞானம், கிரியை என்னும் வேறு பாட்டோடு தோன்றுதலால்` என்றவாறு. எனவே, `முதல்வன் ஞான சத்தியால் சிறப்பாக அறியும் நிலையிலே சிவன் என நிற்பான்` என்பதும், `அவன் கிரியாசத்தியால் சிறப்பாக முயலும் நிலையே சத்தி என்னும் நிலை` என்பதும் விளங்கும்.
`சிவன்` எனப் பெயர் பெற்று நின்ற சிவன் மேற்கூறிய விந்து தத்துவத்திலிருந்து `சிவம்` என்னும் தத்துவத்தைத் தோற்றுவித்து அதனை இடமாகக் கொண்டு நிற்பான். `சத்தி` எனப் பெயர்பெற்று நின்ற சத்தி, `சிவம்` என்னும் தத்துவத்திலிருந்து `சத்தி` என்னும் தத்துவத்தைத் தோற்றுவித்து அதனை இடமாகக் கொண்டு நிற்பாள். இவ்வாற்றால் இத்தோற்றம் பின்வருமாறு அமையும்.
ஆதிசத்தி சுத்தமாயை
ß ß (1) நாதன் நாதம்
ß ß (2) விந்து விந்து
ß ß (3) சிவன் சிவம்
ß ß (4) சத்தி சத்தி
இவற்றுள் சிவன் சத்திகட்கு உள்ள பெயர்களே, அவர்களால் தோற்று விக்கப்பட்டுத் தமக்கு இடமாகக் கொள்ளப்படுகின்ற தத்துவங்கட்கும் பெயராதல் விளங்கும்.
இங்கு இந்நாயனார் கூறிய இம்முறை சில ஆகமங்களுட் கூறியவாறாகும். வேறு சில ஆகமங்கள் இங்கு, `நாதம், விந்து` என்றவற்றை, `சிவம், சத்தி` என்றும், இங்கு, `சிவன், சத்தி` என்ற வற்றை, `நாதம் விந்து` என்றும் மாற்றிக் கூறும். அம்முறை பற்றியே சிவஞானசித்தி (சூ. 2-74),
``சிவம் சத்தி நாதம் விந்து ... ... ... ...
ஒன்றின் ஒன்றாய்ப் பவந்தரும்``
என்று கூறிற்று. எவ்வாறாயினும், `இந்நான்கும் முதல்வனது அருவத்திருமேனிகள்` என்பதில் மாறுபாடில்லை. இனி முன் இரண்டு நிலைகளை முறையே `பரநாதம், பரவிந்து` என்றும், பின் இரண்டு நிலைகளை `அபரநாதம், அபரவிந்து` என்றும் கூறுதல் எல்லா ஆகமங் களுக்கும் ஒப்ப முடிந்தது.
``வாதித்த இச்சையில் வந்தெழும் விந்துவே`` என்றது `சிவம் சத்திகள் தம்மில் தாம் வேறுபட்ட விருப்பம் காரணமாகச் சுத்த மாயை வேறு வேறு நிலைகளாக விருத்திப்பட்டு நிற்கும்` என்றவாறு. இச்சையில் - இச்சையின்படி.
``விந்து`` (பிந்து) என்பது `சுத்தமாயை, அதன் ஒருவகை நிலை, அதனை இடமாகக் கொள்ளும் சத்தி` என்னும் மூன்றற்கும் பெயராகும். அவற்றுள் ஒன்றைக் கொள்ளவேண்டிய இடத்தில் மற்றொன்றைக் கொள்ளலாகாது. இவ்வாறே, `நாதம்` என்பதும், சிவனது நிலைகளில் ஒன்றற்கும், அவன் இடமாகக் கொள்ளுகின்ற தத்துவத்திற்கும் பெயராய் நிற்கும். நாயனார் சொற்சுருக்கம் கருதி ஏற்ற பெற்றியால் பொருள் கொள்ள ஓதினார். எனவே, முன் மந்திரத்தில் ``அதன் பால் திகழ் நாதமே`` என்றதற்கு நேர்பொருளாக, `ஆதி சத்தியினிடமாக நாதம் என்னும் சிவன் தோன்றுவன்` எனவும், ஒற்றுமைப் பொருளாக, `அச்சிவனால் நாத தத்துவம் தோன்றும்` எனவும் கொள்ளப்படும். அவ்வாறே இம் மந்திரத்தில் ``நாதத்தில் விந்துவும்`` என்றதற்கு, நேர் பொருளாக, `நாதம் என்னும் சிவனிடத்து விந்து என்னும் சத்தி தோன்றுவாள்` எனவும், ஒற்றுமைப் பொருளாக, `அவளால் நாத தத்துவத்திலிருந்து விந்து என்னும் தத்துவம் தோன்றும்` எனவும், ``நாத விந்துக்களில் சிவன், சத்தி தோன்றும்`` என்றதற்கு நேர்பொருளாக, `நாத விந்துக்களின் கீழ் விந்து` என்னும் சத்தியினின்றும் சிவன் என்னும் சிவன் தோன்றுவான்; அவனிட மிருந்து சத்தி என்னும் சத்தி தோன்றுவாள்` எனவும், ஒற்றுமைப் பொருளாக, `விந்து என்னும் தத்துவத்திலிருந்து சிவம் என்னும் தத்துவமும், சிவம் என்னும் தத்துவத்திலிருந்து சத்தி என்னும் தத்துவ மும் தோன்றும்` எனவும் கொள்ளப்படும் என்க.
`மாயை` என்பது, குடத்திற்கு மண்போல, உலகமாகிய காரியப் பொருட்கு முதற்காரணமாவது, அது பல்வேறு வகைப்பட்ட சட (அறிவில்லாத) ஆற்றல்களின் தொகுதி (சத்திகளின் சமூகம்). அதனைச் சிவபெருமான் தனது இச்சைப்படி ஞானக் கிரியா சத்திகளால் தொழிற்படுத்துவான். அந்த மாயைதான் ஆணவ மலத்தின் தர தம நிலைகளோடு கலந்து தூய்மை இழந்தும் கலவாது தூய்மையாயும் இரு பகுதிப்பட்டு நிற்கும். தூய பகுதியே, `சுத்த மாயை` என்றும், தூய்மை இழந்த பகுதியே `அசுத்த மாயை` என்றும் சொல்லப்படும். `மாயை` என்றால் `மயக்குவது` எனக் கருதப் படுவதால், சுத்த மாயையை ஆகமங்கள் `மாயை` என்று குறிப்பதே இல்லை. `விந்து, குடிலை, குண்டலினி` என்றாற்போலவே குறிப் பிடும். மாயை எனக் கூறவேண்டின், `மகாமாயை` என்றும், `ஊர்த்துவ மாயை` என்றும் குறிப்பிடும். மகத்து - பெரிது. ஊர்த்துவம் - மேல் உள்ளது; வியாபகம் - எனவே, ``மாயை`` என வாளா கூறுமிடத் தெல்லாம், ``அசுத்த மாயை`` என்றே கொள்ளுதல் வேண்டும். சுத்த மாயையை ஆகமங்கள் ``விந்து`` எனக் கூறுதல்போல, அசுத்த மாயையை ``மோகினி`` என்று கூறும். மோகினி - மயக்கற் கருவி. எனவே, ``அசுத்த மாயையே மயக்கத்தைத் தரும்`` என்பதும், ``சுத்த மாயை மயக்கத்தைத் தராது`` என்பதும் அறிந்துகொள்ளப்படும். மயக்கமாவது, ஐம்புல இன்பங்களையே பெரியனவாகக் கருதி, அவற்றால் விளையும் துன்பங்களை அறியாதிருத்தல்.
இறைவன் உலகைத் தோற்றுவித்து நடத்தக் கருதும்பொழுது ``அருவம், அருவுருவம், உருவம்`` என்னும் மூவகைத் திரு மேனிகளைக் கொண்டு விளங்குவன். அங்ஙனம் விளங்குமிடத்துச் சுத்தமாயையினின்று தோற்றுவிக்கப்படுகின்ற தத்துவங்களையே தான் இடமாகக் கொண்டிருப்பன். அதனால் அத்தத்துவங்கள் அசுத்த மாயா தத்துவங்களைப் பெற்று நிற்கும் உயிர்களுக்கு உடம்பாய் வந்து பொருந்துதல் இல்லை.
முதற்காரணப்பொருள் காரியப்படும் முறைகள் பல. அவற்றுள் சிவாகமங்களிற் கொள்ளப்படுவன, `விருத்தி, பரிணாமம்` என்னும் இரண்டுமேயாம். அவற்றுள் விருத்தியாவது சுருங்கிக் கிடப்பது விரிவடைந்து நிற்றல். இதற்கு, `படம்குடிலானாற்போல` என உவமை கூறுவர். அஃதாவது கட்டிச்சுருட்டி ஒடுக்கி வைக்கப் பட்டிருந்த துணி, பின், விரித்து அமைக்கும்பொழுது பெரிய கூடாரமாகக் காட்சியளிப்பது போல்வதாம். பரிணாமமாவது ஒரு பொருள் மற்றொரு பொருளாய் உருமாறி நிற்பது. மண் குடமாவதும், பால் தயிராவதும் போல்வன இதற்கு உதாரணமாகும். பரிணாமமும், `முழுவதும் பரிணமித்தல், ஒரு கூற்றிற் பரிணமித்தல்` என இருவகைப் படும். பால் தயிராவது முழுவதும் பரிணமித்தல். வெண்ணெயில் புழுத் தோன்றுதல் ஒருகூற்றிற் பரிணமித்தல். இவ்விரண்டனுள்ளும் சிவாகமங்களில் கொள்ளப்படும் பரிணாமம் ஒரு கூற்றிற் பரிண மித்தலே. ``விருத்தி, பரிணாமம்`` இரண்டனுள், சுத்தமாயை காரியப் படுவதெல்லாம் விருத்தி முறையிலாம். அசுத்தமாயை காரியப் படுவதெல்லாம் பரிணாம முறையிலாம். `பரிணாமம் ஒரு கூற்றிற் பரிணமித்தலே` என்பதை மறக்கலாகாது.
முதல்வன் உலகத்தைக் கருதாது பராபர சத்தியோடு கூடிப் பராபரனாய்த் தன்னியல்பில் நிற்கும் நிலையே இயற்கை நிலை. அதுவே ``சொரூபம்`` எனப்படும். பிறவெல்லாம் உலகத்தைக் கருதி அதற்கேற்ப வேறுபட்டு நிற்கும் நிலையாதலின், அவையெல்லாம் செயற்கை நிலையே. இவை `தடத்தம்` எனப்படும். தடத்தம் - சார்பு பற்றியது. ``சொரூபம், உண்மை; தன்னிலை`` என்பன ஒருபொருட் சொற்கள். முதல்வனை, சொரூப நிலையில் வைத்துக் கூறும் பொழுது, ``சொரூப சிவன்`` என்றும், தடத்த நிலையில் வைத்துக் கூறும்பொழுது ``தடத்த சிவன்`` என்றும் கூறுவர். சொரூப சிவனுக்கு உருவம், பெயர், தொழில், ஒன்றும் இல்லை; தடத்த சிவனுக்கு அளவற்ற உருவம், பெயர் தொழில்கள் உள்ளன என்க. உருவம், பெயர், தொழில் ஒன்றும் இல்லாதவன், அவைகளை மேற்கொள்வது உயிர்களை உய்விக்கவேண்டும் என்னும் கருணையினாலேயாம். அதனால், அவ்வுருவம், பெயர், தொழில் யாவும் அருள்மயமானவையே; நம்மனோரது உருவம் முதலியன போல மாயாமயம் ஆனவை அல்ல; அருள் அவனது சத்தியே யாதலால், எல்லாம் வல்ல அச்சத்தியால் தனது இச்சைப் படியான உருவம் முதலியவற்றை அவன் தானே கொள்வன்; அதனால், அவைகளை அவனுக்குப் படைத்துத்தர வேறொருவர் வேண்டுவ தில்லை.
இதனால், படைப்புத் தொடர்ச்சி சிறிது வகுத்துக் கூறப் பட்டது.

பண் :

பாடல் எண் : 3

இல்லது சத்தி இடந்தனில் உண்டாகிக்
கல்லொளி போலக் கலந்துள் ளிருந்திடும்
வல்லது ஆக வழிசெய்த அப்பொருள்
சொல்லது சொல்லிடில் தூராதி தூரமே. 

