ஞாயிறு, 21 ஜூன், 2020

மூன்றாம் தந்திரம் - 7. தாரணை

மூன்றாம் தந்திரம் - 7. தாரணை


பண் :

பாடல் எண் : 1

கோணா மனத்தைக் குறிக்கொண்டு கீழ்க்கட்டி
வீணாத்தண் டூடே வெளியுறத் தான்நோக்கிக்
காணாக்கண் கேளாச் செவியென் றிருப்பார்க்கு
வாணாள் அடைக்கும் வழியது வாமே. 

பொழிப்புரை :

கோணுதல் (புலன்வழி ஓடுதல்) உடையதாய் இருந்த மனம், பிரத்தியாகாரத்தில் அதனை விடுத்து ஒருவழிப் பட, அதனை அவ்வழியில் முன்போல மீளாதவாறு குறிக் கொண்டு தடுத்து, சுழுமுனை வழியாக மேலே செல்கின்ற வாயுவே பற்றுக்கோடாக மேற்செலுத்தி, ஆஞ்ஞையை அடையு மாற்றால் அவ்விடத்திலே செய்யும் தியானத்தால் ஐம்பொறிகள் செயலற்றிருக்கும் நிலையை எய்தினவர்கட்கு, அந்நிலைதானே பிறவி வரும் வழியை அடைக்கின்ற உபாயமாகிவிடும்.

குறிப்புரை :

கீழ் - கீழ்மையான வாயில்; அவை ஐம்பொறிகள் கட்டுதல், இங்கு, ``தடுத்தல்`` என்னும் பொருளது. விலா எலும்பு, நாடிகள் முதலியவைகளைக் கட்டியுள்ளமையால், முதுகெலும்பைத் தந்திகள் முதலியவற்றை உடைய வீணைத் தண்டோடு உவமித்தல் நூல் வழக்கு. ``சிவபெருமான் திரிவிக்கிரமரது முதுகெலும்பை வீணை யாகக் கொண்டார்`` என்பது புராணம். ஆஞ்ஞை ஆகாயமாகச் சொல்லப்படுதலின், ``வெளி`` என்றார். நோக்கப்படும் பொருள் அவரவர்க்கு ஏற்ற பெற்றியான் அமைதலின், அதனைக் கூறாராயினர். ``கண், செவி`` என்பவை பிற பொறிகளையும் தழுவி நின்ற உப லக்கணம். `என்று`, என்னும் எண்ணிடைச் சொல்லின்பின் `இவற்றை உடையராய்` என்பது வருவிக்க. இனி, `காணா கண் கேளா செவி` என முற்றுத் தொடராகப் பாடம் ஓதுதலுமாம். ``வாணாள் வழி அடைக்கும் வழி`` என்பதனை, ``வாழ்நாள் வழியடைக்குங் கல்`` (குறள், 38) என்னும் திருக்குறளோடு ஒப்பிட்டு நோக்குக. `பிறவாமைக்கு வழியாதல், ஞானத்தின் வழியாக` என்க.
இதனால், `தாரணையாவது இது` என்பதும், அதனது சிறப்பும் கூறப்பட்டன.

பண் :

பாடல் எண் : 2

மலையார் சிரத்திடை வானீர் அருவி
நிலையாரப் பாயும் நெடுநாடி யூடுபோய்ச்
சிலையார் பொதுவில் திருநட மாடும்
தொலையாத ஆனந்தச் சோதி கண் டேனே. 

பொழிப்புரை :

மேருமலையின் உச்சியினின்றும் வானீர் அருவி எப்பொழுதும் வீழ்ந்துகொண்டிருக்கும். வில் வடிவாய் அமைந்த அம்பலத்தில் ஒளிவடிவாகிய சிவன், எல்லையில் இன்பத்தைத் தரும் ஆனந்தத் திருக்கூத்தினை எப்பொழுதும் ஆடிக் கொண்டே இருப்பான். இவ்விரண்டையும் நான் நீண்ட சுழுமுனை நாடி வழியாகச் சென்று கண்டேன்.

