ஞாயிறு, 23 பிப்ரவரி, 2020

முதல் தந்திரம் - 24. கேள்வி கேட்டமைதல்

 முதல் தந்திரம் - 24. கேள்வி கேட்டமைதல்

பண் :

பாடல் எண் : 1

அறங்கேட்டும் அந்தணர் வாய்மொழி கேட்டும்
மறங்கேட்டும் வானவர் மந்திரங் கேட்டும்
புறங்கேட்டும் பொன்னுரை மேனியெம் ஈசன்
திறங்கேட்டும் பெற்ற சிவகதி தானே.

பொழிப்புரை :

முத்தி என்பது `அறம், பொருள், இன்பம்` என்னும் உலகியற் பொருள்களையும், வேதத்தின் கன்ம காண்டம், உபாசனா காண்டம், ஞானகாண்டம் என்னும் மெய்ந்நெறிப் பொருள்களையும் வல்லார்வாய்க் கேட்டார் பெற்ற பயனேயாம்.

குறிப்புரை:

`அதனால் அவைகளை இகழாது கேட்க` என்பது குறிப்பெச்சம். மறம் - வீரம். அஃது அரசர்க்குரிய பண்பாய் நின்று `பொருள்` என்னும் உறுதிப் பொருளை உணர்த்திற்று. புறம் - பிறிது; அஃது இன்பம். அந்தணர் இடைவிடாது பற்றி ஓதுதல் கன்ம காண்டத்தையேயாதலின், அதனை, ``அந்தணர் வாய்மொழி`` என்றார். வானவர் மந்திரம் - கடவுளரை வழிபடும் மந்திரங்கள். பொன்னுரை ஈசன் - பொன்னை உரைத்தாற்போலும் மேனியை உடைய சிவபெருமான். `பதி, பசு, பாசம்` என்னும் முப்பொருள்களின் இயல்புகளுள் தலைமைபற்றிப் பதி இயல்பு ஒன்றையே கூறினா ராகலின், ஏனையவும் அதன் கண் அடங்கும். கன்ம காண்டம் முதலிய மூன்றன் பொருளும் சிவாகமங்களுள் `தந்திர கலை, மந்திரகலை, உபதேசகலை` (சிவஞானசித்தி, அளவை, 4) எனப்படுமாகலானும், வேதத்திற்கும் சிவாகமத் திற்கும் பேதம் இன்மையானும் (தி.10 எட்டாம் தந்திரம்) அவ்வாகமப் பொருளும் ஈண்டுக் கூறியவாறேயாதல் அறிக. செய்யுள் பற்றி உலகியற் பொருளையும், மெய்ந்நெறிப் பொருளையும் முறைப்படுத்தோதாது, விரவ ஓதினார். `பெற்றது` என்பது ஈறுதொகுத்தல்.
இதனால், கேட்கப்படும் பொருள் பலவும் வகுத்துக் கூறப் பட்டன.

பண் :

பாடல் எண் : 2

தேவர் பிரான்றனைத் திவ்விய மூர்த்தியை
யாவர் ஒருவர் அறிவார் அறிந்தபின்
ஓதுமின் கேண்மின் உணர்மின் உணர்ந்தபின்
ஓதி உணர்ந்தவர் ஓங்கிநின் றாரே. 

பொழிப்புரை :

`சிவபிரானை உள்ளவாறு உணர்ந்தோர் யாவர்` என்பதனை முன்னே அறிந்து, பின்னர் அவர்பால் கற்றலையும், கேட்டலையும் செய்யுங்கள். கற்றும் கேட்டும் அறிந்த பின், சிந்தித்துத் தெளியுங்கள். ஏனெனில், கற்றுக் கேட்ட பின்னர்ச் சிந்தித்துத் தெளிந்தவரே சிவனைப் பெற்று உயர்ந்து நின்றனர்.