பொழிப்புரை :

சிவத்தை விட்டுத் தனியாய் இல்லாத சத்தி, உலகம் செயற்படுதற்பொருட்டு இவ்வாறு அச்சிவத்தினிடமாகத் தோன்றி வேறு நிற்பது போலச் சொல்லப்பட்டாலும், சத்தி எஞ்ஞான்றும், மணியில் ஒளிபோலச் சிவத்தோடு ஒன்றி நிற்றலன்றித் தனித்து நிற்றல் இல்லை சிவமும் சத்தியைவிட்டுத் தனித்து நிற்றல் இல்லை. எனவே, `சிவபேதம், சத்திபேதம்` எனப் பிரித்து வழங்குதல், அறிவு, செயல் (ஞானம், கிரியை) என்னும் வேறுபாடுபற்றிக் கொள்ளப்படும் உருவு, பெயர், தொழில் என்பன பற்றியேயாம் என்பதாயிற்று. இவ்வாறு தன்னின் வேறாகாத சத்தியை அதுதானே எல்லாம் செய்யவல்லதாக வேறு நிறுத்தி உலகம் செயற்படுதற்கு வழியை உண்டாக்கிய அந்தப் பெரும்பொருளை (முதல்வனை) `இப்படியன், இந்நிறத்தன், இவ்வண்ணத்தன்` (தி. 6 ப.97 பா.10) என்று சொல்லாற் சொல்லி விளக்கப்புகின், அஃது ஒருவாற்றானும் இயலாது. ஏனெனில், சொற்கும், அப்பொருட்கும் இடையேயுள்ள வெளி மிக மிக நீண்டது.
இதனால், உலகிற்கு முதலாய் நிற்கும் சிவம் சத்திகள் இரு பொருளாகாமையும், மேல் சிவமும், சத்தியும் வேறுவேறுபோலக் கூறியது தடத்தநிலை பற்றி என்பது விளங்குதற் பொருட்டுச் சொரூப நிலையினது பெருமையும் கூறி, அவை மேற்கூறியவாற்றால் இருபொருள்போலும் என எழும் ஐயம் அகற்றப்பட்டது.
இதனால், உலகிற்கு முதலாய் நிற்கும் சிவம் சத்திகள் இரு பொருளாகாமையும், மேல் சிவமும், சத்தியும் வேறுவேறுபோலக் கூறியது தடத்தநிலை பற்றி என்பது விளங்குதற் பொருட்டுச் சொரூப நிலையினது பெருமையும் கூறி, அவை மேற்கூறியவாற்றால் இருபொருள்போலும் என எழும் ஐயம் அகற்றப்பட்டது.

குறிப்புரை :

***************

பண் :

பாடல் எண் : 4

தூரத்திற் சோதி தொடர்ந்தொரு சத்தியாய்
ஆர்வத்து நாதம் அணைந்தொரு விந்துவாய்ப்
பாரச் சதாசிவம் பார்முதல் ஐந்துக்கும்
சார்வத்துச் சத்திஓர் சார்த்துமா னாமே.

பொழிப்புரை :

சொல்லுக்கு எட்டாது நின்ற முதல்வனோடு நின்ற பராபரை அவனைத் தொடர்ந்து நின்றே `ஆதி` என்னும் பெயருடைய சத்தியாய்ப் பின்பு, நாதமாய் நின்ற அச்சிவனை அன்போடு கூடி, `விந்து` எனத் தோன்றி, பின் அச்சிவன்தானே சதாசிவன் முதலிய ஐவராய் நின்று நில முதலிய ஐந்து தத்துவங்கட்கும் தலைவனான பொழுது அவனது அந்நிலைகள் ஐந்தினும் உடன் கொள்ளப்படும் துணைவியாய் நிற்பாள்.

குறிப்புரை :

இங்கு `நாதம், விந்து` என்றது, அபர நாத விந்துக்களை. எனவே, பரநாத விந்துக்களை விதந்திலர் என்க. அபர விந்துவினின்றும் சதாசிவர் தோன்றுவர். அவரிடமிருந்து `மகேசுரர், உருத்திரர், மால், அயன்` என்பவர் முறையே ஒருவரில் ஒருவராகத் தோன்றுவர். `அயன், மால், உருத்திரன், மகேசுரன், சதாசிவன்` என்னும் ஐவரும் முறையே, `நிலம், நீர், தீ, காற்று, வானம்` என்னும் பூதங்கட்குத் தலைவராவர். சதாசிவன் முதலிய ஐவர்க்கும் உரிய சத்திகள் முறையே மனோன்மனி, மகேசுவரி, உமை, திருமகள், கலைமகள் என்பவராவர். இச்சத்திகளெல்லாம் அபர விந்து முதலிய சத்தி பேதங்களினின்றே ஒருவரில் ஒருவராகத் தோன்றுவர். இங்குக் கூறப்பட்ட உருத்திரன், மால், அயன் என்னும் மூவரும் சிவனின் வேறானவர் அல்லர்; சிவன் தானே கொள்ளும் நிலைகளாம். இவ்வாறு சிவன் தானே பல்வேறு நிலைகளில் பல்வேறு வடிவும், பெயரும், தொழிலும் கொண்டு நிற்றல் `சம்பு பட்சம்` எனப்படும். புண்ணிய மிகுதியால் இந்நிலைகளை ஆன்மவருக்கத்துட் பட்டவருக்கும் முதல் வன் வழங்குதல் உண்டு. அவை `அணுபட்சம்` எனப்படும். அணுபட்ச சம்புபட்சங்களைக் கூறுமிடத்து, `மகேசுரனுக்குக் கீழ் சம்புபட்சம் இல்லை; உருத்திரனுக்கு மேல் அணுபட்சம் இல்லை என்பவரும், சம்புபட்சம் எல்லா நிலைகளிலும் உண்டு என்பவரும், `எல்லா நிலைகளிலும் இருபட்சங்களும் உண்டு` என்பவருமாகப் பலதிறத்தர் ஆசிரியர். அவருள் எல்லா நிலைகளிலும் இருபட்சங்களும் உண்டு என்பவரது கொள்கையே இந்நாயனாரது கருத்தாகத் தெரிகின்றது.
சார் வத்து - சார்பாய பொருள்; தலைமைப் பொருள். இதன் பின் `ஆக` என்பது எஞ்சிநின்றது. சார்த்துமான் - துணையாக உடன்வைத்து எண்ணப்படுகின்ற பெண்; துணைவி.
சதாசிவமூர்த்தி ஞானம், கிரியை இரண்டும் சமமாய் நிற்கும் நிலையினர். இவர் தோற்றுவித்து இடமாகக் கொள்ளும் தத்துவம் சாதாக்கியம். இது மேற்கூறிய அபரவிந்துவிலிருந்து தோன்றுவதாம். ஞானம் குறைந்து, கிரியை மிகுந்திருப்பதே மகேசுர நிலை. மகேசுரன் சாதாக்கியத்திலிருந்து ஈசுர தத்துவத்தைத் தோற்றுவித்து அதனைத் தனக்கு இடமாகக் கொள்வான். கிரியை குறைந்து ஞானம் மிகுந்த நிலையில் சிவன் வித்தியேசுரன் என நின்று, ஈசுர தத்துவத்திலிருந்து `சுத்த வித்தை` என்ற தத்துவத்தைத் தோற்றுவித்து அதன்கண்ணே `உருத்திரன், மால், அயன்` என மூன்று நிலைகளில் நிற்பன். அதனால், வித்தியேசுரனை வேறு வைத்து எண்ணுதல் இல்லை.
இதுகாறும் கூறிவந்தவாற்றால், பரநாதம், அபரநாதம், சதாசிவன், மகேசுரன், உருத்திரன், மால், அயன்` எனச் சிவபேதம் ஏழும், `பரவிந்து, அபரவிந்து, மனோன்மனி, மகேசுவரி, உமை, திருமகள், கலைமகள்` எனச் சத்திபேதம் ஏழும் ஆதல் விளங்கும். எனினும், பரநாதத்திலிருந்து அபரநாதம் தோன்றாமல், இடையே பரவிந்து தோன்ற, அதினின்றே அபரநாதம் தோன்றுதலானும், அவ்வாறே அபரநாதத்திலிருந்து சதாசிவன் தோன்றாமல், இடையே அபரவிந்து தோன்ற, அதினின்றே சதாசிவன் தோன்றுதலானும், பர அபர விந்துக்களாகிய சத்தி பேதங்களையும் சிவபேதமாகக் கூட்டி எண்ணி, `சிவபேதம் நவந்தருபேதம்` என்கின்றன ஆகமங்கள். அதனையே சிவஞானசித்தி (சூ. 2.74) நூல்,
சிவம், சத்தி, நாதம், விந்து, சதாசிவன், திகழும் ஈசன்,
உவந்தருள் உருத்திரன்றான், மால், அயன் ஒன்றின் ஒன்றாய்ப்
பவந்தரும்; உருவம்நால்; இங்கருவம்நால்; உபயம் ஒன்றாய்
நவந்தரு பேதம் ஏக நாதனே நடிப்பன் என்பர்.
எனக் கூறிற்று. இதனுள், `பரநாதம், பரவிந்து, அபரநாதம், அபரவிந்து, என மேலே உள்ள நான்கும் அருவத் திருமேனிகள்` என்பதும், `மகேசுரன், உருத்திரன், மால், அயன் எனக் கீழே உள்ள நான்கும் உருவத் திருமேனிகள்` என்பதும், `இடையே உள்ள சதாசிவமூர்த்தம் ஒன்றும் அருவுருவத்திருமேனி` என்பதும் கூறப்பட்டவாறு அறிக. அருவுருவத் திருமேனி என்பதே மேல் கூறப்பட்ட இலிங்க வடிவம். எனவே, சதாசிவ மூர்த்தமாவது இலிங்க வடிவமே என உணர்க.
இதனால், சுத்த மாயையில் நிகழும் படைப்புக் கூறி முடிக்கப் பட்டது.

பண் :

பாடல் எண் : 5

மானின்கண் வானாகி வாயு வளர்ந்திடும்
கானின்கண் நீருங் கலந்து கடினமாய்த்
தேனின்கண் ஐந்துஞ் செறிந்தைந்து பூதமாய்ப்
பூவின்கண் நின்று பொருந்தும் புவனமே.

பொழிப்புரை :

`மகத்து` எனப்படும் தத்துவத்தினின்றே ஐம் பூதங்கள் தோன்றுவனவாம். அவை தோன்றுமிடத்து, அவற்றின் சாரம் எனத் தக்கனவாய், `சூக்கும பூதம்` எனப் பெயர்பெற்று நிற்கும் தன்மாத்திரைகளினின்றே தோன்றும். அவை தோன்றுதல், `வானம், காற்று, தீ, நீர் நிலம்` என்னும் முறையிலாம். தன்மாத்திரை ஒவ்வொன்றிலும் இருந்தே மேற்கூறிய வானம் முதலிய ஒவ்வொரு பூதமும் தோன்றும். பூதங்கட்கு அவ்வவற்றிற்குரிய தன் மாத்திரை களே காரணமல்லது, ஒரு பூதத்திற்கு மற்றொரு பூதம் காரணம் அல்ல. அதனால் ஒரு பூதத்திலிருந்து மற்றொரு பூதம் தோன்றுவதில்லை. ஒரு தன்மாத்திரையிலிருந்து ஒரு பூதம் தோன்றியபின், மற்றொரு தன்மாத்திரையிலிருந்து மற்றொரு பூதந்தோன்றும். இவ்வாறே ஐந்து தன் மாத்திரைகளினின்றும் ஐந்து மாபூதங்களும் மேற்கூறிய அம்முறையிலே தோன்றுவனவாம். அவற்றுள் இறுதியில் உள்ள நிலம் என்னும் பூதத்துட்பட்டனவே நாம் காணும் இவ்வுலகம்.

