ஞாயிறு, 21 ஜூன், 2020

இரண்டாம் தந்திரம் - 3. இலிங்க புராணம்

இரண்டாம் தந்திரம் - 3. இலிங்க புராணம்


பண் :

பாடல் எண் : 1

அடிசேர்வன் என்ன எம் ஆதியை நோக்கி
முடிசேர் மலைமக னார்மக ளாகித்
திடமார் தவஞ்செய்து தேவர் அறியப்
படியார அற்சித்துப் பத்திசெய் தாளே. 

பொழிப்புரை :

உமையம்மையும் மலையரையன்பால் மகளாய் வளர்ந்தபொழுது `சிவபெருமானது திருவடிக்குத் தொண்டு புரிவேன்` (அவனுக்கு மனைவியாவேன்) என்று கருதி அதன்பொருட்டு அப்பெருமானை நோக்கித் தவம் செய்து அப்பயனைப் பெற்றாள். பின் தேவரும் அறியும்படி இந்நிலவுலகில் அவனை அன்புடன் வழிபடுதலும் செய்தாள்.

குறிப்புரை :

`அதனால் சிவபெருமான் யாவராலும் வழிபடத் தக்கவன் என்பது விளங்கும்` என்பது குறிப்பெச்சம். இரண்டாம் அடியை முதலிற்கொண்டு உரைக்க. ``அரசன்`` என்றற்கு ``முடிசேர் மலைமகனார்`` என்றார். ``உமையம்மை`` என்னும் எழுவாய் ஆற்றலால் கொள்ளக் கிடந்தது.
இதனால், உமையம்மையே சிவனை வழிபட்டமை கூறப் பட்டது. இத்தகைய தலங்கள் காஞ்சி முதலியனவாகச் சிறப்புற்று விளங்குதல் அறிக.

பண் :

பாடல் எண் : 2

திரிகின்ற முப்புரஞ் செற்ற பிரானை
அரியனென் றெண்ணி அயர்வுற வேண்டா
புரிவுடை யாளர்க்குப் பொய்யலன் ஈசன்
பரிவொடு நின்று பரிசறி வானே. 

பொழிப்புரை :

`முப்புரத்தை எரித்த முதல்வனாகிய சிவபெருமான் உமையம்மை போன்றார்க்கன்றி நம்மனோர்க்குக் கிடைத்தற்கரியன்` என்று தளர்ச்சி எய்த வேண்டா. அன்புடையார் யாவராயினும் அவர்க்கு அவன் எளியனே. அன்புடையார் பால் அருளுடையவ னாய் நின்று அவரவர்க்குத் தக்க வகையில் அவன் அருள் செய்வான்.

குறிப்புரை :

புரிவு - விருப்பம்; அன்பு, பொய், இங்கு அருமை. பரிவு - தன்மை; தகுதி. `அவரவர்க்குத் தக அருள்புரிவான்` என்றதனால்,`பயன் கருதியும் அவனை வழிபடலாம்` என்பது உணர்த்தப்பட்டதாம்.
``அஞ்சி யாகிலும் அன்புபட் டாகிலும்
நெஞ்சம் வாழி நினைநின்றி யூரைநீ`` -தி.5 ப.23 பா.9
என அப்பரும் அருளிச் செய்தார்.
இதனால், ``யாவர்க்குமாம் இறைவற்கொரு பச்சிலை`` (தி.10 பா.251) என மேற்குறித்த வழிபாடு அவரவர்க்கு இயலுந் திறத்தால் சிவனுக்குச் செய்தல் தக்கது என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 3

ஆழி வலங்கொண் டயன்மால் இருவரும்
ஊழி வலஞ்செய்ய ஒண்சுட ராதியும்
ஆழி கொடுத்தனன் அச்சுதற் கவ்வழி
வாழி பிரமற்கும் வாள்கொடுத் தானே. 