குறிப்புரை :

நீங்களும் இவற்றைக் காண முயலுதலேநன்று என்பது குறிப்பெச்சம். `மலை` என்பதனை உயர்வு பற்றி, ``மலையார்`` என உயர்திணையாககிக் கூறினார். `மலை` என்பது` தலைமை பற்றி மேருவைக் குறித்தது. முதுகெலும்பை `வீணைத் தண்டு` என்பது போல, `சந்திரசூரியர்` எனப்படுகின்ற இடைநாடி பிங்கலை நாடிகளால் சூழப்பட்டுள்ளமைபற்றி, `மேருமலை` எனக் கூறலும் யோகநூல் வழக்கு. `அதன் தலை` என்பது, `புருவநடு. தலை` என்பவற்றை ஏற்ற பெற்றியாற் குறிக்கும். இங்கு அது புருவநடுவைக் குறித்தது. `வானீர்` என்பது சிலேடையாய் `ஆகாய கங்கை` (வான் நீர்) என்றும், `விந்து` எனப்படும் வெண்பால் - சுக்கிலம்` (வால் நீர்) என்றும் இரு பொருள் குறித்து, உருவக நயத்திற்கு இயைந்து நின்றது.
`கருவிற்கு வித்தாகிய வெண்பால், நெற்றியில் தோன்றிப் புருவநடுவில் உருப்பட்டு நிற்கின்றது` என்பதும், `அஃது இயற்கை யாக இடைநாடி பிங்கலைநாடிகள் வழியாகக் கீழ் இறங்கிச் சுவாதிட் டானத்தை அடைவதனாற்றான் பால் உணர்ச்சியாகிய இழி நிலை உண்டாகின்றது` என்பதும், `அவ் இழிநிலை எவ்வாற்றானும் உடற்குக் கேடுபயப்பதே` என்பதும், அதனை அவ்வாறு அவ் இரு நாடிகள் வழியாக இறங்காது, யோகசாதனையால் நடுநாடியாகி சுழு முனை வழியாக இறங்கச்செய்தால், `அஃது உடலுக்கு வலுவூட்டி, நரை திரை மூப்புப் பிணிகள் வாராமற் காக்கும் அமுதமாய்ச் சிறந்து நிற்கும்` என்பதும் யோகநூற் கொள்கைகள். அதுபற்றியே அவை இவ் வெண்பாலை, `அமுதம்` என்றே குறிப்பிடுதலுடன், அவற்றை நடுநாடிவழியாக ஏற்பதை, `பருகுதல்` என்றேயும் கூறுகின்றன.
சிறப்புமுதலாய காரணங்கள் பற்றி இவற்றையெல்லாம் ஆடவரை நோக்கியே அவை கூறுகின்றனவாயினும், பெண்டிர்க்கும் இவை ஒத்தன என்பதே கருத்து. எவ்வாறெனில், யாதொரு சாதனையும் பெண்டிரை விலக்கி, ஆடவர்க்கு மட்டுமேயாகக் கூறுதல் வேதமதங்களின் கருத்தன்று ஆதலின். சாதனங்களை மேற்கொள்ளும் முறைகளில் சிறிது மாறுபடுதல் கூடும்; அவ்வளவே வேற்றுமை. அதனால், `புருவநடு விந்துத்தானம்` என்பது பெண்டிர்க்கும் பொதுப்படக் கூறுவதேயாம். ஆயினும், அவர்கட்குப் பால் உணர்ச்சிக் காரணமாய நீர் மணிபூரகத்தை அடையும்பொழுதே கருப்பையிற் கலந்து செம்பாலாக (சோணிதமாக) மாறிப் பின் சுவாதிட்டானத்தை அடைவதாகும்.
``பாயும், நாடும்`` என்பன முற்றுக்கள். ``நெடுநாடி ஊடு போய்`` என்பதனை, ``கண்டேன்`` என்பதற்கு முன்வைத்து உரைக்க. புருவ நடு பிறைவடிவிற்று ஆதலாலும், அங்கு இறைவனது நடனம் உளதாதலாலும் அதனை ``சிலைஆர் பொது`` என்றார். இஃது உயிர்கட்கு அறிவைப் பயக்கும் பர நடனம் - அதிசூக்கும நடனம் ` என்பதை ஞான நூல்களை நோக்கி அறிக. இருதயத்தில் செய்யும் நடனம் சூக்கும நடனமேயாம். இருதயம் அருள்வெளி - சிற்றம்பலம். புருவ நடு ஆனந்த வெளி - பேரம் பலம். `சோதி திருநடம் ஆடும்` என மேலே கூட்டி, ``ஆடும்`` என்பதன்பின், இவற்றை` என்னும் சொல்லெச்சம் வருவித்துக் கொள்க.
இதனால், ஆஞ்ஞைத் தாரணையின் இயல்பு கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 3