குறிப்புரை :

எனவே, `வானத்திலிருந்து காற்றும், காற்றிலிருந்து தீயும், தீயிலிருந்து நீரும், நீரிலிருந்து நிலமும் தோன்றும்` எனக் கூறுதல் தூலாருந்ததி நியாயமாகப் பொதுப் படக்கூறுதலே; உண்மையாற் கூறுமிடங்களில் தன்மாத்திரையினின்று பூதங்கள் தோன்றும் என்றே கூறப்படும் என்பதாயிற்று.
`மகத்து` என்னும் வடசொல், தமிழில், ``மான்`` எனப்படும். நம்மனோர் உலகிற்கு இதுவே முதற்காரணமாதலால் இது, `மகத்து` எனப்படுகின்றது. `பிரகிருதி` எனவும், `மூலப் பிரகிருதி` எனவும் கூறப்படுவது இதுவே. சிவாகமங்கள் இதனை, `பிருகிருதி மாயை` எனவும் கூறும். பிற சமயங்கள், `இது பிறவற்றிற்குக் காரணமாவ தல்லது காரியம் ஆகாது` எனவும், `அதனால் இதுவே உலகிற்குப் பரம முதற்காரணம்` எனவும் கூறும். ஆயினும் சிவாகமங்கள், `இது அசுத் தமாயை யினின்றும் தோன்றுகின்ற, கலை என்னும் தத்துவத்தினின்றும் தோன்றும் காரியமே` எனக் கூறும்.
`சுத்த உலகம், மிச்சிர (கலப்பு) உலகம், அசுத்த உலகம்` என உலகம் மூவகைத்து என்பதும், `அதனால், அதற்கு முதற்காரணமும் மூன்றாதல் வேண்டும்` என்பதும், அம்மூன்றாவன, ``சுத்த மாயை, அசுத்த மாயை, பிரகிருதி மாயை`` என்பன என்பதும், ``அவற்றுள் சுத்த மாயையும், அசுத்த மாயையுமே எஞ்ஞான்றும் காரணமாயே நிற்பன; பிரகிருதி மாயை தன் காரியங்களை நோக்கக் காரணமாய் நிற்பினும், அசுத்தமாயையைின் காரியமேயாம்`` என்பதும் சிவாக மங்களின் துணிவு. சுத்த மாயை, `விந்து` எனப்படுதலால், அதன் காரியங்கள் யாவும், `வைந்தவம்` என்றும், அசுத்த மாயையே `மாயை` எனப்படுதலால் அதன் காரியங்கள் யாவும் `மாயேயம்` எனவும், பிருகிருதியின் காரியங்கள் யாவும் `பிராகிருதம்` எனவும் கூறப்படும். பிராகிருதத்தையும், மாயேயமாக அடக்கிக் கூறுதல் உண்டு.
``மானின்கண் பூதங்கள் ஐந்தும் தோன்றும்`` என்று தொகுத்துக்கூறி ஒழியாது, வகுத்துக் கூறினார், அவற்றின் தோற்ற முறை உணர்த்தற்கு. ``கனலின்கண்`` என்பது திரிந்து நின்றது. `கான் - காடு. அஃது ஆகுபெயராய்த் தீயை உணர்த்திற்று` எனவும் உரைப்பர். ``நீரும்`` என்றதற்கு, `நீர் வெளிப்பட்டபின்` என்பது பொருள். ``கலந்து`` என்றது `அவற்றொடு கூடி, `பூதங்கள் நான்கு` என்று ஆகிய பின்` என்றபடி. ``கடினம்`` என்றது ஆகுபெயரால், அக்குணத்தை யுடைய ``நிலம்``என்னும் பூதத்தை உணர்த்திற்று. ``கடினமாய்`` என்பதில், ``ஆய்`` என்பதனை ``ஆக`` எனத் திரிக்க. ஆதல், தோன்றுதல்.
தேன் வடித்தெடுத்த தேறல் ஆதலின், அதுபோலப் பூதங்களின் நுண்ணிலையாய அவற்றின் காரண நிலையை, ``தேன்`` என்றார். இக்காரண நிலையே தன்மாத்திரையாதல் அறிக. இவற்றைத் தேன் என்றதனானே, காரணத்தன்மை காரியத்தினும் உளதாகும் முறைமை பற்றிச் சத்தம் முதலிய தன் மாத்திரைகளது தன்மை அவற்றின் காரியங்களாகிய வானம் முதலிய பூதங்களினும் காணப்படும் என்பது குறிப்பாற் கூறப்பட்டதாம். `தேனின்கண் செறிந்து பூதமாய்` என்று ஒழியாது, ``ஐந்தும் செறிந்து ஐந்து பூதமாய்`` என இருமுறை தொகை கொடுத்து ஓதினார், `ஒரு தன்மாத்திரையிலே ஐந்து பூதமும் தோன்றுதலும் ஒரு தன்மாத்திரையிலே ஒரு பூதந்தோன்ற, அதன்பின், ஒரு பூதத்திலிருந்து மற்றொரு பூதம் தோன்றுதலும் இன்றி, வேறு வேறாய ஐந்து தன்மாத்திரைகளிலிருந்து, ஒரு தன்மாத்திரையில் ஒரு பூதமாக ஐந்து தன்மாத்திரையில் ஐந்து பூதமும் தோன்றும்` என்றற்கு ஐந்தும் தேனின்கண் செறிந்து ஐந்துமாம் என்றது, `ஐந்து பூதங்களும் முன்பு தனித்தனிக் காரணநிலையில் நின்று, பின் காரியமாகத் தோன்றும்` என்றவாறு. இவ்வாறு உரையாக்கால், இத்திருமந்திரத்துள் மூன்றாம் அடி வெற்றெனத் தொடுத்தலாய் முடியும் என்க. ``பூதமாய்`` என்பதில் ``ஆனபின்`` என்பது, ``ஆய்`` எனத் திரிந்து நின்றது. `இப்புவனம்` எனச் சுட்டு வருவித்துக்கொள்க. இப்புவனம், பிருதிவி தத்துவ புவனம். எனவே, ``இவ்வாறே ஏனைத் தத்துவங்களினும் புவனங்கள் உள`` என்பது குறித்துவாறு காண்க. இவ்வாற்றால் இங்குக் கூறிய தத்துவத்தோற்றம் பின் வருமாறாதல் காண்க.
மான் (பிரகிருதி)
தன்மாத்திரை
சத்தம் பரிசம் உருவம் இரதம் கந்தம்
(ஓசை) (ஊறு) (ஒளி) (சுவை) (நாற்றம்)
வானம் காற்று தீ நீர் நிலம்
(ஆகாயம்) (வாயு) (தேயு) (அப்பு) (பிருதிவி)
``சுவை ஒளி ஊறோசை நாற்றம்என் றைந்தின்
வகைதெரிவான் கட்டே உலகு`` -குறள், 27
``நிலந்தீ நீர்வளி விசும்போ டைந்தும்
கலந்த மயக்கம் உலக மாதலின்``
(தொல். பொருள்) என்றற்றொடக்கத்தனவாக இவ்வுலகம் பற்றிப் பெரும்பான்மையாக யாண்டும் யாவரும் அறியக் கூறப்படுவன தன்மாத்திரைகளும், ஐம்பெரும் பூதங்களும் ஆகிய தத்துவங் களேயாதலின், `சிறப்புடைப் பொருளைத் தான்இனிது கிளத்தல்`` என்னும் முறையால் அவற்றின் தோற்றத்தையே சிறந்தெடுத்துக் கூறினார்.
எனவே, மானின்கண் தோன்றுவனவாக (பிரகிருதியின் காரியங்களாக) வேறும் சில தத்துவங்கள் உள என்க. அவை அந்தக் கரணங்களும், ஞானேந்திரிய கன்மேந்திரியங்களுமாம். ஆகவே, மானின் காரியங்கள் அனைத்தையும் பின் வருமாறு கண்டு கொள்க.
மான் (பிரகிருதி)
குணம்

புத்தி
அகங்காரம்
(தைசதம் வைகாரிகம் பூதாதி)
மனம் - செவி, தோல், வாக்கு, பாதம், பாணி,
கண், நாக்கு, மூக்கு. பாயு, உபத்தம்
(ஞானேந்திரியம்) கன்மேந்திரியம்
தன்மாத்திரை
சத்தம் பரிசம் உருவம் இரதம் கந்தம்
ஆகாயம் வாயு தேயு அப்பு பிருதிவி
குணதத்துவமே `சித்தம்` என்னும் அந்தக்கரணமாம். ஆகவே, ``சித்தம், புத்தி, அகங்காரம், மனம்`` என்னும் அந்தக்கரணம் - 4, ஞானேந்திரியம் - 5, கன்மேந்திரியம் - 5, தன்மாத்திரை - 5, பூதங்கள் - 5, ஆக 24 மானின் காரியங்கள் என உணர்க.
இதனால், பிரகிருதி மாயையில் உளவாகும் படைப்புக் கூறப் பட்டது. இடைநின்ற அசுத்த மாயைப் படைப்பினை நாயனார் இங்கு விதந்திலர். எனினும், அசுத்த மாயா காரியங்களை இங்கு ஒருங்கு இயையக் காட்டுதும்:-
அசுத்த மாயை
1. மாயை
2. காலம், 3. நியதி, 4. கலை,
5. வித்தை பிரகிருதி
6. அராகம்
7. புருடன்
காலம், `இறப்பு, நிகழ்வு, எதிர்வு` என மூன்றாகி, முறையே ஒரு கன்மத்திற்கு எல்லையையும், மற்றொரு கன்மத்திற்குப் பயனையும், வேறொரு கன்மத்திற்குப் புதுமையையும் உண்டாக்கும். நியதி, அவரவர் செய்த கன்மத்தை அவரவரே நுகருமாறு நியமிக்கும். கலை, வித்தை, அராகம் என்பன முறையே ஆன்மாவின் ``கிரியை, ஞானம், இச்ை\\\\u2970?`` என்னும் சத்திகளை விளங்கச்செய்யும். காலம் முதலிய ஐந்தும் வந்து பொருந்திய பொழுதுதான், ஆணவமல மறைப்பால் சடம்போலக் கிடந்த ஆன்மா கன்ம நெறியில் நின்று ஒன்றை அறியவும், விரும்பவும், செய்யவும் உரியதாய், `புருடன்` எனப் பெயர்பெற்று நிற்கும். அதனால், `புருடன்` என்பது ஒரு தனித் தத்துவம் அன்று. ஆன்மா காலம் முதலிய ஐந்தோடும் கூடி வினை நெறியில் செல்லும் நிலையே புருட தத்துவமாம். `மாயை` என்பது, காலம் முதலிய ஐந்தும் தோன்றுதற்கு ஏதுவாக அசுத்த மாயையில் பக்குவப்பட்ட ஒரு பகுதியேயாம். எனவே, இது மற்றவைபோலக் காரியமாகாது. காரணமேயாயினும், பக்குவப்பட்டமை பற்றி மற்றைய தத்துவங்களோடு ஒன்றாக வைத்து எண்ணப்படுகின்றது. எனவே, `காலம், நியதி, கலை, வித்தை, அராகம், புருடன், மாயை` என அசுத்த மாயையில் தோன்றும் தத்துவங்கள் ஏழாதல் அறியப்படும். சுத்த மாயையில் தோன்றும் தத்துவம் ஐந்து. அசுத்த மாயையில் தோன்றும் தத்துவம் ஏழு, பிரகிருதி மாயையில் தோன்றும் தத்துவம் இருபத்து நான்கு ஆகத் தத்துவம் முப்பத்தாறு ஆதல் காண்க. ஐந்து, ஏழு, இருபத்து நான்கு என நின்ற இவை முறையே ``சிவதத்துவம், வித்தியா தத்துவம், ஆன்ம தத்துவம்`` எனப் பெயர்பெறும். இவைகளில் இங்கு எடுத்தோதியவைபோக, ஏனையவற்றை நாயனார் பின்னர் ஆங்காங்கு இடம் வந்துழி வந்துழிக் குறித்தருளுவார்.

பண் :

பாடல் எண் : 6

புவனம் படைப்பார் ஒருவன் ஒருத்தி
புவனம் படைப்பார்க்குப் புத்திரர் ஐவர்
புவனம் படைப்பானும் பூமிசை யானாய்ப்
புவனம் படைப்பான்அப் புண்ணியத் தானே. 

பொழிப்புரை :

உலகத்தைப் படைப்பவர் ஒருவனும், (சிவனும்) ஒருத்தியும் (சத்தியும்). அவர்கட்குப் புதல்வர் ஐவர். (சதாசிவன், மகேசுவரன், உருத்திரன், மால், அயன். எனவே, அவரைக்கொண்டு, அருளல் முதலியவற்றைச் செய்விப்பவன் என்றதாம்) ஐவருள் படைப்புத் தொழிலுக்குத்தான் செய்த புண்ணியத்தால் உரிமை பெற்ற வன் தாமரை மலரில் என்றும் இருந்து அத்தொழிலைச் செய்வான்.

குறிப்புரை :

எனவே, `சிவபெருமான் தானே நேர்நின்றும், தக்கார் பிறரைக்கொண்டும் உலகத்தை நடத்துவான்` என்பதாம். தானே நின்று நடத்துதல் சுத்த மாயையில். ஏனை இருமாயைகளிலும் பிறரைக் கொண்டு நடத்துவன் என்க. தோற்றுவிக்கப் படுபவரை, ``புத்திரர்`` என்றார். `படைப்பானும்` என்னும் உம்மை எதிரது தழுவிய எச்சம். ஆகவே, ஏனைநால்வரும் தத்தமக்கு ஏற்ற வகையில் நின்று காத்தல் முதலியவற்றைச் செய்வர் என்பது பெறப்பட்டது.
இதனால், சிவபெருமான் படைத்தல் முதலியவற்றைச் செய்யு மாறு கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 7

புண்ணியன் நந்தி பொருந்தி உலகெங்கும்
தண்ணிய மானை வளர்த்திடும் சத்தியுங்
கண்ணியல் பாகக் கலவி முழுதுமாய்
மண்ணியல் பாக மலர்ந்தெழும் பூவிலே.

