ஞாயிறு, 21 ஜூன், 2020

இரண்டாம் தந்திரம் - 23. மாகேசுர நிந்தை கூடாமை

இரண்டாம் தந்திரம் - 23. மாகேசுர நிந்தை கூடாமை


பண் :

பாடல் எண் : 1

ஆண்டான் அடியவ ரார்க்கு விரோதிகள்
ஆண்டான் அடியவர் ஐயமேற் றுண்பவர்
ஆண்டான் அடியாரை வேண்டாது பேசினோர்
தாந்தாம் விழுவது தாழ்நர காகுமே. 

பொழிப்புரை :

சிவனடியார் உலகில் உள்ளாரில் யார்க்கு என்ன தீங்கு செய்கின்றனர்! அவர்கள் அறவுள்ளம் உடையார், இடுகின்ற பிச்சையை ஏற்று உண்டு போகின்றார்கள். ஆதலின், அவரிடத்து வெறுப்புக் கொண்டு இகழ்ந்து பேசியவர் அடைவது மிகக் கீழான நரகமே.

குறிப்புரை :

``சிவனடியாரை வெறுத்துப் பேசுதற்குக் காரணம், செல்வம் முதலியவற்றால் வரும் செருக்கும், சமயக் காழ்ப்பும் போல்வனவேயன்றிப் பிறிதில்லை`` என்றற்கு முதல் இரண்டடிகளைக் கூறினார். ``ஊர்கள்தோறும் அட்டுண்பார் இட்டுண்பார் விலக்கார் ஐயம்`` (தி.6 ப.98 பா.2) என்றதும், ``சிவனடியார்க்கு உலகத் தாரோடு உறவினா லாதல், பகையினாலாதல் தொடர்பில்லை என்பது விளக்கியதேயாம்.
இரந்தும் உயிர்வாழ்தல் வேண்டிற் பரந்து
கெடுக உலகியற்றி யான். -குறள், 1062
என்றதில், ``இரத்தல் இல்வாழ்வார் மேற்கொள்ளும் தொழில்களுள் ஒன்றன்று`` என்றதன்றி,
இல்வாழ்வான் என்பான் இயல்புடைய மூவர்க்கும் நல்லாற்றின் நின்ற துணை. -குறள், 41
என்புழிக் கூறப்பட்ட இயல்புடைய மூவரை விலக்கியதன்று. இனி,
துறந்தார்க்கும் துவ்வா தவர்க்கும் இறந்தார்க்கும் இல்வாழ்வான் என்பான் துணை. -குறள், 42
என்புழித் ``துறந்தார்``என்றது கிளைஞரால் கைவிடப்பட்டவரை. இவரை, ``அனாதைகள்`` என்பர். இவர் சிறுமகாரும், கழிமூப்பினரும், ``காணார் கேளார் கால் முடம்பட்டார்`` (மணிமேகலை, காதை.13, வரி.111) முதலியோருமாய், முயற்சி செய்யமாட்டாதவராய் இருப்பவர். இவர் தாமே கிளைஞரால் கைவிடப்படாதவழி. அவரால் வயிறு நிரம்பப் பெறாராயின், ``துவ்வாதவர் வறியார்`` எனப்படுவர். ``இவர்க்கும் ``இல்வாழ்வான் துணை`` என்றமையால், இவரையும் மேற்காட்டிய ``இரந்தும் உயிர் வாழ்தல் வேண்டின்`` என்னும் குறள் விலக்கியதின்றாம். ஆகவே, இவரையெல்லாம் பொதுப் பட நோக்கியே, ``ஈகை`` (குறள் அதிகாரம், 23) என்னும் அதிகாரமும்,
இரப்பாரை யில்லாயின் ஈர்ங்கண்மா ஞாலம்
மரப்பாவை சென்றுவந் தற்று. -குறள், 1058
என்னும் குறளும் சொல்லப்பட்டனவாம். இவ்வாசிரியரும் ``யாவர்க்கு மாம்உண்ணும் போதொரு கைப்பிடி`` (பா. 51) என்றதும் இவரை நோக்கியேயாம்.
இங்ஙனம் நூல் முழுவதையும் முற்றநோக்கி உண்மை உணரமாட்டாதார். `இங்குக் காட்டியன பலவும் தம்முள் ஒன்றி நில்லாது ஒன்றை ஒன்று விலக்குவனவாய் முரணிநிற்கும்` என்று இகழ்வர். அவர் ``ஏற்பதிகழ்ச்சி, ஐயம் இட்டுண்`` (ஆத்திசூடி, 8,9) என்றாற் போல்வனவற்றையும் அன்னவாக வைத்து இகழ்தல் சொல்ல வேண்டுமோ என்பது.
சிவனடியாராகிய மாகேசுரரை நல்விருந்தினராக வரவேற்று ஓம்புவார் சத்திநிபாதர். அவர் உலகத்து அரியராக, இரவலராக வைத்து ஐயம் ஏற்று உண்டலையே கூறினார். ஐயம் இடுவோர் அவரின் மிக்குளதாதல் பற்றி இங்கு `ஆர்க்கும் விரோதிகள்` என்பது பாடமாயின், `ஆண்டான் அடியவராய யார்க்கும் விரோதிகளாய் ஐயம் ஏற்றும் உண்பவராய அவ்வடியவரை வேண்டாது பேசினார்` என உரைத்தலன்றிப் பிறவாறுரைத்தல் பொருந்தாமை அறிக. `தாந் தாம் விழுவது` என்பதில் இரண்டாவது `தாம்` அசைநிலை.
இதனால், மாகேசுர நிந்தை மாபாதகமாதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 2