மேலை நிலத்தினாள் வேதகப் பெண்பிள்ளை
மூல நிலத்தில் துயில்கின்ற மூர்த்தியை
ஏல எழுப்பி இவளுடன் சந்திக்கப்
பாலனும் ஆவான் பராநந்தி ஆணையே. 

பொழிப்புரை :

கருவை ஏற்றுக் குழவியாக மாற்றித் தருகின்ற பெண், மேல் மாடத்தில் எதிர்நோக்கி இருக்கின்றாள். அவளுடன் சேர வேண்டிய ஆடவனோ அடித் தலத்தில் உறங்கிக் கொண்டிருக் கின்றான். அவனை நன்றாக விழித்தெழச் செய்து அப் பெண்டுடன் கூடப்பண்ணினால், நல்ல பாலகன் பிறப்பான்; இதற்கு என் குருவின்மேல் ஆணை.

குறிப்புரை :

மேலை நிலம், ஆஞ்ஞை. வேதகம் - இரசவாதம்; இங்கு, பாசஞான பசுஞானங்களைப் பதி ஞானமாக மாற்றுதல். பெண் பிள்ளை, திரோதான சத்தி. இவளது செயல் உயிரின் உணர்வைப் பக்குவப்படுத்துதலின், ``வேதகப் பெண்பிள்ளை`` என்றார். எழுகின்ற - எழுப்பினால் எழத்தக்க; இஃது எதிர் காலத்தில் நிகழ் காலம். `துயில்கின்ற` எனப் பாடம் ஓதுதலே சிறக்கும். மூர்த்தி, உறங்கிக் கிடக்கின்ற குண்டலியோடு சேர்ந்து அதுவேயாய், அறியாமையாயுள்ள உயிரின் உணர்வு. இஃது எழுந்து மேலுள்ள ஆதாரங்களையும் கடந்து ஆஞ்ஞையை அடைந்து, அங்குநின்று அறிவைப் பயக்கின்ற திரோதான சத்தியை உணருமாயின், அவ் வுணர்வு `யான், எனது` என்னும் பற்றுக்களினின்றும் நீங்கித் தூய்மை பெறுவதாகும். அதனையே ``பாலன்`` என்றார். ``பாலனும்`` என்ற சிறப்பும்மையால், `அப் பாலன், இம்மை மறுமை நலங்களுடன், வீட்டையுந் தரத்தக்கவன்` என உரைக்க. இனி ``மூர்த்தி`` என்பதற்கு, `விநாயகர்` என்றாயினும், `பிரமன்` என்றாயினும் பொருள் கொள்ளின், ``பெண்பிள்ளை`` என்றவளை வல்லபை, வாணி` என ஏற்ற பெற்றியான் உரைத்துக்கொள்க. இவ்விருவர்க்கும் பிள்ளை இல்லையாயினும் `பிறப்பான்` என்பதனை உம்மையால் உரைத்துக் கொள்க. இவ்வாறு பொருள் உரைப்பினும், கருத்து மேற்கூறியதே யாம். `ஆதல்` - உண்டாதல்.
இதனால், ஆஞ்ஞைத் தாரணையது சிறப்புக் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 4

கடைவாச லைக்கட்டிக் காலை எழுப்பி
இடைவாசல் நோக்கி இனிதுள் இருத்தி
மடைவாயிற் கொக்குப் போல் வந்தித் திருப்பார்க்
குடையாமல் ஊழி இருக்கலு மாமே. 