பொழிப்புரை :

மிக்க வலிமை பொருந்தித் தம்மில் போர்செய்த பிரமன், திருமால் என்னும் இருவரும் தம்முன் தீப்பிழம்பாய்த் தோன்றிய சிவபெருமானைப் பின்பு இலிங்கத் திருமேனியில் நெடுங் காலம் வழிபட, அவர்கட்குச் சிவபெருமான் திருமாலுக்குச் சக்கரப் படையையும், பிரமனுக்குத் தண்டாயுதத்தையும் வழங்கி, முறையே, காத்தல் படைத்தல்களைச் செய்யுமாறு அருள்புரிந்தான்.

குறிப்புரை :

எனவே, குற்றம் செய்தலை இயல்பாக உடைய உயிர்கள் தாம் செய்த குற்றத்திற்குச் சிறந்த கழுவாய் (பிராயசித்தம்) ஆகச் செய்யத்தக்கதும் சிவ வழிபாடே என்றதாயிற்று. ஆழி இரண்டில் முதற்கண் உள்ளது `ஆழம்` எனப் பொருள்தந்து, மிகுதியை உணர்த் திற்று. வலம் இரண்டில் முன்னது வலிமை. அஃது அதனால் ஆகிய போரைக் குறித்ததது. `கொண்ட` என்பதன் ஈற்று அகரம் தொகுத்தலாயிற்று. வாள் - படைக்கலம். `வாள் பெற்றான்` என்றே கொள்ளுதலும் பொருந்தும்.
ஒருகற்பத்தில் பிரமனும், மாலும் தாம் தாமே உலகிற்கு முதல்வர் எனத் தருக்கிப் போர்புரிய, அவர்க்கு இடையே சிவ பெருமான் அடிமுடி அறியப்படாத அனற் பிழம்பாய்த் தோன்றியருள, அவ்விருவரும் `இதன் அடி முடிகளை அறிபவரே முதல்வர்` என வரையறுத்துக்கொண்டு அவற்றைக் காண முயன்றனர். திருமால் வராக வடிவங்கொண்டு நிலத்தைப் பிளந்து பல்லாயிரம் யாண்டு கீழ்சென்று அடியைக் காண முயன்று முடியாதவராய், `இது சிவ பெருமானது திருவிளையாடல்` என்று அறிந்து தருக்கொழிந்தார். பிரமன் அன்னப் பறவை உருவங்கொண்டு பல்லாயிரம் யாண்டு மேலே பறந்து சென்றும் முடியைக் காண இயலாதவனாய், திருமால் அடியைக் கண்டிருப்பார் என்னும் கருத்தினால் அவர்முன் வந்து `யான் முடியைக் கண்டேன்` என்று பொய் கூறினான். அவன் பொய்ம் மொழிக்குச் சான்றாகச் சிவபெருமானது முடியினின்றும் வீழ்ந்த தாழை மலர் நின்றது. பிரமன் பொய் கூறுதலைப் பொறாத சிவபெருமான் அக்கினித் தம்பத்தைப் பிளந்துகொண்டு உக்கிரவடிவத்துடன் காட்சி யளித்துப் பிரமதேவனுக்கு இவ்வுலகில் எங்கும் கோயில் உண்டா காதவாறு சபித்தும், தாழை மலரைத் தமக்கு ஆகாது என்று விலக்கியும் ஒறுத்தருளினார். பின்பு பிரமதேவன் அஞ்சி வணங்க, அவனுக்கு அந்தணர் இல்லமே கோயிலாகவும், அவரைப் பிறர் வழிபடும் வழி பாடே அவனுக்குச் செய்யும் வழிபாடாகவும் அருள் செய்தார். பின்பு, மால் அயன் இருவரும் வேண்டச் சிவ பெருமான் தம் வழிபாட்டிற் குரிய இலிங்கவடிவாயினார். அவ் வடிவில் இருவரும் சிவபெரு மானைப் பூசித்துப் பயன் பெற்றனர். இதுவே இலிங்கத் தோற்றத் திற்குப் புராணம் கூறும் வரலாறு. இவ் வரலாற்றை விரித்துக் கூறும் புராணமே இலிங்க புராணம். இதனைக் கந்த புராணம் ஓரளவில் கூறும். ``இலிங்க புராணம்`` என்பது ``சைவ புராணம்`` என்பதன் மறுபெயர்.
பிரமன் அரிஎன் றிருவருந்தம் பேதைமையால்
பரமமியாம் பரமமியாம் என்றவர்கள் பதைப்பொடுங்க அரனா ரழலுருவாய் அங்கே அளவிறந்து பரமாகி நின்றவா தோணோக்கம் ஆடாமோ.
- தி.8 தோணோக்கம் , 12
என மாணிக்கவாசகர் இவ்வரலாற்றை எடுத்தோதியருளினார். ``திருமாலும் பன்றியாய்ச் சென்றுணராத் திருவடி`` - தி.8 தெள்ளேனம், 1 என்று பிறவிடங் களிலும் குறித்தருளுவார். தேவாரத் திருமுறைகளுள் இவ்வரலாறு பயின்று வருதல் வெளிப்படை. திருநாவுக்கரசர் `இலிங்க புராணத் திருக்குறுந்தொகை` என ஒரு திருப்பதிகமே அருளிச்செய்தார்.
இதனால், சிவபெருமானே முதல்வனாதலை விளக்கும் இலிங்க வரலாறு கூறப்பட்டது. இதனானே அப்பெருமான், உயிர்கள் தன்னை வழிபடுதற்குக் கொண்ட வடிவங்களுள் இலிங்கத் திரு மேனியே சிறப்புடையதாதலும் பெறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 4