பொழிப்புரை :

புண்ணியனாகிய சிவபெருமான் உலகெங்கும் நிறைந்து, எளிய உயிர்களை வளர்ப்பான். அவ்வாறே சத்தியும் சிவனது சங்கற்பரூபமாய் அவனோடு பூவில் மணம் போலப் பொருந்தி எங்கும் நின்று, அவன் கருதும் செயல்களை யெல்லாம் செய்வாள்.

குறிப்புரை :

``இயமானனை`` என்பது குறைந்து நின்றது. இயமானன் - ஆன்மா. ``கலவி`` என்றது, கலத்தலோடு கலந்து நின்று செய்யும் செயலையும் குறித்தது. ``உலகெங்கும் பொருந்தி`` என்றதனால் சிவபெருமான் ஐந்தொழில் செய்யுங்கால் உலகுயிர் களோடு அத்துவிதமாய் (கலப்பினால் ஒன்றாய்ப் பொருள் தன்மையால் வேறாய், உயிர்க்குயிராதல் தன்மையால் உடனாய்) நின்றுசெய்வன் என்பதும், ``இயமானனை வளர்த்திடும்`` என்றதனால், அவன் அவ்வாறு நின்று ஐந்தொழிலைச் செய்வது உயிர்கட்கு மலபாகம் வருவித்து அவைகளை வீடடையச் செய்தற் பொருட்டே என்பதும், ``சத்தியும் கலவி முழுதுமாய்`` எனவே, அவன்தான் செய்யும் தொழில்கள் பலவற்றையும் தனது சத்தியால் செய்வன் என்பதும், `பூவில் மணம்போல` என்றதனால், சத்தி அவனின் வேறாகாது, மரமும் காழ்ப்பும்போலக் குணகுணி பாவத்தால் இருதிறப்பட்டுத் தாதான்மியமாய் நிற்கும் என்பதும் பெறப்பட்டன.
தண்மை, இங்கு எளிமை. ``தண்பதத்தால் தானே கெடும்`` (குறள், 548) என்பதிற்போல. ``சத்தியும் கலவி முழுதுமாய்`` எனவே, சிவமும் அத்தன்மையதாதல் பெறப்பட்டது. கண்ணுதல் - கருதுதல். கண் இயல்பாய் - கருதுதல் வடிவாய். எனவே, `சிவபெருமான் தான் செய்தனவற்றை நினைவு மாத்திரத்தால் செய்வதல்லது, சில கருவி களைக் கொண்டு செய்பவனல்லன்`` என்பது போந்தது. அக் கருதுதல் தானே அவனது சத்தி வடிவம் என்க. `மண்` என்னும் பூதத்தின் சிறப்புப் பண்பு நாற்றமாதல்பற்றி நாற்றத்தை, ``மண்ணியல்பு`` என்றார். `பூவில் மண் இயல்பாக மலர்ந்தெழும்` என மாற்றி உரைக்க. `மலர்ந்து எழுதல்` பல்வேறு வகைப்பட்ட நினைவுகளாய் விரிந்து, நினைந்தவாறே ஆக்குதல். இத்தகைய சத்தியானே அவன் எங்கும் நிறைந்தவன் ஆகின்றான் என்பதும் குறிப்பால் உணர்த்தியவாறு.
இதனால், ஐந்தொழில் செய்யுமிடத்துச் சிவபெருமான் உயிர்களோடு நிற்கும் முறைமையும், அம்முறைமைக்குத் துணை யாகின்ற அவனது சத்தியின் நிலைமையும், அச்சத்திக்கும், அவனுக் கும் இடையே உள்ள தொடர்பு வகையும் கூறப்பட்டன.

பண் :

பாடல் எண் : 8

நீரகத் தின்பம் பிறக்கும் நெருப்பிடை
காய்கதிர்ச் சோதி பிறக்கும்அக் காற்றிடை
ஓர்வுடை நல்லுயிர் பாதம் ஒலிசத்தி
நீரிடை மண்ணின் நிலைப்பிறப் பாமே. 

பொழிப்புரை :

சத்தி நீரின்கண் `சுவை` என்னும் பண்பாயும், நெருப்பின்கண் எரிகின்ற `ஒளி` என்னும் பண்பாயும், காற்றின்கண் `ஊறு` என்னும் பண்பாயும், வானின்கண் `ஒலி` என்னும் பண்பாயும் விளங்குவாள். நீரால் சூழப்பட்ட `மண்` என்னும் பூதத்தில்தான் பல்வேறு நிலைகளையுடைய உயிர்கள் தோன்றி வளரும்.

குறிப்புரை :

எனவே, `எஞ்சிய நாற்றம் அதன்கண் உள்ளது` என்றாராயிற்று. சுவையை, ``இன்பம்`` என்றார். உயிர்ப் பண்பாகிய உணர்தல் தன்மையில் முதலாவது ஊற்று உணர்வேயாகலின், அதனையே ``உயிர்`` என்றார். ஊற்று உணர்வு முதல் என்பதனை ``ஓரறிவுயிர்`` என்பவை பற்றி அறிக.
``ஓர்வுடை நல்லுயிர்`` எனச் சிறப்பித்தலும் அதுபற்றி. பாதம் - அடி; முதல். அது முதலாவதாகிய பூதத்தை உணர்த்திற்று. ``சத்தி`` என்னும் எழுவாய் இறுதிக்கண் நின்றது. உலகத்தோற்றம் முதலியவற்றை நம்மனோர் காணும் இவ்வுலகியல்பில் வைத்தே உணர்த்துகின்றாராதலின், ``நீரிடைமண்`` எனவும், ``மண்ணின் நிலைப்பிறப்பாம்`` எனவும் கூறினார். மேல், `பூவின் கண் நின்று பொருந்தும் புவனமே` (தி.10 பா.382) என்றாற்போல. ``இன்பம், சோதி, உயிர், ஒலி`` என்றவற்றில் `ஆய்` என்பது விரிக்க. மேல், `சிவசத்தியே உலகைப் பலவாறு ஆக்கி நடத்தும்` என்றதற்கு ஏற்ப இங்கு, `சத்தியே இவ்வாறு வெளிப்பட்டு நிற்கும்` என ஒற்றுமைபற்றிக் கூறினார்.
இதனால், மேல் தோற்றம் கூறப்பட்ட பூதங்களின் பயப்பாடு கூறப்பட்டது. இடைநின்ற இரண்டு திருமந்திரங்கள் இயைபுடைய வற்றை இடையே விதந்தனவாம்.

பண் :

பாடல் எண் : 9

உண்டுல கேழும் உமிழ்ந்தான் உடனாகி
அண்டத் தமரர் தலைவனாம் ஆதியும்
கண்டச் சதுமுகக் காரணன் தன்னொடும்
பண்டிவ் வுலகம் படைக்கும் பொருளே. 

பொழிப்புரை :

உலகம் முழுதுடையான் சிவபெருமானே யாயினும், `அயன், அரி, அரன்` என்னும் மூவர்தாமும் உலகிற்குக் காரணக் கடவுளராய் நின்று ஓரோவொரு தொழிலைச் செய்தல், தத்தம் புண்ணிய மிகுதிக்கு ஏற்ப அப்பெருமானால் தரப்பெற்று நடத்துதல் பற்றியேயாம்.

குறிப்புரை :

``அதற்குக் காரணம் அறியற்பாற்று`` என்பது குறிப் பெச்சம். பிரகிருதி புவனங்கட்குப் பதியாதல் பற்றித் திருமாலையே உலகினை ஒடுக்கியும், வெளிப்படுத்தியும் நிற்பவனாக வைத்து, ``உலகத்தை உண்டு உமிழ்ந்தவன்`` எனக் கூறுதல் வெளிப்படை. ``உடனாகி, ஓடு`` என்பன எண்ணின்கண் நின்றன. சிவபெரு மானுக்குரிய ``ஆதி`` என்னும் பெயரை அவனது உருவைப் பெற்ற உருத்திரனுக்கு ஆக்கிக் கூறினார். அதனால் அவனே தேவர் பலர்க்கும் மேலானவன் என்பது விளக்குதற்கு, ``அண்டத்தமரர் தலைவனாம்`` என்றார். கண்டம் - சிறுமை. இறுதியிற் கூறுதல் பற்றி, ``முன்னை இருவரினும் மேம்பட்டவன்`` என்பது படாமைப் பொருட்டு, ``கண்டச் சதுமுகன்`` என்றார்.
இதனால், உலக முதல்வனாகிய காரணனைப் பற்றி ஓர் உண்மை உணர்த்தற்குத் தோற்றுவாய் செய்யப்பட்டது.

பண் :

பாடல் எண் : 10

ஓங்கு பெருங்கடல் உள்ளுறு வானொடும் பாங்கார் கயிலைப் பராபரன் தானும் வீங்குங் கமல மலர்மிசை மேலயன் ஆங்குயிர் வைக்கும் அதுவுணர்ந் தானே. 

பொழிப்புரை :

சிவபெருமான் தனது தொழில்களுள் ஒவ் வொன்றைத் திருமாலும், பிரமனும் ஏற்றுச் செய்யுமாறு திருவுளம் பற்றினான்.

குறிப்புரை :

`அதனால், அவரும் உலக காரணர் எனப்படுகின்றனர்` என்பது குறிப்பெச்சம். மாலும், அயனும் சிவபெருமானது ஆணையை ஏற்ற அதிகார மூர்த்திகளாதலின் அது பற்றி, ``உலக முதல்வன் சிவ பெருமானே`` என்றற்கு இழுக்கில்லை என்பது கருத்து. இரண்டாம் அடியை முதலில் வைத்து உரைக்க. ``தானும்`` என்பதில் தான், அசை நிலை. உம்மை, ``அவர் தவம் செய்யத் தானும் அதற்கு இசைந்தான்`` என இறந்தது தழுவிற்று. வீங்கு - மணம் மிக்க. ``உயிர் வைத்தல்`` என்றது, படைத்தல், காத்தல் இரண்டனையும் இரட்டுற மொழிதலால் குறித்ததாம். உணர்ந்தான் - எண்ணினான்; திருவுளம் பற்றினான். உருத்திரனை வேறாக எண்ணுவோர் சிவபெருமானை முதல்வன் என்பாரோடு மாறுபடாமை பற்றி இங்கு மால், அயன் இருவரைப் பற்றி மட்டுமே கூறினார் என்க. எனவே, உருத்திரனும் அத்தகையோனாதல் பெறப்பட்டது. ``அயன், மால், உருத்திரன்`` என்னும் மூவரும் முறையே ``படைப்பவன், காப்பவன், அழிப்பவன்`` என்பது வெளிப்படை.
இதனால், புராணங்களில் சிறந்தெடுத்துப் பேசப்படுகின்ற காரணர் மூவர் பற்றிய உண்மை தெளிவிக்கப்பட்டது.

பண் :

பாடல் எண் : 11

காரணன் அன்பிற் கலந்தெங்கும் நின்றவன்
நாரணன் என்றும் நடுவுட லாய்நிற்கும்
பாரணல் அன்பிற் பதஞ்செய்யும் நான்முகன்
ஆரண மாய்உல காயமர்ந் தானே. 

பொழிப்புரை :

சிவபெருமான் ஒருவனே தனது பேரருளால் எங்கும் நிறைந்து எல்லாவற்றையும் அறிந்தும், செய்தும் நிற்பவன். திருமால், ``தூல சரீரம், சூக்கும சரீரம், குண சரீரம், கஞ்சுக சரீரம், காரண சரீரம்`` என்னும் ஐவகை உடம்புள் முதல் உடம்பாகிய தூலசரீரம் முதல் நடுவுடம்பாகிய குண சரீரங்காறும் நிறைந்து நின்று செயலாற்றுவன். பிரமன், முதல் உடம்பாகிய தூல சரீரத்துள்ளும் பிருதிவி தத்துவத்தளவிலே நிறைந்து சென்று செயலாற்றுவன். பிரமனை, `வேத முதல்வன், உலகத் தந்தை` என்றெல்லாம் சொல்வது இந்த அளவில்தான்.