பொழிப்புரை :

பூரக இரேசகம் செய்து கும்பிக்கப்பட்ட பிராணவாயு கீழ்ப்போகாதவாறு எருவாயை அடைத்து அதனால் போகாது நின்ற வாயுவை மூலாதாரம், சுவாதிட்டானம் முதலாக மேல் நோக்கிப் போகச்செய்து, ஆஞ்ஞைக்குக் கீழ் உள்ள இடை ஆதாரங்கள் ஒவ்வொன்றிலும் மனத்தை நன்றாகப் பொருந்த வைத்து, நீர் மடையில் கொக்கு, தான் வேண்டுகின்ற மீன் வரும் வரையில் அதனையே குறிக்கொன்டு நோக்கிச் செயலின்றியிருத்தல் போல, அங்குக் கருதப்படுகின்ற கடவுளரால் அவ்வாதாரயோகம் கைவருமளவும் அவரை வழிபட்டிருப்பவர்கட்கு, யோகநிலை முற்றும் கைவரும் காலம் வரையில் இறவாமலே இருத்தலும் கூடும்.

குறிப்புரை :

`மடை வாயிற்கொக்கு`, ``கொக்கொக்க கூம்பும் பருவத்து`` (குறள், 490) ``இரைதேர் கொக்கொத் திரவுபகல் ஏசற்றிருந்தே வேசற்றேன்`` (தி.8 கோயில் மூத்த திருப்பதிகம், 5) மடைத்தலையில் - ஓடுமீனோட உறுமீன் வருமளவும் - வாடியிருக்குமாம் கொக்கு`` (மூதுரை, 16) எனப் பலவிடத்தும் கூறப்படுதல் காண்க.
யோகம் கைவருதல், ஆதார யோகங்கள் ஆறும் பெற்று, அதற்குமேல் நிராதார யோகத்தை அடைந்து, அப்பால் மீதானத்தை உணர்ந்து நிற்றலாம். `அந்நிலை கைகூடுதற்கு நெடுங்காலம் செல்ல வேண்டியிருப்பினும், `அதுகாறும் உடல் அழியாது நிற்கும் நிலையும் தாரணையாலே உளதாகும்` என்பார், ``உடையாமல் ஊழி இருக்கலும் ஆமே`` என்றார். உம்மை, யோகம் கைவருதலைத் தழுவிநின்ற எச்ச உம்மை. முதல் மூன்று அடிகள் தாரணையைச் செய்யும்முறை கூறின. வந்தித்தலுக்குச் செயப்படுபொருளாகிய `கடவுளர்` என்பது சொல்லெச்சமாக வந்து இயைந்தது. `சிவயோகம் பயில்வார்க்கு இக் கடவுளர் சம்பு பட்சத்தவர்` எனவும், `பிறயோகம் பயில்வார்க்கு இவர் அணுபட்சத்தினர்` எனவும் உணர்க.
இதனால், தாரணை செய்யுமாறு கூறப்பட்டது. ஒரு கருத்துப் பற்றித் தாரணை வாழ்நாள் நீட்டிப்பிற்கு ஏதுவாதலும் உடன் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 5

கலந்த உயிருடன் காலம் அறியில்
கலந்த உயிரது காலின் நெருக்கம்
கலந்த உயிரது காலது கட்டிற்
கலந்த உயிருடல் காலமும் நிற்குமே.

பொழிப்புரை :

காலத்தால் கலந்திடப்பட்ட உயிருடன் அக்காலம் கலந்து நிற்கும் இயல்பை ஆராய்ந்து அறியின், அது பிராண வாயுவின் திட்பமேயாம். ஆகவே, அந்த உயிர் பிராண வாயுவை அடக்கும் முறையை அறிந்துகொள்ளுமாயின், உயிர் நிற்பது போலவே அதனைக் கலந்து நிற்கின்ற காலமும் ஓடாது ஒரு நிலையாய் நிற்கும்.