ஈசனடியார் இதயங் கலங்கிடத்
தேசமும் நாடும் சிறப்பும் அழிந்திடும்
வாசவன் பீடமும் மாமன்னர் பீடமும்
நாசம தாயிடும் நம்நந்தி யாணையே. 

பொழிப்புரை :

சிவனடியாரது உள்ளம் எவ்வாற்றாலேனும் நோகு மாயின். அதற்குக் காரணமாய் உள்ள மண்ணுலக நாடும், அதன் சிறப்புக்களும் அழிதலேயன்றி விண்ணுலக வேந்தன் ஆட்சி பீடத் துடன் மண்ணுலக மன்னன் ஆட்சி பீடமும் அழிந்தொழியும். இஃது எங்கள் நந்திபெருமான்மேல் ஆணையாகச் சொல்லத்தக்க உண்மை.

குறிப்புரை :

இவ்வாறே,
தாம் அடங்க இந்தத் தலம் அடங்கும்; தாபதர்கள்
தாம்உணரில் இந்தத் தலம்உணரும் - தாம்முனியில்
பூமடந்தை தங்காள்; புகழ்மடந்தை போயகலும்;
நாமடந்தை நில்லாள் நயந்து.
எனத் திருக்களிற்றுப்படி(பா.68)யும் கூறிற்று. இதனால், சிவனடியாரது மனம் நோவாமைக் காத்தல் நாடாளும் அரசர்க்கு முதற்கடமையாதல் பெறப்படுதலின், அது பற்றியே நாயனார் முன்னர்,
ஆவையும் பாவையும் மற்றற வோரையும்
தேவர்கள் போற்றும் திருவேடத் தாரையும்
காவலன் காப்பவன்; காவா தொழிவனேல்,
மேவும் மறுமைக்கு மீளா நரகமே. -தி.10 பா. 242
என விதித்தார்.
``மதுரையில் ஆளுடைய பிள்ளையாரோடு ஒட்டி வாதில் தோற்ற சமணரை நின்றசீர் நெடுமாறர் கழுவில் ஏற்றியது, அவர்தாமே, `வாதில் அழிந்தோமாகில் - வெங்கழு வேற்றுவான் இவ் வேந்தனே` (தி.12 பெ.பு ஞானசம், 798) என உடன்பட்டமையை முதன்மையாகக் கொண்டன்று; அதற்கு முன்பே பிள்ளையார் எழுந்தருளியிருந்த திருமடத்தில் இரவில் தீயிட்டுத் திருக்கூட்டத்தார் பலரை உளம் நடுங்கச் செய்த மாபாதகம் அவரையும், தன்னையும், பின்பு தொடராமைப் பொருட்டே`` என்பதையும் ``அஃது அன்னதாகலின் அதனை விலக்கின் தமக்கும் குற்றமாம் என்று கருதியே பிள்ளையார் அரசன் செயலைத் தடுத்திலர்`` என்பதையும் சேக்கிழார்,