தாங்கி இருபது தோளுந் தடவரை
ஓங்க எடுத்தவன் ஒப்பில் பெருவலி
ஆங்கு நெரித்தம ராவென் றழைத்தபின்
நீங்கா அருள்செய்தான் நின்மலன் தானே. 

பொழிப்புரை :

சிவபெருமான் தனது கயிலைப் பெருமலையைத் தூக்கி எறியக் கருதி இருபது தோள்களாலும் மேல் எழுமாறு தாங்கி எடுத்த இராவணனது நிகரில்லாத பேராற்றலைத் தனது கால் விரலால் விரைய ஊன்றி அவன், இறைவனே என்று அழைத்து அலறி முறை யிட்ட பின் அவனை விடுத்து, அழிவில்லாத வரத்தையும் கொடுத் தருளினான்.

குறிப்புரை :

இவ்வரலாறு இராமாயணம் உத்தர காண்டத்துள் சொல்லப்பட்டது.
இதனால், சிவபெருமான் இராவணனுக்கு மறக்கருணையும், அறக்கருணையும் செய்தமை கூறப்பட்டது. வழிபட்டவர்க்கே அறக்கருணை செய்வான் என்க.

பண் :

பாடல் எண் : 5

உறுவ தறிதண்டி ஒண்மணல் கூட்டி
அறுவகை ஆன்ஐந்தும் ஆட்டத்தன் தாதை
செறுவகை செய்து சிதைப்ப முனிந்து
மறுமழு வால்வெட்டி மாலைபெற் றானே. 

பொழிப்புரை :