குறிப்புரை :

``அஃதாவது வாழ்நாள் கழியாது`` என்பதாம். இஃது ஒருவாறு முன்னே கூறப்பட்டதாயினும், துணிவு பிறத்தற்பொருட்டு இங்கும் இனிது விளங்கக் கூறினார். இவ்வாறு இன்றியமையாத இடங்களில் சிலவற்றைப் பின்னரும் இவ்வாறு வலியுறுத்தி அருளிச் செய்வார்.
இதனால், ``தாரணை, வாழ்நாள் நீட்டிப்பிற்கு ஏதுவாம்`` என மேற்கூறியதற்கு ஏதுக் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 6

வாய்திற வாதார் மனத்திலோர் மாடுண்டு
வாய்திறப் பாரே வளியிட்டுப் பாய்ச்சுவர்
வாய்திற வாதார் மதியிட்டு மூட்டுவர்
கோய்திற வாவிடிற் கோழையு மாமே. 

பொழிப்புரை :

யாவரிடத்திலும் உள்ளமாகிய கருவூலத்தில் ஒரு பெருஞ்செல்வம் உள்ளது. ஆயினும், அக்கருவூலத்திற்கு வாயிலாய் உள்ள சுழுமுனை வழியைத் திறக்க மாட்டாதவர் அச்செல்வத்தை எய்தப் பெறார். அவ்வழியைத் திறக்க விரும்புவோர் பிராண வாயுவை அங்குக் கும்பகம் செய்து திறந்து கும்பித்த அவ்வாயுவை உள்ளே பாய்ச்சுவர். அது செய்யாதோர் மேற்கூறிய செல்வத்தைப் பெறுதற்குத் தம் அறிவை அக் கருவூலத்தின் புறத்தே மோதவிட்டு அல்லற்படுவர். கருவூலத்தைத் திறவாமலே அதிலுள்ள செல்வத்தைப் பெற முயலுபவன் அதனைப் பெறாது பாழுக்கு உழைப்பவனாதலே யன்றி, `அறிவிலி` என அறிவுடையாரால் இகழவும் படுவான்.

குறிப்புரை :

``வாய்திறவார்`` என்பது யோகியரல்லாத பலரையும் குறித்தது. ``மனம்`` என்றது அதற்கு இடமாகிய ஆதாரங்களை ``வாய் திறத்தல்`` என்பதனை ``உரையாடல்`` எனக் கொண்டு, அதற்கு இயையவும் உரை உரைப்பர். அவர், ``மதி`` என்பதனைச் சந்திர மண்டலமாகக் கொள்வர். ``வளியிட்டுப் பாய்ச்சுவர்`` என்பதற்கு, ``பிராணவாயுவைப் பாழ்படுத்துவர்`` என்னும் பொருள் ஏலாமை யாலும், பிறவாற்றாலும் அஃது உரையாகாமையறிக. ``கோயில்`` என்பது கடைக் குறையாயிற்று. ``கோய், செப்பு; சிமிழ்`` எனவும் கொள்வர்.
இதனால், தாரணையது இன்றியமையாச் சிறப்புக் கூறப் பட்டது.

பண் :

பாடல் எண் : 7

வாழலு மாம்பல காலம் மனத்திடைப்
போழ்கின்ற வாயு புறம் படாப் பாய்ச்சுறில்
ஏழுசா லேகம் இரண்டு பெருவாய்தற்
பாழி பெரியதோர் பள்ளி அறையே.

பொழிப்புரை :

சுழுமுனை வழியை ஊடறுத்துச் செல்ல வல்ல தாகிய பிராணவாயுவைப் புறத்துப் போகாதவாறு தடுத்து அச்சுழு முனை வழியுட் பாய்ச்சினால் ஏழு பலகணிகளையும், `தலைவாயில், கடைவாயில்` என்னும் இரண்டு பெரு வாயில்களையும் உடைய பாழ் வீடு இன்பமாகக் கிடந்து உறங்கத் தக்க நல்ல பள்ளியறை யாய்விடும். அப்பொழுது அதில் ஆதாரங்களாகிய கட்டிலிற் கிடந்து பல காலம் இன்புற்றிருக்கலாம்.

