ஞாயிறு, 21 ஜூன், 2020

இரண்டாம் தந்திரம் - 16. பாத்திரம்

இரண்டாம் தந்திரம் - 16. பாத்திரம்


பண் :

பாடல் எண் : 1

திலமத் தனையே சிவஞானிக் கீந்தால்
பலமுத்தி சித்தி பரபோக முந்தரும்
நிலமத் தனைப்பொன்னை நின்மூடர்க் கீந்தால்
பலமுமற் றேபர போகமுங் குன்றுமே. 

பொழிப்புரை :

கொடுக்கப்படுவது எள்ளளவு பொன்னேயாயினும் அதனைச் சிவஞானம் கைவரப்பெற்ற ஒருவர்க்குக் கொடுத்தால், அது தன் பயனாக எண்பெருஞ் சித்திகளையும், பதமுத்தி அபர முத்திகளையும், பரமுத்தியையும் தரும். வேட மாத்திரத்தால் சிவஞானிகள் போல நின்று யாதும் அறியாத முழுமூடர்க்கு நிலமத்தனைப் பொன்னைக் கொடுப்பினும், அது யாதும் பயன் தாராமையேயன்றி, ஞானம் குறைதற்கு ஏதுவாயும் விடும்.

குறிப்புரை :

சிவஞானியர்க்குச் செய்யப்படுவதைச் சிவன் தனக்குச் செய்ததாக ஏற்றுக்கொள்ளுதலால், அது பெரும்பயன் தரவல்ல தாகின்றது. யாதும் அறியாதார்க்கு ஈவது வஞ்சரை வளர்க்கும் செய்கையாய் முடிவதால், அது, கருதிய பயன் தாராமையே யன்றிக் கெடுதற்கும் ஏதுவாம் என்க. இனைத்துணைத் தென்பதொன் றில்லை விருந்தின் துணைத்துணை வேள்விப் பயன். - குறள், 87 எனவும், ``தான்சிறி தாயினுந் தக்கார்கைப் பட்டக்கால் வான்சிறிதாப் போர்த்து விடும்`` -நாலடியார், 38 எனவும் உயர்ந்தோர்க்குக் கொடுத்தலின் சிறப்பு இவ்வாறே யாண்டும் எடுத்தோதப்படுதல் அறிக. ஈண்டுக் கூறுவன தற்போதம் இறவாத நூனெறி பற்றியனவும், ``எவரேனுந் தாமாக இலாடத்திட்ட திருநீறும் சாதனமும் கண்டால் உள்கி`` (தி.6 ப.1பா.3) என்றற்றொடக்கத்தன தற்போதம் இறந்த பத்திநெறி பற்றியனவும் ஆகலான், இவை தம்முள் முரணா என்க. ஈதல், இங்கு, `கொடுத்தல்` என்னும் பொருளது. அறங்கருதித் தாழ்ந்தோர்க்கு அவர் வந்து இரந்தவழி ஈதல் ஈகையாகும். குறித்ததொரு பயனுக்குத் தடையாய் நிற்கும் தீவினை நீங்குதலும், அதற்கு ஏதுவாய நல்வினை கிடைத்தலும் கருதி உயர்ந்தோரை வருவித்து அவரை வழிபட்டுக்கொடுத்தல் கொடையாகும். இவற்றுள் கொடை செய்யும்வழிக் கொள்பவரையே, `பாத்திரம்` என்பர். அதனால், இவ்வதிகாரம் கொடை செய்வாரை நோக்கியதன்றி, ஈகை செய்வாரை நோக்கியது ஆகாமை அறிக. இதனானே, இது பயன் கருதிச் செய்யப்படுவதாதலின், பின்னர் (தி.10, 7ஆம் தந்திரம்) வருகின்ற, பயன்கருதாத `மாகேசுரபூசையின்` வேறாதல் அறிக. கொடை, `தானம்` என்றும், ஈகை, `தருமம்` என்றும் சொல்லப்படும். ஈகை, `ஐயம்` எனவும்படும். திருவள்ளுவர் கொடையை விருந்தோம்பலில் கூறினார். ஈகையை, ஈகை என்றே வைத்துக் கூறினார். ஔவையாரும், `ஐயம் இட்டுண்` `தானமது விரும்பு` (ஆத்திசூடி) என்றார். பயன்பெரிதாதலும், பயன் கெடுதலும் இனிது விளங்குதற்பொருட்டு அபாத்திரத்தையும் இங்கு உடன் வைத்துக் காட்டினார். இத்திருமந்திரப் பொருளே பற்றி, சிவஞானச் செயலுடையோர் கையில் தானம் திலமளவே செய்திடினும் நிலம்மலைபோல் திகழ்ந்து பவமாயக் கடலில் அழுந் தாதவகை எடுத்துப் பரபோகம் துய்ப்பித்துப் பாசத்தை அறுத்துத் தவமாரும் பிறப்பொன்றில் சாரப் பண்ணிச் சரியைகிரி யாயோகம் தன்னினும்சா ராமே நவமாகும் தத்துவஞா னத்தை நல்கி நாதனடிக் கமலங்கள் நணுகுவிக்குந் தானே. எனச் சிவஞானசித்தி (சூ. 8 - 26) நூல் கூறுதல் காண்க. ``சித்தி`` என்றதை ``முத்தி`` என்பதற்கு முன்னர்க் கூட்டுக. இதனால், கொடை செய்வோர் சற்பாத்திரத்தால் எய்தும் பயன் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 2

கண்டிருந் தார்உயிர் உண்டிடுங் காலனைக்
கொண்டிருந் தார்உயிர் கொள்ளுங் குணத்தனை
நன்றுணர்ந் தார்க்கருள் செய்திடு நாதனைச்
சென்றுணர்ந் தார்சிலர் தேவரு மாமே.