குறிப்புரை :

`என்பதை` என்பதும், `அவர்பால்` என்பதும் சொல்லெச்சங்கள். இதனால், யாதொரு பொருளாயினும் அதனை வல்லா ரிடத்தே கற்றலும், கேட்டலும் செயற்பாலதல்லது பிறரிடத்து ஆகாது என்பதும், கல்வி கேள்விகட்குப் பின்னர்ச் செயற்பாலன இவை என்பதும் கூறப்பட்டன, திருவள்ளுவரும் `ஒழுக்கம் உடையார் வாய்ச்சொல்லே கேட்கற்பாற்று`` (குறள், 415) என்றார். ``கற்றபின் நிற்க அதற்குத் தக`` (குறள், 391) என்றது கல்வியின் பகுதியானாற் போலக் கேள்வியோடு இயைபுடையனவும் இங்குக் கேள்வியின் பகுதியாயின. இதனுள் இரண்டடி எதுகை வந்தது.

பண் :

பாடல் எண் : 3

மயன்பணி கேட்பது மாநந்தி வேண்டின்
அயன்பணி கேட்ப தரன்பணி யாலே
சிவன்பணி கேட்பவர் தேவரு மாவர்
பயன்பணி கேட்பது பற்றது வாமே. 

பொழிப்புரை :

திருமால், பிரமன் முதலிய தேவரை வழிபடும் முறைகளும் கேட்கத்தக்கனவாதல், சிவபெருமானது ஆணைவழியே யாம். அதனால், முதல்வனாகிய அப்பெருமானை வழிபடும் முறையைக் கேட்டு, அவனை வழிபடுதலே சிறந்தது. ஆகவே, மக்கட் பிறப்பின் பயனும், உயிர்க்கு உறுதுணையாவதும் சிவபெருமானை வழிபடும் முறையைக் கேட்டலேயாம்.

குறிப்புரை :

`மாயன்` என்பது முதல் குறுகி நின்றது. `அத்தேவர்` எனவும், `அப்பணி கேட்பது` எனவும் சுட்டு வருவிக்க. `பற்றும்` என்னும் உம்மை தொகுத்தலாயிற்று. திருமால் முதலிய தேவர், தாம் செய்த புண்ணியத்தின் பயனாகச் சிவபெருமானால் தத்தமக்குப் பொருந்திய எல்லையளவும் தலைவராக அருள் புரியப் பட்டமையின், அவரை வழிபடுதலும் சிவபெருமான் ஆணையே ஆயிற்று. ஆயினும், மேன்மேல் உள்ளாரை வழிபடுபவர் கீழ்க்கீழ் உள்ளாரை வழிபடு வோர் எய்தும் பயனோடு அதனின் மேம்பட்ட பயனையும் பெறுவாராகலின், எல்லார்க்கும் மேலோனாகிய சிவபெருமானை வழிபடுதலே சிறந்ததாதல் தெளிவு. ``காண்பவன் சிவனே யானால் அவனடிக் கன்பு செய்கை மாண்பறம்`` (சிவஞானசித்தி. சூ. 2.27) என்றது காண்க. இப்பயனை அவர் வழங்கமாட்டாமையைச் சுட்டும் முகத்தால், சிவனது வழிபாட்டின் சிறப்பு உணர்த்தப்பட்டது. இதனுள் இன எதுகை வந்தது.
இதனால், மெய்ந்நெறிக் கேள்வியின் இயல்பு வகுத்துக் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 4

பெருமான் இவனென்று பேசி யிருக்குந்
திருமா னுடர்பின்னைத் தேவரு மாவர்
வருமா தவர்க்கு மகிழ்ந்தருள் செய்யும்
அருமா தவத்தெங்கள் ஆதிப் பிரானே. 

பொழிப்புரை :

உலகியலை விட்டு மெய்ந்நெறி நோக்கி வருகின்ற தவத்தோர்க்கு அதனை அருளுபவன் அரிய தவக் கோலத்தையே தனது கோலமாக உடைய எங்கள் சிவபெருமானே. அதனால், `இவனே யாவர்க்கும் தலைவன்` என்று உணர்ந்து அவனது புகழைத் தம்மிடையே பேசிக் களிக்கும் திருவுடை மக்களே பின்னர் எப் பயனையும் எளிதிற் பெறுவர்.