குறிப்புரை :

முதலடியை இறுதியில் வைத்துரைக்க. இங்கு, ``பாய்ச்சுதல்`` என்பது ``புறப்படாப் பாய்ச்சுதல்`` என விளக்கிக் கூறப்பட்டமை காண்க. ஏழு சாலேகம், கண், காது, மூக்கு இவற்றின் ஆறு துளைகளுடன், சிறுநீர் வழித்துளை, தலைவாயில், வாய் கடை வாயில், எரு வாய். பாழி - பாழை உடையது. இத் துணை அமைப்புக்கள் இருந்தும் ஆன்மா அதனைத் தூய்மைசெய்து, விளக் கேற்றி வைத்து இன்பமாக வாழாமல் வாளா இருத்தலால், உடம்பை, ``பாழ் வீடு`` என்றார். ``இயமம், நியமம், பிராணாயாமம் என்ப வற்றால் அவ்வீடு தூய்மையும், விளக்கமும் செய்யப்பட்டால், தாரணையில் பல காலம் நலம் பெற்று வாழலாம்`` என்பார் ``பெரிய தோர் பள்ளியறை; ``வாழலுமாம்பலகாலம் என்றார். பிற வற்றை உரு வகம் செய்து, ஆதாரங்களை வாளா கூறினமையால், இது வியநிலை யுருவகம். ``இரண்டுவாசல் - ஏலுடைத்தா அமைத்தங் கேழு சாலேகம் பண்ணி`` (தி.4 ப.33 பா.4) ``பாழறை உனக்குப் பள்ளி யறையாக`` (தி.11 கழுமல) என்னுந் திருமொழிகளை இங்கு நினைவு கூர்க.
யோக நெறியில் நிற்பவர் உடம்பு ஓங்கி நிற்பதொரு கோபுரம் போல்வதும், ஆதாரங்கள் அக்கோபுரங்களில் உள்ள நிலைகள் போல்வனவும், மனம் அக்கோபுரத்தினைப்பற்றி ஏறுதற்குரிய கை கால் முதலிய உறுப்புப் போல்வனவும், பிராண வாயு அவ்வுறுப்புக் களுக்குப் பற்றுக் கோடாய் உதவும் நூலேணி போல்வதும் ஆகும். ஆகவே, கோபுரத்தின்மேல் ஏறிச் செல்பவர்க்கு நூலேணி இன்றியமை யாததுபோல, யோகிகட்குப் பிராணாயாமம் இன்றியமையாததாம், அதனால், ``யோகம்`` என்றாலே, பிறவற்றை எல்லாம் விடுத்து, ``மூச்சை அடக்குதல்`` என்றே பொதுவாகக் கொள்கின்றனர். நாயனார் ``போழ்கின்ற வாயுப் புறப்படாப் பாய்ச்சுறில்`` என இங்கும், இவ்வாறே பல விடத்தும் பிராணயாமத்தை எடுத்தோதிப் போதல், அதன் இன்றியமையாமை பற்றியேயாம் என்க.
இதனால், ``பிரணாயாம பிரத்தியாகாரங்களைப் பயின்ற வர்க்குத் தாரணைக்கண் சலியாது நிற்றல் அரிதன்று`` என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 8

நிரம்பிய ஈரைந்தில் ஐந்திவை போனால்
இரங்கி விழித்திருந் தென்செய்வை பேதாய்
வரம்பினைக் கோலி வழிசெய்கு வார்க்குக்
குரங்கினைக் கோட்டை பொதியலு மாமே.

பொழிப்புரை :

ஒன்றும் அறியாத மாணவனே! உடம்பினுள் நிறைந்திருக்கின்ற பத்து வாயுக்களில் இயங்கும் வாயுக்கள் ஐந்து வீணாய்ப் போய்விட்டால், நீ விழித்திருந்தும் என் செய்ய மாட்டுவாய்! கழிந்ததற்கு இரங்கி நிற்பவனேயாவாய். ஆகையால், பிராணா யாமத்திற்குக் கூறிய முறையைக் கடைப்பிடித்துப் பிராண வாயு மேலேறுதற்கு வழியை உண்டாக்குபவர்கட்கு, மனமாகிய குரங்கை ஆதாரங்களாகிய கோட்டையை விட்டுப் புறத்தே குதித்து ஓடாதபடி நிற்கச் செய்தலும் கூடும்.