குறிப்புரை :

இங்கு, ``முதல் உடம்பு`` என்றது, ஒடுக்கமுறை பற்றி என்க. மேற்கூறிய தத்துவம் முப்பத்தாறனுள், ``ஞானேந்திரியம், கன்மேந்திரியம், மாபூதம் என்னும் பதினைந்தும் தூல சரீரமாம்`` எனவும், ``தன் மாத்திரை ஐந்தும், மனம் அகங்காரம் புத்தி என்னும் அந்தக்கரணங்களும் ஆகிய எட்டும் சூக்கும சரீரமாம் `` எனவும், ``சித்தம், குணம், பிரகிருதி என்று பலவகையாய் நிற்கும் ஒன்றே குண சரீரமாம்`` எனவும் `` வித்தியா தத்துவங்கள் ஏழனுள் மாயை தவிர ஏனைய ஆறுமே கஞ்சுக சரீரமாம்``, ``மாயை காரண சரீரமாம்`` அறிந்து கொள்க. இவற்றுள் நிலமுதல் பிரகிருதி அளவுமே திருமால் வியாபகன் ஆதலின், ``நாரணன் என்றும் நடுவுடலாய் நிற்கும்`` என்றும், நான்முகன் பிருதிவி அளவிலே வியாபகனாதலின், ``நான் முகன் பார் அண்ணல்`` என்றும் கூறினார். சிவபெருமானை விடுத்து இவ்விருவருள் ஒருவனை முதல்வன் எனச் சிலர் மயங்குதலன்றி, உருத்திரனைச் சிவபெருமானின் வேறாக எண்ணி மயங்குவார் இலராதல் பற்றி இவ்விருவரது வியாபக எல்லைகளை மட்டுமே உணர்த்தி அருளினார். சீகண்ட உருத்திரன் மாயாதத்துவங்காறும் வியாபகன் எனவும், மகேசுரன் ஈசுர தத்துவங்காறும் வியாபகன் எனவும், சதாசிவன் நாத தத்துவங்காறும் வியாபகன் எனவும் உணர்ந்துகொள்க.
``அன்பு`` இரண்டில் முன்னது அருள்; பின்னது ஆசை. `அன்பிற் செய்யும்` என இயையும். பதம் - உலகம். செய்தல் - படைத்தல்.
இதனால், சிவபெருமானது முதன்மைக்கண் நிகழும் ஐயத்தினை முற்ற நீக்குதற் பொருட்டு, அதிகார மூர்த்திகளது அதிகார எல்லைகள் கூறப்பட்டன.

பண் :

பாடல் எண் : 12

பயன்எளி தாம்பரு மாமணி செய்ய
நயன்எளி தாகிய நம்பஒன் றுண்டு
வயன்ஒளி யாயிருந் தங்கே படைக்கும்
வயனெளி தாம்வய ணந்தெளிந் தேனே. 

பொழிப்புரை :

பிரம தேவன் அறிவுடையவனாய் இருந்து, படைத் தல் தொழிலை வெற்றிபெறச் செய்கின்ற காரணத்தை நான் நன்கு அறிந்தேன். அஃது என்றும் நிலையாயுள்ள இன்பம் எளிதாகக் கிடைத்தற் பொருட்டுத் தன்னை விரும்பினால், அப்பயனை அவ் வாறே எளிதில் தருகின்ற பருத்த இரத்தினம் ஒன்று அவனிடம் உள்ளது என்பதே.

குறிப்புரை :

பின்னிரண்டடிகளை முதலில் வைத்து, அதன் பின், `நம்பப் பயன் எளிதாம் மணி ஒன்றுண்டு` என்பதைக் கூட்டி உரைக்க. பருமாமணி, சிவபெருமான். செம்மை - மாறுபாடின்மை. நயன் - இன்பம். ``ஆகிய`` என்பது ``செய்யிய`` என்னும் வினையெச்சம். நம்புதல் - விரும்புதல். ``நம்பன்`` என்பது பாடம் ஆகாமை வெளிப் படை. ``உண்டு`` என்னும் குற்றியலுகரத்தின்முன் உயிர் உடம்படு மெய் பெற்றது. அங்கே - அவ்வாறே; அறிந்தவாறே. வயன் - வெற்றி. வயணம் - காரணம். படைத்தலைச் செய்பவனையே முதல்வனாக உலகம் மயங்குதல் இயல்பு என்பது பற்றிச் சிவபெருமான் பிரமனுக்கு உள்ளொளியாய் நிற்றலையே விதந்தார்.
இதனால், படைத்தல் முதலியவற்றைச் சிவபெருமான் பிறரால் செய்விக்கும் முறைமை கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 13

போக்கும் வரவும் புனிதன் அருள்புரிந்
தாக்கமுஞ் சிந்தைய வாகின்ற காலத்து
மேக்கு மிகநின்ற எட்டுத் திசையொடுந்
தாக்குங் கலக்குந் தயாபரன் தானே. 

பொழிப்புரை :

சிவபெருமான் உயிர்கள்மாட்டு அருள் கூர்தலால், உலகம் ஒடுங்கல், தோன்றல், நிற்றல் என்னும் செயல்கள் அவனது திருவுள்ளத்தில் எழுந்தபொழுது, எல்லையின்றிப் பரந்து நிற்கின்ற மாயையைத் தனது சிற்சத்தி வழியாகப் பொருந்தி அதனைக் காரியப்படுத்துபவன் அவனே.

குறிப்புரை :

எனவே, `அவனது அதிகார சத்தி பதிவால் அயன், அரி, அரன் என்போர் தமது படைத்தல் காத்தல் அழித்தல் தொழில்களைச் செய்கின்றனரல்லது, தாங்களே தங்கள் விருப்பப்படி செய்கின்றா ரல்லர்` என்பதாம். ஆக்கம் - வளர்ச்சி. இதனை, ``வரவும்`` என்றதன் பின்னர்க் கூட்டுக. `புரிதலால்` என்றது `புரிந்து` எனத் திரிந்து நின்றது. மேக்கு - உயரம். மாயையை `மேக்கு மிகநின்ற எட்டுத்திை\\\\u2970?` என ஆகாயமாக உருவகம் செய்தார். தாக்குதல் - தோய்தல். கலக்குதல் - காரியப்படுத்துதல். இங்கு, `சத்தி வழியாக` என்பது ஆற்றலால் வந்தியைந்தது.
இதனால்,மேல், `ஒளியாய்` எனக் குறிக்கப்பட்ட ஒளியாவது, அதிகார சத்தி என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 14

நின்றுயி ராக்கும் நிமலன்என் னாருயிர்
ஒன்றுயி ராக்கும் அளவை உடலுற
முன்றுய ராக்கும் உடற்குந் துணையதா
நன்றுயிர்ப் பானே நடுவுநின் றானே. 

பொழிப்புரை :

சிவன் முதல்வனாய் நின்று, உடலோடு கூடிய உயிர்களைப் படைக்கும்பொழுது, முதலில் அவைகட்கு வினைகளை வரையறுத்துக் கூட்டுவான். பின் அவற்றை அவை நுகர்தற்கு உடலுக்கும் துணையாய் நின்று அதனை இயக்குவான். ஏனெனில், அவன் அவரவர் செய்திக்குத் தக்க பயனை அவரவர்க்குத் தப்பாமல் ஊட்டுவித்து நிற்கும் நடுவுநிலைமையனாதலின்.

குறிப்புரை :

`உயிர்களைப் படைத்தல் என்பது, அவைகளை உடலொடு பொருந்தச் செய்தலாம்` என்பது விளக்குதற்கு. ``ஒன்றுயிர்`` என்றார். அளவை - கால வரையறை. ``துயர்`` என்றது அதற்கு ஏதுவான வினைகளை. `உயிர்ப்பிப்பான்` என்னாது `உயிர்ப் பான்` என்றார். அவையே தானாய் நிற்கும் ஒற்றுமை தோன்றற்கு. வினைகளைக் கூட்டுவிப்பவன் முதல்வனாயின், நல்வினை ஒன்றையே கூட்டுவியாது, தீ வினையையும் கூட்டுவித்தல் என்னை என்னும் வினாவை விடுத்தற்கு ``நடுவு நின்றான்`` என்றார். எனவே, படைப்பு ஒருபடித்தாகாது பலபடித்தாய்த் தோன்றுதற்கும், உலகில் நன்மையோடு தீமையும் உளதாதற்கும் காரணங்கூறியதாயிற்று.
இதனால், சிவபெருமான் உலகத்தைத் தொழிற்படுத்தும்வழி நெறியின்றித் தொழிற்படுத்தாது, உயிர்களின் வினைக்கேற்பவே தொழிற்படுத்துவன் என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 15

ஆகின்ற தன்மைஇல் அக்கணி கொன்றையன்
வேகின்ற செம்பொனின் மேலணி மேனியன்
போகின்ற சீவன் புகுந்துட லாய்உளன்
ஆகின்ற தன்மைசெய் ஆண்டகை யானே. 

பொழிப்புரை :

பிறக்கும் தன்மை இல்லாத சிவபெருமான், உயிர் ஓர் உடலை எடுக்கின்ற காலத்து அதற்கு அதனைக் கொடுக்கின்ற தலைவனும், பின்பு அவ்வுயிர் அவ்வுடலை விட்டு நீங்குகின்ற காலத்தில் பின்னர்ச் சென்று புகும் மற்றோர் உடலையும் அதற்குக் கொடுத்து, அங்கும் அதற்குத் துணையாய் நிற்பவனுமாவன்.

குறிப்புரை :

எனவே, `உயிர்களுக்கு வினைக்கீடாகத் தரப்படும் பிறப்பு ஒன்றன்று; பல` என்றவாறு. அக்கு - எலும்பு. செம்பொனின் மேலணி மேனியன் - செவ்விய பொன்னின்மேலே உள்ள அழகு (நிறம்) போலும் மேனியன். `புகுந்த` என்பதன் ஈறு தொகுத்தல்.
இதனால், சிவபெருமான் எண்ணற்ற உயிர்களுள் ஒவ்வொன்றற்கும் எண்ணற்ற உடலைக் கொடுத்துக் கூட்டியும், நிறுத்தியும், பிரித்தும் நடத்தும் முறைமை கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 16

ஒருவன் ஒருத்தி விளையாடல் உற்றார்
இருவர் விளையாட்டும் எல்லாம் விளைக்கும்
பருவங்கள் தோறும் பயன்பல வான
திருவொன்றிற் செய்கை செகமுற்று மாமே. 

பொழிப்புரை :

ஒருவனும் ஒருத்தியுமான இருவர் (சிவனும், சத்தியும்) விளையாடலை மேற்கொண்டுள்ளார்கள். அவ் விளை யாடல் அவர்கட்குப் பொழுது போக்காகாது, எண்ணிலா உயிர்கட்கு எண்ணிலாப் பயனை விளைப்பது. அப்பயனும் உயிர்களின் பக்குவ நிலைதோறும் அதற்கேற்ப வேறு வேறாய் விளைவனவாம். உயிர்கள் வீடுபெறின், அவ்வொருவன் ஒருத்தியரது உலகத்தின் தொழிற்பாடு முற்றுப்பெறும்.

குறிப்புரை :

`சிவம், சத்திகட்கு உலகை மேற்கூறியவாறு பலபடச் செயற்படுத்தல் பெருஞ்செயலாய்த் துன்பம் விளைப்பதன்று; நினைத்த அளவிலே எளிதில் நிகழ்வனவாம்` என்றற்கு ``விளையாடல் உற்றார்`` என்றும், `விளையாட்டு` என்பதேபற்றி, `வீண்தொழில்` என்றாதல், `தம் நலம் கருதியது` என்றாதல் கருதலாகாது என்றற்கு, `எல்லாம் விளைக்கும்` என்றும், `எல்லாம்` எனப் பொதுப்படக் கூறினும், எல்லாப் பயனும், எல்லார்க்கும், எப்பொழுதும் ஆவனவல்ல என்றற்கு, ``பருவங்கள் தோறும் ஆன`` என்றும், `படைப்பின் குறிக்கோள் உயிர்களை வீடடைவித்தலே`` என்றற்கு, ``திரு ஒன்றின் செகம் செய்கை முற்றும்`` என்றும் கூறினார்.
``காத்தும் படைத்தும் கரந்தும் விளையாடி`` (தி.8 திருவெம்பாவை, 12) என்றாற் போல, இறைவன் உலகை நடாத்துதலை `விளையாட்டு` என்றல் வழக் காதலும், ``ஐயா நீ ஆட்கொண்டருளும் விளையாட்டின் - உய்வார்கள் உய்யும் வகையெல்லாம் உய்ந்தொழிந்தோம்`` (தி.8 திருவெம்பாவை, 11) என்றாற் போல, அவனது செயல் உயிர்களை உய்வித்தற் பொருட்டு நிகழ்வ தாதலும் அறிந்துகொள்க. ``போகமும் திருவும் புணர்ப்பானை`` (தி.7ப.59 பா.1) என்பதனால் `திருவாவது வீடுபேறு` என்பது இனிது பெறப்படும். திரு - நன்மை. வீடுபேறே முடிந்த நன்மையாதல் அறிக. உயிர்கள் வீடு பெற்ற பின்பும் அவ்வின்பத்தை நுகர்தல் முதல்வனது அருட் செயலின்றி அமையாது என்பதனை, ``இன்பம் கொடுத்தல் இறை`` (உண்மை விளக்கம் , 50) எனவும்,
மாயை தனைஉதறி வல்வினையைச் சுட்டுமலம்
சாய அமுக்கிஅருள் தானெடுத்து - நேயமுடன்
ஆனந்த வாரிதியில் ஆன்மாவைத் தானழுத்தல்
தானெந்தை யார்பரதந் தான். -உண்மை விளக்கம், 36
எனவும் கூறுமாற்றால் அறிந்து கொள்க. இக்கருத்துப்பற்றியே, ``முதல்வன் செயல் முற்றுப்பெறும்`` என்னாது, ``செகத்தின் செய்கை முற்றுப்பெறும்`` என்றார் என்க. இக்கருத்துணராதார், `உயிர்கள் வீடு பெற்ற பின்னை முதல்வற்குச் செயல் இல்லை போலும்` என மயங்குப.
இதனால், படைப்பு முதலியவைபற்றி அறியற்பாலன சில கூறப்பட்டன.