குறிப்புரை :

`அதனால் அவன் புகழையே கேட்க` என்பது குறிப் பெச்சம்.
``செவிகாள் கேண்மின்களோ - சிவன்
எம்மிறை செம்பவள
எரிபோல் மேனிப் பிரான்திறம் எப்போதும்
செவிகாள் கேண்மின்களோ`` -தி.4 ப.9 பா.3
என்று அருளிச் செய்தார் திருநாவுக்கரசரும். பேசுதல், கருத்துக்களைக் கொண்டும், கொடுத்தும் அளவளாவுதல். ``உன் திருவார்த்தை - விரிப்பார் கேட்பார் மெச்சுவார்`` (தி.8 கோயில் மூத்த திருப்பதிகம் - 9) என்ற திருவாசகத்தைக் காண்க. திரு - நற்பேறு. ``பேசி இருக்கும் திருமானுடர்`` என உடம்பொடு புணர்த்து ஓதியதனால், `அவ்வாறு பேசி இருத்தலே திருவாம்` என்பது பெறப்பட்டது. ``மாதவர்`` என்றதனால், `அவர் மெய்ந்நெறி விருப் பினர்` என்பதும், ``அருமாதவன்`` என்றதனால், `அவர்க்கு அருள் புரிய வல்லான் அவனே` என்பதும் பெறப்பட்டன.
இதனால், மெய்ந்நெறியுள் சிவநெறிக் கேள்வியது சிறப்புத் தனித்தெடுத்துக் கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 5

ஈசன் அருளும் இறப்பும் பிறப்பையும்
பேசி யிருந்து பிதற்றி மகிழ்வெய்தின்
நேசமு மாகும் நிகழொளி யாய்நின்று
வாச மலர்க்கந்தம் மன்னிநின் றானே.

பொழிப்புரை :

சிவபெருமானது திருவருளின் பெருமையையும், இறப்புப் பிறப்புக்களது சிறுமையையும் ஒருவரோடு ஒருவர் உசாவி அறிந்து, அவனது திருவருளையே காதலித்துப் பிதற்றி மகிழ்ந்தால், அப்பெருமான்மேல் அன்பு, முறுகி வளரும். வளர்ந்தால், அப் பெருமான் அவ்வன்பில் விளங்குகின்ற பேரொளியாய் எதிர்ப்பட்டு நின்று, பின்னர் மலரில் நின்று கமழும் மணம்போல உள்ளே நிலைபெற்று, இன்பம் தருவான்.

குறிப்புரை :

`அருளையும்` என்னும் இரண்டனுருபு தொகுத்தல். இறப்புப் பிறப்பு, உம்மைத் தொகை. அருள் முதலிய மூன்றும் ஆகுபெயரால் அவற்றின் தன்மையை உணர்த்தின. ``எய்தி ஆகு`` எனப் பாடம் ஓதி, `ஆகு` என்பதனை ஏவல்வினையாக்கி உரைப் பாரும் உளர். `வாசமலர்` என்பது, பிறிதின் இயைபு நீக்கிய விசேடணம். `கந்தம் போல` என உவம உருபு விரிக்க.
``சீவனுக் குள்ளே சிவமணம் பூத்தது`` -தி.10 5ஆம் தந்திரம்
எனவும்,
``உற்ற ஆக்கையின் உறுபொருள், நறுமலர்
எழுதரு நாற்றம்போல்
பற்ற லாவதோர் நிலையிலாப் பரம்பொருள்``
-தி.8 அதிசயப் பத்து, 9
எனவும் ஓதுதல் காண்க.
இதனால், சிவநெறிக் கேள்வி பயன்தரும் முறைமை கூறப் பட்டது.

பண் :

பாடல் எண் : 6

விழுப்பமும் கேள்வியும் மெய்ந்நின்ற ஞானத்
தொழுக்கமும் சிந்தை உணர்கின்ற போது
வழுக்கி விழாவிடில் வானவர் கோனும்
இழுக்கின்றி எண்ணிலி காலம தாமே. 

பொழிப்புரை :

`உண்மையான கல்வியும், கேள்வியும், ஞானச் செய்தியும் யாவை` என்று ஒருவனது உள்ளம் ஓர்கின்ற காலத்து, அது பிழைபட்டுப் பொய்ம்மையில் விழாதிருப்பின், சிவபெருமான் அவனுக்குத் தடையின்றிக் காலம் கடந்த பொருளாய் வெளிப்பட்டு நிற்பன்.