குறிப்புரை :

அஃதாவது, ``தாரணையைப் பெறுதலும் கூடும்`` என்பதாம். ``ஈரைந்து, ஐந்து`` என்பவை அதிகார இயைபால் வாயுக்களைக் குறித்து நின்றன. ``இரங்கி`` என்பது பெயர். இதன்பின் ``ஆவாய்``என்பது எஞ்சிநின்றது. ``குரங்கு, கோட்டை`` என்பது குறிப்புருவகங்கள்.
உடம்பின்கண் உள்ள வாயு, ``இயங்குவதும், நிற்பதும்`` என இருவகைத்தாம். ``நிற்பது`` என்றல், இயங்குவதை நோக்கியாம். அவற்றுள் இயங்கும் வாயு மூக்கு வழியாக வெளிச் செல்லின் `பிராணன்` என்றும், வாய் வழியாக வெளிச்செல்லின் `உதானன்` என்றும், எரு வாய் வழியாக வெளிச் செல்லின், `அபானன்` என்றும், உடம்பெங்கும் பரவும்பொழுது `சமானன்` என்றும், உணவுப் பையுள் நின்று உணவைச் செரிப்பிக்கும் பொழுது `வியானன்` என்றும் இவ்வாறு ஐந்தாகி நிற்கும். இனி நிற்கும் வாயுவும், தும்மல் இருமல்களாக வலிதிற் புறப்பட்டு வேண்டாப் பொருளைப் புறத்திடும் பொழுது `நாகன்` என்றும், கண்ணைப் பல திசைகளிலும் நோக்குமாறு இயக்கும்பொழுது `கூர்மன்` என்றும், சோம்பல் காரணமாகப் பிராணவாயுவை இயல்பு திரிந்து கொட்டாவி முதலியனவாக ஆக்கும்பொழுது `கிரிகரன்` என்றும், கண் இமைத்தல் வாயசைத்தல் முதலியவற்றைச் செய்யும்பொழுது `தேவ தத்தன்` என்றும், குருதியில் உளதாகும் நோய் காரணமாக உடலை வேறுபடுத்தி நிற்கும்பொழுது `தனஞ்சயன்` என்றும் இவ்வாறு ஐந்தாகும். ஆகப், பத்து வாயுக்களில் முதலாவதாகிய பிராணனே ஏனை இயங்கும் காற்று நான்கிற்கும் ஆற்றல் தருவது; இயங்கும் காற்றுக்கள் ஆற்றல் கெட்டவிடத்து, நிற்கும் காற்றும் தம் தொழிலைச் செய்யமாட்டா. ஆகவே ``நிரம்பிய ஈரைந்தில் ஐந்து போனால் என் செய்வை`` என்றார். பிராண வாயு இங்கு அதிகாரப்பட்டமையால், அதன் வழியவாகிய அனைத்தையும், ``இவை`` எனச் சுட்டினார்.
`பிராணன், உதானன், அபானன், சமானன், வியானன்` என்பவற்றை முறையே, `உயிர்வளி, எழுவளி, விழு வளி, நிறை வளி, அறு வளி,` எனவும், `நாகன், கூர்மன், கிரிகரன், தேவதத்தன், தனஞ்சயன்` என்பவற்றை முறையே, `தும்மு வளி, நோக்கு வளி, சோம்பு வளி, நுண் வளி, பரு வளி` எனவும் தமிழிற் கூறலாம்.
இதனால், யோகத்திற்குச் சிறந்ததாகிய பிராண வாயுவின் சிறப்புக் கூறுமுகத்தால், பிராணாயாமம் அதற்கு மேல் உள்ள யோகங்கட்கு இன்றியமையாமை கூறப்பட்டது.
(இதன் பின்னர், ``முன்னம் வந்தனர்`` என்னும் பாடல் இடைச் செருகலாய் உள்ளது.)