`செய்யத் தக்க செயல் இது` என்பதை முற்பிறப்பிற் செய்த தவமுதிர்ச்சியால் தெளிந்த தண்டீசநாயனார் மணலால் இலிங்கம் அமைத்து, வினை கெடும்வகையில் பசுவின் பாலையே எல்லாத் திருமஞ்சனப் பொருளுமாகக் கருதி ஆட்டி வழிபட, அவரைப் பெற்ற தந்தை தன்மகன் வேள்விக்குரிய பாலை வீணாக்கு வதாக நினைத்து வெகுண்டு ஒறுக்க வேண்டித் தண்டுகொண்டு அடித்து, அது பயன்படாமையால், இலிங்கத் திருமேனியைக் காலால் அழிக்க, நாயனார் சினந்து, தாம் ஆனிரை மேய்க்கும் கோலை எடுத்தபொழுது அதுவே மழுவாய் மறுவடிவங்கொள்ள, அதனாலே அவன் காலை வெட்டி, அதற்குப் பரிசிலாகச் சிவபெருமான் சண்டேசுர பதவியில் இருத்தித் தன் முடிமேல் இருந்து எடுத்துச் சூட்டிய கொன்றை மாலையைப் பெற்றார்.

குறிப்புரை :

எனவே, `சிவ வழிபாட்டின் மிக்க வழிபாடும் இல்லை; அதனை இகழ்தலின் மிக்க பாவமும் இல்லை` என்பதும், அங்ஙன மாகவே, `அவ்வழிபாட்டினை இகழ்வார் எவராயினும் அவரைப் பாவிகளாகக் கருதி ஒறுத்தல் பேரறமாம்` என்பதும் குறித்தவா றாயிற்று. தமிழ் நாட்டில் வரலாற்று முறையால் உலக வழக்கிலும், செய்யுள் வழக்கிலும் வழங்கி வந்த இவ்வரலாற்றினை நாயனார் இத் திருமந்திரமாக ஆக்கியருளினார். இச்சிறப்புக் கருதித் திருஞான சம்பந்தமூர்த்தி சுவாமிகள் தமது திருப்பாசுரத் திருப்பதிகத்துள்,
கடிசேர்ந்த போது மலரான கைக்கொண்டு, நல்ல
படிசேர்ந்த பால்கொண்டங் காட்டிடத் தாதை பண்டு
முடிசேர்ந்த காலை அறவெட்டிட முக்கண் மூர்த்தி
அடிசேர்ந்த வண்ணம் அறிவார் சொலக் கேட்டு மன்றே.
-தி.3 ப.54 பா.7
என்று அருளிச் செய்தார்.
தழைத்ததோர் ஆத்தி யின்கீழ்த் தாபரம் மணலால் கூப்பி
அழைத்தங்கே ஆவின் பாலைக் கறந்துகொண் டாட்டக்கண்டு
பிழைத்ததன் தாதை தாளைப் பெருங்கொடு மழுவால் வீசக்
குழைத்ததோர் அமுதம் ஈந்தார் குறுக்கை வீரட்டனாரே.
-தி.4 ப.49 பா.3
என அப்பரும் இதனை வகுத்தோதியருளினார்.
இவையெல்லாம் பற்றித் தொகையாகவும், வகையாகவும் அவ்வக்காலத்தில் வெளிப்பட்ட திருத்தொண்டர் வரலாற்றினை விரிவாகச் செய்தருளிய சேக்கிழார் நாயனார் தமது திருத்தொண்டர் புராணத்துள் இவ்வரலாற்றை விரித்தருளியவாறு இது.
`சோழநாட்டில் திருச்சேய்ஞலூரில் வைதிக அந்தணர் குலத்தில் `எச்ச தத்தன்` என்னும் தந்தைக்கும், `பவித்திரை` என்னும் தாய்க்கும், `விசார சருமர்` என்னும் அரும்பெறற் புதல்வர் ஒருவர் தோன்றினார். அவர் முன்னைத் தவமுதிர்ச்சியால் கல்வியைச் சிறக்கக் கற்று, உபநயனம் பெற்று, வேதம் முதலிய கலைகளினும் வல்லவராய், `சிவபெருமானே முழுமுதற் கடவுள்` என்று உணர்ந்து, அவனது திரு வடிக்கண் அன்பு மீதூர்ந்து நின்றார். அவர் ஒருநாள் பிற மாணாக் கருடன் வேதம் ஓதிச் செல்லுகையில் வழியில், அவ்வூர்ப் பசு மேய்க்கும் ஆயன், தன்னை முட்டிய பசு ஒன்றினைக் கோலால் நன்கு புடைத்ததைக் கண்டு வருத்தமும் சினமும் கொண்டு, `பசுக்களின் பெருமையை அறியாத நீ இனி இவற்றை மேய்த்தல் வேண்டா; இன்று முதல் யானே இவற்றை மேய்க்கின்றேன்` என்று அன்று முதல் அவ் ஆனிரைகளை அவரே மேய்த்து வருவாராயினார்.