குறிப்புரை :

`கல்வி விழுச்செல்வம்` (குறள், 400) ஆதலின், அதனை, ``விழுப்பம்`` என்றார். மெய்நின்ற - மெய் நிலைபெற்ற; இது `விழுப்பம், கல்வி` என்றவற்றோடும் இயைந்தது. வழுக்கி விழுத லாவது, பொய்யை மெய்யெனத் துணிதல். காலம் எல்லாப் பொரு ளினும் நுண்ணிதாய் அவற்றை நடத்துவதாயினும் வரையறை உடைத்தாகலின், அதனைக் கடந்த நிலையை, ``எண்ணிலி காலம்`` என்றார். மேற்கூறிய சிறப்புப்பற்றிக் காலத்தையே கூறினாராயினும், அதனொ டொத்த `முதற்பொருளாகிய` (தொல். பொருள்) இடமும் கொள்ளப்படும். படவே, `மெய்ம்மையான கல்வி கேள்வி ஞானச் செய்திகளை உடையார் காலத்தானும், இடத்தானும் வரையறுக்கப் படாத இறை நிறைவை எய்துவர்` என்றதாயிற்று. கேள்வியே கூறப்புகுந்தாரா யினும் அத்தன்மையவாதல் பற்றி ஏனையவற்றையும் உடன் கூறினார். `வழுக்கி விடாவிடில்` என்பது பாடம்.
இதனால், மயக்க நூலைக் கற்றலும், மயக்க உரைகளைக் கேட்டலும், அவற்றின்வழி அறிந்த நெறியின் நிற்றலும் ஆகாமை கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 7

சிறியார் மணற்சோற்றில் தேக்கிடு மாபோல்
செறிவால் அனுபோகஞ் சித்திக்கும் என்னில்
குறியாத தொன்றைக் குறியாதார் தம்மை
அறியா திருந்தார் அவராவர் அன்றே.

பொழிப்புரை :

சிறுமகார் தம் விளையாட்டு விருப்பம் காரணமாகத் தாம் சோறாகக் கருதிக்கொண்ட மணலாலே வயிறு நிரம்பினார் போலத் தேக்கெறிந்து கொள்ளுதல்போல, உலகப் பற்றுக் காரணமாகச் சுற்றத் தொடக்குண்டு வாழும் வாழ்க்கையாலே இன்பம் கிடைத்துவிடும் என்பவர் உளராயின் அவர், தம்மையும், தலை வனையும் அறியாத மடவோரேயாவர்.

குறிப்புரை :

`அதனால் அங்ஙனம் கொள்ளற்க` என்பது குறிப் பெச்சம். செறிவு - கூடியிருத்தல். இதற்கு, `செறியப் படுவார் இவர்` என்பது வருவிக்கப்பட்டது. ``அநுபோகம்`` என்பது சிறப்பினால் இன்ப நுகர்ச்சியையே குறித்தது. `அவர் குறியாதாரும், இருந்தாரும் ஆவர்` என்க. குறியாதது ஒன்று - சுட்டிறந்த முதற்பொருள். சிறப்புப் பற்றி இதனை முன்னர்க் கூறினார். `தம்மை யுணர்ந்து, அதனானே தலைவனையும் உணர்பவரே ஞானத் தலைவர்` என மெய்கண்ட தேவரும் கூறினார் (சிவஞானபோதம் அவையடக்கம்).
இதனால், உலகாயதம் பேதைமைத்தாதல் கூறுமாற்றால், `ஆகா` என விலக்கிய கல்வி கேள்வி ஒழுக்கங்களுள் பெரிதும் கூடாதன இவை என்பது கூறப்பட்டது.
``நடையை மெய்யென்று நாத்திகம் பேசாதே
படைகள் போல்வரும் பஞ்சமா பூதங்கள்`` -தி.5 ப.31 பா.6
என அப்பரும் அருளிச் செய்தல் காண்க.

பண் :

பாடல் எண் : 8

உறுதுணை யாவ துயிரும் உடம்பும்
உறுதுணை யாவ துலகுறு கேள்வி
செறிதுணை யாவ சிவனடிச் சிந்தை
பெறுதுணை கேட்கிற் பிறப்பில்லை தானே. 