பண் :

பாடல் எண் : 17

புகுந்தறி வான்புவ னாபதி அண்ணல்
புகுந்தறி வான்புரி சக்கரத் தண்ணல்
புகுந்தறி வான்மலர் மேலுறை புத்தேள்
புகுந்தறி யும்முடிக் காகிநின் றாரே. 

பொழிப்புரை :

`உருத்திரன், மால், அயன்` என்னும் மூவரும் தம் தம் எல்லை யளவும் உயிர்க்குயிராய் நிறைந்து நின்று அங்குள்ள நிலைகளையெல்லாம் நன்குணர்வர். ஆயினும், அவரெல்லாம் எங்கும் அவ்வாறு நின்று உணரும் சிவபெருமானாகிய தலைவனுக்கு உரிய அடியரேயாவர்.

குறிப்புரை :

`ஆகவே, அவனை அடைதலே வீடுபெறுதலாம்; ஏனையோரை அடைதல் யாவும் பந்தமே` என்பது குறிப்பெச்சம். எனவே, சிவபெருமான் தனது படைத்தல் முதலிய தொழில்களின் பயனாக உயிர்கட்கு முடிவில் தன்னையே வழங்கியருள்வான் என்பது போந்தது. புவனாபதி - உலக காரணியாகிய உமைக்குத் தலைவன். முடி - தலைமை. அது தலைமையை உடையான் மேல் நின்றது.
இதனால், முடிந்த வீடுபேறு (பரமுத்தி) ஆவது இது என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 18

ஆணவச் சத்தியுள் ஆம்அதில் ஐவருங்
காணியர் காரண ஈசர் கடைமுறை
பேணிய ஐந்தொழி லால்விந்து விற்பிறந்
தாணவம் நீங்கா தவரென லாகுமே. 

பொழிப்புரை :

ஆணவ மலத் தொடக்கினுள் அகப்பட்டு நிற்கின்ற அந்நிலையில், அசுத்த மாயை பிரகிருதி மாயைகளில் நிற்கின்ற அயன், மால், உருத்திரன், சீகண்டர், அனந்தர் என்னும் ஐவரும் பிறரால் கண்காணிக்கப்படும் காரியக் கடவுளரே. இனிக் காரணக் கடவுளராவார், மேற்சொல்லிய அந்நிலைக்குப் பின்னர்த் தாம் முன்னர் மேற்கொண்டிருந்த அத்தொழில்களாலே பக்குவம் முதிரப்பெற்று ஆணவம் நீங்கி அதன் வாதனை மாத்திரம் உடையராய்ச் சுத்த மாயையில் உடம்பு முதலியவற்றைப் பெற்று நிற்பவர்களே.

குறிப்புரை :

அவர், `அணுபட்ச அயன், மால், உருத்திரன், மகேசுரன், சதாசிவன்` என்னும் ஐவர் என்க. அதில் - அந்நிலையில். காணியர் - காணப்பட்டவர். `காரியர்` என்றேயும் ஓதுப. `கடைமுறை` என்றது, `பின்` என்றவாறு. பின்னர், ``விந்துவிற் பிறந்து`` என்ப தனால், முன்னர், மோகினி மான்களின் நிற்றலைக் கூறுதல் கருத்தாதல் அறிக. ``ஐந்தொழில்`` என்றதற்கு, காரியர் ஐவருள் சீகண்டரை மறைப் பவராகவும், அனந்தரை அருள்பவராகவும் கொள்க. `செலுத்துவோர் காரணர்` எனவும், `செலுத்தப்படுவோர் காரியர்` எனவும் உணர்க. ``பிறந்து நீங்காதவர்`` என்றாராயினும், `நீங்காது பிறந்தவர்` என்றலே கருத்து என்க. நீங்காமை, பற்றறக் கழியாமை. `காரியர் பக்குவம் முதிரப் பெற்றபின் ஞானத்தை அடைந்து வீடு பெறுவர்` என்பதும், `காரணர் ஞானம் முதிரப் பெற்று வாதனை நீங்கியபின் வீடு பெறுவர்` என்பதும் உய்த்துணர வைத்தமை காண்க. அனந்தர் சுத்தமாயையில் உள்ளவராயினும், தூல வாசனை உடையராய் அசுத்த மாயையைத் தொழிற்படுத்துதல் பற்றி ஆணவத் தொடக்குடையவராக ஓதினார்.
இதனால், மேல், `பந்த நிலையினர்` எனக் குறிக்கப்பட்டவரது பந்த நிலைகள் வகுத்துக் கூறப்பட்டன.

பண் :

பாடல் எண் : 19

உற்றமுப் பாலொன்று மாயாள் உதயமாம்
மற்றைய மூன்றும்மா மாயோ தயம்விந்து
பெற்றவந் நாதம் பரையிற் பிறத்தலால்
துற்ற பரசிவன் தொல்விளை யாட்டிதே. 

பொழிப்புரை :

நிலமுதல் மாயை ஈறாக உள்ள முப்பத்தொரு தத்து வங்களும் அசுத்த மாயையின் காரியங்கள். அதற்கு மேல் உள்ள ``சுத்த வித்தை, ஈசுரம், சாதாக்கியம்`` என்னும் மூன்றும் `மகாமாயை` எனப்படும் சுத்த மாயையின் காரியங்கள். சாதாக்கியத்திற்குமேல் உள்ளது விந்து. அவ்விந்துவைப் பெற்ற அந் `நாதம்` என்னும் தத்துவம், பரவிந்துவிற் பிறத்தலால், யாவும், எல்லாத் தத்துவங் களையும் தனது உடைமையாக உடைய பராசத்தியோடு கூடிய பரம சிவனது பழைய திருவிளையாடலேயாம்.

குறிப்புரை :

இங்குக் கூறிய தத்துவங்கள் இவை என்பதை மேலே காண்க. (தி.10 பா. 124)
இதனால், அனைத்தையும் தனது விபூதியாக (சிறந்த உடைமையாக) உடையவன் பரமசிவன் என்பது வகுத்துக் கூறப் பட்டது.

பண் :

பாடல் எண் : 20

ஆகாய மாதி சதாசிவ ராதியென்
போகாத சத்தியுட் போந்துடன் போந்தனர்
மாகாய ஈசன் அரன்மால் பிரமனாம்
ஆகாயம் பூமிமுன் காண அளித்தலே. 

பொழிப்புரை :

`வானம், காற்று, தீ, நீர், நிலம்` என்னும் பூதங்கள் ஐந்தற்கும் முறையே, `சதாசிவன், மகேசுரன், உருத்திரன், மால், அயன்` என்னும் ஐவரும் தலைவராவர் என்று உணர். இவர் அனைவரும், யாதொரு பொருளையும் விட்டு நீங்காது நிறைந்து நிற்கும் சிவசத்தி பதிய ஒருங்குதோன்றியவரே. இவருள் மகேசுரன் முதலிய நால்வரும் உருவம் உடையவர். (சதாசிவன் அருவுருவினன்) இவர் ஐவர் தொழிலும், மேற்கூறிய ஆகாயம் முதல் பூமி ஈறான பூதங்களைக் காரியப்படுத்தலாம்.

குறிப்புரை :

`ஆகாயமாதிக்குச் சதாசிவன் ஆதியோர் தலைவர்` எனத் தொகுத்தலாயும், சொல்லெச்சமாயும் நின்ற சொற்களை விரித்துரைத்துக்கொள்க. என் - என்று உணர். ``உட்போத`` என்பது, ``உட்போந்து`` எனத் திரிந்து நின்றது. மா காயம் - தூலவடிவம்; உருவம். ``அளித்தல்`` என்றது `ஆளுதல்` என்னும் பொருட்டாய் நின்றது. `அளித்தலே தொழில்` எனச் சொல்லெச்சம் வருவித்து முடிக்க.
இதனால், மேல், தத்துவங்களை, `பரமசிவனது விபூதி` என்று கூறியபின், அத்தத்துவத் தலைவர்களும் அவனது விபூதியேயாதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 21

அளியார் முக்கோண வயிந்தவந் தன்னில்
அளியார் திரிபுரை யாம் அவள் தானே
அளியார் சதாசிவ மாகி அமைவாள்
அளியார் கருமங்கள் ஐந்தும்செய் வாளே. 

பொழிப்புரை :

சுத்தமாயையின் காரியமாகிய பரவிந்து, அபர நாதம், அபரவிந்து என்னும் மூன்று நிலைக்களமாகத் தோன்றும் சாதாக்கிய தத்துவத்தினைத் தோற்றுவிக்கும். அருள் காரணமாக, `திரிபுரை` என்னும் சத்தி தோன்றுவாள். அவளே அத்தத்துவத்தின் தலைவனாகிய சதாசிவனோடு ஒற்றுமைப்பட்டு நின்று, அருளல் முதலிய ஐந்தொழிலையும் செய்வாள்.

குறிப்புரை :

இவளே மனோன்மனி என்பதனை அடுத்து வரும் திரு மந்திரத்துள் அறிக. இவளது சிறப்பை நாயனார் நாலாந் தந்திரத்துள் விரித்தோதுவார். அளி - அருள்.
இதனால், மேற்கூறிய தத்துவங்களும், தத்துவத் தலைவர் களும் பரமசிவனது விபூதியாதற்குக் காரணம் தோன்றுதற் பொருட்டு, அவனது சத்தியே எல்லாம் செய்யும் முறைமை கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 22

வாரணி கொங்கை மனோன்மனி மங்கலை
காரணி காரிய மாகக் கலந்தவள்
வாரணி ஆரணி வானவர் மோகினி
பூரணி போதாதி போதமு மாமே. 

பொழிப்புரை :

அத்திரிபுரையே `மனோன்மனி` எனப்படுவாள். அவள் நித்திய சுமங்கலை. எல்லாவற்றிற்கும் காரணி. அதுவேயன்றிக் காரியப்பட்ட பொருள்களிலும் கலந்து நிற்பாள். `உமை, வாணி, திருமகள், மகேசுவரி` என்றும் பாகுபட்டு நிற்பாள். உயிர்கட்குச் சுட்டறிவையும், சுட்டிறந்த வியாபக அறிவையும் தருவாள்.

குறிப்புரை :

`வாரணி - யானைத் தோலைப் போர்த்தவள்` என உருத்திரனது சத்தியைக் குறித்தது. ஆரணி - வேதம் ஓதுபவள். வானவர் மோகினி - தேவர்களை மாயையால் மயக்குபவள். பூரணி - நிறைந்த தலைமை உடையவள். செய்யுள் நோக்கி இவர்களை முறை பிறழ வைத்தார்.

பண் :

பாடல் எண் : 23

நின்றது தானாய் நிறைந்த மகேசுரன்
சென்றங் கியங்கும் அரன்திரு மாலவன்
மன்றது செய்யும் மலர்மிசை மேலயன்
என்றிவ ராக இசைந்திருந் தானே. 

பொழிப்புரை :

மகேசுவரி முதலாகப் பாகுபட்ட அச்சத்தியே தானாய் நிறைந்த மகேசுரனே, உருத்திரன், திருமால், அயன் என்பவரிடத்தும் சென்று உலாவி அவர்களேயாயிருந்து அவர்களது தொழில்களை இயற்றுவிப்பன்.

குறிப்புரை :

என்றது, மகேசுரன் முதலாகக் கீழுள்ள நிலைகளே அதிகார நிலை எனக் கூறியவாறு. சதாசிவ நிலை, `போக நிலை` எனவும், அதற்குமேல் உள்ள நிலைகள் இலய நிலை எனவும் உணர்க. இறைவன் உலகத்தைத் தொழிற்படுத்தும் பொழுது இவ்வாறு, `இலயம், போகம், அதிகாரம்` என மூன்று நிலைகளில்நின்று தொழிற்படுத்துவன் என்பது முதல் திருமந்திரத்தே குறிக்கப்பட்டது. இதனை இங்குக் கூறியது, மேற் கூறியவாற்றால், `சத்தியே எல்லாம் செய்யச் சிவன் வாளாவிருப்பான் போலும்` எனவும், `அதனால் அவ்விருவரும் வேறு வேறு நிற்பவரே போலும்` எனவும் ஐயம் நிகழாது, `சத்தியும் சிவனும் யாண்டும் உடனாகியே நிற்பர்` என்பதும், `அதனால் சத்தி செய்வனவெல்லாம் சிவன் செய்வனவே` என்பதும் உணர்த்தற் பொருட்டாம்.
இதனால், மேலது பற்றி எழுவதோர் ஐயம் அறுக்கப்பட்டது.