பொழிப்புரை :

உலகத்தில் உணர்வுடையார் சிலரே உயிர்கள் அனைத்தையும் ஒவ்வொரு கால எல்லையில் கூற்றுவன் கொண்டு போதலை மனத்துட் கொண்டார்கள். பின்னும் தன்னை உட்கொண் டவரது உயிரைத் தான் தன்னுட்கொள்ளும் குணம் உடையவனும், நன்னெறியாகிய ஞானநெறியில் சென்றவர்மாட்டு அருள்மீக் கூர்கின்றவனும் ஆகிய சிவபெருமானை அந்நன்னெறியிலே சென்று உணர்ந்தார்கள். அவர் மேன்மக்களாதலன்றியும், `தேவர்` எனவும் போற்றப்படுதற்கு உரியராவர்.

குறிப்புரை :

`அதனால், அவரே சற்பாத்திரர்` என்பது குறிப் பெச்சம். ``உயிர்கொள்ளும் குணத்தான்`` என்றதனை, தி.8 `உயிருண்ணிப் பத்து` என்பதனோடு வைத்து நோக்குக. `ஆம்` என்பதனை நாயனார் படர்க்கை ஐம்பாற்கும் உரித்தாகவே ஓதுவர். இதனால், சிவஞானிகள் சிலரேயாதல் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 3

கைவிட்டி லேன்கரு வாகிய காலத்தும்
மெய்விட்டி லேன்விகிர் தன்னடி தேடுவன்
பொய்விட்டு நானே புரிசடை யானடி
நெய்விட் டிடாத இடிஞ்சிலு மாமே.

பொழிப்புரை :

நான் சிவபெருமானது திருவடியைக் கருவில் இருந்தபொழுதும் மறந்திலேன், பிறந்து வாழ்கின்ற இப்பொழுதும் அதனை மெய்யன்போடே நான் தேடுகின்றேன். அதனால், அத் திருவடி எனக்கு நெய்விட்டு ஏற்றாது இயல்பாகவே ஒளிவிடும் விளக்காகும்.

குறிப்புரை :

`அவ்விளக்கினை அடைந்தோரே சற்பாத்திரர்` என்பது குறிப்பெச்சம். மெய் - உடம்பு. `விட்டிலேன்` என்றது, அதனொடு கூடி வாழ்தலைக் குறித்தது. இடிஞ்சில் - அகல். அஃது ஆகுபெயராய் விளக்கை உணர்த்திற்று. `இடிஞ்சிலும் ஆம்` என்ற உம்மை, `காணப்படு பொருளும் ஆம்` என ஆக்க உம்மை. ``அவனருளாலே அவன் தாள் வணங்கி`` (தி.8 சிவபுராணம், 18) என அருளிச் செய்தமை காண்க. ஈற்றடியை, `நெய் விட்டிலாத` என ஓதி, ``ஆமே`` என்பதற்கு, `பயன்தருமோ` என உரைத்து, சிவஞானம் இல்லாதவரால் பயன் இன்றாதலை ஒட்டணி வகையால் பெறுவாரும், `புரிசடையான் அடியாகிய நெய்` என உருவகமாக்கி அப்பொருள் பெறுவாரும் ஆவர். அவருள் முன்னையோர்க்கு `அடி` என்பதனை இருகாற் கூறவேண்டாமையும், பின்னை யோர்க்கு இடிஞ்சிலாதற்கு ஏற்புடைய பொருள் கூறப்படாமையும் உணர்க.

பண் :

பாடல் எண் : 4

ஆவன ஆவ அழிவ அழிவன
போவன போவ புகுவ புகுவன
காவலன் பேர்நந்தி காட்டித்துக் கண்டவன்
ஏவின செய்யும் இலங்கிழை யோனே.

பொழிப்புரை :

விளங்குகின்ற மெய்ந்நூலை உணர்ந்தவன், `ஆகற்பாலன ஆகுமேயன்றி அழியா; அழியற்பாலன அழியுமேயன்றி அழியாதொழியா; நீங்குவன நீங்குமே யன்றி நில்லா; வருவன வருமே யன்றி நீங்கா` என்பதனை உணர்ந்து, ஒன்றையும் தானே காணாது, அவை அனைத்திற்குங் காரணனான சிவன் காட்டியதைக் கண்டு, அவன் அருளாணையால் ஏவிய செயல்களையே செய்திருப்பான்.

குறிப்புரை :

`அவனும் சற்பாத்திரனே` என்பது குறிப்பெச்சம். காவலன் - அரசன்; முதல்வன். `கண்டு, அவன் ஏவின செய்யும்` என்க. இழை - நூல். ``இலங்குநூல்`` (குறள், 410) என்றார் திருவள்ளுவரும். `இளங் கிளையோன்` எனப் பாடம் ஓதி, `புத்தடியான்` எனப் பொருள் உரைப்பாரும் உளர். சிவன் காட்டிற்றையே கண்டு அவன் ஆணைவ ழியே நிற்றல் புத்தடியாற்குக் கூடாமை அறிக. அன்றியும் இத்திரு மந்திரம் பின்னர் ஓரிடத்தில் உள்ளவாற்றையும் நோக்குக. இதனால், சற்பாத்திரராய சிவஞானியருள் நூனெறியாளரது சிறப்புக் கூறப்பட்டது.

கருத்துகள் இல்லை:

திருமூலர் திருமந்திரம் - 275 - விளக்கம்

பாடல் விளக்கம்: மெய்தான் அறியும் செழுங்கடல் வட்டத்துப் பொய்தான் மிகவும் புலம்பும் மனிதர்கள் மெய்தான் உரைக்கில்விண் ணோர்தொழச் செய்குவன் ம...