பொழிப்புரை :

உயிரும் உடம்பும் ஒன்றற்கு ஒன்று உறுதுணை யாவன. அவை அவ்வாறு நிற்றற்கு உறுதுணையாய் நிற்பதே உலகியல் பற்றிய கேள்வி; (என்றது, யாண்டும் உயிர் உடம்பொடு நிற்றலாகிய பிறப்பு நிலையை நீக்க மாட்டாது; அதன்கண் சில நன்மையைத் தருவதே என்றபடி) இனி உயிரோடு ஒட்டி நிற்கும் துணையாவன சிவபெருமானது திருவடிச் சிந்தனையைத் தூண்டும் சிவநெறிக் கேள்விகளே; பெறுதற்குரிய துணையாகிய அக்கேள்விகளைக் கேட்டபின், பிறப்பு இறப்புக்கள் இல்லாத வீடு கூடுவதாம்.

குறிப்புரை :

``ஆவது`` என்ற ஒருமையால், `உயிர் உடம்பிற்குத் துணையாவது, உடம்பு உயிர்க்குத் துணையாவது` எனத் தனித்தனி உரைத்தல் கருத்தாயிற்று. இத்தொடரின்பின், `அதற்கு` என்பது எஞ்சி நின்றது. சிந்தை, ஆகுபெயர்.
இதனால், `சிவநெறிக் கேள்வியே விழுமியது` என்பது கூறப்பட்டது.

பண் :

பாடல் எண் : 9

புகழநின் றார்க்கும் புராணன்எம் ஈசன்
இகழநின் றார்க்கும் இடும்பைக் கிடமா
மகிழநின் றாதியை ஓதி உணராக்
கழியநின் றார்க்கொரு கற்பசு வாமே. 

பொழிப்புரை :

எங்கள் சிவபெருமான், ஒருப்பட்டு நிற்கும் அன்பர்க்கும், ஒருப்படாது முரணி, இகழ முற்பட்டு நிற்கும் வன்பர்க்கும் மூதாதையே. எனினும், தம்மொடு மேவாத மைந்த ரிடத்து அன்பு செய்யாத தந்தையர்போல, தன்னை இகழ்ந்து, தனது பெருமையை மகிழ்ச்சியுண்டாகக் கற்றும் கேட்டும் உணராது நீங்கி நிற்பார்க்குத் துன்பத்திற்கு ஏதுவாக, பால் கறவாத கற்பசுப்போல அருள்செய்யாது நிற்பன்.

குறிப்புரை :

`புகழ நின்றார்க்கும், இகழ நின்றார்க்கும் புராணன் எம் ஈசன்` எனவும், `கழிய நின்றார்க்கு இடும்பைக் கிடமாக் கற்பசுவாம்` எனவும் கூட்டுக. இனி, `இடும்பைக் கிடமாக் கழிய நின்றார்க்கு` என இயைத்தலுமாம். ``கற்பசுவாம்`` என்றதில் ஆக்கம், உவமை குறித்து நின்றது. `கேட்டு` என்பது அதிகாரத்தால் வந்தது. `உணராது` என்பது ஈறு குறைந்து நின்றது. ஒன்று - சிறுமை; பயன்படாமை. ``கழிய நின்றார்க்குக் கற்பசுவாம்`` எனவே, கழியாது பற்றிநின்றார்க்குப் பாற்பசுவாதல் பெறப்பட்டது. இதன்கண் மூன்றாம் எழுத்து எதுகை வந்தது.
இதனால், சிவநெறிக் கேள்வியுடையோர் பேரின்பம் எய்த லும், அஃது இல்லாதார் அதனை எய்தாமையும் கூறப்பட்டன.

பண் :

பாடல் எண் : 10

வைத்துணர்ந் தான்மனத் தோடும்வாய் பேசி
ஒத்துணர்ந் தான்உரு ஒன்றொடொன் றொவ்வா
தச்சுழன் றாணி கலங்கினும் ஆதியை
நச்சுணர்ந் தாற்கே நணுகலு மாமே. 