மன்னவன் மாறன் கண்டு மந்திரி யாரை நோக்கித்
துன்னிய வாதில் ஒட்டித் தோற்றஇச் சமணர் தாங்கள்
முன்னமே பிள்ளை யார்பால் அனுசிதம் முற்றச் செய்தார்
கொன்னுனைக் கழுவில் ஏற்றி முறைசெய்க என்று கூற.
-தி.12 பெ.பு ஞானசம். 853
எனவும்,
புகலியில் வந்த ஞான புங்கவர் அதனைக் கேட்டும்
இகல்இலர் எனினும் சைவர் இருந்துவாழ் மடத்தில் தீங்கு
தகவிலாச் சமணர் செய்த தன்மையால் சாலும் என்றே
மிகையிலா வேந்தன் செய்கை விலக்கிடா திருந்த எல்லை.
-தி.12 பெ.பு ஞானசம். 854
எனவும் இனிது விளங்க அருளிச்செய்தார். ஆயினும், அவற்றைச் செவிமடாது, `பிள்ளையார் வேந்தன் செய்கையை விலக்காதிருந்தமை அவர்க்கு அறமாதல் இல்லை` எனக் கூறிப் பிணங்குவார் உளராயின், அவர்க்கு நாம் கடவதொன்றில்லை. தண்டியடிகள் நாயனாரோடு ஒட்டித் தோற்ற சமணரைச் சோழ மன்னன் ஊரை விட்டு அகற்றியது அவர் செய்த தீமையை ஒப்பநாடி அத்தக ஒறுத்ததேயாதல் அறிக. (புறம், 10)
இச் சிவாகமப் பொருளை மணிமேகலைக் காப்பியத்துள் புத்தர்க்கு ஏற்றியுரைத்தார் அதன் ஆசிரியர். (காதை.14, 29, 29, 21, 22)
இதனால் மாகேசுர நிந்தையால் விளையும் கேடு கூறப் பட்டது.

பண் :

பாடல் எண் : 3

ஞானியை நிந்திப் பவனும் நலனென்றே
ஞானியை வந்திப் பவனுமே நல்வினை
யான கொடுவினை தீர்வா ரவன்வயம்
போன போழுதே புகுஞ்சிவ போகமே. 

பொழிப்புரை :

`சிவஞானியை நிந்திப்பதே நலம்` என்று கருதி நிந்திப்பவனும், அவ்வாறன்றி, `வந்திப்பதே (வணங்குவதே) நலம்` என்று அறிந்து வந்திப்பவனும் முறையே நல்வினையின் நீங்கித் தீவினையை எய்துபவனும், தீவினையின் நீங்கி நல்வினையை எய்துபவனுமாவர். ஏனெனில், சிவஞானிகட்கு அடியவரான பின்பே எவர்க்கும் சிவபெருமானது திருவருள் கிடைப்பதாகலின்.