முன்னம் வந்தனர் எல்லாம் முடிந்தனர்
பின்னை வந்தவர்க் கென்ன பிரமாணம்
முன்னுறு கோடி உறுகதி பேசிடில்
என்ன மாயம் இடிகரை நிற்குமே.

பண் :

பாடல் எண் : 9

அரித்த வுடலைஐம் பூதத்தில் வைத்துப்
பொருத்தஐம் பூதம்சத் தாதியிற் போந்து
தெரித்த மனாதிசித் தாதியிற் செல்லத்
தரித்தது தாரணை தற்பரத் தோடே. 

பொழிப்புரை :

தாரணையை மேற்கூறிய பாவனையளவில் செய்யாது, தத்துவ ஞானத்தைப் பெற்று அதன் வழிச் செய்யின், அஃது இறைவனோடே ஒன்றி நிற்பதாகும்.

குறிப்புரை :

அரித்த உடல் - பசி பிணி மூப்புக்களால் அரிக்கப்பட்ட உடம்பு. இவ்வாறு கூறியது, `உதிரம் முதலிய தாதுக்களால் ஆகிய தாத்துவ தூல தேகம்` என்பது விளங்குதற்கு. பொருத்த - ஓன்றாக்க; `ஒடுக்க` என்றபடி. உதிரம் முதலிய தாதுக் களாலான தேகம் ஐம்பூதங்களின் காரியமாகலின், அஃது ஐம் பூதங்களில் ஒடுங்கு வதாயிற்று. ஒடுக்குதல், இங்கு, `அவற்றின் காரியம்` என்று உணர்தல். சத்தாதி - சத்தம் முதலிய தன்மாத்திரைகள். தன்மாத்திரைகளின் காரியங்களே பூதங்களாதலின், அவை தன்மாத்திரைகளுள் ஒடுங்கு வனவாம். மனாதி ``மனம், அகங்காரம், புத்தி`` என்னும் அந்தக் கரணங்கள். சித்த ஆதி - சித்தமாகிய முதல்; சித்தமாயும், குண தத்து வமாயும் நிற்பது மூலப் பிரகிருதியேயாகலின், ``சித்தாதியிற் செல்ல`` என்றது, ``மூலப்பிரகிருதியில் ஒடுங்க`` என்றதாம். மனம் அகங் காரத்திலும், அகங்காரம் புத்தியிலும், புத்தி சித்தத் திலும் ஒடுங்குமாயினும், சித்தம் முடிவாக நிற்றல் பற்றி, ``மனாதி சித்தாதியில் செல்ல`` என்றார். தத்துவ ஒடுக்கங்களை இங்கு ஒருவாறு சிறிது கூறினாரன்றி, முற்றும் விரித்துக் கூறிற்றிலர், இஃது அதற்கு இடமன்மையில், ``பொருத்த, செல்ல`` என்பனபோல, `போத` எனச் செயதவனைச்சமாக ஓதாது, திரித்து ஓதினார்; முன்னின்ற எச்சங்கள் இரண்டும் எண்ணின் கண் வந்தமை தோன்றுதற்கு, `ஆன்மா, தத்துவங்கள் அனைத்தினும் நீங்கின் சிவமே, அதற்குச் சார்பாய் விடுமாதலின், மனத்தை அவ்வகையிற் பயிற்றும் யோகம், அந்த ஞானத்தை நிலை பெறுவிக்கும்` என்பதாம்.
இதனால், ஞான தாரணையின் இயல்பும், பயனும் கூறப்பட்டன.

கருத்துகள் இல்லை:

திருமூலர் திருமந்திரம் - 275 - விளக்கம்

பாடல் விளக்கம்: மெய்தான் அறியும் செழுங்கடல் வட்டத்துப் பொய்தான் மிகவும் புலம்பும் மனிதர்கள் மெய்தான் உரைக்கில்விண் ணோர்தொழச் செய்குவன் ம...