பண் :

பாடல் எண் : 24

ஒருவனு மேஉல கேழும் படைத்தான்
ஒருவனு மேஉல கேழும் அளித்தான்
ஒருவனு மேஉல கேழும் துடைத்தான்
ஒருவனு மேஉல கோடுயிர் தானே. 

பொழிப்புரை :

முன்னை மந்திரத்திற் கூறியவாற்றால், எல்லா உலகங்களையும் படைத்துக் காத்து அழிப்பவனும், அறிவில் பொருள், அறிவுடைப் பொருள் ஆகிய அனைத்திலும் நீக்கம் அற நிறைந்து இருப்பவனும் ஆகிய முதற்கடவுள் ஒருவனே என்பது தெற்றென விளங்கும்.

குறிப்புரை :

`அவ் வொருவன் சிவபெருமானே` என்பது கருத்து.
இதனால், சிவபெருமானது முழுமுதற் றன்மை வலியுறுத்திக் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 25

செந்தா மரைவண்ணன் தீவண்ணன் எம்இறை
மைந்தார் முகில்வண்ணன் மாயஞ்செய் பாசத்தும்
கொந்தார் குழலியர்க் கூடிய கூட்டத்தும்
ஐந்தார் பிறவி அறுத்துநின் றானே. 

பொழிப்புரை :

எங்கள் இறைவனாகிய சிவபெருமானே செந்தாமரை மலரில் உள்ள அழகிய பிரம தேவனும், மேகம்போலும் நிறத்தையுடைய திருமாலும், நெருப்புப் போலும் நிறத்தை யுடைய உருத்திரனுமாவான். ஆதலின், அவனே மாயை என்னும் முதற் காரணத்தினாலும், மகளிரை ஆடவர் கூடும் கூட்டமாகிய துணைக் காரணத்தினாலும் ஐந்து கூறாய்ப் பொருந்தும் உடம்புகளைத் தோற்று வித்து நிற்கின்றான்.

குறிப்புரை :

முதலில் உள்ள வண்ணம் - அழகு; பொன்னிறம். இறுதியிற் கூறத்தக்க தீவண்ணனைச் செய்யுள் நோக்கி இடை வைத்தார். ``எம் இறை`` என்றதனை முதலில் வைத்துப் பிரிநிலை ஏகாரம் விரிக்க. ``செந்தாமரை வண்ணன்`` முதலிய மூன்றும் `எம் இறையே` என்னும் எழுவாய்க்குப் பயனிலைகளாய் நின்றன. ``முகில் வண்ணன்`` என்பதன் பின், `அவனே` என்பது தோன்றா எழுவாயாய் நின்றது. `ஆடவர்` என்பது சொல்லெச்சம்.
உடம்பின் ஐந்து கூறுகளாவன, ஐங்கோசங்கள். அவை, `அன்னமய கோசம், பிராணமய கோசம், மனோமய கோசம், விஞ்ஞானமய கோசம், ஆனந்தமய கோசம்` என்பன. இவற்றின், விளக்கம் பின்னர்க் காணப்படும். இவற்றுள் அன்னமய கோசம் பிரம தேவனது ஆளுகைக்கும், பிராணமய கோசம் மாயோனது ஆளு கைக்கும், மனோமய கோசம் சீகண்ட உருத்திரரது ஆளுகைக்கும் ஏனை இரு கோசங்களும் அனந்த தேவரது ஆளுகைக்கும் உட்பட்டு இயங்குவனவாம். இவற்றுள், முதல் மூன்றும் பிரகிருதி மாயையின் காரியங்களும், ஏனை இரண்டும் அசுத்த மாயையின் காரியங்களு மாகும்.
இதனால், படைப்பு வேறுபாடு ஒருவாறு தொகுத்துக் கூறப்பட்டது.
இவ்வாறாகவே, `படைத்தல் முதலிய ஐந்தொழில்களைச் சிவபெருமான் சுத்தமாயையில் தான் நேரே செய்வன்` என்பதும், `அசுத்த மாயையில் அனந்த தேவரை வாயிலாகக் கொண்டு (அதிட்டித்து நின்று) செய்வன்` என்பதும், `பிரகிருதி மாயையில் அனந்ததேவர் வழியாகச் சீகண்ட உருத்திரனை வாயிலாகக் கொண்டு செய்வன்` என்பது போதரல் காண்க.
இதனால், சிவபெருமான் மும்மாயையிலும் படைத்தல் முதலியவற்றைச் செய்யுமாறு கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 26

தேடுந் திசைஎட்டுஞ் சீவன் உடல்உயிர்
கூடும் பிறவி குணஞ்செய்த மாநந்தி
ஊடும் அவர்தம துள்ளத்துள் ளேநின்று
நாடும் வழக்கமும் நான் அறிந் தேனே. 

பொழிப்புரை :

பல்கோடி அண்டங்களிலும் தனக்காவதொரு புக்கிலை (நிலையான வீட்டைத்) தேடி அலைகின்ற சீவான்மாவின் பொருட்டு, உடலும், உயிரும் கன்மத்தால் தொடர்பு கொள்கின்ற பல பிறவிகளை அவ்வவ்வுயிர்க்கு ஏற்றவாறு மேற்கூறிய வாற்றால் மாயையினின்றும் தோற்றுவிக்கின்ற பரமான்மாவாகிய சிவபெரு மான், தான் தனது திவ்வியாகமங்களுள் கூறியுள்ள அப்படைப்பு முறைகளைத் தெளியமாட்டாது அவற்றொடு மாறுபடுகின்றவரது உள்ளத்துள்ளே நின்று, அவரது அறிவோடே ஒத்துக் கூறிய பல சமயக் கொள்கைகளையும் யான் அறிவேன்.

குறிப்புரை :

அக்கொள்கைகளாவன, `பூதங்கள் நான்கே; அவை தம்முட் கூடுதல் பிரிதல்களால் உலகம் தோன்றும்; அழியும். அதனால், அச்செயல்கட்கு முதல்வன் ஒருவன் வேண்டுவதில்லை` என்பதும், (இவ்வாறு கூறுவோர் உலகாயத மதத்தினர்) `வித்தின் கேட்டில் அங்குரம் (முளை) போல எல்லாப்பொருளும் ஒன்றன் கேட்டில் மற்றொன்றன் தோற்றமாக ஒரு கணத்தில் தோன்றி, மறுகணத்தில் அழிந்து செல்லும். இத்தொடர்ச்சி பொருட்பெற்றியானே நிகழும்; இதற்கொரு முதல்வன் வேண்டுவது இல்லை` என்பதும், (இவ்வாறு கூறுவோர் புத்த மதத்தினர்) `உளதாதல், இலதாதல் என்னும் இரண்டு தன்மையும் ஒருங்கே உடைமையால் இத்தன்மைத்தென வரையறுத்துச் சொல்லொணாத இவ்வுலகம் உளதாதல் தன்மையால் தோன்றி, இலதாதல் தன்மையால் அழிதல் இயல்பாதலின், இதற்கொரு முதல்வன் வேண்டுவது இல்லை` என்பதும், (இவ்வாறு கூறுவோர் சமணமதத்தினர்) `பிரகிருதிக்குமேல் மாயை இல்லை; அதனால், அதன் காரியமாகிய இருபத்து நான்கிற்கு மேல் தத்துவம் இல்லை` என்பதும், (இவ்வாறு கூறுவோர் ஏகான்மவாதிகள், யோகர், சாங்கியர் முதலிய பலருமாவார். இவருள் ஏகான்மவாதிகள் மாயை `அநிர்வசனம்` - இன்னதெனச் சொல்லொணாதது, எனக்கூறி, அதனுள் சக சீவ பரங்கள் விவர்த்தனமாய் - மயக்கக் காட்சியாய் - தோன்றும்` எனவும், ஏனையோர், `மாயையை உள்பொருள்` எனவும், `அதனால், அதன் காரியங்களும் உள்பொருளே` எனவும் கூறுவர். சாங்கியருள் ஒரு சாரார், `மாயை தானே தனது காரியத்தைத் தோற்றுவிக்கும்; இறைவன் வேண்டா` என்பர்.) இன்னோரன்ன பலவுமாம். மேல் ``பருவங்கள்தோறும் பயன் பலவாகும்`` (தி.10 பா.393) என்று அருளிச் செய்தபடி, சிவபெருமான் அவ்வவ்வுயிர்களின் பரிபாகத்திற்கேற்ப அவற்றின் வழி நின்று துணைபுரிவனாதலின், அதனை, `அவர்தமதுள்ளத்துள் நாடும் வழக்கம்` என்றார். வழக்கம் - மரபு; கொள்கை.
`திசை எட்டும் தேடும் சீவன்` என மாற்றி, `சீவனுக்கு` என நான்காவது விரிக்க. குணம் - பிரகிருதி.
இதனால், `பிறநெறிகளுட் கூறப்படும் முறைமைகள் பலவும் பூர்வபக்கம்` என்பது கூறும் முகத்தால், `சிவநெறியுட் கூறப் படும் முறைமையே சித்தாந்தம்` என மேலன பலவும் வலியுறுத்தப் பட்டன.

பண் :

பாடல் எண் : 27

ஓராய மேஉல கேழும் படைப்பதும்
ஓராய மேஉல கேழும் அளிப்பதும்
ஓராய மேஉல கேழும் துடைப்பதும்
ஓராய மேஉல கோடுயிர் தானே. 

பொழிப்புரை :

`படைத்தல், காத்தல், அழித்தல்` என்னும் தொழில்களை இயற்றுவோரும், அறிவுடைப் பொருள், அறிவில் பொருள் என்பவற்றில் தங்கிநின்று அவற்றை இயற்றுவோரும் பல்கோடி தேவர்களாகச் சொல்லப்படினும், அவர் யாவரும் சிவபெருமான் ஒருவனது ஆணையைத் தாங்கி அவன் குறிப்பின்வழி நின்று இயங்கும் ஒரு குழாத்தினரே யாவர்.

குறிப்புரை :

`வேத சிவாகமங்களில் பூதம் முதலிய தத்துவங் கட்கும், பல்வேறு பிறவிகளில் நிற்கும் உயிர்கட்கும், அவற்றது உடம்பில் அமைந்த பல்வேறு உறுப்புக்களுக்கும், அவ்வுடம்புகட்கு நிலைக்களமாய் `அண்டம்` எனவும், `புவனம்` எனவும் பெயர் பெற்று நிற்கும் இடங்கட்கும் தலைமை தாங்கி அவ்வவற்றை ஏற்ற பெற்றி யான் இயக்கும் கடவுளர் எண்ணிறந்தோர் எனக் கூறி, அவர்க்கு உரிய உருவம், பெயர், தொழில் முதலியனவும், இடம் பொருள் ஏவல்களும், அவரை வழிபடும் முறைகளும் பலபட எடுத்துச் சொல்லப்பட்டாலும், அவர் பலரும் தாம் தாம் தம் இச்சைவழி நின்று செயல்புரிவோரல்லர்; சிவபெருமானது அடியவர் குழாங்களே எனத் தெளிவித்தவாறு, `அமைப்பால் வேறுபட்ட பல கூட்டமாயினும், ஒருவனது பணி யாளராம் முறைமையால் ஒரு கூட்டமே` என்றற்கு, ``ஓர் ஆயமே`` என்றார். ஆயம் - கூட்டம்.
இதனால், அனேகேசுர வாதம் பற்றி எழும் ஐயம் பொது வகையான் அகற்றி, மேலே வலியுறுத்தப்பட்டது. மேல் ``ஒருவனுமே`` (தி.10 பா.401) என்ற மந்திரம் ஒருவனே பலராய் நின்று காரியம் செய்தல் கூறியது. இது பலரும் ஒருவனது ஏவலரே எனக் கூறியது. இவை தம்முள் வேற்றுமை.

பண் :

பாடல் எண் : 28

நாதன் ஒருவனும் நல்ல இருவரும்
கோது குலத்தொடுங் கூட்டிக் குழைத்தனர்
ஏது பணியென் றிசையும் இருவருக்
காதி இவனே அருளுகின் றானே. 

பொழிப்புரை :

தலைவனாகிய சிவபெருமான் ஒருவனும், அவனது அருட்கு உரியராயினமையின் நல்லோராகிய `மால், அயன்` என்னும் இருவரும் ஆக மூவரும் தீயது, நல்லதுமாகிய முக்குணங் களைக் கூட்டிக் குழைத்து உலகை ஆக்குகின்றனர். எனினும், ``அடியேங்கட்கு இடும் பணி யாது`` என்று விண்ணப்பித்து அவற்றைச் செய்ய இசைந்து நிற்கும் நல்ல இருவருக்கு நாதனாகிய சிவபெரு மானே அவர் செய்யத் தக்க பணியை அருளிச் செய்கின்றான்.