குறிப்புரை :

``ஞானி`` என்றது கிளைப்பெயர். ``நல்வினை தீவினை தீர்வார்`` என்றதனை, மேல் ``நிந்திப்பவன், வந்திப்பவன்`` என்றவற்றோடு நிரனிரையாக இயைக்க. `அவன்வயமாக` என ஆக்கம் வருவிக்க. போதல் - அடைதல். `ஈசனுக்கு அன்பில்லார் அடியவர்க்கன்பில்லார் (சிவஞானசித்தி. சூ. 12 - 2) ஆதலின், ``அவன் வயமானபொழுதே புகும் சிவபோகம்`` என்றார். இவ் ஏகாரம் பிரிநிலை. சிவனது திருவருளால் கிடைப்பது சிவானந்தமாகலின், அத்திருவருள் புகுதலைச் சிவானந்தம் புகுதலாகவே கூறினார். இங்கு ``நல்வினை, தீவினை`` எனப்பட்டவை, சிவ நல்வினை தீவினைகளேயாதலின், சிவ ஞானிகளை வந்திப்பவர் சிவபுண்ணியச் சீலராய் சிவஞானம் பெற்று அதன் வழிச் சிவானந்தத்தை எய்துதலும், சிவஞானிகளை நிந்திப்பவர் சிவாபராதிகளாய் அருநரகும், இழிபிறப்பும் எய்துதலும் பெறப் பட்டன. இதனாலன்றோ,
``நமக்கு உண்டுகொலோ, தொண்டர்க்குத்
தொண்டராம் புண்ணியமே`` -தி.4 ப.101
என அப்பரும் திருவாய்மலர்ந்தருள்வாராயினர்.
இதனால், `சிவனடியாரை வந்தியாதொழியினும். நிந்தித்தல் ஆகாது` என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 4

ஞானம் விளைந்தவர் நம்பிட மன்னவர்
சேனை வளைந்து திசைதொறுங் கைதொழ
ஊனை விளைத்திடும் உம்பர்தம் ஆதியை
ஏனை விளைந்தருள் எட்டலு மாமே. 

பொழிப்புரை :

சிவஞானம் கிடைக்கப்பெற்ற சிவனடியார்களை விரும்பி வழிபட்டால், எவ்விடத்தும் அரசர்கள் தம் படையுடன் வந்து வணங்க, சிறுபயன்களைத் தருகின்ற தேவர்க்கெல்லாம் முதல்வ னாகிய சிவபெருமானை அவன் அருளால் அடைந்து பேரின்பம் எய்துதல் கூடும்.

குறிப்புரை :

`விளைந்தவரை என்னும் இரண்டனுருபு தொகுத்த லாயிற்று. நம்புதல் - விரும்புதல்; அன்புசெய்தல், `ஊனம்` என்பதும், `ஏனையது` என்பதும் கடைக்குறைந்து நின்றன. ஊனம் -குறை யுடைது. `அருளால்` என உருபு விரிக்க. ஈற்றடியில் உள்ள சொற்களை, `அருளால் எட்டி, ஏனையது விளைதலும் ஆம்` எனப் பின்முன்னாக நிறுத்தி, விகுதிபிரித்துக் கூட்டி உரைக்க. விளைதல் - விளையப் பெறுதல். `வணங்குவார்க்கு இப்பயனெல்லாம் விளையும்` எனவே, `வணங்காது பிணங்குவார்க்கு இவற்றின் மறுதலையாய அரச தண்டமும், இருளுலகமும் கிடைக்கும்` என்பது பெறப்பட்டது.
இதனால், மாகேசுர நிந்தை செய்வார்க்கு வரும் குற்றம் மறுதலை முகத்தாற் கூறப்பட்டது.
இங்கு நிற்கத்தக்கதாய இத்திருமந்திரம், பதிப்புக்களில் அடுத்த அதிகாரத்தில் காணப்படுகின்றது.

கருத்துகள் இல்லை:

திருமூலர் திருமந்திரம் - 275 - விளக்கம்

பாடல் விளக்கம்: மெய்தான் அறியும் செழுங்கடல் வட்டத்துப் பொய்தான் மிகவும் புலம்பும் மனிதர்கள் மெய்தான் உரைக்கில்விண் ணோர்தொழச் செய்குவன் ம...