அவர் அப்பசுக் களிடத்துக் கொண்ட உண்மை அன்பால் அப்பசுக்களும் அவரிடம் பேரன்பு கொண்டன. நல்ல மேய்ப்பினால் அவை தம்மை உடை யவர்க்கு முன்னையினும் மிகுதியாகப் பால் தந்தன. அதனால், `இம் மாணியின் மேய்ப்பே நல்ல மேய்ப்பு` என ஊர் அந்தணர் பலரும் மகிழ்ந்தனர்.
பசுக்கள் பலவும் விசார சருமரைக் காணும் பொழுது தம் கன்றினைக் கண்டாற்போல அன்பு பெருகி நின்றமையால், அவற்றின் மடியில் பால் தானாகவே விம்மிப் பெருகுவதாயிற்று. சிவ வழிபாடு ஒன்றற்கே உரிய பசுக்களின் பால் வீணாவதைக் கண்ட விசார சருமர், அதனைச் சிவபெருமானுக்கு ஆக்கக் கருதித் தாம் பசுமேய்க்கும் மண்ணியாற்றங்கரையில் மணல் இலிங்கம் அமைத்து அப்பாலைக் குடங்களில் ஏற்று ஆட்டி வழிபட்டார்.
இவ்வாறு நாள் பல செல்ல, இதனை அறிந்த ஒருவன், `பசுமேய்க்கின்ற சிறுவன் பாலைக் கறந்து மண்ணியாற்று மணலில் ஊற்றுகின்றான்` என்று அந்தணர்களிடம் சென்று கோள் உரைத்தான். அந்தணர்கள், தமக்குப் பால் குறைவறக் கிடைப்பினும், விசார சருமரது வழிபாட்டின் சிறப்பை அறியாத வர்களாய் அவர் தந்தையாகிய எச்ச தத்தனிடம் கூறினர். எச்ச தத்தன், `நாளைமுதல் இச்செயல் நிகழாதவாறு செய்கின்றேன்` என்று உறுதி கூறி, விசார சருமர் பசு மேய்க்கச் சென்றபின், அவர் அறியாதவாறு அவர் பின்னே சென்று மண்ணியாற்றங்கரையில் ஒரு குராமரத்தின் மேல் ஏறி மறைந்திருந்து, தன் மகனாரது செயல் பலவற்றையும் நோக்கி யிருந்தான்.
அவர் முன்புபோல மணலால் கோயிலும், இலிங்கமும் செய்து, பாலைக் கொணர்ந்து வைத்துப் பூ முதலியவைகளையும் சேர்த்துக் கொணர்ந்து வழிபாட்டில் அமர்ந்து அன்புடன் வழிபடுவா ராய்ப் பாலை எடுத்துக் குடம் குடமாக ஆட்டும்பொழுது எச்சதத்தன் சீற்றம் மிகுந்து இறங்கிச்சென்று மகனாரைவைது, கோல் ஒன்றினால் முதுகில் புடைத்தும் நின்றான்.
ஆயினும் அவற்றை விசார சருமர் பூசை நினைவால் அறிந்திலர். அதனால் எச்ச தத்தன் கோபம் மூண்டு சென்று, அவர் வழிபடும் மணல் இலிங்கத்தைக் (இலிங்கத்தை இடறினமையை வாயால் சொல்லுதலும் கூடாது என்று சேக்கிழார் பாற்குடத்தை இடறியதாகக் கூறினார்) காலால் சிதைத்தான். அதனால் மிக வெகுண்ட விசார சருமர், தம் பக்கத்திருந்த பசுமேய்க் கும் கோலை எடுக்க, திருவருளால் அது மழுவாயுதமாக மாறிற்று. அதனாலே அவர் எச்சத்தத்தனது இரண்டு கால்களையும் துணிந்து வீழுமாறு வெட்டினார். எச்சதத்தன் அலறித் துடித்து மண்ணில் விழுந்தான்.
விசார சருமர், `இனிச் சிவபூசைக்கு வரும் இடையூற்றை நீக்குவதற்குக் கருவியாக இம் மழுப்படை திருவருளால் கிடைத்தது` என்று மகிழ்ந்து மீளவும் சிவபூசைக்கு ஆவனவற்றைச் செய்ய முயன்றார்.
அப்பொழுது சிவபெருமான் தேவர், முனிவர், கணங்கள் புடைசூழத் தோன்றிக் காட்சியளித்து, `நம் பொருட்டு நின் தாதையைத் தடிந்த நினக்கு இனி நாமே தந்தை; நீ நம் மகன்` என்று திருவாய் மலர்ந்து, தம் கையால் அவரைத் தழுவி எடுத்து மார்போடு அணைத்து, உச்சிமோந்து சீராட்ட, விசார சருமர் முன்னை மாயா உடம்பு நீங்க, அருளுடம்பு பெற்றுச் சிவகுமாரர் ஆயினார்.