குறிப்புரை :

கோது - குற்றம்; தீமை. குலம் - நன்மை. இராசதமும், தாமதமும், ``கோது`` எனப்பட்டன. சாத்துவிகம், ``குலம்`` எனப் பட்டது. `ஏனைத் தேவர் பலரும் தலைவராகாதொழியினும், புராணங்களிலும், பிறவிடத்தும் தலைவராகச் சிறந்தெடுத்துப் பேசப்படுகின்ற மூவர் தலைவராகாமை இல்லை போலும்` எனப் பௌராணிக மதம்பற்றி மீளவும் எழும் மலைவை நீக்கியவாறு.
``முக்குணத்தால் உலகை ஆக்குகின்றனர்`` என்ற குறிப்பால் `குணாதீதனாகிய சிவன் முதல்வனாதலன்றிக் குணவயப்பட்ட ஏனையோர் முதல்வராமாறு இல்லை` என வழி வகை கூறித் தெளிவித் தவாறாயிற்று. உருத்திரனைச் சிவபெருமானின் மேம்பட்ட வனாக மயங்கிக் கூறுவார் இன்மையின், அழித்தல் தொழிலைப் பேறாக உடைய உருத்திரனைப் பற்றி விளக்கம் கூறிற்றிலர்.
இதனால், தலைமைபற்றி, `பௌராணிகம், ஐரணியகருப்பம், பாஞ்சராத்திரம்` என்னும் மதம் பற்றி எழும் ஐயத்தைச் சிறப்பு வகையான் அகற்றி மேலது வலியுறுத்தப்பட்டது.

பண் :

பாடல் எண் : 29

அப்பரி செண்பத்து நான்குநூ றாயிரம்
மெய்ப்பரி செய்தி விரிந்துயி ராய்நிற்கும்
பொய்ப்பரி செய்திப் புகலும் மனிதர்கட்
கிப்பரி சேஇருள் மூடிநின் றானே. 

பொழிப்புரை :

`எண்பத்துநான்கு நூறாயிரம்` எனச் சொல்லப் படும் வேறுபாடுகளை உடைய பிறவிகள் பலவும் மேற்கூறிய முறையிலே உடம்புகளாய் உருவெடுத்து வளர்ந்து, அவைதாமே உயிர் போல இயங்கிநிற்கும். அதனை அறியாது பொய்ச்சமயங் களைப் பொருந்தி நின்று உலகத் தோற்றத்தை மேற்காட்டியவாறு பலபடத் தம்முள் முரணிக் கூறுவோர்க்குச் சிவபெருமான் அவரது அறிவை இன்று உள்ளவாறே அறியாமையால் மூடிவைப்பவனா கின்றான்.

குறிப்புரை :

``உரைசேரும் எண்பத்து நான்குநூறாயிரமாம் யோனி பேதம்`` (தி.1 ப.132 பா.3) என்றற்றொடக்கத்தனவாகப் பலவிடத்தும் பிறப்பு வகை வேறுபாடுகள் எண்பத்துநான்கு நூறாயிரம் என்பது கூறப்படுதல் காண்க. இவை அனைத்தும், `அண்டசம், சுவேதசம், உற்பீசம், சராயுசம்` என்னும் நால்வகைத் தோற்றமும், `தேவர், மக்கள், விலங்கு, பறவை, ஊர்வன, நீர்வாழ்வன, தாவரம்` என்னும் எழுவகைப் பிறப்புமாய் அமைவனவாம். அண்டசம் - முட்டையில் பிறப்பன. சுவேதசம் - வியர்வையில் (அழுக்கில்) பிறப்பன. உற்பீசம் - வித்து, வேர், கிழங்கு முதலியவைகளைப் பிளந்து கொண்டு மேல்நோக்கி முளைப்பன. சராயுசம் - கருப்பப் பைக்குள் உரு நிரம்பிப் பிறப்பன. எண்பத்து நான்கு நூறாயிரமும் எழுவகைத் தோற்றத்துட் பொருந்துமாறு:-
தோற்றிடும் அண்டசங்கள் சுவேதசங்கள் பாரில்
துதைந்துவரும் உற்பீசம் சராயுசங்கள் நான்கில்
ஊற்றமிகு தாபரங்கள் பத்தொன்ப தாகும்;
ஊர்வபதி னைந்;தமரர் பதினொன்றோ;டுலவா
மாற்றருநீர் உறைவன,நற் பறவைகள்நாற் காலி
மன்னியிடும் பப்பத்து;மானுடர்ஒன் பதுமாம்;
ஏற்றியொரு தொகையதனில் இயம்புவர்கள் யோனி
எண்பத்து நான்குநூ றாயிரமென் றெடுத்தே.
-சிவப்பிரகாசம் - 47
என்பதனால் விளங்கும். இதனை,
ஊர்வ பதினொன்றாம் ஒன்பது மானுடம்
நீர்பறவை நாற்கால்ஓர் பப்பத்துச் - சீரிய
பந்தமாந் தேவர் பதினால் அயன்படைத்த
அந்தமில்சீர்த் தாவரம்நா லைந்து.
-திருக்குறள், 62. பரிமேலழகர் உரை மேற்கோள்
எனச் சிறிது வேறுபடவும் கூறுவர். எவ்வாறாயினும், `எண்பத்து நான்கு நூறாயிரம்` என்பதில் மாறுபாடில்லை.
`இத்துணை வேறுபட்ட பிறவிகளில் ஏனையவற்றிற் செல்லாது மானுடப் பிறப்பினுள் வருதல் பெரிதும் அரிது` என்பதை,
அண்டசம் சுவேத சங்கள் உற்பிச்சம் சராயு சத்தோ
டெண்டரு நாலெண் பத்து நான்குநூ றாயிரத்தால்
உண்டுபல் யோனி; எல்லாம் ஒழித்துமா னுடத்துதித்தல்
கண்டிடில் கடலைக் கையால் நீந்தினன் காரியங்காண்.
எனச் சிவஞான சித்தி (சூ. 2.89) நூல் கூறிற்று.
``மூடி`` என்பது பெயர். `மூடியாய்` என ஆக்கச்சொல் விரிக்க. இனி, வினையெச்சமாகக்கொண்டு, `இருளால் மறைத்து நின்றான்` என உரைத்தலுமாம்.
இதனால், படைப்பு எண்பத்து நான்கு நூறாயிர வேறு பாடுகளை உடைத்தாதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 30

ஆதித்தன் சந்திரன் அங்கிஎண் பாலர்கள்
போதித்த வானொளி பொங்கிய நீர்புவி
வாதித்த சத்தாதி வாக்கு மனாதிகள்
ஓதுற்ற மாயையின் விந்துவின் உற்றதே. 

பொழிப்புரை :

அசுத்த மாயையில் உளவாகின்ற தத்துவ தாத்து விகங்களோடு ஒத்த தத்துவ தாத்துவிகங்களும், பிறப்பு வகைகளும் சுத்த மாயையின்கண்ணும் உளவாவனவாம்.

குறிப்புரை :

பிறப்பு வகைகள் பலவற்றையும் உபலக்கணத்தாற் கொள்ளுதற்கு, `எண் பாலர்கள்` என்றார். எண் பாலர் - திசைக் காவலர். போதித்த - சிறப்பித்துச் சொல்லப்பட்ட. ஒளி - தேசசு; நெருப்பு. `ஒலி` என்பது பாடம் அன்று. வாதித்த - வாதத்தோடு கூடிய. வாதம் - காற்று. `கூடிய` என்றது, `சொல்லப்பட்ட ஐம்பூதங்களோடும் கூடிய` என்றவாறு. ``சத்தாதி`` என்றதை, `தன்மாத்திரை, விடயம்` என இரட்டுறமொழிந்து கொள்க. ``ஆதி`` என்றதனை, ``வாக்கு`` என்றதனோடும் கூட்டுக. வாக்காதி, `வாக்கு, பாதம், பாணி, பாயு, உபத்தம்` என்னும் கன்மேந்திரியங்கள்; இவற்றைக் கூறவே `செவி, தோல், கண், மூக்கு, நாக்கு` என்னும் ஞானேந்திரியங்களும், சத்தாதி ஞானேந்திரிய விடயங்களைக் கூறவே, `வசனம், கமனம், தானம், விசர்க்கம், ஆனந்தம்` என்னும் கன்மேந்திரிய விடயங்களும் கொள்ளப்படும். மனாதி, `மனம், அகங்காரம், புத்தி, சித்தம்` என்னும் அந்தக்கரணங்கள். `ஆதித்தன், சந்திரன்` என்றது, உபலக்கணத்தால் தாத்துவிகங்களைக் கொள்ள வைத்ததாம்.
`தத்துவங்கள் முப்பத்தாறு` எனவும், `அவற்றுள், சிவம், சத்தி, சாதாக்கியம், ஈசுரம், சுத்தவித்தை என்னும் ஐந்தும் சுத்த மாயையில் உள்ளவை; ஏனைய அசுத்த மாயையில் உள்ளவை` எனவும் மேற்கூறியவாற்றால், `சுத்த மாயையில் உள்ள தத்துவங்கள் மேற்கூறிய ஐந்துமே; பிற இல்லை` என்பது பட்டமையின் அதனை விலக்கி, `மேற்கூறிய ஐந்தும் சுத்த மாயையின் சிறப்புத் தத்துவங்கள்; அவை அசுத்த மாயையில் இல்லை; ஏனைய முப்பத்தொரு தத்துவங்களும் சுத்தமாயை, அசுத்த மாயை இரண்டற்கும் பொதுத் தத்துவங்கள்; அதனால் அவை அவ் இருமாயையிலும் உள்ளன. சுத்த மாயையில் அவை மலகன்மங்களோடு கலவாமல் சுத்தமாய் உள்ளன; அசுத்த மாயையில் அவை அவற்றொடு கலந்து அசுத்தமாய் உள்ளன; அவ்வளவே வேறுபாடு` எனத் தெரித்துக் கூறியவாறு. `இதுவே சிவாகமங்களின் துணிபு` என்பது.
``காலம் முதல் நிலம் ஈறாகிய தத்துவங்கள் எல்லாம் அசுத்த மாயையிற்போலச் சுத்த மாயையினும் உள; அவை இவை போலன்றிச் சுத்தமாய் உள்ளன என்னும் பௌட்கர வசனத்தான் அசுத்த தத்துவ புவனங்களின் உள்ளன அனைத்தும் சுத்த தத்துவ புவனங்களினும் சுத்தமாய் உளவாம் என்பது போதருதலானும்``
எனச் சிவஞானபோத மாபாடியத்தும் (சூ.2 அதி.2) இனிது எடுத்து விளக்கப் பட்டமை காண்க. அசுத்த மாயா உலகத்தவராகிய அயன், மால், உருத்திரன் முதலியோர்போலச் சுத்த மாயையிலும் அப்பெயர் முதலியன உடையோர் உளர் என்றலும் இதுபற்றி என்க. இனி, பூலோக புவர்லோக சுவர்க்கலோகம் முதலிய உலகங்களில் கீழ் உலகத்துள்ளனபோல மேல் உலகத்தும் உள்ளன பொருள்கள் என்றலும் இவ்வாற்றானே அமைதல் அறிந்துகொள்க.
இனி, `சுத்த மாயை மேலே உள்ளது; அசுத்த மாயை கீழே உள்ளது` எனக் கூறுதல், சூக்கும தூல முறைமையால் வியாபக வியாப் பியமாதல் பற்றியல்லது, ஒருமரத்தில் அதன் அரையும், கிளையும் போல இட வேறுபாடு பற்றியன்றாதலால், சுத்த மாயையில் உள்ளன பலவும் அசுத்த மாயையில் தோய்வின்றி வியாபகமாய் நிற்கும் என்பதும் நுண்ணுணர்வால் உணர்ந்துகொள்க. அங்ஙனம் அல்லாக் கால் மந்திரங்களும், அவற்றிற்கு உரியராய கடவுளரும் அசுத்த மாயா புவனத்தில் உள்ளார்க்குப் பயன் தருமாறு இல்லை என்க.
`மாயையிற் போல` என ஒருசொல் வருவிக்க. ``உற்றது`` என்பது தொழிற்பெயராய் நின்றது. `உற்றவே` என ஓதுதலும் ஆம்.
இதனால், படைப்புப் பற்றியதொரு புறனடை கூறப்பட்டது.

கருத்துகள் இல்லை:

திருமூலர் திருமந்திரம் - 275 - விளக்கம்

பாடல் விளக்கம்: மெய்தான் அறியும் செழுங்கடல் வட்டத்துப் பொய்தான் மிகவும் புலம்பும் மனிதர்கள் மெய்தான் உரைக்கில்விண் ணோர்தொழச் செய்குவன் ம...