பொழிப்புரை :

சிவபெருமானை மனம் ஒருங்கி உணர்ந்தவனே அப்பெருமானை மனத்தால் நினைத்தும், வாயால் வாழ்த்தியும் அவன் திருக்குறிப்போடு ஒத்து உணர்ந்தவன் ஆவான். அவனுக்கு உடற் கூறுகள் தம்மில் ஒவ்வாது நிற்ப, உடலாகிய தேரைத் தாங்குகின்ற உயிராகிய அச்சு உழன்று, அவ்வச்சிடத்து அத்தேரின் ஆழியை நிலைபெறுத்தும் ஊழாகிய கடையாணியும் கழன்றாலும் அவன் சிவபெருமானைத் தப்பாது அடைவான்.

குறிப்புரை :

``ஆதியை, மனம்`` என்பன முதலிலும் சென்று இயையும். ``வைத்துணர்ந்தான் .. ... ஒத்துணர்ந்தான்`` என்றதனால், வாளா நினைத்தலும், வாழ்த்தலும் செய்வார் அதனை உண்மையாற் செய்தவர் ஆகாமை பெறப்பட்டது. `கல்வி கேள்விகளானன்றி அறியாமை நீங்காமையின், அவை இல்லாது செய்வது அறிவின் வழிப்பட்டதாகாது, ஏரல் எழுத்துப் போல்வதொரு விழுக்காடாம்` என்பது கருத்து. இஃதே பற்றி,
கல்லாதான் ஒட்பம் கழியநன் றாயினும்
கொள்ளார் அறிவுடை யார். -குறள் 404
எனவும்,
``தெருளாதான் மெய்ப்பொருல் கண்டற்றால்`` -குறள் 249
எனவும் கூறினார் திருவள்ளுவர். இங்ஙனம் கூறவே, வருகின்ற அதிகாரத்திற்குத் தோற்றுவாயும் ஆயிற்று.
ஞானத்தால் தொழுவார் சிலஞானிகள்;
ஞானத்தால் தொழுவேன்உனை நானலேன்;
ஞானத்தால் தொழுவார்கள் தொழக்கண்டு,
ஞானத்தாய்உனை நானும் தொழுவனே. -தி.5 ப.91பா.3
என்றருளியதும் இப்பொருட்டு.
சிவபெருமானது திருக்குறிப்பு, உயிர்கள் தன்னை அறிவால் அடைதல் வேண்டும் என்பதேயாதலின், வைத்துணர்ந்தான் ஒத்துணர்ந்தானாவன். இவ்வொருமைச் சொற்கள் இனத்தின் மேல் நின்றன. இதனை `ஒருபால் வழக்கு` (தொல். பொருள், 218) என்பர் தொல்காப்பியர். உரு - உடம்பு; என்றது அதன் கூறுகளை. அவை வாத பித்த ஐ முதலியவை. ``ஒவ்வாது`` என்றதின்பின் `ஆக` என்பது வருவிக்க. `உழன்று` என்னும் எச்சம் எண்ணின்கண் வந்தது. `நச்சி` என்பதன் இகரம் தொகுத்தலாயிற்று. ஏகாரம் இரண்டனுள் முன்னது தேற்றம்; பின்னது ஈற்றசை. `உணர்ந்தார்க்கு` என்பது பாடம் அன்று. அறிவால் தன்னை அடைந்தாற்கு,
``புலன் ஐந்தும், பொறிகலங்கி நெறிமயங்கி அறிவழிந்திட்டு ஐ மேல் உந்தி, உயிர் அலமரும் நிலை` வந்ததாயினும், அவரைச் சிவபெருமான், `அஞ்சேல்` என்று அருள்செய்வான் (தி.1 ப.130 பா.1) ஆகலின், ``நச்சி உணர்ந்தாற்கே நணுகலும் ஆம்`` என்றார்.
இதனால், சிவபெருமானைக் கல்வி கேள்விகளின் வழி அடைதலே சிறந்தது என்பது வலியுறுத்தப்பட்டது.

கருத்துகள் இல்லை:

திருமூலர் திருமந்திரம் - 275 - விளக்கம்

பாடல் விளக்கம்: மெய்தான் அறியும் செழுங்கடல் வட்டத்துப் பொய்தான் மிகவும் புலம்பும் மனிதர்கள் மெய்தான் உரைக்கில்விண் ணோர்தொழச் செய்குவன் ம...