பின்பு சிவபெருமான், `நம்மை வழிபடுவோர் நமக்கு ஆக்கிப் பெறும் நின்மாலியப் பொருள்கள் உனக்கு மட்டுமே உரியனவாக` என அருளிச்செய்து, சிவனடியார் பலர்க்கும் தலைமையாய் அவர்கட்கு அவர் தம் திருத்தொண்டின் பயனை வழங்கும் சண்ட பதவியை அவருக்கு அளித்து, அதற்கு அடையாளமாகத் தமது திருமுடியில் உள்ள கொன்றை மாலையை எடுத்துச் சூட்டியருளினார்.
நாயனாரால் தண்டிக்கப் பெற்றமையால், எச்சதத்தனும், அவனைச் சார்ந்தோரும் சிவாபராதத்தால் `எரிவாய் நிரயம் புகாது நீங்கிச் சிவலோகத்தை எய்தினர்`.
`சண்டேசுரர்` என்பது இவரது பதவியாற் பெற்ற பெயர். கையில் தண்டு கொண்டு ஆனிரை மேய்த்து, அத்தண்டே மழுவாகப் பெற்றுப் பிழைசெய்தவனை ஒறுத்தமை பற்றி, `தண்டீசர்` எனவும் அழைக்கப்படுகின்றார். சிவகுமாரர் ஆயினமைபற்றி இவர், `பிள்ளையார் - சேய்ஞலூர்ப் பிள்ளையார்` எனப்படுகின்றார்.
திருத்தொண்டத் தொகை அடியவருள் ஒருவராயினமைபற்றி நாயன்மார்களுள் இவரும் அவருள் ஒருவராய் நின்று திருக்கூட்டத்து வழிபடப்படுதலே யன்றிச் சிவபெருமான் இவருக்கு அளித்த தனிச்சிறப்புக் காரணமாகச் சண்டேசுர நிலையில் நின்று தனி வழிபாடும் பெறு கின்றார்.
அதனால் இவரை நாயன்மார்களுள் ஒருவராகமட்டும் வைத்து வழிபட்டுச் சண்டேசுரராக வழிபடாது ஒழிபவர் சிவபெருமானது அருளாணையைக் கடந்தவராவர். அவர்கட்குச் சிவவழிபாட்டின் பயன் கிட்டுதல் அரிது.
இவ்வரலாற்றால் சிவவழிபாடு வீடுபேற்றைத் தரும் என்பது அறியப்படும். மற்றும், `சிவவழிபாட்டிற்கு இடையூறு விளைப்பாரை ஒறுத்தல் பெருஞ் சிவபுண்ணியமாம் என்பது இதனால் விளங்குவது` எனச் சேக்கிழார் திருப்பாசுரத் திருக்குறிப்பருளலில் குறித்தல் காண்க. (தி.12 திருஞான - 839)
`சிவனடியாரால் ஒறுக்கப்பெற்றவர் தம் குற்றம் முழுதும் நீங்கித் தூயராவர்` என்பது, நாயனாரால் தண்டிக்கப்பெற்ற எச்சதத்தன் குற்றம் நீங்கிச் சிவலோகம் புகுந்தமையால் அறியப்படும். `சிவ வழிபாடு நன்கு நடைபெறுதல் காரணமாகச் செய்யப்படும் செயல்கள் யாவும் சிறந்த சிவபுண்ணியங்களே` என்பதை மாணிக்கவாசகர்,
தீதில்லை மாணி சிவகருமம் சிதைத்தானைச்
சாதியும் வேதியன் தாதைதனைத் தாளிரண்டும்
சேதிப்ப ஈசன் சிவனருளால் தேவர்தொழப்
பாதகமே சோறு பற்றினவா தோணோக்கம்.
-தி.8 தோணோக்கம் ,7
என நன்கு எடுத்து அருளிச்செய்தார்.
ஏத நன்னிலம் ஈரறு வேலி
ஏயர்கோன் உற்ற இரும்பிணி தவிர்த்துக்
கோத னங்களின் பால்கறந் தாட்டக்
கோல வெண்மணற் சிவன்றன்மேற் சென்ற
தாதை தாளற எறிந்தசண் டிக்குன்
சடைமி சைமலர் அருள்செயக் கண்டு
பூத வாளிநின் பொன்னடி அடைந்தேன்
பூம்பொ ழில்திருப் புன்கூ ருளானே. -தி.7 ப.55 பா.3
என்று நம்பியாரூரர் இனிது விளங்க எடுத்தருளிச்செய்தமை காண்க.
இதனால், சிவபெருமான் சண்டேசுர நாயனாருக்கு வியத்தகும் அறக்கருணை செய்தமை கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 6

ஓடிவந் தெல்லாம் ஒருங்கிய தேவர்கள்
வாடி முகமும் வருத்தத்துத் தாஞ்சென்று
நாடி இறைவா நமஎன்று கும்பிட
ஈடில் புகழோன் எழுகவென் றானே.

பொழிப்புரை :

தேவர் பலரும் பற்பல காலங்களில் பற்பல துன்பங்களை அடைந்து சிவபெருமானிடம் முறையிட்டு அத்துன்பம் நீங்குதல் வேண்டி அப்பெருமானை அவன் திருப்பெயர்கள் பலவற்றையும் சொல்லி மலர்தூவிப் போற்றிசெய்து வழிபட, சிவபெருமான் அவர்களை அத்துன்பங்களினின்றும் நீங்கச் செய்தான்.

குறிப்புரை :

எனவே, `இங்கும், மேலேயும் கூறியவாறு தேவர், மூவர், முனிவர், அசுரர், இராக்கதர் முதலிய யாவரும் சிவபெரு மானை வழிபட்டே தாம் கருதிய பயனை அடைந்தனர்` என்பது முடித்துக் கூறியவாறாயிற்று.

கருத்துகள் இல்லை:

திருமூலர் திருமந்திரம் - 275 - விளக்கம்

பாடல் விளக்கம்: மெய்தான் அறியும் செழுங்கடல் வட்டத்துப் பொய்தான் மிகவும் புலம்பும் மனிதர்கள் மெய்தான் உரைக்கில்விண் ணோர்தொழச் செய்குவன் ம...